மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19

மகுடேசுவரன்

கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம்தான் விஜயநகரத்தின் பொற்காலம். கிபி 1529-ல் அவர் நோய்வாய்ப்பட்டு மறைந்த பிறகு விஜயநகரச் செங்கோலைக் கைப்பற்றுவதற்கு நடந்த வாரிசுச் சண்டைகள் சொல்லும் தரத்திலானவையல்ல. கிருஷ்ண தேவராயரின் இளமகனும் இராயரின் காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். இராயரின் இறப்புக்கும் அவருடைய இளமகனின் சாவுக்கும் இயற்கையான காரணங்களைக் கருதுவதற்குக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. அதன்பின்னர் விஜயநகரத்தின் வெவ்வேறு இரத்த உறவுகளுக்கிடையே நிகழ்ந்த வாரிசுப் போரானது பீஜப்பூர் அரசரையே படை யெடுத்து வந்து உதவக் கோருமளவுக்குப் போய்விட்டது. 

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19

பல்வேறு உட்பூசல்கள், சண்டை சச்சரவுகள், போர்கள், கொலைகள் ஆகியவற்றுக்குப் பின்னர் கிருஷ்ண தேவராயரின் இளவல் அச்சுதராயர் ஆட்சியைக் கைப்பற்றினார். அவருடைய ஆட்சிக்காலம் கிபி 1530 முதல் கிபி 1542 வரை. அவருடைய இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று இரத்த உறவுடைய எல்லாருமே முயன்றனர்.

முதிராச் சிறுவன் வேங்கடாத்ரியே அரசனாக வேண்டும் என்றும் அச்சுதராயரின் மருமகன் சலகம் திம்மராஜு அரசின் பாதுகாவலனாக இருக்க வேண்டும் என்றும்  இராணியார் வரதாதேவி அம்மாள் ஆணை பிறப்பிக்கிறார். கிருஷ்ண தேவராயரின் மருமகனான இராமரும் அவருடைய இரண்டு தம்பிகளும் அரசின் முதன்மை அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதும் அவருடைய வேண்டுகோள். 

சலகம் திம்மராஜு இதை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடிக்க, எப்போது வேண்டுமானாலும் தம் உயிர்க்கு ஊறு நேரலாம் என்று கருதிய இராமரும் உடன்பிறப்புகளும் கூட்டிக் கோட்டைக்குத் தப்பிச் சென்றனர். கிருஷ்ண தேவராயரின் செல்ல மகள் திருமலாம்பிகையைத் திருமணம் செய்துகொண்டவர்தான் இந்த இராமர். கிருஷ்ண தேவராயரின் விருப்பத்திற்குரிய மாப்பிள்ளை. இராமர்தான் பிற்பாடு இராமராயர் என்று அழைக்கப்படுபவர். விஜயநகர அரச மரபுப்படி, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரே ஒருவர் தம் பெயரோடு இராயர் என்ற மாண்புப்பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர் கிருஷ்ண தேவராயரின் மாப்பிள்ளை ஆனதும் ஒரு சுவையான கதை.

கோல்கொண்டா அரசர் முகமது குலி குதுப்சா என்பவர் விஜயநகரத்தின் சில மாவட்டங்களைக் கைப்பற்றியபோது, அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த இராமரைத் துணைக்க ழைத்துக்கொண்டார். இராமரிடம் அம்மாவட்டங்களின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துத் திரும்பினார்அவர். அம்மாவட்டங்களின் மீது அடில்சாகியின் படைகள் படையெடுத்து வந்தபோது இராமர் தோற்றுவிட்டார்.

அதனால் முகமது குலி குதுப்சாவின் சினத்திற்கு ஆளாகிய இராமர் புறக்கணிக்கப்பட்டார். ஒரு கோழையாக அரசவையில் விளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தம்மிடம் போதுமான படைபலம் இல்லாததால்தான் அத்தோல்வி நேர்ந்தது என்னும் இராமரின் தரப்பு எடுபட வில்லை. இந்நிலையில், விஜயநகர அரசர்களிடம் பணியாற்று வதற்குச் சேர்ந்துவிட்டார். இராமரின் ஆற்றலையும் அறிவுக்கூர்மையையும் கண்ட கிருஷ்ண தேவராயர் தம்மகள் திருமலாம்பிகையை இராமருக்கு மணம் செய்துவைத்தார். 

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19

திம்மராஜு விஜயநகர ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டபோது இராமர் கூட்டிக்கோட்டையிலிருந்து தமக்கு வேண்டிய அரசர்களையும் தளபதிகளையும் ஓரணிக்குள் திரட்டிவிட்டார். கூட்டி, பெனுகொண்டா, அடோனி, கண்டிக்கோட்டா ஆகிய பெருங்கோட்டைகள் இராமர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், அச்சுதராயரின் தம்பி அரங்கன் உள்ளிட்ட சிலர் முடிசூட்டப்பட்டிருந்த குழந்தை அரசர் வேங்கடாத்ரியைக் கொன்றுவிட்டனர். விஜயநகரம் முடியிழந்த நிலையில், திம்மராஜு எத்தகைய அரண்மனைக் கொலைகளையும் அரங்கேற்றலாம் என்று அஞ்சிய வரதாதேவி பீஜப்பூர் அரசர் இப்ராகிம் அடில்சாவின் உதவியைக் கோரினார். அடில்சா தன் படையோடு வந்து அரசரின் உரிமைகளைக் காத்துதவும்படியும் அதற்கு ஈடாக வரம்பில்லாத செல்வங்களைத் தருவதாகவும் செய்தி அனுப்பினார். படையெடுத்து வந்த அடில்சாவை இடைமறித்த திம்மரின் தூதர்கள் அச்செல்வத்தைத் தாங்களே வழங்குவதாக உடன்பாடு செய்து கொண்டனர்.

கூட்டிக் கோட்டையிலிருந்து இராமர் படையணிகளைத் திரட்டுவதை அறிந்த திம்மராஜு அடில்சாவின் உதவியைக் கோரினார். அடில்சாவின் படைகள் கரும்பெண்ணை ஆற்றைக் கடப்பதற்குள் விஜயநகரத்தை விரைந்து கைப்பற்றிய இராமர், அச்சுதராயரின் தம்பி அரங்கரின் மகன் சதாசிவராயருக்கு முடிசூட்டி வைத்தார். திம்மராஜு கொல்லப்பட்டார் என்பதைக் கூற வேண்டியதில்லை. இதனால் விஜயநகரத்தைச் சூழ்ந்திருந்த அரசியல் கலவரங்கள் முடிவுக்கு வந்தன. இளையவரான சதாசிவராயர் பெயரளவுக்கு அரியணையில் வீற்றிருக்க, அதிகாரங்களோ இராமரிடத்தில்  இருந்தன.  தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்று இராமராயர் ஆனார்.  

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 19

நாட்பட நாட்பட அரசாங்கத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இராமராயருக்கு வேண்டியவர்கள் அமர்த்தப்பட்டார்கள்.  இராமராயருக்கு  எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளவர்கள் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றேல் கொல்லப் பட்டார்கள். இராமராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகர அரசாங்கத்தின் செல்வாக்கு தென்கோடியில் ஈழத்தீவு முழுக்கப் பரவிவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சதாசிவராயர் குடிமக்கள் முன்னிலையில் தோன்றினார். அரசரை அரண்மனைச் சிறையில் வைத்துவிட்டு அனைத்து அதிகாரங்களையும் தம்மகத்தே வைத்துக்கொண்டார் இராமராயர்.

இராமராயரின் செல்வாக்கு விஜயநகரத்தை மீறி வடக்கே தலையெடுத்தது. பாமினி அரசர்களுக் கிடையே உட்பூசல் நேரும்போதெல்லாம் இராமராயர் தீர்த்துவைக்க அழைக்கப்பட்டார். அவற்றுக்கு ஈடாக நினைத்துப் பார்க்க முடியாத செல்வங்களைப் பெற்றார். விஜயநகரத்தின் எல்லை கரும்பெண்ணை ஆற்றை மீறி கோதாவரிக் கரையைத் தொடத் தொடங்கியது. பாமினி அரசர்கள் நிலையற்ற அரசியலாலும் தீராப் பகையாலும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்த வேளையில் விஜயநகரப் பேரரசின் கடைசி இருபதாண்டுகள் செல்வ வளத்தோடும் செழிப்போடும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாய்க் கழிந்தன.

இந்நிலையில், பாமினி அரசர்களுக்கிடையே மணவினை உறவுகள் ஏற்பட்டு அமைதியாகச் செல்லத் தொடங்கினர். இவர்களின் பொது எதிரியாக விஜயநகர அரசர் ஒருவரே தென்பட்டார்.  பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார், அகமதுநகர் ஆகியவற்றைச் சேர்ந்த பாமினி அரசர்கள் ஒன்றுசேர்ந்து இராமராயருக்கு எதிராக கூட்டணி அமைத்தனர்.

தமக்கெதிராக பாமினிகள் ஒன்று சேர்ந்ததை இராமராயரும் அறிந்துகொண்டார். விஜயநகரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசர்களுக்கு ஓலை அனுப்பினார். தென்னிலங்கை முதற்று எங்கெங்குமிருந்த படைப்பிரிவுகள் கிளம்பி வந்தன. நாட்டின் படைகள் விஜயநகரத்தில் ஓரணியாகக் கூடின. வடக்கே பாமினி அரசர்கள் தம் படைபலங்களோடு தலைக்கோட்டை என்ற சிற்றூர்க்கு அருகில் ஒன்றாய்க் கூடினர். 
 
- தொடரும்