Published:Updated:

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

மகுடேசுவரன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

மகுடேசுவரன்

Published:Updated:
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

பாமினி அரசர்கள் ஐவரும் ஒன்றாகக் கூட்டணி அமைத்திருப்பது விஜயநகரத்தின் தலைமை அமைச்சர் இராமராயருக்குத் தெரியவந்தது. எழுபதாம் அகவையைத் தாண்டியவரான இராம ராயர் தம் வாழ்நாளில் எண்ணற்ற போர்முனை களைப் பார்த்தவர். கிருஷ்ணதேவராயரின் உடனிருந்து படையணிகளை வழிநடத்தியவர். தமக்கு எதிராக எல்லா அரசர்களும் கைக்கோத்து வந்தாலும் அவர்களைத் தாக்கி அழிக்கும் பெருவல்லமை இராமராயருக்கு உண்டு. 

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

பதினாறாம் நூற்றாண்டில் இப்புவிப் பரப்பின் மீதிருந்த படைவலிமை மிக்க பேரரசு விஜயநகரம். நூறு துறைமுகங்களைக் கொண்ட அப்பேரரசின் தனிப்பெரும் ஆட்சியாளராய் விளங்கியவர் இராமராயர். பாமினி அரசர்கள் படையெடுத்து வருவதற்கு முன்பாகவே அவர்களைப் போர் முனைக்கு அழைத்து அழிக்க வேண்டும் என்று இராமராயர் திட்டம் தீட்டினர். அதன்படி பேரரசின் அனைத்துப் பகுதியினருக்கும் அரசாங் கத்தின் செய்தி பறந்தது. ஒவ்வொரு மண்டலத் திலிருந்தும் முழுப்படையணியும் கிளம்பி விஜய நகரத்துக்கு வந்து சேர வேண்டும் என்பது அச்செய்தி.

கிபி. 1564-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் கரும்பெண்ணை ஆற்றின் தென் கரையில் விஜயநகரப் படைகள் குவிந்தன. அந்தப் படையில் பத்து லட்சத்துக்கு அருகிலான வீரர்கள் கடல்போல் திரண்டிருந்தனர். அப்படையின் முப்பெரும் பிரிவுகளில் நடுப்பகுதியினருக்கு இராமராயரே தலைமையேற்றார். இராமராயரின் உடன்பிறப்புகளான வேங்கடரும் திருமலை ராயரும் வலமும் இடமுமாய்ப் பெரும் படையின ரோடு அணி வகுத்தனர்.

விஜயநகரப் படை வருகையை அறிந்த பாமினிக் கூட்டணிப் படைகளும் கரும்பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் தலைக்கோட்டை என்னும் சிற்றூர்க்கு அருகில் குவிந்தன. தென்னிந் தியாவில் நடந்த மாபெரும் அப்போரானது தலைக்கோட்டைப் போர் என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இன்றைக்கு வெளித்தெரியாத சிற்றூர்ப் பகுதியாய் வரைபடத்தில் காணப்படும் அவ்வூர் இம்மண்ணில் பெருகியோடிய ரத்தப் பெருவெள்ளத்தைப் பார்த்திருக்கிறது. தலைக் கோட்டைப் போர் நிகழ்ந்த கரும்பெண்ணை ஆற்றங்கரை தற்போது பசவசாகர் அணைக் கட்டுக்குள் மூழ்கிக்கிடக்கிறது.

இந்தப் போரில் பீஜப்பூர் அரசர் அடில்சா நடுநிலை வகிக்க இருப்பதாகப் பொய்யுறுதி தரப் பட்டது. பீரார்ப் படையும் சிறிதளவே பங்கேற்றது.  கரும்பெண்ணை ஆற்றின் வடகரையில் கோல்கொண்டா, அகமதுநகர்ப் படைகள்  குவிந்திருந்தன. இராமராயரின் வலப்புறத்திலிருந்த  விஜயநகரப் படையணிக்கு விடைகூறுமா என்னுமளவுக்கு அப்படைகள் சிறுத்துத் தோன்றின. 

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 20

கிபி 1565-ம் ஆண்டு சனவரித் திங்கள் 23-ம் நாள் இரட்சசி, தங்கடி என்னும் இரண்டு பகுதிகளில் போர் தொடங்கியது. அகமதுநகர்ப் படைகளும் கோல்கொண்டாப் படைகளும் விஜயநகரப் படையணியினரின் கொடூரத் தாக்குதலில் சின்னாபின்னமாகின. முதல் தாக்கு தலிலேயே விஜயநகரத்தின் வெற்றி கண்ணுக்குத் தெரிந்தது. அதனால் சுல்தான்கள் இருவரும் பீஜப்பூர் அடில்சாவின் உதவியை நாடினர். நடுநிலை வகிப்பதாகக் கூறியிருந்த அடில்சா விஜய நகரத்துக்கு எதிராகக் களத்துக்கு வந்தார்.

போர் தொடங்கியதும் கரும்பெண்ணை ஆற்றின் கிழக்குப் புறத்தில் கோல்கொண்டா அகமதுநகர்ப் படைகள் தாக்கின. மேற்குப் புறத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய அடில்சாவின் படைகளும் தாக்கத் தொடங்கின. ஆற்றைக் கடப்பவர் யாரோ அவர்க்கு வெற்றி கிட்டும் என்னும் சூழல். கிழக்கும் மேற்குமாய்த் தாக்குதல் தொடங்கியதால் விஜயநகரப் படைகளின் கவனம் சிதறிற்று.

முன்பு ஒருமுறை தம்முடைய அதிகார வேட்கையினால் நம்பிக்கைக்கு உரியவர்களை ஐயுற்று வெளியேற்றி, புதிய தளபதிகளின் தலைமையில் பெரும்படையணிகளை உருவாக் கியிருந்தார் இராமராயர். பீஜப்பூர்ப் படையில் பணியாற்றிய தளபதிகளான கிலானி உடன் பிறப்பினர் அவ்வாறு படைத்தலைமை ஏற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தலைக் கோட்டைப் போரில் இராமராயர்க்குப் பின்னணியில் அணி வகுத்திருந்த கிலானி உடன் பிறப்பினர் ‘என்றும் வரலாற்றைப் புரட்டிப் போடும்’ துரோகம் என்னும் வஞ்சகத்தை அரங்கேற்றினர். அவர்கள் இராமராயரின் படை களைப் பின்னாலிருந்து தாக்கிவிட்டு அடில்சாவின் படைகளோடு சென்று சேர்ந்துகொண்டனர்.

பலமுனைத் தாக்குதல்களால் விஜயநகரப் படைகள் செய்வதறியாது திகைத்தன. கிலானி உடன்பிறப்புகள் ‘தன்படை வெட்டிச் சாய்க்கும்’ இரண்டகத்தைக் காட்டிவிட்டனர். அங்கே கரும் பெண்ணை ஆற்றங்கரைத் தடுப்புகள் உடை பட்டன. இராமராயர் வீற்றிருந்த யானைக்கு அருகில் பீரங்கிக்குண்டுகள் சரமாரியாகப் பொழிந்தன. அதனால் தடுமாறிய இராமராயர் மண்ணில் நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்ட எதிரிகள் அவரின் தலையைக் கொய்தனர். இன்னொரு பிரிவில் வேங்கடரும் கொல்லப்பட்டார். திருமலைக்கும் படுகாயம்.

வெட்டப்பட்ட இராமராயரின் தலை ஓர் ஈட்டியில் குத்தப்பட்டு விஜயநகரப் படையினருக் குக் காட்டப்பட்டது. விஜயநகரத்தின் லட்சக் கணக்கான படைவீரர்கள் தலைமையின்றித் தவித்தனர். கூட்டணிப் படையினர் முன்னிலும் கொடிதாக மிகுந்து தாக்கினர். மூன்று நூற்றாண்டு களின் வஞ்சம். தோல்வி உறுதியாயிற்று. விஜய நகரப் படைகள் சுக்கல் சுக்கலாகின. தம் படையினர் முற்றாக அழிக்கப்படுவதைக் கண்ட திருமலைராயர் விஜயநகரத்துக்குத் தப்பி வந்தார். ஆயிரத்தைந்நூறு யானைகளில் தலைநகரத்தின் உடைமைகள், கோயில் சிலைகள், அரண்மனைச் செல்வங்கள் என அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு பெனுகொண்டாக் கோட் டைக்கு இடம்பெயர்ந்தார்.

விஜயநகர மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தப்பிக்க வழியின்றி உயிரச்சமும் கதறலுமாய் அலைபாய்ந்தனர். இருக்கும் பொருள் களை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வண்டிகூட இல்லை. தப்பிச் செல்ல ஒரு கழுதைகூட இல்லை. போருக்குச் சென்ற ஆடவரும் வண்டிகளும் விலங்குகளும் திரும்பவே இல்லை. தலைக் கோட்டையில் அழித்தொழிப்பு முடிந்த மூன்றாம் நாள் பாமினிப் படைகள் விஜயநகரத்தை வந்தடைந்தன.

கண்ணில்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கோயில்கள் நொறுக்கப்பட்டன. மரவேலைப்பாடு களுக்குத் தீயிடப்பட்டன. அரண்மனைகள் இடிக்கப்பட்டன. கற்களில் செதுக்கப்பட்ட அனைத்தும் மூளியாக்கப்பட்டன. மூட்டப்பட்ட தீ அணையாமல் எரிந்தது. கூட்டணிப் படையிலிருந்த ஒவ்வொரு வீரர்க்கும் வரம்பில்லாத செல்வம் கிடைத்தது. யானைகளைத் தவிர அனைத்தையும் வீரர்களே வைத்துக்கொள்ளலாம் என்று அடில்சா அறிவித்தார்.  

“அதுவரையிலான உலக வரலாற்றில் தலைக் கோட்டைப் போரைப் போன்ற கொடும் போருமில்லை, அப்படியே இருப்பினும் விஜய நகரத்துக்கு நேர்ந்தது போன்ற அழித்தொழிப்பும் கொள்ளை கொலைகளும் நிகழவே இல்லை” என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.

விஜயநகரத்தை அழித்தொழிக்கும் பணி அடுத்த ஆறு திங்கள்களுக்குத் தொடர்ந்தது. பெனுகொண்டாவுக்குத் தப்பிச் சென்ற திருமலை ராயர் தம் தலைநகரை சந்திரகிரிக்கு மாற்றினார். பிறகு அவருடைய மரபினர் வேலூருக்கு இடம் பெயர்ந்தனர். அதன்பின்னர் வந்த விஜயநகர அரசர்கள் சிற்றரசர்களாக மாறிப்போயினர். விஜயநகரத்தை அழித்த பாமினி அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு மோதிச் சிதைந்தனர். இறுதியாக ஔரங்கசீப்பிடம் அழிந்தனர்.

இந்நிலத்தை முந்நூற்றைம்பது ஆண்டுகள் கட்டியாண்ட பெரும் பேரரசின் தலைநகரம் விஜயநகரம். இவ்வுலகில் செங்கோல் பிடித்த எந்தப் பேரரசர்களோடும் ஒப்பிடத் தகுந்தவர்கள் விஜயநகர அரசர்கள். அவர்களுடைய அழிவின் எச்சங்களை, விட்டுச் சென்றவற்றின் மிச்சங்களை  ஹம்பியின் இடிபாட்டுச் சுவடுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் துங்கபத்திரை ஆறு, காலத்தின் பிசகாத தாளத்துடன் தெளிந்த நீராய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹம்பியின் கற்குன்றங்களின் ஆயிரக்கணக்கான பாறைகளில் சொற்களால் வெளிப்பட முடியாத வரலாற்றின் அமைதிதான் இறுகிக் கிடக்கிறது.

(நிறைவுற்றது)