Published:Updated:

சகலமும் சாயி!

சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

சகலமும் சாயி!

சகலமும் சாயி!

சகலமும் சாயி!

Published:Updated:
சகலமும் சாயி!
பிரீமியம் ஸ்டோரி
சகலமும் சாயி!

ரட்சிக்க வந்த ரட்சை!

என்.கே.ராவ், சென்னை-61

ந்த அற்புதம் எங்கள் வாழ்வில் நடந்தது 2016-ம் வருடம். என் ஒரே மகன் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தான். அப்போது, சில மாதங்களாகவே அடிக்கடி உடல் நலிவும், விபத்துகளும் ஏற்பட்டு பாதிப்புகளுக்கு ஆளானான்; அவனது படிப்பும் பாதிக்கப்பட்டது.    

சகலமும் சாயி!

மார்ச் மாதத்தில் சற்றே மீண்டு வந்தான். குறிப்பிட்டதொரு நாளில் கல்லூரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்திருக்க, அதற்கு முந்தையநாள்  இரவில் ஸ்கூட்டர் விபத்து ஏற்பட்டது. கை, கால்கள், தோள்பட்டை, தாடையில் பலத்த அடி. இரண்டு பற்களும் உடைந்தன. மிகவும் மனம் கலங்கிப் போனேன். மருத்துவமனையில் அவன் சிகிச்சை பெற்று மீண்டு வர ஒரு மாதம் ஆகிவிட்டது. அதற்குள் தேர்வு காலமும் நெருங்கிவிட்டது. மறுபடியும் அவனைக் கல்லூரிக்கு அனுப்ப ஆயத்தமானோம்.

‘பிள்ளை இனியேனும் ஒன்றும் நேராமல் பத்திரமாகச் சென்று திரும்புவானா’ என்று மனதுக்குள் கவலை அரித்துக்கொண்டிருந்தது. தெய்வத்தைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.என் இஷ்ட தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மனை மனமுருக வேண்டினேன். சிறிது காலமாக ஷீர்டி சாய்பாபாவின் அருளால் சில அனுபவங்களைப் பெற்றிருந்ததால், அவர் மீது பெரும் பக்தி ஏற்பட்டிருந்தது. அடுத்தநாள் மகன் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். விடுதிக்குத் தேவையானவற்றை அடுக்கிக்கொண்டிருந்தவனிடம், `‘பாபா கோயில் ரட்சையை வாங்கி வந்து உனது கையில் கட்டி விடுகிறேன். உனக்கு இனி எதுவும் துன்பம் நேராமல் பாபா பாதுகாப்பார்’ என்று கூறிவிட்டு, மடிப்பாக்கம் பைரவ சாயிபாபா கோயிலுக்குச் சென்றேன்.

‘‘பாபா, என் மகனுக்கு அடுத்தடுத்து ஏதேதோ நடந்து மிகவும் கஷ்டப்படுகிறான். இனியாவது அவனுக்குத் துன்பம் எதுவும் வராமல் நல்லபடி இருக்க ஒரு ரட்சை கொடுத்துக் காப்பாற்று’’ என்று மனமுருக வேண்டினேன். அங்கிருந்த அர்ச்சகர்களிடம் ரட்சை கேட்டபோது, ‘`முன்கூட்டியே சொல்லி வைத்தால்தான் ரட்சை தருவார்கள். எனவே, அடுத்த வாரம் வாருங்கள்’’ என்று சொல்லி, பாபாவின் பிரசாதம் கொடுத்தார்கள். பிரசாதம் இருந்த தொன்னையைக் கையில் பிடித்தபடி, கோயில் பிராகாரத்தில் அமர்ந்தேன். `பாபாவின் ரட்சை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்று ஏங்கியது மனம். வேறு எவர் மூலமாவது ரட்சை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன், கோயிலிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். மணி ஒன்பதை நெருங்கியும் ரட்சை கிடைக்கவில்லை. கோயில் அடைக்கும் நேரமும் வந்துவிட்டது. வேறு வழியில்லை, அடுத்த வாரம் மறுபடி முயற்சி செய்யலாம் என்று வெளியே வந்துவிட்டேன்.

சகலமும் சாயி!அந்நேரத்தில் என் மகன் கடைவீதிக்கு வந்திருக்க, அவனுடன் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். ‘`ரட்சை கிடைக்கவில்லை. அடுத்த வாரம் வாங்கி வைக்கிறேன்’’ என்று மகனிடம் சொல்லியபடியே, பிரசாதத்தையாவது அவனுக்குத் தரலாம் என்ற எண்ணத்துடன், கைப் பையைத் திறந்தேன். என்ன ஆச்சர்யம்! பையின் குறுக்காக நீளவாக்கில், வெள்ளை வெளேரென்று ஒரு கயிறு, இல்லையில்லை ஒரு ரட்சை காணப்பட்டது.

இத்தனைக்கும் நான் கிளம்புவதற்கு முன்பு, பையை தலைகீழாய் தட்டி எடுத்துக்கொண்டுதான் சென்றேன். பையில் மொபைல் போன், மணிபர்ஸ் தவிர வேறு எதுவும் இல்லை. வழியிலும் எதுவும் வாங்கவில்லை. பிரசாத தொன்னையை உள்ளே வைத்தபோதுகூட அப்படி ஒரு கயிறு பையில் இல்லை. அப்படியே திகைத்து நின்றுவிட்டேன். எந்தக் கட்டத்திலும் பையினுள் வர வாய்ப்பே இல்லாத ரட்சை, எப்படி வீட்டினுள் நுழைந்தபோது மட்டும் தென்பட்டது?  

சகலமும் சாயி!

கோயிலில் வைத்து, ‘ஒரு ரட்சை கொடுக்க மாட்டாயா?’ என்று புத்தி பேதலித்தவள்போல் புலம்பியதற்கு செவிமடுத்து, அருள்புரிய பாபாவே வரப்பிரசாதமாய் அருளிய ரட்சையாகத்தான் தோன்றியது.

‘பக்தர்களின் லௌகீகத் தேவைகளையும் கொடுத்து அருள்புரிவேன்’ என்று சொல்லாமல் சொல்லி, எங்களைத் தேற்றிய பாபாவின் அருள்திறம் எங்களைப் பரவசப்படுத்தியது. அப்போதைக்கு, கண்கள் பனிக்க, கயிற்றில் சிறிது மஞ்சள் தடவி பிள்ளையின் கையில் கட்டிவிட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை அவன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம். படிப்பிலும், உடல் ஆரோக்கியத்திலும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் சத்குரு சாய்பாபாவின் அருள்தான். என் மனதிலும் அளவற்ற நிம்மதி. கடமையைச் செய்து கொண்டே போய் அவர் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டால், நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் என அருமை பாபா! சாய் ராம்.

உயிர் காத்த தெய்வம்!

வி.எஸ்.ஜோதீஸ்வரன்


ந்த உலகில் உயிர்களின் உபயம் பெற்றோர்களால் நிகழ்த்தப்படுகிறது. தோன்றிய உயிர்களை பலவாறும் காக்கும் பொறுப்பு மண்ணுலகில் அவ்வப்போது தோன்றும் அவதாரங்களால் நிகழ்த்தப்படுகின்றது.

இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பாக, நமது சாயிபாபா என் தந்தையின் வாழ்க்கையில் நிகழ்த்திய அருளாடலை  மறக்கவே முடியாது. இப்போது என்னுடைய வயதே 76. அப்படியென்றால் என் தந்தையின் வயது 100-க்கு மேல் இருக்குமல்லவா? அவர் தற்போது இல்லையென்றாலும், அவர் இருக்கும்வரை சாயிபாபா அவர் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை அடிக்கடி எங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது... 

சகலமும் சாயி!

100 ஆண்டுகளுக்கு முன் நம் தேசத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தது நமக்குத் தெரியும். எந்த ஊடகமும் இல்லாத காலம். தெருக்கூத்துகளும், வீதி நாடகங்களும் மட்டுமே மக்களிடையே தர்மத்தையும் புனிதத்தையும் கற்றுக்கொடுத்த காலம் அது.

என் தந்தை ரயில்வேதுறையில் பறக்கும் படை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய காலம். இன்று ‘ஷீர்டி’ என்று சொல்லப்படும் சாயிபாபாவின் வாச ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ‘மன்மாட்’ என்றழைக்கப்படும் புகைவண்டி நிலையத்தில் ஒரு சிமென்ட் பெஞ்சில், ரயிலுக்காக காத்திருக்கும் மதிய நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். திறந்தவெளி - காற்றை அள்ளி வீசிக்கொண்டிருந்த அழகிய விசாலமான அரசமரம். சுற்றிலும் வயல்வெளிகள். அப்போது என் தந்தைக்குத் திருமணம் ஆகவில்லை என்பதால், கவலை யில்லாமல் கனவுகளில் மிதந்துகொண்டிருந்த காலம் அது.

நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த என் அப்பாவை, ``ஸ்ரீராமா, ஸ்ரீராமா’’ என்று அவருடைய பெயரைச் சொல்லி அழைப்பதுபோல் இருக்கவே, அரைத் தூக்கத்தில் எழுந்து பார்த்தார் என் தந்தை. வயதான பெரியவர் ஒருவர், ‘`சீக்கிரம், சீக்கிரம் இங்கிருந்து எழுந்து போ’’ என்று அதட்டுவதுபோல் கூறினார். அந்தப் பெரியவர் யார் என்று என் தந்தைக்குத் தெரியாது. பெரியவர் ஏதோ சொல்கிறாரே என்று அலட்சியமாக இருக்காமல் எழுந்து சற்றுத் தொலைவு போயிருப்பார். அவ்வளவுதான், அரசமரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து, என் தந்தை படுத்திருந்த சிமென்ட் பெஞ்சின் மீது விழுந்து, பெஞ்சே உடைந்துவிட்டது. 

தான் அங்கு படுத்துக்கொண்டிருந்தால் தனக்கு எத்தகைய ஆபத்து நிகழ்ந்திருக்கும் என்று எண்ணவும் தோன்றாமல், என் தந்தை சுற்றுமுற்றும் பார்த்தபடி தன்னை எழுப்பியவரைத் தேடினார். கண்ணுக்கெட்டிய தொலைவு யாரும் தென்படவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின்னர்,  மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் இருந்த உணவு விடுதி ஒன்றில் உணவு அருந்தச் சென்றார். அங்கு மாட்டியிருந்த சாயிபாபாவின் புகைப்படம் என் தந்தையைப் பார்த்துச் சிரித்தது. அதைப் பார்த்த என் தந்தை, ‘`அடடா, இவரல்லவா அன்று மன்மாட் புகைவண்டி நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த தன்னை அதட்டி எழுப்பி உயிர் காத்த தெய்வம்’ என்று வியப்படைந்தார். உடனே அங்கிருந்த கடைத்தெருவுக்குச் சென்றவர் சிறிய அளவிலான பாபாவின் மண் சிலையை வாங்கி வந்து வழிபடத் தொடங்கினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எனக்குத் திருமணம் ஆனதும் என் மைத்துனர்கள் எல்லோரும் நாங்கள் ஷீர்டி சாயிபாபாவை வணங்குவதைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள். ஆனால், அவர்கள்தான் இன்று வருடத்துக்கு மூன்று நான்கு முறை ஷீர்டிக்குச் சென்று வருகிறார்கள். தம்மை நம்பாதவர்களின் வாழ்க்கையிலும் பல அற்புதங்களை நிகழ்த்தி, அவர்களையும் ஆட்கொள்ளும் சாயிபாபாவின் கருணைத் திறம் அளவிடமுடியாத ஒன்று என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை.