Published:Updated:

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

பி.சந்த்ரமெளலி

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

பி.சந்த்ரமெளலி

Published:Updated:
மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

கத்துவங்கள் நிறைந்தது மாசி. இம்மாதத்தின் பெயரைச் சொன்னதுமே கும்பகோண மகிமைகளில் மூழ்கித் திளைக்கும் நம் மனம். குடந்தை எனப்படும் கும்பகோணம் மட்டுமல்ல, வேறுசில தலங்களும் மாசியில் நிகழ்ந்த அற்புதங்களால் மகத்துவம் பெற்றுத் திகழ்கின்றன. நம் சிந்தையைச் சிலிர்க்கவைக்கும் அந்த அற்புதங்களில் சில இங்கே உங்களுக்காக...

சிவகாமியின் செல்வன்!

``அ
ம்மா... சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணிவயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலைமீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் அவன் உடைமைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. நீ கட்டித் தந்த மண்டபத்தில் இருக்கும் நான், உனக்குச் சொல் வது இதுதான். சொன்னதைச் செய்யம்மா!’’ 

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

இஸ்லாமியத் துறவியான வாலர் மஸ்தானின் இந்த வார்த்தைகள் மனதைத்தைக்க, அந்த தருணமே... `தனக்கொரு பிள்ளை பிறக்க வில்லையே’ என்ற தனது வருத்தத்தை உதறிவிட்டு, திருமலைக் குமரனின் கோயிலை நோக்கிப் புறப்பட்டார் சிவகாமியம்மை.  ‘இனி, நான் ஆறுமுகனின் அன்புத் தாய்’ என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கியிருந்தது.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை நகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பண்பொழில் கிராமம். இங்குதான் திருமலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் திருமலைக்குமரன்.

மூங்கில் காடுகள், முட்புதர்கள்... என்று பல தடைகளைத் தாண்டி, குமரன் குடிகொண்டி ருக்கும் மலையின் அடிவாரத்தை அடைந்தார் சிவகாமியம்மை. மலையில் ஏற, சீரான பாதை இல்லை! எனினும் மகனை மனதுக்குள் தியானித்தவாறு மலைமேல் ஏறிய சிவகாமி யம்மை, சரவணபவனின் சந்நிதியில் நின்றார்.

பந்தள மன்னரால் கட்டப்பட்ட சின்னஞ்சிறு மண்டபத்தில் பூஜை ஏதும் இல்லாமல், தன்னந்தனியனாக நின்றுகொண்டிருக்கும் தண்டாயுதபாணியைக் கண்டதும் சிவகாமியம்மையின் உள்ளம் உருகியது. கண்ணில் நீர் மல்க, ‘`மகனே! இந்த விநாடியில் இருந்து உன்னையும், உன் உடைமைகளையும் பாதுகாப்பதே என் பணி... இது சத்தியம்!’’ என்றவர், முருகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தித்துவிட்டு திருமலையில் இருந்து கீழே இறங்கினார்.

அடிவாரத்தில் இருந்து கிழக்கே ஒரு பர்லாங் தொலைவில் உள்ள ‘வண்டாடும் பொட்டல்’ எனும் இடத்தில் தங்கினார் சிவகாமி அம்மை. காவி உடுத்தி துறவியாகிக் கையில் வேல் தாங்கி, கந்தனது திருத்தொண்டில் ஈடுபடலானார். சிறு மண்டபத்தில் அருள்பாலிக்கும் திருமலைக் குமரனுக்கு ஓர் அழகான மண்டபம் கட்ட வேண்டும் எனத் தீர்மானித்தவர், அதற்காகத் தனது உடைமைகளை விற்றுச் செலவு செய்தார்.

பல்வேறு இடங்களில் இருந்து கல் வெட்டப்பட்டு, பிரமாண்டமான தூண்களும், உத்திரங்களும் செய்து முடிக்கப்பட்டன. அவற்றை மலைக்கு மேல் கொண்டு செல்ல, இரண்டு யானைகளும் நூற்றுக்கணக்கான ஆட்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெருத்த தூண்களையும், உத்திரங்களையும் பனை நாரினால் நன்கு முறுக்கப்பட்ட கயிறுகளைக் கொண்டு இழுக்கும்போது... சில நேரம், கயிறுகள் அறுந்து போயின! உத்திரமோ... தூணோ... வேகமாக மலையில் இருந்து ‘தடதட’வென உருண்டு வரும். அப்போதெல்லாம் சிவகாமியம்மை, ‘முருகா! முருகா!’ என்று அலறியபடியே ஓடிப்போய், தன் தலையைக் கொடுத்து அதைத் தாங்கி நிறுத்துவார்; மறுபடியும் அது மேலே இழுக்கப்படும் வரை அப்படியே இருப்பார்.

உயிரைப் பற்றிய கவலையின்றி இப்படித் திருப்பணியில் ஈடுபட்டிருந்தவரை துயரத்தில் ஆழ்த்தும் விதமாக, கையிருப்பில் இருந்த பனை நார்க் கயிறுகள் தீர்ந்து போய்விட்டன. அவை, திருச்செந்தூர் பக்கம் கிடைக்கும் என்பதை அறிந்த சிவகாமியம்மை, திருச் செந்தூருக்குப் போனார். அங்கே...இவருக்காக ஓர் அற்புதத்தை நிகழ்த்தக் காத்திருந்தார் திருச்செந்தூர் முருகன்!

சிவகாமியம்மை திருச்செந்தூர் அடைந்தபோது, மாசி மகத்தை முன்னிட்டு செந்தூராண்டவன் தேரில் திருவீதி உலா வந்துகொண்டிருந்தான். ஸ்வாமியைத் தரிசனம் செய்வதற்காக முயன்றார் சிவகாமியம்மை. ஆனால் கோயில் பணியாளன் ஒருவன், ‘‘போ! அந்தாண்டை!’’ என்று இழிவாகப் பேசித் தள்ளிவிட்டான். தேர் முன்னால் போய் விட்டது. ‘ஸ்வாமியைத் தரிசிக்க முடியவில்லையே’ என்ற வருத்தத்துடன் கண்ணீர் உகுத்தபடி நின்றிருந்தார் சிவகாமியம்மை.

இந்த நிலையில், திடீரென்று தேர் நின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இழுத்தும், தேரை அசைக்கக்கூட முடியவில்லை. அப்போது, அங்கிருந்த பக்தர் ஒருவருக்கு ஆவேசம் வந்தது. ``என் பக்தை ஒருத்தி, தேருக்குப் பின்னால் கண் கலங்கி நிற்கிறாள். அவள் வந்து, வடம் பிடித்து இழுத்தால்தான் தேர் ஓடும்!’’ என்றார் அவர்.  

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

உடனே, கோயில் நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும், சிவகாமியம்மையைத் தேடிப் பிடித்து அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பிறகு, சிவகாமியம்மை வடம் பிடித்து இழுக்க, செந்தூரானின் தேர் நகர்ந்தது. அனைவருக்கும் ஆச்சர்யம். தொடர்ந்து அவர்கள் சிவகாமியம்மையிடம் விசாரித்தபோது... அவர், பனை நார் வாங்க வந்திருப்பதை அறிந்தனர். பிறகென்ன! ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பொறுப்பிலேயே ஏராளமான பனை நாரைத் திருமலைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். சிவகாமியம்மையின் பக்தி திருச்செந்தூர் முழுவதும் பேசப்பட்டது.

வாழ வந்த நாயகி!

கு
ம்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் வரும் ஊர்- அச்சுதமங்கலம். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது  வாஞ்சியம்.  கும்பகோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ.

பல யுகங்களைக் கடந்தும் ஜீவித்து இருக்கிற அற்புத க்ஷேத்திரம் இது. இதன் பெருமைகளை உமாதேவிக்குச் சொல்வதற்காக, நாயகியை ரிஷபத்தின் மேல் அமர வைத்து, உலகை வலம் வந்துகொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி போன்ற திருத்தலங்களை எல்லாம் காட்டிய இறைவன், வாஞ்சியத்தையும் பார்வதிதேவிக்குச் சுட்டிக் காட்டினார். அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

‘புண்ணியம் வாய்ந்த காசி போன்ற அறுபத்தாறு கோடி தலங்களுக்கிடையே மிக உயர்ந்தது வாஞ்சியம். இங்குள்ள குப்தகங்கை எனும் தீர்த்தம் சிறப்பானது’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக... அந்தத் தலத்திலேயே வசிக்க அம்பிகை திருவுளம் கொண்டார். எனவே, இந்த ஆலயத்தில் உள்ள தேவிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயரும் உண்டு. வாஞ்சியம் திருத்தலத்தில் உமையோடு ஈசன் தோன்றிய தினம்- மாசி மாதம் வளர்பிறை மக நட்சத்திரத்தில் என்று சொல்வதுண்டு.

இந்தத் தலத்தில் ஒரு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால், பித்ருக்கள் பத்து வருட காலம் திருப்தி அடைகிறார்கள். இரண்டு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால் நூறு வருடமும், மூன்று அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்தால், ஒரு யுக காலத்துக்கும் பித்ருக்கள் திருப்தி அடைவதாகப் புராணங்கள் சொல்கின்றன.

ஸ்ரீவராகர் செய்த அற்புதம்!

பூ
ரா ஸாஹிப் என்பவர் முஸ்லிம்களின் தலைவராக விளங்கியவர். இவருக்கு, முதுகில் ராஜபிளவை என்னும் கட்டி உண்டானது. என்ன மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை. நாளாக நாளாக வலி தாங்க முடியாமல் துடித்த பூரா ஸாஹிப், ‘‘இந்தத் துயரம் தீர ஏதாவது வழி உண்டா?’’ என்று தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்தார்.

‘‘ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் வெங்கட்ராவ் என்ற அன்பர் இருக்கிறார். விஷ்ணு பக்தியில் ஊறிப் போனவர். அவரிடம் போய்க் கேட்டால், ஏதாவது வழி பிறக்கும்!’’ என்று பதில் வந்தது. அப்படியே செய்தார் பூரா ஸாஹிப். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எந்தப் பதிலையும் வெங்கட்ராவ் சொல்லவில்லை. ‘விறுவிறு’வென்று துளசி தீர்த்தத்தைக் கொண்டுவந்து பூரா ஸாஹிப்பிடம் தந்தார். ‘‘இதைச் சாப்பிட்டுவிட்டு வீடு செல்லுங்கள்!’’ என்றார் வெங்கட்ராவ்.

ஸ்வாமியின் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார் பூரா ஸாஹிப். அன்று இரவு அவரது கனவில் - ஒரு பன்றி வந்து முதுகைக் குத்துவதைப் போன்ற காட்சி வந்தது. ஒன்றும் புரியாவிட்டாலும் பூரா ஸாஹிப்புக்கு மெய்சிலிர்த்தது. மறுநாள் அவரது ராஜபிளவை நோய் பூரணமாகக் குணமடைந்தது. பூரா ஸாஹிப் முகம் மலர்ந்தார். ‘‘ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி அருளால் தான் என் கட்டி பூரண குணமடைந்தது!’’ என்று சொல்லி, 150 ஏக்கர் நன்செய் நிலத்தை அந்த ஸ்வாமிக்கு எழுதிவைத்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. பூரா ஸாஹிப்பின் வாழ்நாள் முடிந்தது. முஷ்ணத்தின் அருகில் இருக்கும் கிள்ளை என்ற ஊரில் அவரது சமாதி அமைந்தது. வராக ஸ்வாமியின் அருளால் பூரா ஸாகிப்பின் துயர் தீர்ந்ததை நினைவுபடுத்து வதற்காகவும், ஸ்வாமியின் அருளைப் பெறுவதில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், இப்போதும் மாசி மக உற்சவத்தின்போது உற்சவரை பூரா ஸாகிப்பின் சமாதி அருகில் எழுந்தருளச் செய்து, தீபாராதனை செய்யப்படுகிறது. பூரா ஸாஹிப்பின் குடும்பத்தாருக்குப் பிரசாதங்கள் அளிக்கும் வழக்கமும் உள்ளது. 

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

அது அண்ணாமலையாரின் குரல்!

ல்லாள மகராஜா அண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்த காலம். திருமணமாகி வெகுநாள்களாக பிள்ளை இல்லாமல் வாடிய வல்லாளர், பெரியோர்களின் அறிவுரைப்படி பிள்ளைவரம் வேண்டி தானதர்மங்கள் செய்து வந்தார். ஒருமுறை அரண்மனைக்கு வந்த சிவனடியார் ஒருவர், தனது தேவைகளைப் பூர்த்திசெய்யவும் பணிவிடை புரியவும் பெண்ணொருத்தி வேண்டும் எனக் கேட்க, மகாராணியான சல்லமாதேவியே சிவனடியாருக்குப் பணிவிடை செய்ய ஆயத்தமானார். அவர் சிவனடியார் இருந்த அறைக்குச் சென்றபோது, அங்கே அடியாருக்குப் பதில் குழந்தை ஒன்று தவழ்ந்தது.

மன்னரும் மற்றவர்களும் மகிழ்ந்தனர். ஆனால், சிலகணப் பொழுதுதான் குழந்தை மறைந்துபோனது.  மன்னர் பரிதவிக்க, `மன்னர் வருந்தற்க! விதிப்படியே எல்லாம் நடக்கிறது. நாமே உமக்குக் குழந்தை ஆனோம்!’ என்று அசரீரி ஒலித்தது. அன்றிலிருந்து பலமுறை அந்தக் குழந்தை அவ்வப்போது அரண்மனைக்கு வருவதும், மன்னரை மகிழ்வித்துச் செல்வதுமாக காலங்கள் ஓடின.

ஒரு மகம் நட்சத்திரத் திருநாள். வல்லாளர் சிவ பூஜையை முடித்தார். மனமும் வாயும் ‘ஹரஹர’ என்று உச்சரிக்கும் வேளையில் அவர் உயிர் பிரிந்தது. ‘‘மன்னா!’’ என்று கத்தியபடி கணவர் உடல்மீது விழுந்தனர் அவர் மனைவியர். மன்னர் மறுபடி எழுந்திருக்கவில்லை. கணவரைப் பின்தொடர்ந்து காரிகையர் உயிரும் பறந்து விட்டன. திருவண்ணாமலை மக்கள் கண்ணீர் சிந்தினார்கள். அந்தத் தகவலை அமைச்சர் அறிக்கையாக அனுப்ப, அதை அண்ணாமலையார் (ஸ்வாமி) முன்னால், அர்ச்சகர்கள் வாசித்தார்கள்.

‘‘அம்மா! அப்பாஆஆ...’’ என்று ஓர் இனிமையான நாதம் எழுந்தது. அடுத்து லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஜோதிமயமான ஒரு குழந்தை, ஓட்டமும் நடையுமாக அரச மாளிகைக்குச் சென்று உத்தமமான மூவர் மேலும் விழுந்து, அழுது புரண்டது. மேலும், அந்தக் குழந்தையே வல்லாளத் தம்பதிக்கு ஈமச்சடங்கு களைச் செய்தது. பிறகு, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் குழந்தை மாபெரும் ஜோதியாகி அங்கிருந்து மறைந்தது.

அப்போது ஆகாயத்தில், ‘‘ஆண்டுதோறும் மாசி மகத்தன்று இந்த நிகழ்ச்சி, ஒரு திருவிழாவாக நடைபெறும். நாம் குழந்தையாக வெளிப்பட்ட வல்லாள மகாராஜா கோபுர வாயில், அன்று மட்டும் திறக்கப்படும்!’’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. அண்ணாமலையார் சொன்னபடி, அந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடைபெறுகிறது. ஸ்வாமி, வெளியில் வந்து மகா ராஜாவுக்கு சிராத்தம் செய்துவிட்டுப் போகிறார்.

‘ஈ’ வழிபட்ட ஈஸ்வரன்!

``த
ட்சகன் என்னும் நாக அரசன், இந்த மரகத மலைமீது ‘சர்ப்ப நதி’ எனும் வாய்க்காலாக உருமாறி மத்திய அகண்ட காவிரியில் மூழ்குகிறான். அந்த இடம் மகா புனிதமான தீர்த்தம். நீ அதில் மூழ்கு! மனிதர்கள் யாரும் உன்னை அறிந்துகொள்ள முடியாதபடி, ஈ வடிவம் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து பூஜை செய்!’’ என்ற இறைவனின் ஆணைப்படி அகத்தியர் ஈயாக மாறி வழிபட்ட திருத்தலமே திரு ஈங்கோய்மலை.

ஈ வடிவம் கொண்ட அகஸ்தியர் பலவிதமான பூக்களில் இருந்து தேனைச் சேகரித்து, அந்தத் தேனாலேயே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். வாட்டமில்லாத வழிபாடு பல காலம் நடந்துவந்தது. இதனால் மகிழ்ந்த மரகதேஸ்வரர், அகஸ்தியர் முன் தோன்றினார். ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெரும் ஜோதியை அகஸ்தியர் வணங்கி எழுந்தார். 

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

‘‘தெய்வமே! ஸ்ரீவித்யா மந்திர அர்த்தங்களை யும், லலிதாம்பிகை உபாசனை பற்றியும் தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். மேலும், இந்த ஈங்கோய்மலை சாயாபுர சக்திபீடத் தலத்திலேயே தங்கி, ஸ்ரீசக்ர மேரு பீடம் அமைத்து பூஜை செய்யத் தங்களிடம் அனுமதியும் வேண்டுகிறேன்!’’ என்று சொல்லிக் கைகூப்பினார். அகஸ்தியரின் விருப்பத்தை நிறைவேற்றினார் ஆண்டவன். அதன்படியே இன்றும் அகஸ்தியர் எவரது பார்வையிலும் படாதபடி ஈங்கோய்மலையில் தவமும் வழிபாடும் செய்துவருகிறார் என்பது நம்பிக்கை. மகாயோகினியான லோப முத்திரை (அகஸ்தியரின் மனைவி)யும், அகஸ்தியருக்குத் துணையாக அடுத்தவர் பார்வையில் படாதபடி இருந்து ஈங்கோய் மலையில் ஸ்ரீசக்ர ராஜபூஜையும் தவமும் செய்துவருகிறார். இங்கு வந்து பக்தியுடன் தரிசிப்பவர்களும் பிரார்த்தனை செய்பவர்களும் நினைப்பவை எல்லாவற்றையும் அடைவார்கள்.

அகஸ்தியர், ஈங்கோய்மலைக்கு வந்து அகண்ட காவிரியில் மூழ்கி, ஈ வடிவம் கொண்டு பூஜை செய்தது மாசி மாதப் பௌர்ணமி அன்று. ஆகையால், அந்த தினத்தில் அகண்ட காவிரியில் நீராடி ஈங்கோய் மலையில் ஸ்வாமி தரிசனமும் வழிபாடும் செய்வது மிக மிக விசேஷம். (ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவ்வாறு செய்வது விசேஷமே.)

சக்கர தீர்த்த மகிமை!

மா
சி மகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராடி பித்ருக்களுக்கு சிராத்தம் செய்பவர்களுக்கு, கயையில் கோடி சிராத்தம் செய்த பலன் கிடைக்கும். பரம்பரையும், மகா பாதகங்களில் இருந்து விடுதலை பெறும். அதாவது, 100 தலைமுறை - பாதகங்கள் தீண்டாமல் வாழும் என ஞான நூல்கள் கூறுகின்றன. 

மாசியில் நிகழ்ந்த அற்புதங்கள்!

அதேபோல், கும்பகோணத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதும் விசேஷம். ஞானமும் முக்தியும் கிடைக்கும். (பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்.)

பாவனன் என்ற அடியவர், இறந்துபோன தந்தைக்கு தகனக் கிரியைகளைச் செய்துவிட்டு, அவர் எலும்புகளைக் கொண்டுபோய் கங்கையில் போட்டால் நல்ல கதி கிடைக்கும் என்ற எண்ணத்தில், தந்தையின் எலும்புகள் கொண்ட குடத்துடன் காசிக்குக் கிளம்பினார். அவர் சீடனும் உடன் சென்றான். வழியில் கும்பகோணத் துக்கு வந்தார்கள். அங்கே சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சக்ரபாணி ஆலயத்தில் உள்ள அரச மரத்தடியில் தன் கையில் இருந்த மண் குடத்தை வைத்தார். பிறகு,  ‘‘சிஷ்யா! இதைப் பார்த்துக்கொள்!’’ என்று  சீடனிடம் கூறிவிட்டு, காவிரியில் சக்கர தீர்த்தத்தில் நீராடச் சென்றார்.

சற்று நேரம் ஆனது. சீடனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ‘‘குடத்தில் குருநாதர் சாப்பிட ஏதாவது வைத்திருப்பார். அதைச் சாப்பிட்டுப் பசியாறலாம்’’ என்று முணுமுணுத்தபடியே குடத்தின் மேல் மூடியை அகற்றினான் சீடன். அதில் பலவிதமான வண்ணங்களில் தாமரைப் பூக்கள் இருந்தன. ஏமாற்றம் அடைந்த சீடன் முன்போலவே அதை மூடிவைத்துவிட்டான். ‘குருநாதரிடம் சொன்னால் அவர் திட்டுவார்’ என்ற பயத்தில், நடந்ததை அவரிடம் சொல்லவில்லை.

குருநாதர் வந்ததும் பயணம் தொடர்ந்தது. காசி-கங்கைக்கரையை அடைந்ததும், குருநாதர் குடத்தில் இருக்கும் எலும்புகளை கங்கையில் போடுவதற்காக, மந்திரங்களைச் சொன்னபடியே குடத்தைத் திறந்தார். ‘குடத்தில் பூக்கள் இருந்தன. அவற்றை என்ன செய்யப்போகிறார் இவர்?’ என்ற எண்ணத்தில் எட்டிப் பார்த்தான் சீடன். குடத்தில் எலும்புகள் இருந்ததைக் கண்டு, ‘‘அச்சச்சோ!’’ என்றான். குரல் கேட்ட குருநாதர், ‘‘என்ன?’’ என்றார்.

‘‘கும்பகோணத்தில் இருந்தபோது, தின்பதற்கு ஏதாவது இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தக் குடத்தைத் திறந்து பார்த்தேன். இதில் பூக்களாக இருந்தது. ஆனால், இங்கோ... எலும்புகளாக இருக்கிறதே!’’ என்று விவரித்தான் சீடன். இதன் பின், உண்மையைத் தெரிந்துகொண்ட குருநாதர், கங்கையில் எலும்புகளைப் போடாமல் குடத்தை மூடிக் கொண்டு கிளம்பினார் கும்பகோணத் துக்கு. ஆனால், கங்கைக் கரையில் இருந்தவர்களோ, ‘‘இங்கு வந்த நீங்கள், கங்கையில் எலும்புகளை போடாமல் போகக் கூடாது. விடமாட்டோம்!’’ என்று தடுத்தனர்.

அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘‘அவரை விட்டுவிடுங்கள்! கங்கையைவிட புனிதமானது காவிரி. அதிலும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதம் நிறைந்தது. பகவானுடைய சக்கரம் அங்கே நித்திய வாசம் பண்ணுவதே அதற்குத் தகுந்த சாட்சியாகும். இந்த எலும்புகளை இவன் அங்கேயே கொண்டு போகட்டும்!’’ என்றது. தடை நீங்கியது. குடத்துடன்  இருவரும் கும்பகோணத்தை அடைந்தார்கள். அங்கே சக்கர தீர்த்தத்தில் குடத்தைத் திறந்து பார்த்தபோது, எலும்புகளுக்குப் பதிலாக பூக்கள் இருந்தன. அதிசயித்த குருநாதர், அவற்றைச் சக்கர தீர்த்தத்தில் சேர்த்துவிட்டு, சக்கரபாணியைத் தரிசித்து வீடு போய்ச் சேர்ந்தார்.

இந்த நிகழ்ச்சி மாசி மகத்தன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதன் காரணமாகவே மாசி மகம் அன்று, கும்பகோணத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடுவதும், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இதன்படி செய்தால் பித்ருக்களுக்கும் நற்கதி கிடைக்கும். நமக்கும் நல்வாழ்வு கிடைக்கும்.