Published:Updated:

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

பிரேமா நாராயணன் - படங்கள்: தே.அசோக்குமார்

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

பிரேமா நாராயணன் - படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

றவை நின்றுவிட்ட பசுக்களை, அடிமாடு களாக அனுப்பும் சித்ரவதையிலிருந்து காப்பாற்றிப் பராமரிக்கும் கோசாலைகள், கோயிலுக்குச் சமமானவை. அப்படிப்பட்ட புனிதமான இடத்தில், தன் உடல் உழைப்பாலும், கோசாலைக்கான உதவிகளைப் பிறரிடமிருந்து பெற்றுத் தருவதன் மூலமாகவும் பல ஆண்டு களாகத் தொடர்ந்து சேவை செய்துவருகிறார், சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த பிரேமா கிருஷ்ணமூர்த்தி. மேலும், தன் சொந்த கிராமத்துக் கோயில் மற்றும் சில கோயில்களுக்கு, தானே முன்வந்து நிதிதிரட்டி கும்பாபிஷேகம் செய்யும் அரும்பணியையும் தன் கணவரின் ஆதரவுடன் நிறைவேற்றியிருக்கிறார். 

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

மஞ்சள் பூசிப் பூசி, மஞ்சளாகவே மாறிவிட்ட மலர்ந்த முகம், அரக்குக் குங்குமம், கோடாரி முடிச்சிட்ட கூந்தல், தோள்களைப் போர்த்தும் மடிசார் புடவை, நமஸ்கரிக்கத் தோன்றும் தேஜஸ், நாவில் எப்போதும் ராம நாமம் என்றிருப்பவர் பிரேமா மாமி. சென்னையில் வாசம் என்றாலும், கோசாலை மற்றும் கோயில் பணிகள் காரணமாக, சிங்கப்பெருமாள் கோயில், நீடாமங்கலம், திருநெல்வேலி என்று சதா ஓடிக்கொண்டிருப்பவர், கூடத்து மர ஊஞ்சலில் நமக்காக சில நிமிடங்கள் ஆசுவாசமாக அமர்ந்தார்.

‘‘கோசாலை மீது எப்படி இப்படி ஓர் ஈடுபாடு?’’ என்றோம் ஆர்வமுடன்.

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!‘`சின்ன வயசில், எங்க கிராமத்து வீட்டுக் கொல்லையில் இருக்கும் மாட்டுக் கொட்டில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது நிறைய இருக்கும் பசுக்களுக்கு  வைக்கோல் பிரிச்சுப் போடறதிலிருந்து, தண்ணி வைக்கிறது, சாணம் அள்ளி வறட்டி தட்டுறது, வறட்டியிலிருந்து விபூதி தயாரிக்கிறது, பால் கரக்கிறதுவரை எல்லா வேலைகளும் எனக்கு அத்துப்படி. கல்யாணமாகி சென்னை வந்த பிறகும் அந்தப் பாசம் போகலை. 15 வருஷங்களுக்கு முன்னால, ஒருமுறை சாலையில் ஒரு லாரியில் நெருக்கமாக மாடுகளை ஏத்திட்டுப் போறதைப் பார்த்தேன். எதுக்காக அப்படிக் கொண்டு போறாங்கன்னு காரணம் தெரிஞ்சதும், நாலு நாளைக்கு சாப்பிட முடியலை. `பசுமாட்டுக்கு பூஜை பண்ற நம்ம பாரத புண்ணிய பூமியிலா இப்படி?’ன்னு எனக்குள்ளே ஒரே அங்கலாய்ப்பு. 

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

 ‘கவாம் அங்கேஷு திஷ்யந்தி புவனானி சதுர்தஷா’ என்று புராணங்களில் சொல்லப் பட்டிருக்கு. அதாவது, பதினான்கு புவனங்களும் இந்தப் பசுவினுடைய அங்கங்களில்தான் இருக்குனு அர்த்தம். தானங்களில் ‘மகாதானம்’னு பேர்பெற்றது கோதானம். எந்தப் பூஜையிலும் யாகத்திலும் முதல் பூஜை கோபூஜைதான். கிரஹப்பிரவேசங்களில்கூட, நமக்கு முன்னே பசுவையும் கன்றையும்தானே வீட்டுக்குள்ள முதலில் அனுப்புறோம். அபிஷேகப்பிரியன் சிவனுக்குப் பசும்பாலில் அபிஷேகம் பண்றது, கஷ்டங்களைத் தீர்க்கும். அதுமட்டுமா? பசுவிடமிருந்து கிடைக்கிற அஞ்சு பொருள்களி லிருந்து தயாரிக்கிற ‘பஞ்சகவ்யம்’ ரொம்ப விசேஷமானது. `இப்படிக் கடைசிவரை மனுஷனுக்கு உபகாரம் பண்ற ஜீவனைக் காப்பாத்த நாம ஏதாவது செய்ய முடியாதா’ங்கிற ஆதங்கம் எனக்குள்ள உறுத்தியது.

அப்போதான், பசுக்களுக்காகவே ‘கோவர்த்தன் ட்ரஸ்ட்’ என்கிற அறக்கட்டளையை நடத்திட்டி ருக்கும் நடேசன் பற்றிக் கேள்விப்பட்டேன். அவருடைய முக்கிய வேலையே, கறவை நின்னுபோன பசு மாடுகளை மீட்டு, அவற்றைப் பராமரிக்கிறதுதான். நானும் அதில் ஈடுபட்டேன். உடம்பால முடிந்த சகாயமோ, திரவிய சகாயமோ இன்னிக்குவரை பண்ணிட்டிருக்கேன். சிங்கப் பெருமாள் கோவில்ல ஒரு கோசாலை இருக்கு.

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில், விபூஷண் என்ற இன்ஜினீயர் ஒருத்தர், தன்னோட வேலை யெல்லாம் விட்டுட்டு வந்து, மூலக்கரைப்பட்டி, திருமுக்கூடல், கொண்டாநகரம் கிராமங்கள்ல பசுக்களைப் பராமரிச்சுட்டிருக்கார். அங்கேயும் நான் போய் வந்துட்டிருக்கேன். வடக்கே வேலை யில்லாம  இருக்கிறவங்களை இங்கே அழைச்சுட்டுவந்து, கோசாலையில் வேலை கொடுத்து வெச்சிருக்கார் அவர்.

முடிஞ்சபோதெல்லாம் இந்த கோசாலை களுக்குப் போறதோட, மாத சிவராத்திரிகளிலும் மகா சிவராத்திரி தினத்திலும், நமசிவாய மந்திரம் சொல்லி, சாஸ்திரப்படி தயாரிக்கிற விபூதியை வாங்கிட்டு வந்து எனக்குத் தெரிஞ்ச சிவன் கோயில்கள், நண்பர்கள், மடங்களுக்குக் கொடுத்து, அந்தப் பணத்தை மாடுகள் பராமரிப்புக்குக் கொடுத்துட்டிருக்கேன். எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட முடிந்த தொகையை கலெக்ட் பண்ணி, கோசாலைகளுக்குக் கொடுக்கிறேன். எனக்கு இதில் ஓர் ஆத்ம திருப்தி’’ என்று உணர்வுபூர்வமாகப் பேசிய பிரேமா மாமியின் அடுத்த சேவையான கோயில் கும்பாபிஷேக திருப்பணி குறித்துக் கேட்டோம்.

‘‘பூமியில் எல்லா இடத்திலும் ஜலம் இருந்தாலும், குறிப்பிட்ட ஓரிடத்தில் சில அடி தோண்டினதும் வர்றதில்லையா? அதுபோல, எல்லா இடத்திலும் கடவுள் இருந்தாலும், சில இடங்களில் மட்டும்தான் அவருடைய சாந்நித்யம் பரிபூரணமா இருக்கு. அந்த மாதிரி இடங்களில்தான் நம் முன்னோர்கள் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆனா, இன்னிக்கு பல கோயில்கள் பராமரிப்பு இல்லாம, கும்பாபிஷேகம், பூஜைகள் இல்லாம  பாழடைஞ்சு போயிருக்கு. 

‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி!

என் கணவரின் பூர்வீக கிராமம், நீடாமங்கலம் பக்கத்தில் இருக்கும் முல்லைவாசல். அங்கே இருக்கிற ஸ்ரீமுல்லைவனேசுவரர் - ஸ்ரீகற்பகவல்லி திருக்கோயில் பல வருஷமா திருப்பணி செய்யப்படாமல் இருந்தது. எங்க காதுக்கு அந்த விஷயம் வர, ஒன்றரை வருஷமா நான் அணில்மாதிரி, என்னால் முடிஞ்ச சில கைங்கர்யம் பண்ணினேன். ஜாம் ஜாம்னு கும்பாபிஷேகம் ஆகி, இப்போ வழிபாடுகள் சிறப்பா நடக்குது. அடுத்ததா, நீடாமங்கலத்தில் இருக்கிற ஸ்ரீஞானாம்பிகை உடனுறை கோகமுகேசுவரர் கோயில் திருப்பணி நடந்துட்டிருக்கு. ஒரு வருஷத்துக்குள்ள கும்பாபிஷேகம் ஆயிடும்’’ எந்தவித ஆரவாரமும் தற்பெருமையும் இல்லாமல், மிகவும் அடக்கமாக ஒலிக்கிறது அவருடைய குரல்.

திருப்பணி செய்யும் கோயில்களுக்குத் தேவையான நைவேத்யம், சுவாமிக்குச் சார்த்த வஸ்திரங்கள், என்று எல்லாமே கொண்டு செல்கிறார்.  பட்சணங் கள் செய்து எடுத்துச்சென்று, படைத்து வழிபட்டபின், விநியோகிக்கிறார். கோயிலுக்கென்று மனமுவந்து யார் நன்கொடை கொடுத்தாலும், அதை அங்கே ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்கிறார். உழவாரப்பணிகளுக்குச் செல்லும் அன்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்.

பிரேமா மாமியின் இன்னொரு சேவை, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்ஸ்கிருதம், இந்தி, பகவத்கீதை மற்றும் சுலோகங்கள் கற்பித்தல். ராயப்பேட்டையில் உள்ள கீதா பவனில், சுமார் 35 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். ‘`என்கிட்ட படிச்ச குழந்தைகளுக் கெல்லாம் கல்யாணமாகி, இப்போ குழந்தைகள் இருக்கு’’ என்று புன்னகைக்கும் இவருக்கு, ‘சிறந்த குரு’ என்ற விருதை சென்னை அரிமா சங்கம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. கோவுக்கும் கோயிலுக்கும் கொடுத்துச் ‘சிறந்த’ குரு!