Published:Updated:

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

Published:Updated:
"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

'ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்’ என்பார்கள். ஆறே இல்லை என்றாலும் ஊரைச் சுற்றி ஏரிகளும் கோயில்களும் வயல்களுமாக நிறைந்து, தனித்துவ அழகுடன் இருக்கும் சிற்றூர்தான் கண்டாச்சிபுரம்'' - என்று தன் ஊர் பற்றிய பெருமைகளைப் பகிர்ந்துகொள்கிறார், கவிஞர் கண்டராதித்தன். நவீனத் தமிழ் இலக்கியத்தில் இவருடைய கவிதைகளுக்குத் தவிர்க்க முடியாத தனி இடம் உண்டு.

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."
##~##

'' 'நெற்குப்பையான கண்டராதித்தபுரம்’ என்று, கல்வெட்டுக் குறிப்பில் கண்டாச்சிபுரம் பற்றிய பதிவு உண்டு. பல்வேறுபெருமைகளைத் தன்னகத்தே கொண்டு, உலகம் அறிந்திராத பல அறிஞர் பெருமக்கள் வாழ்ந்து மறைந்த, தற்போதும் வாழுகின்ற ஒரு சிற்றூர் இது. நெசவும் விவசாயமும் எங்கள் கிராமத்தின் முதன்மைத் தொழில்கள். குறிஞ்சிப்பாடி, குடியாத்தம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாவு நூல்களைக் கொண்டுவந்து கைலி நெய்து, பல ஊர்களுக்கு அனுப்புவது எங்கள் ஊரின் முக்கிய தொழில்.  

சைவத் தமிழும் விவசாயமும் நெசவும் ஊடும் பாவாகத் தன் ஆன்மாவைக்கொண்ட இந்தச் சிற்றூரில், 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்னுடைய பாட்டனார் க.பொ.ராஜமாணிக்கம் என்பவரால் தொடங்கி நடத்தப்பட்ட 'செந்தமிழ்க் கழகம்’ என்னும் அமைப்புக்கு இலக்கிய உரை நிகழ்த்துவதற்காக, திரு.வி.க., தமிழ்வாணன், வாரியார் சுவாமிகள் போன்ற அறிஞர் பெருமக்கள் வருகை தந்து இருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் அமைந்து உள்ள தமிழ் தேவார வழிபாட்டுச் சபையில் தினமும் தேவாரம், திருவாசகம் ஓதுவது, திங்கள் கிழமையில் வார வழிபாடு, சுற்றி உள்ள மாவட்டங்களில் நம் பாரம்பரிய கும்மி, கோலாட்ட நிகழ்ச்சிகளோடு சைவத் திருமுறைப் பாடல்களைப் பாடுவது என்று சைவத் தமிழ் வளர்த்துவருவது இந்த ஊரின் சிறப்பு.

இதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் 'கம்பன் நற்றமிழ் கழகத்தின்’ மேடைகளில் சாலமன் பாப்பையா, சுகி.சிவம் போன்றவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு வளர்ந்து, எழுத்துலகுக்கு வந்தவன் நான். இளம்பிராயத்து விளையாட்டுகள் ஆன கோட்டிப்புல், ஆபியம், சோளக்குச்சி வண்டி, பனைவண்டி, கோலிக்குண்டு, பம்பரம் என, மாறி மாறி வரும் நினைவுகளும் நீர்நிலைகளில் ஆடி மகிழ்ந்த காலங்களும் என்னை ஊரோடு கட்டிப்போட்டு, எங்கும் நகரவிடாமல் செய்திருக்கின்றன.

"கொடிமரமும் கோயில் மணியோசையும் வளர்த்த சைவத் தமிழ்.."

மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் வல்லுனர்கள் எனப் பல்வேறு தரப்பு சாதனையாளர்களை உரு வாக்கிய எங்களுடைய பள்ளியில் படித்தவர்களில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான சி.பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் எங்கள் ஊரைச் சேர்ந்த நவீன தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை எழுத்தாளர் காலபைரவன்.

ஆண்டு முழுவதும் விழாக்கோலம் கொண்டு இருக்கும் ஸ்ரீஞானாம்பிகை உடனுறை ராமநாதீஸ்வர கோயில்தான், எங்கள் மக்களின் உலகம். இந்தக் கோயிலில் அமையப்பெற்று இருக்கும் சிவலிங்கம், மண்ணால் உருவாக்கப்பட்டது. கந்த சஷ்டி, 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம், திருவூடல் திருவிழா என, சிவன் தொண்டே வாழ்வு எனக் கருதும் பெரியோர்கள், திருநீறு அணிந்த நெற்றிகள் என, பக்தியே வாழ்வாகக் கருதும் மக்கள் நிறைந்த மண் இது.

விடாது ஒலிக்கும் 'துவஜஸ்தம்ப’ (கொடி மரம்) மணி ஓசையும், கோயில் மணி ஓசையும், திருமுறைத் தமிழும், கிழக்கேயும் வடக்கேயும் தொல்பொருள் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களும்தான் கண்டாச்சிபுரத்தின் அடையாளம். நீண்ட கூந்தலை முன்பக்கம் போட்ட இளம் பெண்ணைப்போல் எப்போதும் பார்க்கத் தூண்டும் வசீகரம் நிறைந்தது எங்கள் ஊர்!''

 • சாகித்ய அகாடமி, ஒவ்வோர் ஆண்டும்  ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த படைப்பாளியைத் தேர்ந்தெடுத்து இன்னொரு மாநிலத்துக்குச் சுற்றுலா அனுப்புவது வழக்கம். கவிதைத் தொகுப்புக்காக, 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உத்தராஞ்சல் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றார்!
   
 • இவர் தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்.
   
 • நெசவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை குறித்த நாவல் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
   
 • இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த குழந்தைக்கு வங்காள எழுத்தாளர் மகாஸ்வேதாதேவியின் நினைவாக 'மகாஸ்வேதாசரயு’ என்று பெயரிட்டு உள்ளார்.
   
 • 'கண்டராதித்தன் கவிதைகள்’, 'சீதமண்டலம்’ என்று இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார்.  16 ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருந்தாலும், கவிதைத் தொகுப்புகளுக்கு நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்வது இவருடைய வழக்கம்!

- காசி.வேம்பையன்
படங்கள்: பா.கந்தகுமார்