தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

ஜெ.முருகன் - படங்கள்: தேவராஜன்

டற்காற்று தழுவும் ரம்மியமான சூழலில், பிரமிடுக்குள் சென்று நடராஜப் பெருமானைத் தரிசித்து தியானம் செய்தால் எப்படி இருக்கும்?  

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

`என்ன... பிரமிடுக்குள் நடராஜரா!' என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

உண்மைதான்! பிரமிடுக்குள் நடராஜரைத் தரிசிக்க நீங்கள் எகிப்துக்குச் செல்ல வேண்டியதில்லை. புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை யில், புதுக்குப்பம் என்ற கடற்கரை கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு காரணேஸ்வர நடராஜர் திருக்கோயில். இந்தக் கோயிலில்தான் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே தாளகதியாகக் கொண்டு நடராஜ பெருமான் திருநடனம் புரிந்துகொண்டிருக்கும் அற்புதக் காட்சியை நாம் தரிசிக்கலாம்.

உறுதியான செம்மண் கற்களைக் கொண்டு எழுப்பப் பட்டிருக்கும் இந்தக் கோயில், எகிப்து நாட்டில் உள்ள பெரிய பிரமிடுகளைப் போன்று,  `50 டிகிரி 51 இஞ்ச்' என்ற கோண அளவுப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் பிரபஞ்ச நடனக்கோலத்தில் காட்சித் தருகிறார்.  நடராஜரின் பீடத்துக்கு முன்பாக கயிலாசபதி லிங்கமும், அதற்கு அடுத்த படியில் நடுவில் சிவகாமி அம்மையும், அவருக்கு வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகப் பெருமானும் காட்சித் தருகின்றனர். கோயிலுக்கு வெளியே பிரமாண்டமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு முன்பாக நந்தியெம் பெருமானும் அருள்பாலிக்கிறார்.  

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த சிவபக்தரும், ஆரோவில் சர்வதேச நகரத்தின் தற்போதைய தலை வருமான டாக்டர் கரன்சிங்தான் இந்தக் கோயிலைக் கடந்த 2000-ஆம் வருடம் கட்டினார்.

கோயிலை நிர்வகித்து வரும் மணிகண்டனிடம் பேசினோம். ‘`ஜம்மு காஷ்மீர் மன்னர் பரம்பரையில்  டாக்டர் கரன்சிங், அவருடைய ‘ஹரிதார தரும அறக் கட்டளை - ஜம்மு’ மூலமாக இந்தியா முழுவதும் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார். ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது அவருக்குள் ஏற்பட்ட ஈர்ப்பே, இங்கே இந்தப் பிரமிடு கோயில் நிர்மாணிக்கப்பட்டதற்குக் காரணம் எனலாம். முதலில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைந்திருந்ததாம் இந்த ஆலயம். 2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியின்போது கூரை சேதமடைந்து விட, மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு 2006-ம் வருடம் முதல் பக்தர்களின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வைத்துக்கொள்ளும் சக்தி பிரமிடுக்கு உண்டு. அதன் காரணமாகத்தான் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும்போது, பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிப்பதுடன், நாம் செய்யும் தியானத்தின் பலனையும் விரைவிலேயே அனுபவபூர்வமாக உணரலாம்.  `இங்கு வந்து தியானம் செய்து வழிபடுவதால், தியானம் விரைவில் கைகூடுகிறது, மனம் ஒருமுகப்படுகிறது' என்று இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.அத்துடன், இந்தக் கோயிலுக்கு வந்து நடராஜரைத் தரிசிப்பதால், தங்களது பலதரப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்’’ என்றார் மணிகண்டன். இவர், ரிஷிகேஷில் தியானப் பயிற்சி பெற்றவர். ``அடிப்படை தியானம் பற்றித் தெரியாதவர்களுக்கு, அதுகுறித்து இலவசமாகவே பயிற்சியும் வழங்குகிறோம்'' என்கிறார்.   

பிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்!

நீங்களும் ஒருமுறையேனும் இந்தப் பிரமிடு கோயிலுக்குச் சென்று வாருங்கள்; தியானம் - தெய்விக அனுபவத்தோடு,  பிரபஞ்ச நாயகனின் பேரருளையும் பெற்று வாருங்கள்!

எப்படிச் செல்வது?

புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுச்சேரியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கீழ்ப்புத்துப்பட்டு என்ற இடத்தில் இறங்கி, சாலையின் எதிர்ப்புறத்தில் சுமார் 500 அடி தொலைவில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் மாலை 7 மணி வரை