Published:Updated:

குவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா? பின்புலம் என்ன?

குவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா? பின்புலம் என்ன?
குவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா? பின்புலம் என்ன?

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது...

சென்னை சைதாப்பேட்டையில் வசிப்பவர் ரன்வீர் ஷா. நடிகரும், தொழிலதிபருமான இவரது பங்களா வீட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 16 பஞ்சலோகச் சிலைகள், 22 கல் தூண்கள், கற்சிலைகள் மற்றும் விஷ்ணுவின் சங்கு சக்கரம் உட்பட 91 பழைமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த மோகல்வாடி கிராமத்தில் அவருக்குச் சொந்தமான 75 ஏக்கர் விவசாயப் பண்ணை மற்றும் கூழங்கல் சேரியில் உள்ள 50 ஏக்கர் விவசாயப் பண்ணையில் நேற்று (2-ந்தேதி) சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸாரே அதிர்ச்சியாகும்படி 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், அழகிய கல் தூண்கள் மற்றும் கலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  

இதைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ``கோயிலுக்குச் சொந்தமான பஞ்சலோகச் சிலைகள், கற்சிற்பங்களை யார் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் 15 நாள்களுக்குள் எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களே முன்வந்து ஒப்படைத்தால் எந்தத் தண்டனையும் கிடையாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்களின் இறுதி எச்சரிக்கை" என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களாகச் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் ரன்வீர் ஷா யார், அவரது பின்புலம் பற்றி விசாரித்தோம்.

மும்பையில் பிறந்த ரன்வீர் ஷா 1981-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1984-ம் ஆண்டு `த இன்டீரியர் லேண்ட்ஸ்கேப்' (The Interior Landscape) எனும் நாடகத்தை சந்திரலேகா தியேட்டரில் இயக்கினார். அப்போதுதான் ரன்வீர் ஷா இயக்குநராக அறிமுகமானார். 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த `மின்சாரக் கனவு' படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. 1998-ம் ஆண்டு முதல் சென்னையில் 'பிரகிருதி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். 

Screenshot grabbed from YouTube

இவருக்குச் சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்றும் உள்ளது. `இந்தியா அண்ட் இந்தியா' எனும் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பெங்களூரில் நடத்தி வருகிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வசிக்கும் இவர், தனது ஆடை ஏற்றுமதி நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு சிலைகளைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

ரன்வீர் ஷா, சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீனதயாளனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் ஷாவிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் தீனதயாளன் திருடி விற்ற சிலைகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதுபற்றி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேலை தொடர்பு கொண்டபோது, ``விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.

இந்நிலையில் ரன்வீர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் பற்றியும், போலீஸாரின் நடவடிக்கை பற்றியும் `இந்தியா பிரைட் புராஜெக்ட்' நிறுவனர் விஜயகுமார் தனது கருத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

``20 வருடங்களாக சிலைகளைத் திருடி விற்றுக்கொண்டிருக்கும் தீனதயாளனிடம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் 2016 - ஜூன் மாதமே ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அப்போது அவரிடம் உள்ள சிலைகளைப் பறிமுதல் செய்யவோ அல்லது அவரைக் கைது செய்யவோ சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது 2 வருடம் கழித்து சிலைகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். தற்போது ரன்வீர் ஷா தரப்பில் `அனைத்துச் சிலைகளும் முறையாக வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்கிறார்கள். 2016 - ம் ஆண்டே முறையாகச் சோதனை செய்திருந்தால் எந்தெந்த சிலைகளுக்கு பதிவுச் சான்றிதழ் இருக்கிறது, எவையெல்லாம் திருடப்பட்ட சிலைகள் என்று கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இடைப்பட்ட இரண்டு வருட காலத்தில் போலியான சான்றிதழ்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. 

அனைத்துச் சிலைகளும், அவற்றின் சான்றிதழ்களும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். போலியான சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்வீர் ஷா, `அனைத்துச் சிலைகளுக்கும் பதிவுச் சான்றிதழ் இருக்கிறது. இது திருடப்பட்ட சிலைகள் என்று தெரியாது' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் சிலைகளைப் பறிமுதல் மட்டுமே செய்ய முடியும். அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை என்பதை போதிய ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கொண்டு மேற்கொண்டு சிலை கடத்தி விற்பவர்கள் தப்பிக்க முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு