Published:Updated:

சனங்களின் சாமிகள் - 19

சனங்களின் சாமிகள் - 19
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 19

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 19

அ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 19
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 19

குறுக்காளஞ்சியின் கதை

ருகாலத்தில், காஞ்சிபுரத்தில் ராமசாஸ்திரி என்று ஒருவர் இருந்தார். அவருக்கு ஏழு ஆண் பிள்ளைகள். ஒரேயொரு பெண் குழந்தையாவது வேண்டும் என்கிற ஏக்கம் அவருக்கு. அவருக்கும் அவர் மனைவிக்கும் சதா அதே சிந்தனை. இருவருமாக பல கோயில்களுக்குப் போய் வந்தார்கள்; விரதமிருந்தார்கள். நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்கள். அவர்கள் வணங்கிய தெய்வங்களில் எந்த தெய்வம் மனமிரங்கியதோ... ராமசாஸ்திரியின் மனைவி கருவுற்றாள். ஒரு நல்ல நாளில் அவர்கள் விரும்பியபடியே ஒரு பெண் குழந்தை பிறந்தது. `பூரணவல்லி’ என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். பூரணவல்லி, அந்த வீட்டின் செல்லக் குழந்தையானாள்.   

சனங்களின் சாமிகள் - 19

அப்பா, அம்மா மட்டுமல்ல... சகோதரர்களும் குழந்தையைத் தாங்கி வளர்த்தார்கள். பூரணவல்லியைத் தரையில்விட்டால், எங்கே அவளுக்கு கால்கள் நோகுமோ என பயந்தார்கள். குழந்தையை மாறி, மாறித் தூக்கி வளர்த்தார்கள் அண்ணன்மார்கள். அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். உடைகள், நல்ல அணிகலன்கள் எதிலும் ஒரு குறைவில்லை. அழகு தேவதையாக, ஊரார் கண்பட வலம் வந்தாள் பூரணவல்லி.

மனிதர்களுக்கு ஆபத்து எந்த ரூபத்தில், எப்படி வரும் என்பது தெரிவதில்லை. ராமசாஸ்திரி வீட்டுக்கு ஏழு வயதுச் சிறுவன் உருவில் ஆபத்து வந்தது... அதை அப்போது அந்த வீட்டிலிருந்தவர்கள் உணர்ந்திருக்கவில்லை. ஒருநாள் வீட்டுத் திண்ணையில் ஒரு சிறுவன் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தார் ராமசாஸ்திரி.

``யாரப்பா நீ? இங்கே வந்து படுத்திருக்கிறாயே...’’ என்று விசாரித்தார்.

எழுந்து உட்கார்ந்தான் அந்தச் சிறுவன். பார்த்தவுடனேயே அவன் பசியோடிருக்கிறான் என்பது புரிந்தது. ராமசாஸ்திரி தன் மனைவியை அழைத்து, முதலில் அந்தச் சிறுவனுக்கு உணவு பரிமாறச் சொன்னார். அவன் சாப்பிட்டு முடித்ததும், மெள்ள விசாரித்தார். அவன் அதே ஊரில் வசிப்பவன், பெயர் தூண்டிமுத்து, தாய் தந்தையோ, உறவினரோ யாருமில்லாத அனாதை என்பது தெரிந்தது.

ராமசாஸ்திரி ஒன்றே ஒன்றைத்தான் கேட்டார்... ``இந்த வீட்டிலேயே இருந்துவிடுகிறாயா?’’

சிறுவன், கண்கள் விரிய மகிழ்ச்சியோடு தலையசைத்தான். அந்தக் கணத்திலிருந்து தூண்டிமுத்து, ராமசாஸ்திரிக்கு ஒன்பதாவது பிள்ளையானான். வீட்டில் ஒட்டுதலாக இருப்பது போலத்தான் இருந்தான். ஆனால், அவனுக்கு வேறொன்றில் நாட்டமிருந்தது. மந்திர வித்தை. யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது வெளியே கிளம்பிப் போனான். அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பதை ராமசாஸ்திரி வீட்டிலி ருந்தவர்கள் விசாரிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 19

தூண்டிமுத்து மந்திர வித்தை கற்றான், காயசித்தி, பெண்ணை வசியம் செய்வது... என அனைத்து மாயாஜாலங்களிலும் கற்றுத் தேர்ந்தான். இது ராமசாஸ்திரியின் வீட்டிலிருக்கும் ஒருவருக்கும் தெரியாது. அத்தனையையும் தன்னோடு ரகசியமாகவே வைத்திருந்தான் தூண்டிமுத்து. நாள்கள் நகர்ந்தன, மாதங்கள் உருண்டோடின. அப்போது அவனுக்கு 16 வயது;  பூரணவல்லிக்கு 12 வயது. அவள் பூப்பெய்தினாள். வீடே விழாக்கோலம் பூண்டது. வீட்டிலிருக்கும் ஒற்றைக்கொரு பெண் பிள்ளை... ஊரையே அழைத்து விருந்து வைத்து ஜமாய்த்துவிட்டார் ராமசாஸ்திரி. பட்டும் பதக்கமுமாக பூரணவல்லி, ஜொலித்துக்கொண்டிருந்தாள்.

தூண்டிமுத்துவுக்கு, பூரணவல்லியின் முகம் அதுவரை பார்க்காததாக, புதியதாக இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது. பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தான். அவள் அருகிலேயே இருக்க விரும்பினான். அவளை அப்படியே விழுங்கிவிடுவதுபோலப் பார்த்தான். `உண்ட வீட்டுக்கு துரோகம் செய்கிறோமே...’ என்று அவன் யோசிக்கவில்லை. அந்த வீட்டில் தன்னை ஒரு மகன்போல ராமசாஸ்திரி வளர்த்தது அவனுக்கு மறந்துபோனது. அவளை அடைய வேண்டும் என விரும்பினான். அந்த தருணத்துக்காகக் காத்திருந்தான். அந்த நாளும் விரைவிலேயே வந்தது. 

பூரணவல்லியின் அண்ணன்மார்கள் தூண்டிமுத்துவை அழைத்தார்கள்... ``பூரணவல்லிக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைப் பார்ப்பதற்காக நாங்களெல்லாம் வெளியூர் செல்கிறோம். உன் தங்கை பூரணவல்லி. நீதான் காவல்... அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொன்னார்கள். குடும்பமே அடுத்த நாள் கிளம்பிப்போனது.

பூரணவல்லி தனியாக இருந்தாள். சின்னஞ்சிறு பெண். மனிதர்களின் சுபாவமறியாதவள். தூண்டிமுத்து, தான் கற்ற மந்திர வித்தைகளைப் பயன்படுத்த நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான். தகுந்த நேரம் பார்த்து, ஒரு மாயப்பொடியைத் தூவி அவளை மயக்கினான். பூரணவல்லியும் அவன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டாள்; மயங்கிப்போனாள். இருவரும் தாம்பத்தியம் நடத்தினார்கள்; கணவன், மனைவிபோல் வாழ்ந்தார்கள். ஊர், உலகம் அறியாத தம்பதிகள். அவர்களின் உறவு நாளும் தொடர்ந்தது. சில மாதங்களாகின. கிளம்பிப்போன பூரணவல்லியின் தமையன்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. பூரணவல்லி கருவுற்றாள்.    

சனங்களின் சாமிகள் - 19

விஷயமறிந்ததும், அவளுக்குப் பயம் வந்தது. வயிற்றில் குழந்தை உண்டாகிவிட்டதே என்று சந்தோஷப்படும் நேரத்தில், அவள் கலங்கி நின்றாள். `ஊரார் மெச்ச வாழ்ந்த மரியாதைக்குரிய குடும்பம். திருமணமாகாமல் கருவுற்ற பெண்ணை ஊர் என்ன நினைக்கும்... புழுதி வாரித் தூற்றாதா... அண்ணன்மார்கள் அறிந்தால்..? ஐயோ.... அவர்கள் வந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?’ இந்த எண்ணமே அவளை கவலைக்குள்ளாக்கியது. தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த எண்ணம் வலுத்துக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் வீட்டுக்குப் பின்புறமுள்ள கிணற்றை நோக்கி ஓடினாள். கிணற்றுத் திண்டில் ஏறி நின்று குதிக்கவும் துணிந்தாள். அந்த நேரத்தில் அங்கே வந்த தூண்டிமுத்து அவளைத் தடுத்து, காப்பாற்றி விட்டான்.

அவளை வீட்டுக்குள் அழைத்துப்போனான். மென்மையாகப் பேசி சமாதானம் செய்தான். அவன் எது சொன்னாலும் அவள் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் அவன் மேலிருந்த பிரியமும் குறையவில்லை. அவன் ஏவிய மாயப்பொடி இன்னும் வேலை செய்துகொண்டிருந்தது. இருவரும் பேசினார்கள். கடைசியாக தூண்டிமுத்து அந்த யோசனையைச் சொன்னான்... ``உன் அண்ணன்களை நினைத்துத்தானே பயப்படுகிறாய். இனி இந்த ஊரில் இருக்க வேண்டாம். வேறெங்காவது போய்விடுவோம். ஒன்று செய்யலாம்... மலையாள நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்கே கொட்டாரக் கரை என்ற ஊரில் ஓர் அரசன் இருக்கிறான். எனக்குத் தெரிந்தவன். நான் கேட்டால், அந்த அரசன் நிச்சயம் எனக்கு ஒரு  வேலை தருவான்... காலம் முழுக்க உன் கண்ணில் நீர் வராமல் பார்த்துக்கொள்கிறேன்... என்னுடன் வா!’’ என்றான். அவளும் சம்மதித்தாள்.

இருவரும் இரவோடு இரவாகக் கிளம்பினார்கள். பல வழிகளில் பயணம்செய்து மலையாள நாடு போய்ச் சேர்ந்தார்கள். கொட்டாரக்கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் தூண்டிமுத்து, அரசனைப் போய்ப் பார்த்தான். நடந்ததையெல்லாம் சொன்னான். பூரணவல்லியைக் காப்பாற்று வதற்காவது தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்டான். அவர் ஒரு கணம் யோசித்தார். ``உன் திறமையையும் தகுதியையும் நானறிவேன். ஆனால், இப்போது இங்கே உனக்குத் தகுதியான வேலை எதுவுமில்லை. சற்றுப் பொறுத்திரு. வேலை வரும்போது உன்னை அழைக்கிறேன். அதுவரை நீயும் உன் மனையாளும் அரண்மனையி லேயே தங்கிக்கொள்ளலாம்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்’’ என்றார். தூண்டிமுத்து, அரசன் உத்தரவை ஏற்றுக் கிளம்பிப் போனான்.

காஞ்சிபுரத்தில்... பூரணவல்லியின் அண்ணன்மார்கள் ஊர் திரும்பியிருந்தார்கள். வீட்டில் பூரணவல்லியைக் காணவில்லை; தூண்டிமுத்துவும் இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் இருவரும் ஊரை விட்டுப்போன செய்தி கிடைத்தது. அண்ணன்மார்கள் ஊரார் முன் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை வந்ததே எனக் குமுறினார்கள். பூரணவல்லியையும் தூண்டிமுத்துவையும் தங்கள் கைகளாலேயே கொன்றால்தான் இந்தக் கோபம் அடங்கும் எனப் புரிந்துகொண்டார்கள். இருவரும் போன வழியை விசாரித்துக்கொண்டு எப்படியோ கொட்டாரக் கரைக்கு வந்துவிட்டார்கள்.

தூண்டிமுத்துவும் பூரணவல்லியும் இருக்கும் இடத்தையும் அறிந்துகொண்டார்கள். அவர்களைக் கொன்றுவிடலாம்தான். ஆனாலும் ஒன்று அவர்களைத் தடுத்தது. இது வேறு தேசம். அதை ஆள்வதற்கு ஓர் அரசன் உண்டு. அவனிடம் அனுமதி வாங்காமல் கொல்வது சரியல்ல என்பதை உணர்ந்தார்கள். நேராகக் கொட்டாரக்கரை அரசனிடம் போனார்கள். தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். நடந்ததையெல்லாம் விவரித்தார்கள்.   

சனங்களின் சாமிகள் - 19

``அரசே... இப்படிப்பட்ட ஒரு கயவனையும், அவனுக்கு இடம் கொடுத்த எங்கள் தங்கையையும் எப்படி ஒன்றும் செய்யாமல் விடுவது? அவர்களை நாங்களே கொல்ல எங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்க வேண்டும்’’ என்றான் பூரணவல்லியின் மூத்த சகோதரன்.

``நீ சொல்வது சரிதான். இருந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் விரும்பித்தானே ஒன்றிணைந் தார்கள்... அவர்களை ஏன் பிரிக்க வேண்டும்?’’

``இல்லை அரசே... அவனும் அவளும் அண்ணன் தங்கையைப் போலவே எங்கள் வீட்டில் வாழ்ந்தவர்கள். இருவரும் இல்லறம் நடத்தினால், ஊரார் ஏச மாட்டார்களா..? எங்கள் கையால் இருவரையும் கொன்றால்தான் எங்களுக்கு நிம்மதி. இல்லையென்றால், நாங்கள் இங்கேயே வாளை நட்டு, அதன் மேல் பாய்ந்து எங்கள் உயிரைத் துறப்போம்...’’ என்றான் இன்னொரு சகோதரன். அவ்வளவுதான். சகோதரர்கள் அனைவரும் தங்கள் வாள்களை உருவிக் கொண்டு, இறக்கவே தயாராகிவிட்டார்கள்.

அரசனுக்கு இப்போது வேறு வழியிருக்கவில்லை. ``உங்கள் விருப்பம்போல் செய்துகொள்ளுங்கள்’’ என்றான். ஏழு சகோதரர்களும் தூண்டில்முத்து இருக்கும் இடம் தேடிப் போனார்கள். மூத்த சகோதரன் தூண்டிமுத்துவை வெட்டிக் கொன்றான். இளையவன் தங்கையின் தலையில் வாளைப் பாய்ச்சினான். பூரணவல்லி, தூண்டிமுத்துவின் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவள்தான். ஆனால், அவள் ஏதுமறியாதவள். அவனைத் தவிர வேறு யாரையும் மனதிலும் நினையாத பதிவிரதை. தெய்வபக்தி நிரம்பியவள். இளையவன் பாய்ச்சிய வாள் அவள் தலை உச்சியில் பட்டது. அவளுடைய புனிதத் தன்மையால், அவள் தலை உச்சியிலிருந்து `குறுக்காளஞ்சி’ என்ற தேவதை வெடித்துக் கிளம்பி வந்தது.

குறுக்காளஞ்சி, ஏழு சகோதரர்களையும் துவம்சம் செய்து, கொன்றுபோட்டது. அதோடு அதன் ஆங்காரம் தீரவில்லை. கொட்டாரக்கரை அரண்மனைக்குப் போனது. அரண்மனையையே அதகளம் செய்து ஓர் ஆட்டம் ஆடியது. அதன் அழிம்பு அரசனை மிரட்டியது. அதை விரட்ட காணிப்புலையனை அழைத்துவர ஆளனுப்பினான். அவன் வந்ததும், ``உன் மந்திரத்தால் அந்த குறுக்காளஞ்சி தேவதையைக் கட்டிப்போடு, அடக்கு, பிடி...’’ என்றெல்லாம் ஆணை பிறப்பித்தான்.

தெய்வாம்சம் பொருந்திய குறுக்காளஞ்சி, மந்திரவாதிக்கா கட்டுப்படும்? அது, மந்திரவாதியை அழித்தது. அரசன் பதறிப்போனான். நேரே அவனுடைய இஷ்ட தெய்வம் பகவதியை நோக்கி ஓடினான். அவள் தாழ் பணிந்தான். ``அம்மா... தாயே... நீயின்றி என்னைக் காக்க வேறு யாருமில்லை... அந்தக் குறுக்காளஞ்சியிடமிருந்து என்னைக் காப்பாற்று’’ என்று வேண்டினான்.

பகவதி தேவி அசரீரியாக ஒலித்தாள்... ``அரசனே... குறுக்காளஞ்சிக்கு கோயில் எடுப்பதாக நேர்ந்துகொள்... நன்மையே நடக்கும்.’’ பகவதி தேவி சொன்னதுபோலவே அரசன் வேண்டிக்கொண்டான். குறுக்காளஞ்சியின் கோபம் தணிந்தது. அந்த தேவதை, அகத்தியரிடம் சென்று வரம் பெற்றது. பாபநாசத்திலிருக்கும் சொரிமுத்தையன் கோயிலில் தெய்வமாகக் குடிகொண்டது. இந்தக் கோயிலுக்கு வந்திருந்த கோபாலசமுத்திரம் மெய்யப்ப பிள்ளை தன் ஊரிலும் குறுகாளஞ்சிக்குக் கோயிலெடுத்தார்.

சனங்களின் சாமிகள் - 19

நீலகண்ட பிள்ளையார்!

ஞ்சை மாவட்டம், பேராவூரணியில் எழுந்தருளியிருக்கிறார் திருநீலகண்ட பிள்ளையார். இவருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் தீரும் என்பது நம்பிக்கை.தஞ்சையை துலசேந்திர மகாராஜா ஆண்டு வந்த நேரம். அவரது அவையில் மூத்த அமைச்சர் ஒருவர் இந்நோயால் அவதியுற்றார். என்ன வைத்தியம் செய்தும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் ராஜகுருவின் ஆலோசனைப்படி ஆவுடையார்கோவில் ஆத்மநாதரை தரிசிக்கப்புறப்பட்டார்.

வழியில் பேராவூரணியில் இரவு தங்கினார். அருகில் ஓர் அரசமரத்தடியில் அருள்பாலித்த பிள்ளையாரின் அழகுக்கோலம் அமைச்சரை ஈர்க்கவே, அவரை வணங்கி வழிபட்டுவிட்டு கண்ணயர்ந்தார். அவரது  கனவில் தோன்றிய பிள்ளையார், காலையில் அங்குள்ள குளத்தில் நீராடிவிட்டு தம்மை தரிசித்தபிறகு ஆவுடையார்கோவிலுக்குச் செல்லும்படி அருள்பாலித்தார்.

அதன்படியே மறுநாள் அருகிலிருந்த குளத்தில் நீராடிவிட்டு பிள்ளையாரை வழிபட்டார் அமைச்சர். தீபாராதனையின்போது ஓர் அசரீரி ஒலித்தது; ‘உமது நோயைத் தீர்த்து விட்டோம். இனி, ஆத்மநாதரை தரிசித்து வீடு திரும்பும்’ என்றது அந்த அசரீரி. அமைச்சரும் அதன்படியே செய்தார். ஊருக்குத் திரும்பி மன்னரிடமும் விவரம் தெரிவிக்க, மன்னரும் மகிழ்ந்து இந்தப் பிள்ளையார்மீது பக்தி கொண்டு நிலங்களைக் கோயிலுக்குக் கொடுத் தாராம். நீங்களும் ஒருமுறை பேராவூரணி நீலகண்ட பிள்ளையாரை தரிசித்து வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்!

-எஸ்.கல்யாண சுந்தரம், சென்னை 94

சனங்களின் சாமிகள் - 19

பிரம்ம சூரியன்!

சூரிய பகவானை சிவபக்தர்கள் `சிவ சூரியன்’ என்றும், வைணவர்கள் `சூரியநாராயணர்’ என்றும் போற்றி வணங்குவர். அதேபோல், பிரம்மனை வழிபடுவோர் `பிரம்ம சூரியன்’ என்று போற்றுவர்.

சூரிய மண்டலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான், ஆதி பிரம்மனாக நான்கு முகங்களும் எட்டு தோள்களும் கொண்டவராகக் காட்சி தருகிறார். இவரை நினைத்தே பிரம்மன் தனது படைப்புத் தொழிலைச் செய்கின்றார் என்பதாக பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன. சூரியனின் சதுர்த்த வடிவங்களான ஆதித்யன், பானு, பாஸ்கரன், ரவி ஆகியோர் நான்கு முகங்களுடன் பிரம்மதேவனாய் காட்சியளிக்கின்றனராம்.

சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் பவனிவருவது போல் சூரிய பிரம்மன் ஏழு அன்னங்கள் பூட்டிய தேரில் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சூரியனுக்குரிய ‘சௌமியன்’ என்ற பெயரால் பிரம்மனுக்கு ‘சௌமிய பிரம்மன்’ என்ற திருநாமமும் உண்டு!

-டி.சத்தியநாராயணன், சென்னை 72