Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

மகுடேசுவரன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

மகுடேசுவரன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

கி.பி. 1520-ம் ஆண்டு மே மாதம் 20-ம் நாள். அன்றைக்குத் தாக்குதலைத் தொடங்கலாம் என்று கிருஷ்ண தேவராயருக்கு நாள் குறித்துத் தரப்படுகிறது. படையணிகளோடு முனைமுகத்து நின்ற குமார வீரையனுக்குத் தாக்குதலைத் தொடுக்கும்படி ஆணை பிறப்பிக்கிறார் ராயர். போர்க்களத்தில் அடில்சாவின் படைகளும் ராயரின் இரண்டு படையணிகளும் எதிர்நோக்கி நிற்கின்றன. தாக்குதல் தொடங்கட்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட் டவுடன், அதிர்ந்த போர்முரசுகளும் கொம்பூதல்களும் வானிடிந்து விழுந்ததோ என்னும்படி இருந்தனவாம். படைநகர்ச்சியால் எழுந்த புழுதி புவிவெடிப்பைப்போல் சுழன்றதாம்.

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

அடில்சாவின் திட்டம் முதலடியைத் தாம் வாங்கிக்கொண்டு அதன்பின் திருப்பித் தாக்குவதாக இருந்தது. எண்ணிக்கையளவில் ஐந்துக்கு ஒன்று எனும்படி சிறிதாய் இருந்த பீஜப்பூர்ப் படைகள் நேரடியான தாக்குதலில் இறங்குவது இயலாது. ராயரின் அனைத்துப் படைகளும் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கும்போது, அவற்றின் பேரளவைக் கணக்கிட்டு அதன் பிறகு தாக்குவதுதான் வெற்றிக்கு உதவும் என்று அடில்சா திட்டமிட்டிருந்தார்.

அவ்வாறு முதலடியைப் பெறுவதனால், அவருடைய படையில் பெரும்பகுதி அழிந்துவிடும் என்பது தெரிந்தே இருந்தது. சூதாட்டத் தைப்போல தனது படையின் ஒரு பகுதியைப் பலிகொடுத்து மோதுவது எனும் கொடிய முடிவை அவர் எடுத்தி ருந்தார். வலிமையற்று இரண்டாம் நிலையிலுள்ள தம் படைவீரர்களைப் பலி கொடுத்தபின் தாம் பெரிதும் நம்பியுள்ள துப்பாக்கி, பீரங்கிப் படைகளைக்கொண்டு விஜயநகரப் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவிக்க முடியும் என்று நம்பினார். அவ்வாறு தாக்கும்போது விஜயநகரத் தின் சில படைத்தலைவர்கள் களப்பலி யானால், அவர்கள் எவ்வளவு பெரும் படையினர் என்றாலும், கட்டளை பிறப்பிப்பாரின்றி முடங்கி நிற்பார்கள் என்பது அடில்சாவின் கணக்கு.

விஜயநகரப் படைகள் ஏழு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஏழு பிரிவினரும் தம் முழுத்திறனோடு தாக்கத் தொடங்கியதும் தமது பீரங்கிகளை முழக்கி அவற்றை அழிக்கலாம் என்று அடில்சா மனப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தம் இரண்டு படையணிகளை மட்டுமே முன்னே அனுப்பித் தாக்கத் தொடங்கினார் கிருஷ்ண தேவராயர். அவ்விரு படையணியினரும் பீஜப்பூர்ப்  படைகளோடு கடுமையாகப் போரிட்டனர். இரு தரப்பிலும் உயிர்ப்பலி எண்ணிக்கை உயர்ந்தபடியே இருந்தது. இதனால் அடில்சாவுக்கு தமது பீரங்கி, துப்பாக்கிப் படைகளைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் முன்னுள்ள படைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

பீரங்கிப் படைகளைக்கொண்டு தற்காப்பில் ஈடுபடத்தான் முடியு மேயன்றித் தாக்க இயலாது. வேறு வழியின்றி அடில்சாவின் பீரங்கிகள் விண்ணதிர முழங்கின. போரில் பீஜப்பூர் வீரர்களோடு நேர்வலுக் கொண்டு மோதியழித்த விஜயநகரப் படைகள் பீரங்கித் தாக்குதலால் நிலை குலைந்தன. இப்போது விஜயநகரப் படைகள் பெருத்த சேதத்துக்கு ஆளாயின. கிருஷ்ண தேவராயர் தம் முடிவை உடனே மாற்றினார். மீதமுள்ள ஐந்து படையணிகளும் ஒருவர் மீதமில்லாமல் பாமினிப் படைகளைத் தாக்கியழிக்கக் கட்டளையிட்டார்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 18

ராயரின் கட்டளையைப் பெற்ற விஜயநகரப் படைகள் தரை நடுங்கும்படி பாய்ந்து சென்றன. பெருமலைகள் பெயர்ந்தெழுந்து வருவதைப்போல் தம்மைத் தாக்க வரும் விஜயநகரப் படைகளைக் கண்ட பாமினிப் படை களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வேண்டியவாறு பயன்படுத்தி முடித்தாயிற்று.  விஜயநகரப் படைகள் அருகில் வருவதற்குள் பீரங்கிகளை நிரப்பிச் சுடுவதற்குக் கால இடை வெளி வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. முழுத்திறனுடன் களத்தில் இறங்கிய ராயரின் படைகள் காளித்தாண்டவம் ஆடிற்று.  எதிரிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இறுதி முயற்சியாக, பாமினிப் படைகளின் வீரத் தளபதிகளில் ஒருவனான சலாபத்கான் என்பவன் தம்மிடமிருந்த போர்த்துக்கீசியக் கூலிப்படையினர் ஐந்நூற்றுவரைத் திரட்டிக் கொண்டு ராயரைக் கொல்வதற்காகக் கிளம்பி னான். அந்த ஊடறுப்புத் தாக்குதல் வெற்றியில் முடிந்தால் ராயரின் தலை கைக்குக் கிடைக்கும். இல்லையேல் முழு நாசம் என்பது அடில்சாவுக்குத் தெரிந்தது. வேறு வழியில்லை. ஏறத்தாழ தற்கொலைப் படையொன்றின் தாக்குதல் அது. சலாபத்கானின் வெறிகொண்ட படைக்குழு விஜயநகரப் படையை ஊடறுத்துப் பாய்ந்தது.

இதை விஜயநகரப் படையினர் விளங்கிக் கொண்டு தடுத்து நிறுத்துவதற்குள் எதிர்ப்பட் டோரைக் கொன்று சாய்த்தபடி ராயரை நெருங்கிவிட்டான் சலாபத்கான். ராயரின் மெய்க்காவல் படையினர் முழு வலிமையுடன் போராடி சலாபத்கானின் படையை அடித்து வீழ்த்தினர். அந்தத் தாக்குதலில் ராயர் படுகாயப் பட்டார். கொஞ்சம் அயர்ந்திருந்தால் அவர் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து நற்பேறாக உயிர்பிழைத்தார். தம் படையினரை இழந்து குற்றுயிராகக் கிடந்த சலாபத்கான் சிறைப்படுத்தப்பட்டான்.

இறுதி முயற்சியும் தோற்பில் முடிந்ததை அறிந்த அடில்சாவுக்குத் தப்பியோடுவதைத் தவிர வேறு வழியில்லை. விஜயநகரப் படைகள் வாழையை வெட்டிச் சாய்ப்பதுபோல் தம் படைவீரர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டார். தோல்வி உறுதி என்று கருதிய பாமினி வீரர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கரும்பெண்ணை ஆற்றில் குதித்தனர். அந்நேரத்தில் பெருவெள்ளம் போய்க் கொண்டிருந்தது. ஆற்று வெள்ளத்தில் குதித்தவர் களில் ஏராளமானோர் மூழ்கிச் செத்தனர். கிருஷ்ண தேவராயர் நேரடியாய்க் களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது அடில்சா களத்துக்கே வரவில்லை. பின்னணியில் இருந்து கட்டளையிடுவதை மட்டுமே செய்துவந்தார். தம் படைகள் தோற்றோடுவதைக் கண்டதும் முதலில் தப்பிக்க எண்ணியவரும் அடில்சாதான்.

ஆசாத்கான் என்னும் மெய்க்காவலனின் பெரு முயற்சியால் காயம்பட்ட யானை ஒன்றின் மீதேறி போர்க்களத்தை விட்டுப் பறந்தோடினார் அடில்சா.  அடில்சா  சிறிது காலந்தாழ்த்தியிருந்தாலும் அங்கேயே கொல்லப்பட்டிருப்பார். விஜயநகரத்தின் வெற்றி உறுதியாயிற்று. ‘இனி கொல்வதை நிறுத்துங்கள்’ என்று ராயர் கட்டளையிட்டார். போர்க்களத்தில் சிக்கியவர்கள் சிறைப்பட்டனர். பாமினி வீரர்களுக்குச் சேவை செய்ய வந்த பெண்டிர்க் குழுவினர் காவலுக்குள் வைக்கப்பட்டு முறையாய் நடத்தப்பட்டனர். பாமினிப் படையினரைத் தூள் தூளாக்கிய விஜயநகரப் படைகள் ரெய்ச்சூர்க் கோட்டையை நெருங்கின. உள்ளிருந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். கோட்டை முழுதாய் விழுந்தது. இப்போரில் விஜயநகரப் படையினரில் பதினாறாயிரம் வீரர்களும் பீஜப்பூர்ப் படையில் நாற்பத்தி ரண்டாயிரம் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

போர் வெற்றியாய் கரும்பெண்ணை ஆற்றுப் பள்ளத்தாக்கின் பொன்விளையும் பூமி விஜயநகரத்தின் ஆளுகைக்குள் வந்தது. பாமினிப் படைகள் கைவிட்டோடிய நான்காயிரம் குதிரைகள், ஐந்நூறு பெரிய வகை பீரங்கிகள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், காளைகள், கழுதைகள், போர்க்கருவிகள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

பீஜப்பூர் படையின் இந்தத் தோல்வியால் பிற பாமினி சுல்தான்கள் ராயரைக் கண்டு அஞ்சி நடுங்கினர். அடுத்ததாய்த் தாம் தாக்கப்படுவோமோ என்று அவர்களுக்கு அச்சம். அதனால் விஜய நகரத்தின் ஐயப்பாட்டுக்குரிய எந்தச் செயலையும் அவ்வரசர்கள் ராயரின் காலத்தில் முன்னெடுக்கவில்லை. விஜயநகர ஆட்சிக்காலம் முழுக்கவே செல்வச் செழிப்பும் வெற்றியும் மிகுந்திருந்தது என்றாலும் ரெய்ச்சூர்க் கோட்டை முற்றுகை வெற்றிக்குப்பின்னான கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம்தான் பொற்காலம் என்று கருதத்தக்கது.   
    
- தொடரும்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism