Published:Updated:

சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி
பிரீமியம் ஸ்டோரி
சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

சரணடைந்தோருக்கு சங்கடங்கள் இல்லை!தொகுப்பு: இரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி

சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

சரணடைந்தோருக்கு சங்கடங்கள் இல்லை!தொகுப்பு: இரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி

Published:Updated:
சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி
பிரீமியம் ஸ்டோரி
சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

யோத்தி- ராமபிரானின் அவதார திருத்தலம். திரேதா யுகத்தில் கோசல தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர். ராம பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்கத் துடிக்கும் க்ஷேத்திரம்.

உத்திரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தி முதலாக தமிழகத்தின் ஆறு தலங்களைச் சேர்த்து சப்தராம திருத்தலங்களாகச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ராமநவமி சிறப்பு தரிசனமாக, தமிழகத்தின் அந்தத் திருத்தல மகிமைகள் இந்த இதழில்... 

சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

புல்லாரண்யம், தர்ப்ப சயனம் ஆகிய சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் திருத்தலம் திருப்புல்லாணி. திருமங்கையாழ் வாரால் 20 பாடல்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற தலம். கிருத யுகத்தில் புல்லவர், கால்வர், கண்வர் ஆகிய மூன்று மகரிஷிகளும், தர்ப்பைப் புற்கள் நிரம்பிய திருப்புல்லாணிக் காட்டில் உலக நன்மைக்காகத் தவம் இருந்தனர். அவர்களுக்கு அசுரர்கள் பலவிதங்களில் துன்பத்தைத் தந்தனர். அப்போது, அரசமர ரூபத்தில் தோன்றி அவர்களைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு.

மேலும், அந்த மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் திருக்காட்சியும் தந்த பகவான், அதே கோலத்தில் ஸ்ரீஜெகந்நாதப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் பத்மாசனி தாயார். 

சப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி

இலங்கைக்குச் செல்லும் வழியில் சேதுக்கரையை அடைந்தார் ராமன். கண்ணுக்கெதிரில் விரிந்து பரந்து கிடக்கும் கடற்பரப்பைக் கண்டு, ‘எப்படி இதைக்  கடந்து செல்வது, யார் உதவியை நாடுவது’ என்ற ஆயாசத்துடனும் சோகத்துடனும் தம்பி லட்சுமணன் மடியில் தலை சாய்த்துப்படுத்தார். தர்ப்பைப் புல் பரப்பி, அதிலேயே மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். அவரது திருமேனியைத் தர்ப்பைப் புற்கள் தாங்கிப் பெரும் புண்ணியம் பெற்றதால், ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் பெற்றதாம் இந்தத் திருத்தலம்.

இங்குள்ள பெருமாளை வழிபட்டு அவரின் திருவருளால் `பாணம்’ ஒன்றைப் பெற்றுச் சென்ற ராமன், அதைக் கொண்டே ராவணனை அழித்ததாகச் சொல்வர். அதுமட்டுமா? கடலரசனும், விபீஷணனும், ராவணனின் உளவாளிகளான சுகன், சாரணன் ஆகியோரும் ராமனிடம் சரண் புகுந்ததும் இந்தத் தலத்தில்தான். ஆகவேதான் இத்தலத்தைச் சரணாகதிக்கு உகந்ததாகச் சொல்வர். தசரதர் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு ‘புத்திர பாக்கிய மூல மந்திரம்’ உபதேசம் பெற்றுச் சென்ற பிறகே ராமபிரானை மகனாகப் பெற்றாராம். ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கிக் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பைப் புல் விரித்து, அதன்மீது சயனத்திருக்கும் திருக்கோலத்தில் அருள்கிறார். சீதாதேவியை மீட்பதற்காகச் செல்லும் வழியில் ராமர் தங்கிய தலம் என்பதால், கருவறையில் சீதை இல்லை. லட்சுமணரின் அம்சமான ஆதிசேஷன் அருள்வதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயரும், சூரியன், சந்திரன் உள்ளிட்டோரும் அருள்கிறார்கள்.

சீதையை மீட்டு வரும் வழியில் திருப்புல்லாணிக்கு வந்து இங்கு அருளும் பெருமாளைத் தரிசனம் செய்தபிறகே அயோத்திக்குச் சென்று பட்டாபிஷேகம் செய்துகொண்டாராம் ராமன். இதன் நினைவாகக் கோயிலின் கொடிமரத்தின் அருகில் சீதா லட்சுமணருடன் அருள்பாலிக்கிறார் ராமன்.

ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலை, ராணி ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வகித்து வருகிறார். மார்கழியில் பகல் பத்து, இராப் பத்து வைபவங்களும்,  பங்குனி புனர்பூசத்தைத் தொடர்ந்து பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன! 

எப்படிச் செல்வது?: ரயில் மற்றும் பேருந்துகளில் ராமநாதபுரம் வருபவர்கள், அங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புல்லாணிக்குச் செல்லலாம். பேருந்து வசதி உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்: 
காலை 7 முதல் 12.30 மணி வரை; மாலை 3.30 முதல் 8 வரை.