தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

`‘திருவாதிரைக் கொடியேற வழியின்றி, தேவாரம் திருக்காப்பிடாமல், திருவெம்பாவைத் திருவிழாவா?’’ என்று திருநெல்வேலியில் போஸ்டர் கள் ஒட்டியிருப்பதாகக் கேள்விப்பட்டதும், திருநெல்வேலிக்குச் சென்ற நாரதர் இன்னும் திரும்பிவரவில்லை. நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தோம். நாரதரின் செல்போனோ நாட் ரீச்சபிள்!

என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக் கும்போதே, நாரதர் உள்ளே நுழைந்தார்.

“வாருங்கள்! வெகுநாள்களாக தங்களைக் காணோம் என்றதும், எங்கே நீங்கள் திருநெல்வேலி யிலேயே தங்கிவிட்டீர்களோ என்று நினைத் தோம்...'' என்ற நம்மை இடைமறித்த நாரதர், ``நெல்லை வைபவம் பற்றி விசாரிக்கச் சென்ற இடத்தில் வேறொரு முக்கியமான விஷயம் ஒன்றைக் கேள்விப்பட்டேன்...’’ என்றார்.

`‘அப்படி என்ன பெரிய விஷயம்’’ என்று நாம் கேட்க, `‘மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரச்னைதான்’’ என்று சூசகமாக விடையளித்தார் நாரதர்.

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

`‘நாரதரே... ஒன்றும் விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் தெளிவாகக் கூறுங்கள்’’ என்றோம்.

`‘நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்தினர், தரிசனம் முடிந்து அருகிலிருந்த மண்டபத்தில் ஓய்வெடுத்தார்கள். நானும் அங்கு தான் இருந்தேன். அப்போது,  அந்தக் குடும்பத் தலைவி, `தரிசனமெல்லாம் சிறப்பா இருந்தது. ஆனால், எனக்குதான் மனசே சரியில்லை' என்றார். நான் என்ன ஏதென்று அக்கறையுடன்  விசாரித்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னைப் பெரிதும் யோசிக்கவைத்தது'' என்ற நாரதர் தொடர்ந்து பேசினார்.

`‘பெரிய கோயில்களைக் கவனிக்க மக்களும் அரசும் இருக்கிறார்கள். ஆனால் சிறிய கோயில்களையும், அங்கு சேவையாற்றிவரும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் நிலையை யாரும் கண்டு்கொள்வதில்லை. இறைவனுக்கு ஒருகால பூஜை செய்துவரும் இறையடியார்கள் பலரும், ஒருவேளை உணவில்லாமல் இருப்பதைக் கண்டும் காணாமலும் இருக்கிறோம். அதோடு பல கோயில்களில் ஒரு வேளை பூஜைகள்கூட நடப்பதில்லை என்று அந்தச் சகோதரி வருத்தப்பட, ஒருகணம் குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகிவிட்டேன்’’ என்று கவலையோடு பகிர்ந்துகொண்டார் நாரதர்.

`‘உடனடியாக இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பீரே...'' என்று நாம் கேட்டு முடிப்ப தற்குள் முந்திக்கொண்டார் நாரதர். ``ஆமாம்! நெல்லையப்பர் கோயில் நிர்வாக அலுவலகத் துக்குச் சென்று, இதுகுறித்து தகவல் ஏதும் கிடைக்குமா என்று விசாரித்தேன்’’ என்றார் நாரதர்.

`‘தகவல் கிடைத்ததா?’’ என்றோம்.

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’`‘அதெப்படி கிடைக்கும். எந்த அரசாங்க அலுவலகத்தில், கேட்டவுடன் தகவல் கிடைத்திருக்கிறது’’ என்றார் நாரதர்.

``அடுத்து என்ன செய்தீர்?’’

`‘சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்த தகவல்களைக் கேட்டேன். அங்கும் எனக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே இருந்தன. இந்நிலையில், விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம், ஏற்கெனவே ஒருகால பூஜைத்திட்டம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகளைக் கேட்டு பதில்கள் பெற்று வைத்திருப் பதை அறிந்தேன். வாங்கிப் பார்த்தால் அதிலிருந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்’’ என்றார்.

`‘அனைத்தையும் விவரமாகச் சொல்லும்'' என்று நாம் கேட்டுக்கொள்ள அதுபற்றி விவரித் தார் நாரதர்.

`‘அறநிலையத்துறையின் கீழ் 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன. இதில், 10,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் நூற்றாண்டு கடந்த பழைமையானவை. இந்தத் துறைக்கு உத்தேசமாக 60 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம்.

வருமானத்தின் அடிப்படையில் கோயில் களைப் பிரித்ததையடுத்து, வருமானம் வரும் கோயில்களுக்குத் திருப்பணிகள் தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில், பல கோயில்கள் போதிய நிதி இல்லாமல், ஒருவேளை பூஜைகூடச் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.இதைக் கண்டித்து பக்தர்கள் பலரும் அறநிலையத் துறைக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

இதையடுத்து, பொலிவிழந்துவரும் கோயில் களில் ஒருகால பூஜைத் திட்டத்தை 1986-ம் ஆண்டு  நடைமுறைப்படுத்தியது அப்போதைய தமிழக அரசு. 1993-ம் ஆண்டு முதல் பொதுமக்களும் பங்கேற்கும் வண்ணம் இத்திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப் பட்டன. இப்போது ஒருகால பூஜைத் திட்டத்தில் 12,745 கோயில்கள் பயனடைந்து வருகின்றனவாம்’’ என்றார் நாரதர்.

`‘சரி! ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் எந்தெந்தக் கோயில்கள் உள்ளன என்பது பற்றி விவரம் கிடைத்ததா?''

`‘இந்தக் கேள்விக்குப் பதிலளித்தால் மனித ஆற்றல் பாதிக்கப்படும்!’’

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

நாரதர் இப்படிச் சொன்னதும் விளங்காமல் திகைத்தோம் நாம். அதை உணர்ந்து சிரித்த நாரதர், `‘அன்பரே... இது என்னுடைய பதிலல்ல. இதுபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் கேட்டிருந்த கேள்விக்கு அறநிலையத் துறை தந்த பதில்தான் இது!’’ என்று கூறிவிட்டு  ஒருகால பூஜைத் திட்டம் குறித்து மேலும் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 `‘அறநிலையத்துறையின்  இந்தத் திட்டத்தின் கீழ் வரும் கோயில்களுக்கு, பொதுமக்கள் நன்கொடையாக வழங்கும் 10,000 ரூபாயோடு, தமிழக அரசின் சார்பில் 90,000 ரூபாயைச் சேர்த்து, ஒரு லட்சமாக, அந்தந்தக் கோயிலின் பெயரில் வங்கியில் ‘டெபாசிட்’ செய்யப்படும். அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு அந்தக் கோயில்களில் ஒரு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார் நாரதர்.

`‘இதற்கெனத் தனியாக ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்களா?’’

`‘கோயிலுக்கு ஒருவர் என்றில்லாமல், அர்ச்சகர் ஒருவரே ஒன்றுக்குமேற்பட்ட கோயில்களுக்கும் பூஜை செய்ய வேண்டிய நிலை! இது இப்படி என்றால் ஊதியமாவது திருப்தியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  ஒரு கோயிலில் பூஜிக்க இவ்வளவு ஊதியம் என்ற அளவில், அவர்கள் பூஜிக்கும் கோயில்களின்  எண்ணிக்கைக்குத் தகுந்தபடியெல்லாம் ஊதியம்  வழங்கப்படவில்லை. எத்தனை கோயிலுக்குப் பூஜை செய்தாலும் ஊதியம் என்னவோ ஒன்றுதான். அதோடு, இவர்கள் பூஜை செய்யும் ஒரு கோயிலும் மற்றொரு கோயிலும் குறைந்தது 10 கி.மீ  இடைவெளியில் அமைந்திருக்கின்றன. அவர்கள், பேருந்திற்காகக் காத்திருந்து செல்வதற் குள் பூஜை நேரமே முடிந்துவிடுகிறது’’ என்றார் நாரதர்.

`‘கிராமங்களில் உள்ள அர்ச்சகர்கள், பூசாரி களுக்கு அரசு தரப்பில், இலவச சைக்கிள் தரப் பட்டதே’’ என்றோம்.

`‘ஒரு கால பூஜைத் திட்டத்தில் நிதியுதவி பெறும் கோயில்கள் பெரும்பாலும், கிராமங்களில் உள்ளன. அர்ச்சகர்கள், பூசாரிகள் குறித்த நேரத் தில் வழிபாடு செய்ய ஏதுவாக, பத்தாயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இரண்டு கோடியே எழுபத்தெட்டு லட்சம் ரூபாய் செலவில் இலவச சைக்கிள்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பலருக்கும் இலவச சைக்கிள் கொடுக்கப் படவில்லையாம்! இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதற்கு  ‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர் திட்டம் இல்லை. ஒருமுறை மட்டும் செயல் படுத்தப்பட்ட திட்டம்’ என்று அறநிலையத் துறை பதில் தந்திருக்கிறது'' என்றார் நாரதர்.

``இதுகுறித்து ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள் தரப்பில் ஏதும் விசாரித்தீரா?'' எனக் கேட்டோம்.

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’``ஆமாம், கிராமத்துக் கோயில்களில் ஒருகால பூஜை செய்து வரும் பூசாரி ஒருவரிடம் பேசினேன். ‘ஒரு கோயிலுக்கு ஒரு நாள் - ஒரு கால பூஜை செய்ய குறைந்தபட்சம் இருநூறு  ரூபாய் வரை செலவாகிறது. இதோடு நாங்கள் இரண்டு முதல் மூன்று கோயில்களுக்குப் பூஜை செய்கிறோம். வங்கியிலிருந்து வரும் தொகை பூஜை செய்யவே போதவில்லை. இதில் பயணச் செலவுவேறு இருக்கிறது. ஓய்வு பெற்ற கிராம கோயில் பூசாரிகள் பலருக்கு ஓய்வூதியமும் முறையாக வருவதில்லை. இறை நினைப்போடு வேலை செய்துவரும் நாங்கள், பாதி நாள்கள் எங்கள் ஊதியத்திலிருந்து தான் ஒருகால பூஜையை நடத்தி வருகிறோம்’ என்று வேதனையோடு பகிர்ந்துகொண்டார்''

`‘கேட்கவே வேதனையாக இருக்கிறது. இதை அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச் சென்றீர்களா?’’

`‘அறநிலையத்துறை ஆணையரிடம் இதுகுறித்து  பேச பலமுறை முயன்றும், பலனில்லை’’

`‘என்ன காரணமோ?’’

`‘ஆணையர், பெரும்பாலும் பத்திரிகையாளர் களைச் சந்திப்பதில்லையாம். இது, சம்பந்தப்பட்ட துறையின் உள்வட்டாரங்களில் பேசப்படும் தகவல்’’ என்றார் நாரதர்.

`‘அடுத்து என்ன செய்தீர்கள்..’’

`‘பழைமையான கோயில்கள் அதிகமுள்ள கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் ஒருகால பூஜைத்திட்டம் முறையான செயல்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, திருவாரூர்மாவட்டத்திலுள்ள மேலப்பூவனூர் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொன்றோம். ஒருவேளை பூஜைத் திட்டத்தின் கீழுள்ள கோயில் இது. கோயிலின் பல இடங்கள் இடிந்தும் சிதைந் தும் இருக்கின்றன. மூலவருக்கு அருகே ஒரே ஒரு விளக்கு மட்டும் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. மூவுலகையும் ஆளும் எம்பெருமானின் நிலையைக் கண்ட போது, கண்ணீரே மிஞ்சியது.

கோயிலில் புனரமைப்பு வேலைகள் தொடங்கப் பட இருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். அர்ச்சகர் வருவார் என்று எதிரிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் காத்திருந்தோம். அர்ச்சகர் வராததால், அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இதுகுறித்து விசாரித்தோம். `அர்ச்சகர் கோயிலுக்கு தெனமும்  வருவாருங்க.. இப்ப கொஞ்ச நாளா வரல. என்னன்னு தெரியலீங் களே’ என்று முடித்துக்கொண்டார். மாலை ஐந்து மணி வரை வேதபுரீஸ்வரருக்கு பூஜை நடக்க வில்லையே என்ற கவலையோடு, அந்த இடத்தை விட்டு நகர ஆயத்தமானோம். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், ‘பக்கத்துல இருக்கிற கீழப் பட்டு கிராமத்துல ஒரு சிவன் கோயில் இருக்கு. போய்ப் பாருங்க’ என்றார்.

நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்?’

பெரியவர் சொன்னபடியே கீழப்பட்டு கிராமத் துக்கும் சென்றோம். ஆளரவமற்ற சாலையில், வழி கேட்கவும் ஆள் இல்லாமல், ஒருவழியாக கோயிலைச் சென்றடைந்தோம்.

புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு பளிச்சென்று இருந்தது ஒரு கோயில், அதுதான் நாம் தேடி வந்த சிவாலயம் என்றெண்ணி அவசர அவசரமாக கோயில் அருகில் சென்று பார்த்தேன். அது மாரியம்மன் கோயில். அங்கிருந்த ஊர்மக்களிடம் ‘சிவன் கோயிலுக்குப் போகணும்' என்றதும் ஒரு கொட்டகையைக் கை காட்டினார்கள். அருகில் சென்று பார்த்த போது மனம் அதிர்ந்துவிட்டது.

சிவலிங்கம் மட்டும் இருக்கிறது. ஊர் மக்கள் சேர்ந்து கொட்டகை அமைத்திருக்கிறார்கள். கரிகால் சோழன் கட்டிய கோயில் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ஆனால், இப்போது ஒருவேளை பூஜைகூட இக்கோயிலுக்குக் கிடையாது. இந்தக் கோயில் ஒருவேளை பூஜைக்கான கோயில்களின் பட்டியலில் சேர்ந்ததா இல்லையா என்பதும் அறநிலையத்துறைக்குத்தான் வெளிச்சம்'' என்ற நாரதர், ``இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடமும் பேசினேன்'' என்றார்.

``என்ன சொன்னார் அமைச்சர்?''

``எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், `இதுகுறித்து அதிகாரிகளிடம்  கலந்து ஆலோசித்து உரிய முடிவெடுப்போம்' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.''

``நல்லது நடக்கட்டும்'' என்று நாம் சொல்ல, பதிலுக்கு நாரதர், ``வேறுசில பிரச்னைகளும் அறநிலையத்துறையில் இருக்கின்றன'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவரது செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பேசிய நாரதர், ``முக்கியமான அழைப்பு. போய் விசாரித்துவிட்டு வந்து விவரமாகச் சொல்கிறேன்'' என்று கூறிவிட்டு நமது பதிலுக்குக் காத்திராமல் புறப்பட்டுவிட்டார்.

- உலா தொடரும்...