Published:Updated:

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

பங்குனி உத்திரம் சிறப்புத் தொகுப்பு

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

பங்குனி உத்திரம் சிறப்புத் தொகுப்பு

Published:Updated:
திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!
திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா? உண்டு. கல்யாண வரம் அருளும் கடவுள் வழிபாடுகள் குறித்து ஞானநூல்கள் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும். குலம் செழிக்க அருள் வழங்கும் சாஸ்தாவை வழிபட உகந்தத் திருநாள் பங்குனி உத்திரம். அதுமட்டுமா? 

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

மீனாட்சி - சொக்கநாதர், ஸ்ரீராமர் - சீதை, முருகப்பெருமான்-தெய்வானை, நந்தியெம்பெருமான் - சுயசை, ஆண்டாள் - ரங்கமன்னார், இந்திரன் - இந்திராணி... என்று தெய்வத்திருமணங்கள் பலவும் நடைபெற்ற மகத்தான திருநாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் கல்யாணசுந்தர விரதம் முதலானவற்றைக் கடைப்பிடித்து வழிபடுவதுடன், கல்யாண வரம் அளிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதால், எல்லாவிதத் தடைகளும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் ஸித்திக்கும். 

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

அவ்வகையில், திருமண வரமளிக்கும் தமிழகத்தின் சிறப்புமிக்க சில தலங்களின் மகிமைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. திருமணத் தடையுள்ள அன்பர்கள், விவரங்களைப் படித்து மகிழ்வதுடன், அந்தத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

தொகுப்பு: மு.ஹரி காமராஜ்

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

மூக்குடி ஸ்ரீவீரகாளியம்மன்

அம்மன் பெயர்:  ஸ்ரீவீரகாளியம்மன்.

முற்காலத்தில் வீரவனம் என்ற பெயரில் திகழ்ந்தது மூக்குடி எனும் இந்தக் கிராமம். பாண்டவர்கள் வன வாசத்தின்போது இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீவீரகாளியம்மனை வணங்கியதாகக் கூறுகிறார்கள். தங்குவதற்கு இடமின்றி தவித்த அவர்களுக்குத் தகுந்த இடத்தை வீரகாளியம்மன் காட்டி அருளியதாக தலவரலாறு கூறுகிறது. 

தற்போதும், தன்னை நாடிவரும் பக்தர்களின் துயரங்கள் நீங்கிட வரம் தந்து, வாழ்வுக்கு வழிகாட்டி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள் ஸ்ரீவீரகாளி. இந்த அம்மனின் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டதாம். கருவறையில் சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம், அபயக் கரம் ஏந்தி, திரு முடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அமர்ந்த கோலத்தில் கம்பீர வடிவில் திருக்காட்சி தருகிறாள் ஸ்ரீவீரகாளியம்மன்.  

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், மாசி மகம் மற்றும் சிவராத்திரி என எல்லா மாதங்களும் இங்கு விழாக்கோலமாகக் காட்சியளிக்கிறது.

பிரார்த்தனை:  இங்கு வந்து அம்மனுக்கு, ‘பொட்டுக் காணிக்கை’ அளித்தால் திருமண வரம் கைகூடுகிறது என்கிறார்கள். சாதாரண சாந்துப் போட்டு முதல் தங்கம், வெள்ளியிலான பொட்டுகள் வரை அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் காணிக்கை செலுத்துவது சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள்.

அமைவிடம்: புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மூக்குடி கிராமம். பேருந்து வசதிகள் உண்டு.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

தண்டந்தோட்டம் 

இறைவன் :
  ஸ்ரீதிருநடனபுரீஸ்வரர்

அம்பாள்:  ஸ்ரீசிவகாம சுந்தரி.

டனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தத் தலத்தில், ஈசன் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கையின் மணிகள் உதிர்ந்து விழுந்தன. இதனால், திருநடனபுரீஸ்வரர் என்ற பெயரில்  ஈசன் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அகத்தியர் இங்கு தவமியற்றி ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசித்தார். அதனா லேயே இது திருமண வரமருளும் தலமாக விளங்குகிறது. சிதம்பரம் மற்றும் திருமணஞ்சேரி தலங்களுக்கு இணையான கோயில் இது. காஞ்சி மகாபெரியவர் தங்கி பூஜித்த தலம்.  

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

அகத்தியருக்குக் காட்சி தந்த ஈசன் ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்குத் திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்ச மாக வாழ வரமளிக்கிறேன்’ என்று அருள்பாலித்தாராம்.அதன்படி, இன்றும் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்குத் திருமண வரமளித்து ஈசன் அருள் செய்கிறார்.

ஸ்ரீகார்த்தியாயினி சமேத திருக்கல்யாண சுந்தரமூர்த்தி யாக, திருமணக் கோலத்தில் வரம் அருள்கிறார் இங்குள்ள உற்சவர். `மாப்பிள்ளை ஸ்வாமி' என்றும் சிறப்பிக்கப் படும் இந்த ஸ்வாமியைத் தரிசித்தாலே போதும், திருமணத் தடை கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத் திருக்கல்யாணம் இங்கு விசேஷம்.

பிரார்த்தனை: தொடர்ந்து 11 பௌர்ணமி திருநாள்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் வயது அடிப்படையி லான எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி சிறப்பான இல் வாழ்க்கை அமையும்.

அமைவிடம்: 
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம் எனப்படும் தாண்டவர் தோட்டம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருமழபாடி 

இறைவன்:
ஸ்ரீவைத்தியநாதர்.  இறைவி: ஸ்ரீசுந்தராம்பிகை.

புருஷாமிருக ரிஷி, தேவலோகத்தில் இருந்த சிவலிங்கத்தை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். சிவலிங்கத்தை மீண்டும் கொண்டு செல்ல பிரம்மதேவர் முயற்சி செய்தபோது, சிவலிங்கம் சற்றும் அசைந்துகொடுக்கவில்லை. சோர்ந்துபோன பிரம்மதேவர், ‘இது என்ன வஜ்ர தூணோ’ என்று சலிப்புடன் கூறியதால், இறைவர், ‘வஜ்ரத் தூண் நாதர்’,  ‘வயிரத்தூண் நாதர்’ என்னும் திருப்பெயர்கள் ஏற்றார். சிவபெருமான் மார்க்கண்டே யருக்காக, மழுவேந்தி நடனமாடிய திருத்தலம்.

தனது நேசத்துக்குரிய நந்தியெம்பெருமானுக்குத் திருமணம் நடத்த விரும்பிய ஈசன், ஊரெங்கும் பெண் தேடி, இறுதியில் வசிஷ்டரின் பெயர்த்தியான சுயசையைத் தேர்ந்தெடுத்தார்.

நந்தியெம்பெருமான், சுயசையின் திருமணம் பங்குனி மாதம், வளர்பிறை, தசமி, புனர்பூச நட்சத்திரத்தில், திருமழபாடியில் தேவர்கள் புடைசூழ நடைபெற்றது.   

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

ஆக, தன்னை அன்புடன் வழிபடும் பக்தர்களுக்கு, ஈசனே வரன் தேடி திருமண பாக்கியத்தை அளிப்பார் என்பது சிறப்பம்சம்.

திருமழபாடி நந்தியெம் பெருமானின் திருமண விழாவே இங்கு வெகு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில், நந்தியின் தாய், தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க திருவையாறு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியம்மை ஆகியோர் திருமழபாடிக்கு வருவார்கள்.

பிரார்த்தனை: ‘நந்திக் கல்யாணம் பார்த்தால், முந்திக் கொண்டு கல்யாணம் நடக்கும்’ என்பார்கள்.

அதற்கேற்ப இங்கு பங்குனி மாதம் நடைபெறும் நந்தியெம் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு நந்திக் கல்யாணம் நடை பெறுவதற்குள் திருமணம் நடை பெற்றுவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அமைவிடம்: அரியலூர் மாவட் டத்தில் உள்ளது திருமழபாடி. இந்தவூர் திருவையாறில் இருந்து சுமார்7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருவிடந்தை

இறைவன்: ஸ்ரீவராக மூர்த்தி. உற்சவர்- ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள்.

தாயார்: அகிலவல்லி நாச்சியார்.

நீதிமானாக ஆட்சிபுரிந்து வந்த மகாபலிச் சக்கரவர்த்தி தனது நண்பர் களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றார். போரினால் உண்டான தோஷம் நீங்க, இங்கு வந்து வராகத் தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராகரின் தரிசனம் பெற்றார்.

மகாபலியின் விருப்பத்துக்காகத் திருமகளைத் தாங்கிய திருக்கோலத்தில் இந்த தலத்திலேயே எழுந்தருளி விட்டார் வராகமூர்த்தி என்கிறது தலவரலாறு.  

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

இந்தத் தலம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பிரம்மசாரியாக வந்த பெருமாள், காலவ மகரிஷி யின் பிரார்த்தனையை ஏற்று, அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒரு பெண் என மணம்  புரிந்த தலம் இது. இதனால் இங்கு தினமும் பெருமாளுக்குத் திரு மணம் நடைபெறுவதாக ஐதீகம்.

பெருமாளுக்கு உரிய எல்லா நாளுமே இங்கு விசேஷம்தான்.

பிரார்த்தனை - திருமணத் தடையால் மணமாகாமல் இருக் கும் ஆண்களும், பெண்களும், இங்கு வந்து இரண்டு மாலைகள் வாங்கிச் சென்று பெருமாளுக்குச் சமர்ப்பித்துத் தரிசிக்க வேண்டும். அப்போது சந்நிதியில் தரப்படும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு ஆலயப் பிரா காரத்தை 9 முறை வலம் வந்து வழிபடவேண்டும்.

 பின்னர், மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்கவேண்டும். பெருமாள் அருளால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

அமைவிடம்: சென்னை யிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலை வில்,  கிழக்குக் கடற்கரைச் சாலை யில் கோவளத்தின் அருகில் அமைந்துள்ளது திருவிடந்தை.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருவேள்விக்குடி 

இறைவன்:  ஸ்ரீகௌதகேஸ்வரர், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீமணவாளேஸ்வரர்.

அம்பிகை: ஸ்ரீபரிமளசுகந்தநாயகி, ஸ்ரீகௌதகேசி, ஸ்ரீநறுஞ்சாந்து நாயகி.

யிலையில் ஈசன்-பார்வதி திருமணம் நடப்பதற்கு முன்னர் கங்கணதாரணம், யாகம் ஆகிய யாவும் இந்தத் தலத்தில்தான் நடைபெற்றனவாம். பிரம்மதேவர் தாமே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடு களையும் செய்து, வேள்வி வளர்த்தார். சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த புண்ணியத் தலம் என்பதால், வேள்விக்குடி எனப் பெயர் பெற்றது.

சோழ அரசன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித் திருந்த மணமகளின் பெற்றோர் திடீரென மறைந்து விட்டனர். இதனால், மணமகளின் சுற்றத்தார் அந்த அரசனுக்கு மணமகளை மணம் செய்து கொடுக்காமல் மறுத்தனர்.

அதனால் வருத்தம் அடைந்த அரசன், இங்குள்ள இறைவனை வழிபட்டு வேண்டினான்.

மன்னனின் பக்திக்குக் கட்டுப்பட்ட இறைவன், உடனே மணமகளை அழைத்து வந்து, இந்தத் தலத்திலேயே வேள்வி வளர்த்து, திருமணத்தை நடத்தி வைத்ததாக தலவரலாறு கூறுகிறது.

இறைவன் மணவாளநம்பி, மணவாளேஸ்வரர், திருவேள்விக் குடி உடையார் ஆகிய பல திருப் பெயர்களில் போற்றப்படுகிறார்.

நீண்டநாள் திருமணம் ஆகாத வர்கள், இங்குள்ள கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிவபெருமானுக்கு உகந்த எல்லா விசேஷ தினங்களும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

பிரார்த்தனை - திருமணமாகாத ஆண்களும் பெண்களும், உற்சவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சாத்தி, அர்ச்சனை செய்து, கோயிலை வலம் வந்து வழிபட்டால், திரு மண வரம் கைகூடும் என்கிறார்கள்.

அமைவிடம்: நாகை மாவட்டம், குத்தாலம் தலத்துக்கு நேர் வடக்கில் காவிரியின் வடகரையில் அமைந் திருக்கிறது இந்தத் தலம். நாகை மற்றும் மயிலாடுதுறையி லிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருவானைக்கா

இறைவன்:  ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

அம்பிகை: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

யிலையில் இருந்து பூமிக்கு வந்த அன்னை சக்தி, ஜம்பு மகரிஷி தவமியற்றிய வெண்நாவல் மரத்தடியில், ஈசனை நீரால் உருவாக்கி வழிபட்டாள். அதனால் இது பஞ்ச பூத தலங்களில் நீர்த் தலமானது. இங்குள்ள ஈசனை, யானையும் சிலந்தியும் வழிபட்டு மோட்சம் பெற்றன.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரி நாதர், தாயுமானவர் ஆகிய மகான்களால் போற்றிப் பாடப்பெற்ற தலம் இது.

சிவலிங்கத்தைச் சுற்றி நீர் சுரந்துகொண் டிருக்க, அற்புத நாயகராக ஈசன் இங்கு வீற்றிருக்கிறார். அருள்பொங்கும் அகிலாண்டேஸ்வரி, தன் திருச் செவிகளில் ஆதிசங்கரரால் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங் களையே தாடங்கங்களாக அணிந்து காட்சி தருகிறாள்.

தினந்தோறும் உச்சிவேளையில் அர்ச்சகர், சிவப்புப் பட்டுப் புடவை உடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி, கழுத்தில் ருத்ராட்சமும் மலர் மாலைகளும் அணிந்து அம்பிகையின் வடிவத்தில்,  ஈசனின் கருவறைக்குச் சென்று, பூஜிக்கும் காட்சி, தரிசிப்பவரைச் சிலிர்க்கவைக்கும்.   

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

இங்கு அம்பிகை யோகம் பயிலும் மாணவியாக இருப்பதால், சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக் கல்யாணம் நடைபெறுவதில்லை. ஆனால், உச்சிக் காலத்தில் அம்பிகை ஈசனுக்குச் செய்யும் பூஜையையும் கோ பூஜையையும் தரிசிப்பவர்களின் திருமணத் தடைகள் நீங்கி, சிறப்பான மணவாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை: தினமும் உச்சிவேளையில் அம்பாள் செய்யும் சிவபூஜை மற்றும் கோ பூஜையைத் தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், கல்யாண தோஷம் நீங்கி சந்தோஷ வாழ்வு அமையும் என்கிறார்கள்.

அமைவிடம்: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவானைக்கா.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருச்செந்தூர்

இறைவன்: ஸ்ரீசுப்ரமணியர்.

சொல்லொண்ணாத் துயரங்களை தேவர்களுக்குத் தந்த சூரபத்மனை, முருகப்பெருமான் வென்று தன்னிடம் சேர்த்துக்கொண்ட தலம் இது.

முருகப்பெருமான் போர் புரிந்த தலமென்றாலும், தவக்கோலம் கொண்ட ருளும் ஆலயம் இது. மேலும், சிறப்பான திருமண பரிகாரக் கோயிலாகவும் விளங்குகிறது.

பல்லாயிரம் வருடங்களைக் கடந்த முருகப்பெருமானின் ஆலயம், கடற் கரையில் 150 அடி உயர கோபுரத்துடனும் எண்ணற்ற சந்நிதிகளைக் கொண்டும் பிரணவ வடிவில் திகழ்வது சிறப்பு.

சூரபத்மனை வென்ற பிறகு, அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, தனது தந்தையான சிவ பெருமானுக்கு முருகப்பெருமான் இங்கு சிவபூஜை செய்தார்.

இதனால் முருகப்பெருமான் தலையில் சிவயோகி போல ஜடா மகுடமும் தரித்திருக்கிறார். 

தவக் கோலத்தில் முருகர் இங்கு இருப்பதாக ஐதீகம். எனவே,  மூலவர் கையில் வேலோ, அருகில் தேவியரோ இல்லை. 

இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழா, உலகப் புகழ் பெற்றது. மேலும் விசாகப் பெரு விழா, ஆவணிப் பெருவிழா  ஆகியனவும் சிறப்பாக நடை பெறுகின்றன. செவ்வாய்தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது திருச்செந்தூர்.

பிரார்த்தனை: திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.

இங்குள்ள கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி, திருச்செந்தூர் முருகப் பெருமானை வணங்கி, குகை லிங்கத்தைத் தரிசித்தால், திருமண தோஷம் நீங்கி, நல்ல வரன் அமைந்து கல்யாணம் நிச்சயமாகும் என்பது ஐதீகம்.

அமைவிடம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந் தூர். தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருவீழிமிழலை 

இறைவன்:  ஸ்ரீவீழிநாதர்.

உற்சவர் : ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி.

அம்பாள்: ஸ்ரீசுந்தர குசாம்பிகை.

மகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, ஈசனை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம். ஒருமுறை பூஜையின்போது ஒரு தாமரை மலர் குறைந்துவிட, விஷ்ணு தமது கண்களையே எடுத்துச் சமர்ப்பித்து ஈசனை வணங்கினாராம். இதனால் ஈசன் மனம் குளிர்ந்து விஷ்ணுவுக்கு சக்ராயுதத்தை வரமாக அளித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.

திருநாவுக்கரசரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயி லின் இறைவனைப்பாடி படிக்காசு பெற்று அங்குள்ள மக்களின் பசியைப் போக்கினர். 16 சிங்கங்கள் ஏந்தித் தாங்கும் விண்ணழி விமானத் தைக் கொண்ட இந்த ஆலயத்தையும், இங்குள்ள ஈசனையும் விஷ்ணுவே உருவாக்கி வழிபட்டார் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீகயிலாயநாதரும் காத்யாயணி அம்பிகையும் திருமணம் புரிந்துகொண்ட தலம் இது என்பர். சித்திரை மாத மக நட்சத்திரத்தில் இங்கு நடைபெறும் சிவசக்தி திருமணம் விசேஷமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அலங்காரத்தில், இறைவ னும் இறைவியும் திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் நடைபெறும்.   

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

பிரார்த்தனை: இங்கு வந்து ஸ்ரீகல்யாண சுந்தரேஸ் வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும். அத்துடன், தொடர்ந்து 48 நாள்கள் வீட்டில் பூஜை செய்து, 'தேவந்திராணி நமஸ்துப்யம் தேவந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்யமாரோக்யம்' - என்று துவங்கும் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் ஸித்திக்கும்.

அமைவிடம்:  கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவீழிமிழலை.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

கல்யாண வரம் அருளும் துதிப்பாடல்கள்

ல்லறம் அதுவே நல்லறம் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான அறத்தின் நுழைவாயிலாகத் திகழ்வது திருமணம். சிலருக்கு, முன்வினைப் பயனாலும் தோஷங்களாலும் திருமணம் தள்ளிப்போவதுண்டு. அவர்களுக்குக் கல்யாண பாக்கியம் விரைவில் கிடைத்திட, தெய்வத்தின் அனுக்கிரஹம் மிக அவசியம்.

அவ்வகையில், திருமணத் தடைகளும் தோஷங்களும் நீங்கவும், விரைவில் கல்யாண மாலை தோள்சேரவும் அருளும் அற்புதமான துதிப் பாடல் இங்கே தரப்பட்டுள்ளது. அனுதினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றிவைத்து, அம்பாளை காத்யாயினி தேவியாக மனதில் தியானித்து இந்தப் பாடலைப் பாடி வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.

காத்யாயனி மஹா மாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம:


கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான தேவியே... உன்னை வணங்குகிறேன். உனது திருவருள் கடாட்சத்தால்,  நந்தகோபருடைய மகனான அந்தக் கண்ணனே எனக்குக் கணவனாக அமையவேண்டும்.  

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

இந்தப் பாடலை அனுதினமும் முறைப்படி பாடி அம்பாளைத் துதித்து வழிபட்டு வந்தால், கண்ணனைப் போன்றே குணத்திலும் செயலிலும் சிறந்த கணவன் வாய்ப்பான் என்பது பெரியோர் கருத்து.

அபிராமியம்மை பதிகம் சொல்லியும் அம்பாளை வழிபட்டு வரம் பெறலாம். குறிப்பாக...

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே


இந்தப் பதிகத்தைப் பாடி அன்னையைத் துதிப்பதால், திருமணப் பேறு மட்டுமின்றி சகலசெளபாக்கியங்களும் கிடைக்கும்; இல்லத்தில்   சந்தோஷம் பொங்கிப் பெருகும்.