மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 6

சிவமகுடம் - பாகம் 2 - 6
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 6

ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

குறத்திப் பாட்டு!

ண்பகல் வரையிலும் தகிக்கும் கிரணங்களால் சுட்டெரித்துக் கொண்டிருந்த கதிரவன், வானுச்சியில் இருந்து மெள்ள நகரத் துவங்கி யிருந்தபடியால் வெம்மை மட்டுப்பட்டிருந்தது. மேலும், மரங்களற்ற குன்றுகளுக்கு ஊடே பயணித்து வந்த குலச்சிறையாரும் அவரது சிறு படையும் இப்போது முகாமிட்டிருப்பது, ஒருவனத்தின் மையத்தில். ஆகவே, சுற்றிச் சூழ்ந்திருந்த வனவிருட்சங்களும் வெம்மையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தன.  

சிவமகுடம் - பாகம் 2 - 6

வீரர்களில் சிலர், தங்களது புரவிகளை அருகிலிருந்த ஓடைக்கு அழைத்துச் சென்று அவற்றின் தாகம் தணிக்க தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ, ஏற்கெனவே நீர்ப் பருகி முடித்திருந்த புரவிகளின் கால்களை நீவிவிட்டும், அதன்
பிடரியைத் தடவிக்கொடுத்தும் அடுத்தப் பயணத்துக்கு அவற்றை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வேறு சிலர், உண்ட களைப்பில், களைப்பாற வசதியாக விருட்சங்களின் அடியில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.

ஒருசிலர் மட்டும் குலச்சிறையாருக்கு நெருக்கத்தில் நின்றுகொண்டும், எதிரே தரையில் அமர்ந்துகொண்டும் அளவளாவிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் இதுமாதிரி யான தருணங்களில், அவர் அவர்களுக்குச் சிவனருள் கதைகளைச் சொல்வது உண்டு.

அப்படி, காளியோடு சிவம் தாண்டவமாடிய திருக்கதையைச் சொல்லும்போது, கதைக்கேற்ப அபிநயிக்கும் அவரின் திருமுகத்தின் அழகை வெகுவாய் ரசித்திருக்கிறான் இளங்குமரன்.

அதேபோல், சிவபிரான் வேடனாக வந்து அர்ஜுனனிடம் வில்லடிபட்ட கதையையும் சிலாகித்துச் சொல்வார். விஜயன் தனுசால் அடித்ததைச் சித்திரிக்கும்போது, அந்த அடி என்னவோ தன் சிரத்திலேயே விழுந்ததுபோல் துடிப்பார். அதைக் கண்டு, அந்த அளவுக்கு சிவத்தில் ஒன்றிப்போகும் அவரது பக்தியை கண்டு சிலிர்த்திருக்கிறான் இளங்குமரன்.

இப்போதும் அப்படியொரு திருக் கதையையே சொல்லிக்கொண்டிருப்பார் என்ற எண்ணத்துடன், அவர் இருக்கும் இடத்தை நோக்கினான் இளங்குமரன்.   

சிவமகுடம் - பாகம் 2 - 6

ஆனால், அவரின் முகபாவனைகளும், அருகிலிருந்தவர்களின் முக இறுக்கமும், அவர்கள் ஏதோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதை உணர்த்தவே, அங்கிருந்து பார்வையை விலக்கிக்கொண்டான்.

இதுபோன்ற ஆலோசனை தருணங்களில், இளங்குமரன் தன்னுடன் இருக்கும்பட்சத்தில், ஒருபோதும் அவனை அவர் தவிர்த்ததில்லை. ஆனால், இப்போது அவனை அவர் எதிர்பார்க்க வில்லை என்பதையும் இளங்குமரனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒருவகையில், இதற்கு அவனே காரணம் என்றும் சொல்லலாம். ஆகவே, மேற்கொண்டு குலச்சிறையாரின் செயல்பாடுகள் குறித்து கவனத்தைச் செலுத்தாமல், தன் கையிலிருந்த வஸ்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தினான்.

அந்த வஸ்திரம் இளங்குமரனின் சிந்தையை சிவதுர்கத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவனிடமிருந்து தப்பித்துச் சென்ற எதிரி களைப் பற்றி சிந்தனை எழுந்தபோது, மனம் கோபத்தில் தகித்தது.

அவனை மட்டுமல்ல, திடுமென வந்து நின்ற குலச்சிறையாரின் சிறு படையையும் மீறியல்லவா தப்பித்துச்சென்று விட்டார்கள், அந்தக் கயவர்கள்! 

சிவமகுடம் - பாகம் 2 - 6இல்லையில்லை... இவர்கள்தான் தப்பிக்க விட்டுவிட்டார்கள்..!

நடுக்கடலில் புயலில் சிக்கிக்கொண்ட சிறு படகாக, மனதில் மாறி மாறி எழுந்த எண்ண அலைகளில் சிக்கித்தவித்தது அவன் மனம்.

``காயப்பட்டிருந்த ஒருவனைச் சுமந்து கொண்டு மற்றொருவன் தப்பிக்க யத்தனித்த போது, அவர்களை மறிக்கவோ எதிர்க்கவோ  தங்களின் படை வீரர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?’’ என்று கோபாவேசத்துடன் அவன் கேள்வி தொடுத்தபோதும் சரி, வெள்ளை வஸ்திரத்தைக் காட்டி ``நம்பிதேவனின் நிலை என்ன?’' என்று அவன் வினவியபோதும் சரி, சிறு புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு நகர்ந்துவிட்டார் குலச்சிறையார்.

அப்போது முதல் அவர் மீது எழுந்த எரிச்சலும் கோபமும் இன்னமும் தணிந்தபாடில்லை இளங்குமரனுக்கு. ஆகவே, அவரின் அணுக்கத்தைத் தவிர்த்தான். இதை அவரும் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆகவேதான் தீர்க்காலோசனைக்குக்கூட அவனை வரச் சொல்லி அவர் வலியுறுத்தவில்லை.

ஒருவாறு, தன்னை அலைக்கழித்த சிந்தனைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வஸ்திரத்தில் இருந்த குறிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்பதை அறிந்துகொள்ள விரும்பியவன், அதன்பொருட்டு வஸ்திரத்தை தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருந்த நிலையில், அவனை உசுப்பியது ஒரு பெண்ணின் குரல்... இல்லையில்லை பாட்டு!

தொடர்ந்து, குலச்சிறையாரின் கட்டளைக் குரல்வேறு அவனை அழைத்தது!

‘‘இளங்குமரா, இங்கே வா!’’

இளங்குமரன் மெள்ள எழுந்து அவர்களை நோக்கி நகர்ந்தான். குலசிறையாரின் கட்டளைக் குப் பணிந்து சென்றான் என்பதைவிட, அங்கு புதிய வரவாக நின்றிருந்த பெண்ணின் முகமே, அவனை அவர்கள் இருக்கும் இடம் நோக்கி நகர்த்தியது எனலாம்.  

சிவமகுடம் - பாகம் 2 - 6

ஆம், அந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போலிருந்தது அவனுக்கு!

இவன் அருகில் சென்றதும், ‘‘வா இளங்குமரா! இந்தப் பெண் எதிர்காலத்தைச் சொல்ல வந்திருக் கிறாள். என்னவென்று கேட்போமா?’’ என்று குலச்சிறையார் சொல்ல, அவர்மீது இன்னமும் கோபம் குறையாதவனான இளங்குமரன், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பதில் சொன்னான்.

‘‘எதிர்கால பலன்களைக் கேட்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது’’ 

அவன் சொன்னதைப் பொருட்படுத்தாத பாண்டியதேசத்தின் பிரதான அமைச்சர், அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார்.

‘‘அவன் அப்படித்தான். தன் மீது அதிக நம்பிக்கைக் கொண்டவன். ஆதலால் அவனுக்கு எதிர்கால பலன்களைக் கேட்பதில் ஆர்வம் இருக்காதுதான்’’ என்றவர், அப்படியே இளங்குமரனின் பக்கம் திரும்பி அவனிடம்
சொன்னார்: ‘‘இளங்குமரா! இவள் சொல்லப் போவது உனது எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது எனது எதிர்காலத்தைப் பற்றியோ அல்ல. பாண்டியதேசத்தின் எதிர்காலத்தைப் படிக்கப்போகிறாள்’’ என்றார்.

கண் சிமிட்டலுடன் அப்படி அவர் சொன்னதில் ஏதோ அர்த்தம் பொதிந்திருப்ப தாகத் தோன்றவே, வெகு ஆர்வத்துடன் அந்தக் குறப் பெண்ணின் பாடலைச் செவிமடுக்க ஆயத்தமானான்.

இனிமையாகக் குரலெடுத்துப் பாடத் துவங் கினாள் அவள்...

மயில் தோகைவிரித்தாடும் எங்கள் மலை
முகிற்கூட்டம் விளையாடும் எங்கள் மலை
குமரன் குடிகொண்ட எங்கள் மலை
குறுமுனிவன் தமிழ் தந்த பொதிகை மலை...


தான் வசிக்கும் பொதிகை மலையின் பெருமைகளோடு துவங்கிய அந்தக் குறப் பெண்ணின் பாட்டும் ராகமும் மற்றவர்களை மெய்ம்மறக்கச் செய்தன என்றால், இலைமறை காயாக அந்தப் பாட்டுக்குள் பொதிந்திருந்த பல தகவல்கள், இதுவரையிலும் இளங்குமரனின் மனதுக்குள் இருந்த பல கேள்வி முடிச்சுகளை அவிழ்த்தன.

அதேநேரம், பாண்டிய தேசத்துக்குக் குறி சொன்ன அந்தப் பாட்டு முடிவதற்கு முந்தைய இரண்டு வரிகள், அவன் மனதில் புதிதாக சில கேள்விகளை விதைத்தன!

தென்னவன் தேசம் காக்க
பொன்னியின் குழவிகள் வரும்...


இங்கு நிகழ்ந்தவை இப்படியென்றால், அங்கே மாமதுரையில் பாண்டிமாதேவியாருக்கு வந்துசேர்ந்த தகவல், அவரை அடுத்ததொரு நடவடிக்கைக்கு நகர்த்தியிருந்தது!

அதேநேரம், ரிஷபகிரியின் அடிவாரத்துப் பள்ளியொன்றின் சுவரில், விளக்கொளியின் உபயத்தால், விநோத சித்திரம் ஒன்றை தரிசித்துக் கொண்டிருந்தார் சமணத் துறவி!

வயல்வெளியில் தாலாட்டு!

கூடையில காயெடுத்து
குடலையில சோறெடுத்து
சொர்ணக் கிளிபோல
அம்மை சோறுகொண்டு போகையில
நேரமாச்சுன்னு சாமி நெல்லால் எறிஞ்சாரோ...


செவிமடுப்போரின் உள்ளத்தையும் உயிரையும் உருக்கும் அந்தத்  தாலாட்டுப்பாடல் சட்டென்று தடைப்பட, அதைப் பாடிக் கொண்டிருந்த  பெண்ணின் குரல் ஏதோ விபரீதத்தையொட்டி ‘ஓ’வென்ற அலறலை வெளிப்படுத்தியது.

நடந்த களேபரத்தால் விழித்துக்கொண்ட குழந்தையும் அழத் தொடங்க, இதற்கெல்லாம் கர்த்தாவான அந்தப் புரவி வீரனோ, தனது குரலை இன்னும் கடுமையாக உயர்த்தினான்.

‘‘நீ செய்த அபவாதத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? என்னுடன் வா காட்டுகிறேன்...’’ என்றபடி அவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும் செய்தான். அதனால் உண்டான வலியைப் பொறுத்துக் கொண்ட அந்த அபலையால், குழந் தையின் அழுகையைப் பொறுக்க இயலவில்லை.

ஒருபுறம் அவனது இரும்புப்பிடியில் இருந்து விடுபட முயன்றவள், மறுபுறம் தொட்டிலில் வீறிட்டு அழும் குழந்தையை எடுக்கவும் யத்தனித் தாள். இரண்டு முயற்சிகளிலும் அவளுக்குத் தோல்வியே மிஞ்சியது.

செய்வதறியாது கலங்கிய அந்தப் பெண்ணின் மனம் கண்களின் வழியே நீரை உகுக்க, இக்கட்டான அந்தத் தருணத்தில் அவளுக்கு அபயமளிப்பதாக ஒலித்தது ஒரு குரல்!

‘‘அவள் கூந்தலில் இருந்து கையை எடு. கணப் பொழுது தாமதித்தாலும் உன் சிரம் தரையில் உருளும்!’’

குரல் வந்த திசையை நோக்கிய புரவி வீரன் மட்டுமல்ல, அவன் உடனிருந்த சகாக்களும் அங்கு நின்றிருந்தவரைக் கண்டு குலைநடுங்கிப் போனார்கள்!

ஆம்! சாட்சாத் பாண்டிமாதேவியாரே கடும் சீற்றத்துடன் நின்றிருந்தார் அங்கு!

- மகுடம் சூடுவோம்...