Published:Updated:

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!
பிரீமியம் ஸ்டோரி
அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

மேல்கோட்டை - திருநாராயணபுரம்எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

மேல்கோட்டை - திருநாராயணபுரம்எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!
பிரீமியம் ஸ்டோரி
அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

ர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் திருநாராயணபுரம். கிருத யுகத்தில் சனத்குமாரர்களால் நாராயணாத்ரி என்றும், திரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும், துவாபர யுகத்தில் கிருஷ்ண-பலராமரால் பூஜிக்கப்பெற்ற காரணத்தால் யாதவாத்ரி என்றும், கலியுகத்தில் மகான் உடைய வரால் வழிபடப்பெற்றதால் யதிராஜ ஸ்தலம் என்றும் சிறப்பிக்கப்பெறும் அற்புத க்ஷேத்திரம்!  

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

ஊரின் நடுநாயகமாக மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது, திருநாராயண பெருமாள் ஆலயம். சிலிர்ப்புடன் உள்ளே நுழைகிறோம். விசாலமான பிராகாரத்தை வலம் வரும்போது, ஒரு சந்நிதியில் மூன்று  மனைவியருடன் காட்சி
தருகிறார் கிருஷ்ணராஜ உடையார்.

இவர் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். தொடர்ந்து, பத்து ஆழ்வார் களுடன் காட்சி தரும் பரமபதநாதர் சந்நிதி, ஸ்ரீநரசிம்மர்- ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி, திருக்கச்சி நம்பிகள் சந்நிதி ஆகியவற்றைத் தரிசித்த பிறகு, தாயார் ஸ்ரீயதுகிரி நாச்சியார் சந்நிதியைத் தரிசிக்க லாம்.  இந்தத் தாயாரின் சந்நிதிக்கு நேரே கஜேந்திர வரதராஜர் சந்நிதி, கூரத்தாழ்வார் சந்நிதி, ராமாநுஜர் சந்நிதி ஆகிய சந்நிதிகளைத் தரிசிக்க லாம். யாகசாலைக்கு அடுத்ததாக பிள்ளை லோகாசார்யார் சந்நிதி அமைந்திருக்கிறது. அனை வரையும் வணங்கித் தொழுதுவிட்டு, மூலவரைத் தரிசிக்கச் செல்கிறோம்.  

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

கருவறையில் அருள்மிகு திருநாராயண பெருமாள் தம் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தி திருக்காட்சி தருகிறார். அவருடைய திருவடிகளில் ஸ்ரீதேவி தாயார் ஐக்கியமாகி உள்ளதாக ஐதீகம். பெருமாளின் வலப்புறத்தில் செல்வக்குமார சுவாமி என்னும் சம்பத் குமார சுவாமி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி பிராட்டியருடன் அருளும் இந்த ஸ்வாமி, ‘ஆத்மார்த்தமாக அழைப்பவர்களுக்காக உடனே வந்துவிடுவேன்’ என்று சொல்லாமல் சொல்வது போல் எழில்கோலம் காட்டுகிறார்!

கனவில் தோன்றிய பெருமாள்!


இங்கு அருள்பாலிக்கும் மூலவர் விக்கிரகம் மகாவிஷ்ணுவால் பிரம்மதேவனுக்கு வழங்கப் பட்டதாம். கிருத யுகத்தில், பெருமாளின் விக்கிர கத்தை சனத்குமாரர்களின் வழிபாட்டுக்காகக் கொடுத்தார் பிரம்மதேவர்.

சனத்குமாரர்களுக்குப் பிறகு தத்தாத்ரேயரும், அவருக்குப் பிறகு கிருஷ்ணனும் பலராமனும் வழிபட்டுப் போற்றிய இந்தப் பெருமாளின் ஆலயம், காலப்போக்கில் மண் மூடி மறைந்துவிட்டது. அந்த ஆலயம் மீண்டும் எழிலுற எழும்ப வேண்டும் என்று திருவுளம் கொண்ட பகவான், அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தினார்.

கலியுகத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக ஆதிசேஷனின் அம்சமாகத் தோன்றியவர் ஸ்ரீராமாநுஜர். அவர் சில அரசியல் காரணங்களுக்காக கர்நாடக தேசத்துக்கு வர நேரிட்டது. அப்போது அந்தப் பகுதியை விட்டலதேவன் எனும் மன்னர் ஆண்டு வந்தார். அவர் மகள் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

மன்னர் சார்ந்திருந்த மதத்தின் ஆசார்யர்களால் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்ரீராமாநுஜர், மன்னரின் அரண்மனைக்குச் சென்றார். மன்னரின் மகள் நலமடைய பகவானைப் பிரார்த்தித்தார். பகவானின் அருளால் மன்னரின் மகள் பூரண குணமடைந்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன், தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி ராமாநுஜரிடம் கேட்டுக்கொண்டார்.  `விஷ்ணுவர்த்தன்' என்ற பெயருடன் மன்னரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார் மகான் ராமாநுஜர்.  

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

இந்த நிலையில், ஒருநாள் திருமண் தீர்ந்துவிட்டது. எங்கு தேடியும் திருமண் கிடைக்கவில்லை. மகானின் கனவில் காட்சி தந்த பகவான், ஓர் இடத்தை அடையாளம் காட்டியதுடன், அங்கே சென்றால் வேண்டும் அளவுக்கு திருமண் கிடைக்கும் என்றும் அருள்பாலித்தார்.

மன்னர் மற்றும் பரிவாரங்களுடன் பகவான் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தார் ராமாநுஜர். அந்த இடத்தில் கரையான் புற்று ஒன்று காணப்பட்டது. அன்றிரவு மறுபடியும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அந்தப் புற்றுக்குள் தாம் இருப்பதாகக் கூறினார். 

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!விடிந்ததும் ஊர்மக்கள் துணையுடன் பாலும் கல்யாணி புஷ்கரணியின் தீர்த்தநீரையும் கொண்டு கரையான் புற்றைக் கலைத்தபோது, பூமிக்கடியில் சங்கு, சக்கர, கதாபாணியாக திருநாராயண பெருமாள் காட்சி தந்தார். பெருமாளின் உத்தரவின் படியே அழகிய கோயிலையும் நிர்மாணித்தார்.

உடையவரின் செல்லப் பிள்ளை!

பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பியாயிற்று. ஆனால், வருடம்தோறும் பிரம்மோற்சவம் நடைபெற வேண்டுமே. அதற்கு உற்சவ விக்கிரகம் வேண்டுமே. என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்த ராமாநுஜரிடம், ஊர்மக்கள் உற்சவ விக்கிரகம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படையெடுப்பின்போது, கோயிலில் இருந்த தெய்வ மூர்த்தங்களுடன், ஆபரணங்களும், கலை பொக்கிஷங்களும் கொள்ளையடிக்கப்பட்டு டில்லி பாதுஷாவின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பதை அறிந்த ராமாநுஜர்  டில்லிக்குப் பயணமானார்.

அங்கே மதபேதம் பார்க்காமல், ராமாநுஜரை அன்புடன் வரவேற்று உபசரித்தார் பாதுஷா. அவரிடம், தனது கோரிக்கையைச் சொன்னார் உடையவர். மன்னனும், தான் கைப்பற்றி வைத்திருந்த விக்கிரகங்களை உடையவரிடம் காட்டினார். அவற்றில், திருநாராயணரின் உருவத் துடன் பொருந்தும் வகையில் எந்த விக்கிரகமும் இல்லாதது கண்டு மனமுடைந்து போனார் உடையவர்.

அன்றிரவு, ஸ்ரீசம்பத் குமாரனே ராமாநுஜரின் கனவில் வந்து, `ஏன் வருந்துகிறீர்?! நாம் அவன் (மொகலாய மன்னனின்) மகளால் பூஜிக்கப்பட்டு வருகிறோம். எம்மைக் கொண்டு செல்ல வேண்டும் எனில், அங்கே வா!'' என்று அருளினார். ராமாநுஜர் இந்த விஷயத்தை மொகலாய மன்னனிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு வியந்த மன்னன், ராமாநுஜரை தன் மகளின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே, அழகுறக் காட்சி தந்தது ஸ்ரீசம்பத்குமாரனின் விக்கிரகத் திருமேனி. 

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

உடையவரைக் கண்டதும் முகம் கொள்ளாத பூரிப்புடன், தான் அணிந்திருந்த சட்டை, நெற்றியில் கஸ்தூரித் திலகம், கண்களில் மைக்காப்பு, நெற்றிச்சுட்டி திகழ... சலங்கைகள் குலுங்க, மழலை நடை நடந்து, உடையவரின் திருமடியில் வந்து அமர்ந்துகொண்டாராம் ஸ்ரீசம்பத்குமாரன்! ஆனந்தத்தில் திளைத்த உடையவர், `நீதானா என்னுடைய செல்வப் பிள்ளை?!' என்றபடி, அந்தத் திருவிக்கிரகத்தைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.

மன்னன், மெய்சிலிர்த்தார். உடைய வரின் திருப்பாதத்தில் விழுந்து நமஸ்கரித் தான். பிறகு, விக்கிரகத் திருமேனியுடன் எண்ணற்ற ஆபரணங்களை வழங்கி, உடையவரை அனுப்பிவைத்தார்.

ஸ்ரீசம்பத் குமாரனைப் பிரிய மனமில்லாத பாதுஷாவின் மகளும்  ராமாநுஜருடன் புறப்பட்டுவிட்டாள்.  திருநாராயணபுரம் கோயிலை அடைந்தது தான் தாமதம், பாதுஷாவின் மகள் அப்படியே மயங்கி விழுந்தவள், தான் மிகவும் நேசித்த சம்பத் குமாரனின் திருவடிகளிலேயே கலந்துவிட்டாள்; பக்தர்களால் இன்றைக்கும் பீவிநாச்சியார் என்று போற்றப்படுகிறாள்.

இத்தகு சிலிர்ப்பூட்டும் சரித்திரம் கொண்ட சம்பத்குமாரனுக்கு ஸ்ரீராமப் பிரியர் என்றும் திருப்பெயர் உண்டு.

தம் முன்னோர்களால் வழிபடப்பெற்று வந்த ஸ்ரீரங்கநாதர் மூர்த்தத்தை விபீஷ்ண ருக்கு ஸ்ரீராமன் அளித்தார் அல்லவா? அதன்பிறகு, அவர் வழிபடுவதற்கு பிரம்ம தேவனால் அளிக்கப்பட்டவரே ஸ்ரீசம்பத்குமாரன். ஸ்ரீராமனால் பிரியத்தோடு வழிபடப்பட்டவர் என்பதால், ஸ்ரீராமப்ரியர் என்று திருப்பெயர் ஏற்பட்டதாம்! இவருக்கு, பங்குனியில் நடைபெறும் வைரமுடி சேவை விழா வெகு விசேஷம்!

வைரமுடி சேவை !

வைரமுடி சேவையைப் பற்றி மேல்கோட்டை யைச் சேர்ந்த அன்பர் ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம்.

‘`வைரமுடி சேவை பங்குனி  பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் நடைபெறும். இந்த வருடம் மார்ச் 26-ம் தேதி இரவு நடைபெறவுள்ளது. அன்று காலை ஸ்ரீபரகால மடத்திலிருந்து ஒரு வேன் வரும். அந்த வேனில் உடையவர் நியமித்த `ஐம்பத்திருவர் ஸ்தானிகர்' வம்சத்தைச் சேர்ந்த ஸ்தானிகர்கள் புறப்பட்டு, வைரமுடி வைக்கப்பட்டிருக்கும் அரசாங்கக் கருவூலத்துக்குச் சென்று, உரிய பூஜை வழிபாடுகளை முடித்து வைரமுடி வைக்கப் பட்டிருக்கும் பெட்டியைக் கொண்டு வருவார்கள்.

வழியெங்கும் பெட்டியைத் திறக்காமலே, வைரமுடிக்கு பூஜைகள் நடைபெறும். கலெக்டரும் கூடவே வருவார். மாலை 6 மணிக்கு வைரமுடி கோயிலை அடையும். பூரணகும்ப மரியாதைகளுடன் பெட்டி உள்ளே எடுத்துச் செல்லப்படும். உற்சவருக்கு வைரமுடி அணிவிக் கும் வரை பெட்டியைத் திறக்கவே மாட்டார்கள்.

இரவு ஏழு மணிக்கு திரை போடப்பட்டு, உற்சவருக்கு சகல அலங்காரங்களும் முடிந்த பிறகு வைரமுடியை அணிவிப்பார்கள். பின்னர், ஸ்வாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். இரவு 8 மணி சுமாருக்கு ஆரம்பிக்கும் வைபவம், விடியற்காலை நான்கு மணிக்குத்தான் முடியும்’’ என்றார். அவரே தொடர்ந்து, ‘`வைரமுடி சேவையைப் போலவே, ஆடி மாதம் கிருஷ்ணராஜ உடையாரின் கிருஷ்ண ராஜமுடி சேவையும், கார்த்திகையில் ராஜ உடையாரின் ராஜமுடி சேவையும் நடைபெறும். மொத்தம் மூன்று பிரம்மோற்சவங்கள் இந்தக் கோயிலுக்கு’’ என்றார்.

பெருமாளின் திருக்கதையையும், விழாவின் சிறப்பையும் கேட்கக் கேட்க உள்ளம் சிலிர்த்தது நமக்கு. வைரமுடி சேவையை அவசியம் தரிசிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, திருநாராயண பெருமாளை மனதால் தியானித்து, தலத்தில் இருந்து விடைபெற்றோம். நீங்களும் வைரமுடி சேவையைத் தரிசித்து வாருங்கள்;  ஸ்ரீசம்பத்குமாரன் உங்களுக்குச் சகல சம்பத்துகளையும் வழங்குவார்.

அழைத்தால் வருவான் சம்பத் குமாரன்!

கல்யாணி புஷ்கரணி!

ந்தத் தலத்தின் தீர்த்தம் கல்யாணி புஷ்கரணி.

பங்குனி மாதத்தில் கங்கையின் புனிதநீர் கல்யாணி தீர்த்தத்துடன் கலந்திருக்கும். அதனால் பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள் இதன் தீர்த்த நீர் வெண்ணிறம் அடைந்து விடும் என்பது நம்பிக்கை. திரிவேணி சங்கமத்தில் குளித்தால் கிடைக்கும் புண்ணியம், இந்தக் கல்யாணி தீர்த்தத்தில் நீராடினால் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதும்  பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒருமுறை காசிக்குச் சென்ற சுசரீதா என்ற அந்தணர், அங்கே கங்கையில் நீராடச் சென்றார். ஆனால், கங்கா நதி அவரது கண்களுக்குப் புலப்படவேயில்லை. வயோதிகம்தான் காரணம் என்று நினைத்தவர், சூரியன் உதிக்கும் வரையில் காத்திருந்தார். சூரியோதய நேரத்தில் பெண்ணொருத்தி வந்து ``என்ன வேண்டும்?'' என்று விசாரித்தாள். அந்தணர் விஷயத்தைச் சொன்னார்.

உடனே அந்தப் பெண், ‘கங்கையில் நீராடுவதற்கு முன் திருநாராயணபுரத்தின் கல்யாணி தீர்த்தத்தில்  நீராடிவிட்டீர்களா? என்று கேட்டாள். அந்தத் தீர்த்தம் குறித்தோ, தலம் குறித்தோ எதுவும் தெரியாத அந்தணர், அதன் பொருட்டும், தன்னால் அந்தத் தலத்துக்குச் செல்ல முடியாத நிலைமையை நினைத்தும் வருந்தினார்.

உடனே,  மங்கை வடிவில் வந்த கங்கை தன்னை யாரென்று வெளிப்படுத்தியதோடு, `‘கண்களை மூடிக் கொண்டு கல்யாணி என்ற திருநாமத்தை மும்முறை உச்சரியுங்கள்!” என்று கூறினாள். அந்தணரும் அவ்வாறே செய்ய, அவர் கண்களைத் திறந்தபோது திருநாராயணபுரத் தலத்தில் இருந்தார்! திருநாராயணபுர மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, அவர்களுக்கு கல்யாணி புஷ்கரணியின் மகிமையை எடுத்துச் சொன்னாராம் அந்தணர். அத்துடன், கல்யாணி புஷ்கரணியில் நீராடியவர், இந்தத் தலத்திலேயே முக்தி அடைந்தாராம்!

திருநாராயணபுரத்தின் மகிமை!

பு
ண்ணிய நதிகளில் நீராடுவதும், தெய்வ வழிபாடுகளும் மட்டுமே புண்ணியமில்லை என்றும்; திருநாராயணனை வணங்கும் பக்தர்களைக் காண்பதே மிகச் சிறந்த புண்ணிய காரியம் என்று யாதவகிரி மகாத்மியத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

சதுர்வேதி என்ற அந்தணர், பூமியில் வாழும் காலத்தில் அதிதிகளுக்கு உணவிடாமலும், ஆத்மார்த்தமாக இல்லாமல் வெளிப் பகட்டுக்காக யாகங்கள் செய்ததாலும், பிரம்மராட்சசனாக அலைந்து திரியும்படி யமதேவனால் சபிக்கப்பட்டார். சதுர்வேதி தனது தவற்றை உணர்ந்து யமதருமனிடம் விமோசனம் கேட்டார். அப்போது, ‘‘திருநாராயணபுரத்தில் திருநாராயண சுவாமியை வணங்கும் நாராயண பக்தர்களைக் காணும் போது விமோசனம் கிடைக்கும்!” என்றார் யமதர்மன். அதன்படியே சதுர் வேதி இங்கு வந்து விமோசனம் பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.