Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

‘ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்
தூவெண் ணீறு துதைந்த செம்மேனியான்
மேவநூல் விரிவெண்ணியின் தென்கரைப்
பூவனூர் புகுவார் வினை போகுமே!’

தி
ருநாவுக்கரசரால் இப்படிப் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலம் பூவனூர் என்ற திருபூவனூர். திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்றுள்ள தலம் இது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், இது 103-வது திருத்தலம். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனங்கள் நிறைந்த இடமாக இருந்தபடியால், முற்காலத்தில் ‘புஷ்பவனம்’ என்ற பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது.  

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

இத்தலத்தில் உறையும் மூலவரின் திருநாமம் அருள்மிகு சதுரங்க வல்லபநாதர்; உற்சவர் புஷ்பவனேஸ்வரர். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய அம்பிகையரும்  அருள்பாலிக்க, அருள்மிகு சாமுண்டீஸ்வரியும் இங்கே சந்நிதி கொண்டிருப்பது இக்கோயிலின் விசேஷம். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகே இருக்கும் பூவனூரில், பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். ஆற்றுப் பாலத்தைக் கடக்கும்போதே, நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்விதமாக கோபுர தரிசனம் கிடைக்கிறது.

பாலத்தைக் கடந்து கோயிலை அடைந்தோம். ஐந்து நிலை ராஜகோபுரம் அழகாய் நெடிதுயர்ந்து நிற்கிறது. மதில் சுவர்களும் பரந்துவிரிந்த பிராகாரங்களும் கோயிலின் பிரமாண்டத்தைக் கூறுகின்றன. கண்ணையும் கருத்தையும் கவரும் கல்மண்டபங்கள், கலை நுணுக்கம் மிகுந்த விமானங்கள் என, கலைப் பொக்கிஷமாகவும் திகழ்கிறது இந்தக் கோயில். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான இந்த ஆலயம், ஆஸ்துமா தொந்தரவையும் பூச்சிக்கடி, விஷக்கடி, எலிக்கடி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக விளங்கி வருகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

புராண காலத்தில் சுகப்பிரம்ம ரிஷி இந்தத் தலத்தில் மலர்வனம் அமைத்து இறைவனைப் பூஜித்தாராம். மேலும் நந்திதேவர், அகத்தியர், சுகதேவர் உள்பட பல முனிவர்களும் சித்தர்களும் பூஜித்து வணங்கிய பெருமையும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

ஆதிகாலத்தில் ஒருமுறை உலகமே அழிந்த நிலையில், தேவர்கள் வலம் வந்தபோது, எங்கும் துர்நாற்றம் வீசியதாம். ஆனால், ஓரிடத்தில் மட்டும்  உலகில் உள்ள அத்தனை மலர்களும் பூத்துக் குலுங்கி சுகந்த மணம் பரப்பியதாம். அந்த இடம்தான் புஷ்பவனம் என்னும் திருபூவனூர். அங்கேதான் சுயம்புவாக புஷ்பவனநாதர் என்ற புஷ்பவனேஸ்வரரும் அம்பாள் கற்பக வல்லியும் எழுந்தருளி, கோயில்கொண்டதாக ஐதீகம்.

மகேஸ்வரனை மணந்த மன்னன் மகள்!

புஷ்பவனநாதருக்கு எப்படி சதுரங்க வல்லபநாதர் என்ற பெயர் வந்தது என்பதற்கும், இந்தக் கோயிலில் இரண்டு அம்பாள்கள் வந்தது எப்படி என்பதற்கும் சுவையான ஒரு தல வரலாறு சொல்லப்படுகிறது. அதுபற்றி கோயில் அர்ச்சகர் கௌரிசங்கர் குருக்களிடம் விசாரித்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

‘`முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்ட மன்னர் வசுசேனன் என்பவருக்குத் திருமணமாகியும், நீண்டகாலமாகக் குழந்தை இல்லை. அவரும் அவருடைய மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை பார்வதி தேவியார், ‘உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாட விடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?’ என்று ஐயனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், ‘இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்றிருக்கிறது. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக!’ என்று அருள் வழங்கினார்.

அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண்குழந்தையாக மாறியது. ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றெண்ணி மகிழ்ந்து, அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!



சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.

அவள் திருமண வயதை எட்டியபோது, ‘என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்’ என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர்.

பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்கு திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். பிறகு, ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.

மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.

அரசருக்கு தனது அறிவிப்பு நினைவில் வந்தது. ‘இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?’ என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன’’ என்று விவரித்தார் கௌரிசங்கர் குருக்கள்.  

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

கோயிலுக்கு அருகே க்ஷீர புஷ்கரணி (பால்குளம்), பின்புறத்தில் கிருஷ்ண குஷ்டஹர புஷ்கரணி என்று இரு முக்கியமான தீர்த்தங்கள் உள்ளன. விஷக்கடி பட்டவர்கள் க்ஷீர புஷ்கரணியில் நீராடிய பின்னர், சாமுண்டீஸ்வரி சந்நிதிக்குச் சென்று வேர் கட்டிக்கொள்கிறார்கள்.

பெருநோயால் அவதிப்பட்ட தர்மவர்மன் என்ற மன்னர், எல்லா தலங்களுக்கும் சென்று தீர்த்தமாடி வழிபட்டார். அவர் திருபூவனூருக்கு வந்து, கிருஷ்ண குஷ்டஹர புஷ்கரணியில் நீராடி சிவனைத் தொழுதபோது, அவருடைய பெருநோய் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. 

விஷக்கடி பாதிப்பு நீக்கும் மூலிகை வேர்...


கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத் தில், அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

‘‘சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். எலிக்கடி மற்றும் விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் வேர் கட்டிக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார்.

அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீர புஷ்கரணியில் நீராடவேண்டும். பிறகு சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கிச் சாப்பிடவேண்டும். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக இறங்கி, பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். இது காலங்காலமாக இங்கே நடந்துவரும் அம்பாளின் அற்புதம். அதோடு, மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் சாமுண்டிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமம் நடத்தப்படும். அதில் பல பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, திருமண பிராப்தம், குழந்தைப் பேறு மற்றும் பல குடும்ப கஷ்டங்கள் நிவர்த்திக்காக 27 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர்’’ என்கிறார் கௌரிசங்கர் குருக்கள்.

அகத்தியர் மற்றும் நந்தி (அதிகார நந்தி) வணங்கிய கோயில் என்பதற்குச் சான்றாக அவர்கள் இருவரும் இங்கே பிராகாரத்தில் தனித்தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர்,  நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இந்தக் கோயில் பிணி தீர்க்கும் கோயிலாக மட்டுமல்லாமல், போட்டிகளில் குறிப்பாக செஸ் போட்டிகளில் வெற்றி தரும் கோயிலாகவும் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து, செஸ் போர்டையும் காய்களையும் சுவாமியின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து, இறைவனின் ஆசியுடன் வாங்கிச் செல்வதாகக் கூறிய கௌரிசங்கர் குருக்கள், தொடர்ந்து, ‘`1942- ம் வருடம் இங்கே மகா பெரியவர் வந்து, 45 நாள்கள் தங்கியிருந்து, அதி ருத்ர ஹோமம் நடத்தியிருக்கிறார். 1972-ல் அப்போதைய மைசூர் மகாராஜா சாம்ராஜ உடையார், இந்த சாமுண்டீஸ்வரியை வந்து தரிசித்துச் சென்றிருக்கிறார்’’ என்றார்.

ஆனந்தமயமான மனநிறைவை அருளும் ஐயன் புஷ்பவனேஸ்வரர் மற்றும் அம்பிகையரைத் தரிசித்து வழிபட்டால், உடலில் ஏறும் விஷம் முறிவதுபோல, மனதில் ஏறும் விஷம் போன்ற தீய சிந்தனை களும் நீங்கும்; சிந்தனை சிறக்கும். வாழ்க்கைச் சதுரங்கத்தில் வெற்றி பெற, நாமும் ஒருமுறை பூவனூருக்குச் சென்று வழிபட்டு வரம் பெற்று வருவோமே!

- தரிசிப்போம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்தும் திருவாரூரிலிருந்தும் பூவனூருக்குச் செல்லலாம். மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அர்ச்சனைக்குத் தேவையான பொருள்கள் கோயிலிலேயே கிடைக்கின்றன.   

குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை மாலை 4 முதல் 8 மணி வரை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism