Published:Updated:

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

அஷ்ட பைரவர்கள் லிங்கங்களாக அருளும் வயிரவி வனம்!வலையபேட்டை ரா.கிருஷ்ணன் - படங்கள்: ஏ.தியாகராஜன்

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

அஷ்ட பைரவர்கள் லிங்கங்களாக அருளும் வயிரவி வனம்!வலையபேட்டை ரா.கிருஷ்ணன் - படங்கள்: ஏ.தியாகராஜன்

Published:Updated:
காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

திருப்புகழில் ஒரு பாடல், வயிரவி வனம் எனும் திருத்தலத்தைப் போற்றுகிறது. `வாசனை மலர்களால் நறுமணம் வீசும் மரங்கள் சூழ்ந்துள்ள ஊர் இது. வயல்களின் அருகில் நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகள் உள்ளன. இப்படியான வளப்பம் மிகுந்த கரைகளுடன்கூடிய சரஸ்வதி எனும் நதிதீரத்தில் விளங்கும் வயிரவி வனம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே’ என்று அங்கு அருளும் முருகனைத் துதிக்கிறது அந்தப் பாடல். 

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊனும்
அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
அலைகடல் அடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரும்
அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே.

பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோன்ப
னிருகர மிகுத்த பார முருகா நின்
பதமலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே

சுருதிகள் உரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி
சொலுவென உரைத்த ஞான குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்துமீள
துணிபட அரக்கர்மாள விடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.


இதில் விளக்கப்படும் வயிரவிவனம் எனும் ஊர், பஞ்சாப் மாநிலத்தில் சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகத் தெரிகிறது என்று தணிகைமணி அவர்கள் திருப்புகழ் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சரஸ்வதி நதி என்பது நெடுங்காலத்துக்கு முன்பே பூமிக்குள் (அந்தர்வாகினி) சென்றுவிட்டது. வட இந்தியாவில் வயிரவி என்பதை பைரவி என்றே அழைப்பர். நமது தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் வயிரவன், வயிரவி என்றுதான் காணப்படும். ஆக, இப்பாடலின் பொருளை நோக்கும்போது, இத்தலம் தமிழகத்திலேயே இருக்கலாம் என்ற சிந்தனையில் வயிரவிவனத்தின் அமைவிடத்தை ஆய்வு செய்தபோது சுவையான பல தகவல்கள் கிடைத்தன.   

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் பகுதி யில் ஸ்ரீசோளீச்வரர் - வயிரவேச்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திசைக்கு ஒருவராக... சம்ஹாரர், அதிசாங்கர், சண்டர், குரு, குரோதனர், உன்மத்தர், கபாலர், பிட்சணபைரவர் ஆகிய அஷ்ட பைரவர் களும் எட்டுத் திக்குகளிலும் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருப்பது, இக்கோயிலின் சிறப்பம்சம்.

`பைரவர்' என்ற சொல்லுக்கு தன்னை வழிபடு பவர்களின் துக்கத்தையும் அதற்குக் காரணமான பாவங்களையும் நீக்குபவர் என்றுபொருள்.

இத்திருக்கோயிலில் நுழையும்போது, இடது புறம் விநாயகரும் வலப்புறம் மயில்மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிகப்பெரிய பரப்பில் அமைந் திருந்த இக்கோயில் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப் பட்டு, தற்போது மிகவும் குறுகி காணப்படுகிறது. மேலும், அருணகிரிநாதர் விவரிக்கும் வயிரவி வனத்தின் வளமும் செழுமையும் இங்கே நிறைந்து திகழ்ந்தன என்பதையும் இப்போதும் தென்படும் செழிப்பைக் கண்டு யூகிக்க முடிகிறது. கோயில் அருகிலேயே வேகவதி நதியும் பாய்கிறது என்பது முக்கியமான செய்தியாகும்.

`ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள்’ எனும் மகான் இப்பகுதியில் உள்ள திருவாவடுதுறை ஆதின திருமடத்தில் தங்கியிருந்து காஞ்சி புராணத்தை எழுதினார் என்பர். அதில் காஞ்சியில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங் கள் காணக் கிடைக்கின்றன.

காஞ்சியில் நான்முகன் மிகப்பெரிய வேள்வி செய்ய முற்பட்டார். அதை விரும்பாத சரஸ்வதி, தன் வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுத்து பாய்ந்துவந்தாள். இதை நாரதர் மூலம் அறிந்த பிரம்மன் சிவனாரைச் சரணடைந்தார். சிவபிரான் திருமாலை அழைத்து, ``சரஸ்வதியை (நதியை) தடுத்து பிரம்மனின் யாகத்தைக் காப்பீராக’’ எனக் கேட்டுக்கொள்ள, அதன்படி சரஸ்வதி நதியைத் தடுத்து கடல்நோக்கிச் செல்லும்படி செய்தார் திருமால். அதனால் அவருக்குச் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ எனும் திருப்பெயர் வந்தது (விஷ்ணு பக்தன் கணிகண்ணன் தொடர் பான வேறொரு வரலாறும் உண்டு).  

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

மேலும், ``சரஸ்வதி நதி, வலிய வினைகளை அழிக்கும் விதம் `வேகவதி நதி’ என்ற பெயரில் இந்நிலத்தில் ஏற்றமுற்று, தன்னில் மூழ்கி நீராடும் அன்பர்களுக்கு இன்ப வாழ்வளிக்கும்’’ என்றும் சிவனார் வாழ்த்தினார். மேற்படி செய்திகள் அனைத்தும் காஞ்சி புராணம் - சிவாத்தானப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

`மேற்படு கலைமகள் நதி யென வேற்றுரு வுறுசால்பிற்(கு)
ஏற்புற அவயவம் அவைகளும் ஏத்தெழில் உருமாறித்
தோற்றிய வென அறல் மிசைவரு தூத்திரள் மணிமலர்கள்
போற்றுறு பலகொடி யுடன் எழில் பூத்தண வது நதியே’

`வேள்வி நீவரதராச உயர் வேள்வி இறைநாம்
வாழி அம்மகம் அழிப்பநதி வாணி வரலால்
காழ றக்கடிது காத்திடுதி என்று கருதார்
யாழி மும்மதில் அழித்தவர் பணித்தருளலும்’

`சொன்ன வண்ணம் செய்த நீ சொன்ன வண்ணம் செய்தவன்
என்ன என்றும் ஓங்குதி இத்திருப் பெருநதி
வல்வினை எலாம் விட்டு வேகவதி என
இந்நிலத்தினிற் சிறந் தின்ப வாழ் வளிக்கவே'


மேற்கண்ட புராணப் பாடல்களை நோக்கும் போது, அருணகிரியார் பாடிப்பரவிய ‘சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவிவனம்’  எனும் தலம், காஞ்சி யிலுள்ள வயிரவேஸ்வரர் திருக்கோயில் என்பதை உணர்ந்து வழிபட திருவருள் கூட்டியுள்ளது.

திருப்புகழ்த் தல வரலாற்றில் விளக்கம் காண முடியாமல் இருந்த `சரஸ்வதி நதிக்கரை வயிரவி வனத்’தைப் பற்றிய தெளிவான விளக்கத்தை, காஞ்சிபுராணம் நமக்கு உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி திருப்புகழ் அடியார்கள் காஞ்சிபுரம் செல்லும்போது வயிரவி வனத்தில் மேவும் வடிவேலனையும் வழிபட்டு பேறு பெறலாமே!