தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? எங்கள் ஊர்க் கோயிலின் சாமி வீதியுலா வருவதுபோல் கனவு கண்டேன். இதுகுறித்து விவரித்தபோது, ‘வீட்டில் நல்ல விசேஷம் விரைவில் நடக்கும்’ என்றார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனால் வேறு சிலர் கனவில் தெய்வ ஊர்வலங்களைக் காணக்கூடாது என்கிறார்கள். நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்?

- எம்.ஜி.கல்யாணராமன், கூடலூர்  

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?

கனவை வடமொழியில், ‘ஸ்வப்னம்’ என்பர். சம்ஸ்கிருத இலக்கியத்தில் ‘ஸ்வப்ன சாஸ்திரம்’ என்றொரு பகுதி உண்டு. ஜோதிடம், ‘சகுனம்’ என்ற பிரிவில் கனவையும் சேர்த்து ஆராய்கிறது. கனவின் உருவம், அதன் பிரிவுகளை விளக்குவ துடன் கனவின் பலன்களையும் சொல்கிறது ஆயுர்வேதம். கனவுகள் பற்றிய விளக்கம், உருவம் மற்றும் அவற்றின் பலன்கள் ஆகியன புராணங்கள், ஸ்தல புராணங்கள் மற்றும் காப்பியங்களிலும் தென்படுகின்றன.

சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதியின் கனவில் தோன்றிய கடவுள், குழந்தைச் செல்வம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினார். சங்கரர் கிடைத்தார்.

வசுமதி தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணிய போது அவளின் கனவில் தோன்றிய பகவான், ‘உன் கருவில் உருவாகும் குழந்தை, தன் தந்தை இழந்த அரசை மீட்டு, பெரும் புகழுடன் திகழ்வான். முடிவை மாற்றிக் கொள்!’ என்று அருளி னார். அதன்படியே ராஜவாஹனன் பிறந்தான் என்கிறார் கவி தண்டி.

பட்டத்தரசி ஒருத்தி தன் வயிற்றுக்குள் முழு நிலவு நுழைந்ததாகக் கனவு கண்டாள். சந்திராபீடன் தோன்றினான் என்கிறார் பாணபட்டன் (‘காதம்பரி’ நூலின் ஆசிரியர்).

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?தன்னைப் பிரிந்து வாடும் காதலியைத் தேற்ற மேகத்தைத் தூது அனுப்பினான் காதலன். அப்போது அவன், ‘நம்பிக்கைக்கு உகந்த மேகமே, அண்டவெளி பயணம் தடைகள் இல்லாதது. ஆதலால் விரைவில் நீ என் காதலியின் இடத்தை அடைவாய். ஆனாலும் அவசரம் வேண்டாம். ஒரு வேளை, நீ சந்திக்கும் தருணத்தில் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தால்... ஒரு யாம காலம் அதாவது 3 மணி நேரம் பொறுமை காக்க வேண்டும். என் நினைவில் தோய்ந்த அவளின் மனம், கனவில் எனது சந்திப்பின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்; எனது அணைப்பில் இன்புற்று இருக்கலாம். அதை நீ சிதைத்து விடாதே!’ என்று மேகத்தை அறிவுறுத்தியதாக தனது மேக ஸந்தேசம் எனும் நூலில் குறிப்பிடுகிறார் மகாகவி காளிதாசன்.

‘அடிமனதில் ஆழமாகப் பதிந்த விஷயங்கள், கனவாக மலரலாம். மூன்று மணி நேரத்துக்கு மேல் கனவு தொடராது!’ என்ற தகவலையும் தருகிறார் அவர். நடைமுறையில் முழுசாகக் கனவு காண்பவர்கள் அரிது.

மனம், ‘புரிதத்’ என்ற நாடியில் மறையும்போது உறக்கம் நிகழ்கிறது. புலன்கள் யாவும் அடித்துப் போட்டது போல் செயலற்று இருக்கும்போது மனம் விழித்துக் கொண்டு, தான் சேமித்த எண்ணங்களை அசைபோடுகிறது. அந்த நிகழ்வுகள் மனத்திரையில் பளிச்சிடுகின்றன... அவையே நிஜத்தில் நிகழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்து கின்றன என்று ஸ்வப்ன சாஸ்திர வல்லுநர்கள் விளக்குவர்.

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் குறைபாடு அல்லது மிகுதியின் காரண மாக மாசுபட்ட நாடியின் தொடர்பு, மனதைக் கனவு காணச் செய்கிறது என்று ஆயுர்வேதம் விளக்கும். நடக்காத விஷயங்களும், சந்திக்காத உருவங்களும், மாறுபட்ட தகவல்களும் கனவில் தோன்றும். அவை அனைத்தும் நிஜத்தில் நிகழ இயலாது. எனவே, கனவில் தோன்றும் காட்சிகள் நல்ல பலன்களை அல்லது கெட்ட பலன்களை அளித்துவிடுமோ என்று குழம்பக் கூடாது. சில கனவுகள் வருங்காலத்தின் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும் என்று ஜோதிடம் குறிப்பிடும். ‘கனவு பொய். அது நிகழ்வு அல்ல; சுகாதாரம் குன்றி இருப்பதன் அறிகுறி!’ என ஆயுர்வேதம் சொல்லும்.  

‘இப்போதுதான் படுத்தேன். அதற்குள் விடிந்து விட்டதா!’ என்று விழிப்பவனது உறக்கம் உண்மையானது; கனவு கலக்காத நித்திரை. அது சுகாதாரத்தின் அறிகுறி. ‘உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பது கனவு’ என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. ‘கலக்கமுற்ற மனம் கனவு காணும்!’ என்கிறது தர்மசாஸ்திரம்.

கனவு கண்டால் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிக் கடவுளை வழிபடுங்கள். கனவுக்குக் காரணமான மாசு அகன்று, மனம் தெளிவு பெறும். பலாபலன்களை நினைத்து அதில் சிக்கித் தடுமாறவேண்டாம். 

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?

?என் தாத்தா சிவபதம் அடைந்து விட்டார். அவருக்கான விரதம் - தர்ப்பணம் ஆகியவற்றை எப்போது முதல் துவங்கவேண்டும்?

-மா. பரமேஸ்வரன், திருக்கோவிலூர்


விரதம், தர்ப்பணம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் தகுதி, வருடாந்திர திதிக்குப் பிறகே ஏற்படும். வருடாந்திர திதிக்கு இடைப்பட்ட வேளையில் எதையும் நடை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

முன்னோர் இறந்த வருடத்தில், விழாக்கள்- கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதில்லை. வருடாந்திர திதி வரையிலும் இறந்தவரின் நினை வோடு இருக்க வேண்டும். மற்ற அலுவல்களில் ஈடுபடும்போது, அவர் குறித்த நினைவு அறுபட்டு விடும். ஆகையால், வேறு அலுவல் களைத் தவிர்ப்போம். வருடாந்திர திதியே முக்கியமானது. அப்போது தான் ஈமச்சடங்கு முற்றுப் பெறும். அதற்கு இடைப்பட்ட வேளையில், விரதம்- தர்ப்பணத்தைத் தவிர்க்க வேண்டும்.

? பித்ரு தினமாகிய அமாவாசை யன்று, வழக்கம்போல் இறை வழிபாடு களை முடித்துவிட்டு முன்னோர் ஆராதனையில் ஈடுபடலாமா?

? வழிபடும்போது, `கவலைகளைக் கடவுளிடம் சமர்ப்பிக்கிறேன்' என்று சில தருணங்களில் அழுதே விடுகிறார் என் அம்மா. இது சரியா? தாங்கள்தான் வழிகாட்டவேண்டும்.

- சந்த்ரு மகாதேவன், களக்காடு


அமாவாசை அன்று முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு, வழக்கமான இறைவழிபாடுகளைச் செய்யலாம். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோருக்கான வழிபாடுகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வந்தால், முதலில் முன்னோர் களையே வழிபட வேண்டும். பிறகு தேவர்களை வணங்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

முன்னோர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது சாஸ்திரத்தின் கருத்து. அதே நேரம், தினம் தினம் செய்யும் கடமைகளையும் நிறுத்தக் கூடாது. கவலையில் ஆழ்ந்திருக்கும்போது எந்தச் செயலையும் சிறப்புற செய்ய முடியாது. அழுது கொண்டே பூஜிக்கும்போது, மனம் பூஜையில் லயிக்காது. பிரச்னைகள் இல்லாமல் வாழ்பவர் யார்? சொல்லப் போனால், வாழ்க்கையின் சுவாரஸ்யமே பிரச்னைகள்தான்!

சீடன் ஒருவன் தன் குருவை அணுகி, ‘‘தங்கள் அருளால் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பினும், ஒன்று மட்டும் எனக்குப் புரிபடவே இல்லை. அதாவது, வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன; அலைகழிக்கின்றன. அவற்றிலிருந்து மீள வழி தெரியவில்லை’’ என்றான். இதைக் கேட்ட குரு, ``நாம் பிறக்கும் போதே பிரச்னைகளும் நம்முடன் பிறந்து விடுகின்றன. சிறு வயதில் உனது பிரச்னையைப் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள்.

பருவ வயதில், பிரச்னைகளை நாமே எதிர் கொண்டு வெல்வோம். ஆனால், ஒரு பிரச்னையின் முடிவு மற்றொரு பிரச்னையின் துவக்கம்! பிரச்னைகளைக் களைய களைய ஒன்றன் பின் ஒன்றாய்... புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஒருவன் இறக்கும் வரை பிரச்னைகளும் இருக்கும்! அவற்றிலிருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு.

பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொண்டு அவற்றை அலட்சியப்படுத்துவது முதல் வழி. அடுத்து... பிரச்னையைத் தலைதூக்க விடாமல் அழித்துவிட வேண்டும். இதற்கு உறுதியான மனம் அவசியம். தர்மசாஸ்திரத்தை நடைமுறைப் படுத்தினால், மனம் உறுதி பெறும். இன்னொரு விஷயம்... கடமையை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்துக் கவலைப்படலாம். ஆனால், அதன் பலன் குறித்துக் கவலைப்படக் கூடாது. பலனை எதிர்பார்த்தால், பிரச்னைகளைச் சந்திக்கும் வலு இருக் காது; துயரத்தில் துவண்டு விடுவோம். எனவே, எது வந்தாலும் ஏற்றுக்கொள்!’’ என்று அறிவுரை கூறினார். இது உங்கள் அன்னைக்கும் பொருந்தும்!

? புராணக் கதைகளில் சொல்லப் படுவது போல் ஏழு பிறவிகள் என்பதெல் லாம் உண்மையா?

- ஜெயந்தி ஞானச்செல்வம், திருச்செந்தூர்


‘பல பிறவிகளைத் தாண்டி அறிவை எட்டியவன் என்னுடன் இணை கிறான்’ என்கிறான் கண்ணன். அதேபோல், ‘பல பிறவிகளைத் தாண்டி, தற்போது மனிதனாகப் பிறந்த நான்...’ என்று சங்கல்பத்தின்போது சொல்வது உண்டு (கேனாபி புண்யகர்மவிசேஷண இதானீம்தனமானுஷ்யே).

பல பிறவிகளை ஏற்று, எந்தப் பிறவியில் அம்பாளின் வழிபாட்டில் அக்கறை செலுத்துகிறானோ, அதுவே அவனது கடைசிப் பிறவி’ என்கிறார் பாஸ்கரராயர் (தத்சரமம் ஜன்ம...).  ‘பிறப்பு-இறப்பு; இறப்பு-பிறப்பு எனும் சங்கிலித் தொடரில் சிக்கித் தவிக்கும் மனிதனைப் பார்த்து, அதிலிருந்து விடுபட கோவிந்தனை நாடுக’ என்று பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.  

கேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா?

நமது செயல்பாடுகளால் நாம் சேமித்த பாவம் அல்லது புண்ணியம்  இருக்கும் வரை,  அதை அனுபவித்துத்  தீர்க்க பிறவி எடுக்க நேரிடும். புண்ணியம் - பாவம் முற்றிலும் அகன்று விட்டால், பிறவி முடிந்துவிடும்.

ஆக, நமது செயல்பாடுகளே பிறவியின் எண்ணிக்கையை வரையறுக் கின்றன. ஆன்மிக வாசனையின்றி, உலகவியலில் வாழ்க்கையை இணைத் துக் கொண்டவன், பெரும்பாலும் துயரத்தையே சந்திக்க நேரிடும். இன்பத் தைச் சந்திக்க நேர்ந்தாலும் அந்த இன்பம் மின்னல் போல் மறைந்துவிடும். ஒருவேளை, அந்த இன்பம் தொடர்ந் தாலும், துயரத்திலேயே முற்றுப்பெறும். இந்த உண்மையை அறிந்த அறிஞர்கள், பிறவித் தளையைக் களையுமாறு பரிந்துரைப்பார்கள்.

ஏழு தலைமுறை என்பது ஒரு வம்சத்தின் (குலத்தின்) எல்லைக்கோடு. இதையே ’ஏழு பிறவிகள்’ என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பல பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பான் என்று சொல்ல முடியாது. பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப விலங்கினமாகவும், ஊர்வனவாகவும், ஏன் தேவனாகவும்கூட பிறப்பு அமையும்.

ஸஹஸ்ர கவசன், கர்ணனாகப் பிறந்தான் என்கிறது புராணம். அதேபோல், சாபத்தின் காரணமாக மரமாகவும் பாம்பாகவும் பிறந்தவர்கள் பற்றிய தகவல்களும் புராணத்தில் உண்டு.

ஒருவன் ஒவ்வொரு பிறவியிலும் எப்படி இருப்பான் என்பதை அறிய இயலாது. பிறவியின் எண்ணிக்கையையும் வரையறுக்க இயலாது. நல்லவற்றைச் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் பிறவியில் இருந்து விடுபடலாம். கனவு காணும் வேளையில் அதை உண்மை என எண்ணும் மனம், விழித்தபிறகு அது பொய் என்பதை அறிந்துகொள்ளும்.

அதேபோல், உலகவியலைச் சுவைக்கும் வேளையில், அறியாமையில் இருப்பதால்... நீண்ட சுவையான வாழ்க்கையை உண்மை என்று எண்ணும். அறிவு வந்து அறியாமை விலகும்போது, நமது வாழ்க்கையே பொய் என்று தோன்றும். அப்போது பிறப்பு முடிந்து விடும்.

- பதில்கள் தொடரும்...