தன் அடியார்களுக்காக அந்தப் பரமன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல உண்டு. அவற்றில், பக்தன் ஒருவனுக்காக பரமேஸ்வரன் இரங்கி வந்து கணக்கெழுதிக் காட்சிகொடுத்து அருளிய திருத்தலம்தான் இன்னம்பூர்.

அன்பருக்கு அவர் அருளிய திருக்கதையின் காரணம் தொட்டு, இங்கே அவர் ஸ்ரீஎழுத்தறி நாதேஸ்வரர் என்ற திருப்பெயரிலேயே அருள் பாலிக்கிறார். அம்மையின் திருநாமம் அருள்மிகு நித்யகல்யாணி.
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள இன்னம்பூர், காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 54 தலங்களுள் 45-வது தலமாகும். சூரியன் வழிபட்டு, தன்னுடைய ஒளி மிகப்பெற்றதால், ‘இனன் (சூரியன்) நம்பிய ஊர்’ என்று வழங்கப்பட்டு, பின் அது மருவி ‘இன்னம்பூர்’ ஆகிவிட்டது என்கிறது வரலாறு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்து ஈசனை வருடத்தில் மூன்று மாதங்கள், குறிப்பிட்ட சில தினங்களில் மட்டும் சூரியன் வழிபடுவது மேலும் சிறப்பு. ஆவணி 31, புரட்டாசி 1, 2 மற்றும் பங்குனி 13, 14, 15 ஆகிய தேதிகளில், காலையில் சூரிய ஒளி மூலவர் மேல் பட்டு வணங்குகிறது.
ஐந்து நிலை ராஜகோபுரம் அழகே உயர்ந்து நிற்க, அதன் எதிரே ஐராவத தீர்த்தம் அமைந்துள் ளது. தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை வந்து இந்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்றதால் இந்தத் தடாகத்துக்கு ஐராவத தீர்த்தம் என்றும் ஈசனுக்கு ஐராவதேஸ்வரர் என்றும் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். மேலும் இத்தலத்தின் இறைவன் தானாகத் தோன்றியவர் என்பதால், ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணத்தை உபதேசித்த காரணத்தால் ‘அட்சரபுரீஸ்வரர்’ எனவும் திருநாமங்கள் வழங்கப்படுவதாகக் கோயிலில் காணப்படும் குறிப்பு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கோயிலில் கொடிமரம் காணப்படவில்லை. நந்தியெம்பெருமான் இருக்கிறார். இரண்டே பிராகாரங்கள். சிறிய கோயிலென்றாலும் சோழர் காலத்துக் கோயில் என்பதால், கல்திருப்பணியின் நேர்த்தியும் எழிலும் கண்களை நிறைக்கின்றன. இரண்டு அம்மன்கள் இருப்பது, இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு. பிரதான அம்பாளாக அருள்மிகு நித்யகல்யாணி அம்பாளும், தவக் கோலத்தில் அருள்மிகு சுகந்த குந்தளாம்பாளும் அழகுற வீற்றிருக்கும் அழகு மனதை நிறைக்கிறது. மூலவருக்கு அருகில் நித்யகல்யாணி சந்நிதியும் வெளியே நந்தியைப் பார்த்தபடி சுகந்தகுந்தளாம்பாள் சந்நிதியும் உள்ளன. தலவிருட்சமாக செண்பகமரம் உள்ளது.
மூலவருக்கு எழுத்தறிநாதர் என்ற திருநாமம் வந்த காரணத்தை சுவைபட விவரித்தார் ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள்.
‘‘முன்னொரு காலத்தில் சுதஸ்மன் என்ற சிவாச்சார்யர், ஆலய அர்ச்சகராகவும் அதே சமயம் ஆலயத்தின் கணக்குகளைக் கவனித்துக் கொள்ளும் கணக்காளராகவும் இருந்துள்ளார். இறைவனுக்கு நித்ய பூஜைகள் செய்வதும், மீதி நேரங்களில் கணக்கு எழுதுவதும் அவருடைய பணி. ஆனால், நித்தியம் இறைவனுக்குச் சரியாகத்தானே எல்லாம் செய்கிறோம் என்கிற எண்ணத்தில் அவர் கணக்கு எழுதாமல் விட்டுவிட்டார்.
ஒருமுறை, கோயில் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அவற்றை எடுத்து வரச்சொல்லி மன்னவன் ஆணைப் பிறப்பிக்க, பதறிப்போனார் சுதஸ்மன். மனம் கலங்கியவர் இறைவனிடம் தெண்டனிட்டு, ‘‘ஐயனே! மன்னர் கொடுப்பதை நான் உன் பூஜைப் பொருள்களுக்குச் சரியாகத்தானே செலவு செய்கிறேன் என்பதால், எழுதமால் விட்டு விட்டேன்! இப்போது மன்னர் கணக்குகளைக் கேட்கிறாரே! நான் என்ன செய்வேன்? இது என்ன சோதனை?’’ என்று புலம்பி, வழிபட்டாராம்.

தனக்கெனவே பூஜைகள் செய்யும் பக்தனின் குரலுக்குச் செவிசாய்க்காமல் இருப்பாரா பரமேஸ்வரன்? அவரே கணக்குகளை எழுதி, அர்ச்சகர் உருவில் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் கணக்குகளை ஒப்படைத்துவிட்டார்.
இதை அறியாமல் மாலை வரை இறைவனிடம் அழுது முறையிட்டுக் கொண்டிருந்த சுதஸ்மன், ‘‘இவ்வளவு நேரம் மன்றாடியும் என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா? சரி, நானே மன்னரிடம் சென்று ‘கணக்கு எழுதவில்லை’ என்ற உண்மை யைச் சொல்லிவிடுகிறேன்.. என்ன தண்டனை தருகிறாரோ ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அரண்மனைக்குப் புறப்பட்டார்.
அரசவைக்குச் சென்ற அர்ச்சகரைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்த மன்னர், ‘‘காலையிலேயே வந்து கணக்குகளைக் கொடுத்துச் சென்றுவிட்டீரே! மீண்டும் வந்திருப்பதன் காரணம் என்ன? எதுவும் வேண்டுமா அர்ச்சகரே?’’ என்று கேட்டிருக்கிறார். அர்ச்சகருக்கோ ஒன்றும் புரியவில்லை. ‘காலையில் நாம் எங்கே வந்து கணக்குகளைக் கொடுத்தோம்?’ என்று குழம்பியவருக்கு, தன் வேண்டுகோளுக்காக மனமிரங்கி இந்த விளையாடலைச் செய்தது சாட்சாத் அந்தப் பரமேஸ்வரன்தான் என்பது புரிந்தது. நேரே கோயிலுக்கு வந்து இறைவனிடம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார். ‘இந்த ஏழைக்கு இரங்கிய ஈசனே! நான் என்ன தவம் செய்தேன்!’ என்று மகிழ்ச்சியோடு நன்றி கூறியபோது அங்கே அவருக்குக் காட்சிகொடுத்தார் சிவபெருமான்.
‘‘நீ எழுதவேண்டிய கணக்கை யாமே எழுதி ஒப்படைத்தோம்’’ என்று கூறி அருளாசி வழங்கிய தால், அவருக்கு ‘எழுத்தறிநாதேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. வடமொழியில் ‘அக்ஷரபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்’’ என்று விரிவாகக் கூறினார் பாலசுப்ரமணிய குருக்கள்.

வாய் பேசமுடியாமை, திக்குவாய் பிரச்னை, சிறந்த கல்வி, நினைவாற்றல், எழுத்தாற்றல், கணிதத் திறமை, நல்ல வேலை ஆகிய ஏழு பிரச்னைகளுக்கும் இங்கே தீர்வு கிடைக்கிறது.
தேன் கொண்டு நாவில் எழுதி...
வேண்டுதல்களோடு வரும் பக்தர்கள் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ மற்றும் தேன் பாட் டில் ஆகிய பூஜை பொருள்களுடன் வரவேண்டும். மூலவர் சந்நிதியில் யாருக்கான பிரார்த்தனையோ அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவரின் நாக்கில், தேனை வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை அர்ச்சகர் எழுதுகிறார்.
ஓம் ஸ்ரீ அக்ஷரபுரீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ அகஸ்தியாய நம:
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே நம:
இந்த ஸ்லோகத்தை நாக்கில் எழுதியபின், அவர்கள் ஈசனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டு செல்கிறார்கள். ஒருமுறை வந்தால் போதும். எந்தக் கிழமையில் வேண்டுமானா லும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். இது போல வந்து இறைவனின் அருள் பெற்றுச் சென்றுள்ள பக்தர்கள் ஏராளம்.
ஒன்றரை வயது குழந்தையிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இங்கே பிரார்த்தனைக்கு வருவதாகக் கூறுகிறார் குருக்கள். இப்போது தேர்வுக் காலமாதலால் மாணவர்கள் அதிக அளவில் வருவதைக் காணமுடிகிறது.
கல்யாண வரம் தருவாள்!
எண்ணும் எழுத்தும் பேச்சும் பொருளும் தருபவர் இறைவன் என்றால், இத்தலத்தின் நித்யகல்யாணி அம்பாள் கல்யாண பிராப்தம் அருள்பவளாகத் திகழ்கிறாள்.

‘‘திருமணம் தள்ளிப் போகும் அன்பர்கள்... ஆண்கள் எனில் 60 மஞ்சள் கிழங்குகளும், பெண்கள் எனில் 61 மஞ்சள் கிழங்குகளும் வாங்கிக் கொண்டு, அவற்றுடன் தேங்காய், பழம், எலுமிச்சம்பழம், மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு, ஏதேனும் ஒரு பௌர்ணமி தினத்தில் வரவேண்டும். அம்பாள் சந்நிதியில் அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்தபின், அந்த மாலையை அவர் கழுத்தில் போடுவோம். பிறகு ஆலயத்தை வலம் வந்து வணங்கிச் சென்றால், 60 நாள்களுக்குள் கல்யாணம் முடிந்துவிடும். மேலும் இங்கே வந்து வழிபடுகிறவர்களுக்கு பூர்வஜென்ம தோஷங்களும் நவகிரக தோஷங்களும் விலகும் என்பதும் ஐதீகம்’’ என்கிறார் குருக்கள்.
எல்லா வல்ல இறைவன் நினைத்தால் எண்ணை யும் எழுத்தையும் மட்டுமென்ன... எல்லா வரங்களையும் அள்ளித் தருவார் என்பது ஸ்ரீ எழுத்தறிநாதர் சந்நிதியில் கண்களைமூடி, கரங்களைக் கூப்பி நிற்கையில் நன்கு புலப்படுகிறது.
‘சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடை யான்றனை
கனிய வூன்றிய காரணம் என்கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே!’
என்ற திருநாவுக்கரசரின் வரிகள் நினைவிலாட, ஈசன் அருளை நெஞ்சில் சுமந்து புறப்பட்டோம்.
- தரிசிப்போம்...
தொகுப்பு: பிரேமா நாராயணன்

கஜப்பிரஷ்ட விமானம்
இன்னம்பூர் கோயிலின் மூலவர் விமானம், மிக அற்புதமான முறையில் அமைக்கப்பட்டதாகும். யானை படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் உள்ள இந்த விமானத்துக்கு 5 கலசங்கள் உள்ளன. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அநுக்கிரகம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) ஆகிய ஐந்து தொழில்களையும் இறைவன் விளையாட்டாக செய்து அருளுகிறான் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் திகழ்கிறது இந்த விமானம்,