Published:Updated:

புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்

புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்

மெரினா கடற்கரை.

“நம் வீட்டில் சகலத்திலும் உனக்குச் சம உரிமை உண்டு. எனக்குச் சமமாகவே உன்னை நினைக் கிறேன்...'' என்று கணவர் ஒருவன் தன் மனைவியிடம்  சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்தால் புதுமணத் தம்பதியாகத் தெரிந்தது. கணவரது வார்த்தைகளை ஆராயுமுன், உங்களை அந்தக் கடற்கரையின் அலைகளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறேன்.     

புதிய புராணம்! - அர்த்தநாரீஸ்வரர்

ஆதிமனிதன் கடலைப் பார்த்து பயந்திருக்கலாம். ஆனால் காலம் மாற மாற மனிதன் கடலோடு ஒன்றிணைந்துவிட்டான். அதன் சக்தியை, தன்மையைப் புரிந்துகொண்டுவிட்டான் என்றே சொல்லவேண்டும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழையாகி, நதியாகி ஓடுகிறது. நதிகளால் மனித நாகரிகமே மாறியிருக்கிறது.

நீரின் சக்தியைப் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுபோன்றே, காற்றின ஆற்றலையும் நெருப்பின் சக்தியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படியான, இயற்கையின் ஆற்றலைக் கண்டு சொன்ன நம் முன்னோர், வேறுசில உண்மைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, பேராற்றலானது சிவம் என்றும் சக்தி என்றும்  இருவிதமாக இந்தப் பிரபஞ்சத்தில் பரவியிருக்கிறது என்பது. அதாவது, பேராற்றலின் உயிர் சிவமாகவும் அது செயல்படத் தேவையான உணர்வு சக்தியாகவும் பரவிக் கிடக்கிறது என்பார்கள்.

இறை சக்தியின் ஆண் வடிவத்தை `சிவம்' என்றும் பெண் வடிவத்தை `சக்தி' என்றும் வணங்குவது நம் முன்னோர் வகுத்த பாதை. ஆன்மிக மரபில் சிவம் என்பது ஞானத்தின் குறியீடு; சக்தி- ஆற்றலின் குறியீடு.

இதை நம் குடும்பத்திலேயே பார்க்கலாம். ஒரு குழந்தையை வழிநடத்துவதில், தந்தையின் வழி வேறாகவும் தாயின் வழி வேறாகவும் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, தன்னம் பிக்கையைப் போதிக்கும் இடத்தில் தந்தையும்; அன்பு, கருணை ஆகிய அக உணவையும் புகட்டுவதோடு, தந்தை தரும் அறிவைச் செயல்படுத்தத் தேவையான சக்தியைத் தருபவராகவும் தாய் திகழ்கிறாள்.

இவற்றை யோசித்தவாறே அலைகளில் காலை நனைக்கிறேன். உடலின் சோர்வு மட்டுமன்றி மனதின் மாசுகளும் நீங்கி, புத்துயிர் பெற்றதாய் உணர்கிறேன். தாய் தன்னிடம் ஆறுதல் தேடி வரும் குழந்தைக்கு நிம்மதி தருவதுபோல் கடல் என்னை அரவணைத் துக்கொண்டது.

உழைப்பால் ஏற்பட்ட களைப்பு நீங்க தரையில் உடலைச் சாய்க்கும்போது, தாயின் மடி தந்த பாது காப்பையும் அரவணைப்பையும் உணர்ந்திருக்கிறீர்களா? நிச்சயம் உணர்ந்திருப்பீர் கள். ஏனெனில், பூமியை அன்னையாக அல்லவா உருவகித்திருக்கிறோம். அன்னை ஆறுதல் அன்றி வேறென்ன தருவாள்.

நித்ராதேவி, அன்னலட்சுமி, திருமகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதாவது, எங்கெல்லாம் நமக்கு ஆறுதலும், உற்சாகமும், தொடர்ந்து செயல்பட சக்தியும் கிடைக்குமோ, அந்த இடங்களை எல்லாம் ஒரு பெண்ணாகவே உருவகம் செய்திருக்கிறோம்.

ஆக தாய்மையின் அன்பும் கருணையும் கலந்த... உலகில் வாழத் தேவையான சக்தியைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே, இறையின் பெண் வடிவமான சக்தி வழிபாட்டை முன்னோர் நிறுவியிருக்க வேண்டும்.

சரி! சிவம், சக்தி எனும் இரண்டு சக்தி நிலைகள் எதற்கு?

இரவு-பகல், வெம்மை-குளுமை... இப்படி முரண்களால் ஆனதுதான் உலகம். வெறும் பகலையோ அல்லது இரவையோ கொண்டு முற்றிலும் மாறான இரண்டு பருவத்தின் பலனைப் பெற இயலாது.எதிர் முனை, நேர்முனை என இரு வகைகள் இருந்தால்தான் மின்சாரத்தின் பயன்பாடு சாத்தியம். முற்றிலும் வேறுபட்ட இரு குணாதிசயங்கள் இணையும்போது மட்டுமே அங்கு ஆற்றல் நிகழும்; முழுமை சாத்தியமாகும்.

அதேபோல் சக்திகள் இரண்டிலும் உயர்வு தாழ்வும் இல்லை. மழை உயர்வெனில், வெயிலும் உயர்ந்ததுதான். பகல் உயர்ந்ததெனில் இரவும் அவ்வாறே.

நிலைமை இப்படியிருக்க ஆண் - பெண் இருவரில் ஆண் எப்படிப் பெண்ணைவிட உயர்ந்தவன் ஆவான்?

இப்போது, கடற்கரை கணவனின் வார்த்தைகளைக் கவனிப்போம். யாருக்கு யார் சம உரிமை கொடுப்பது?

`நான் உனக்குச் சமநிலையைத் தருகிறேன்' என்பதே எஜமான மனநிலை அல்லவா. தன்னைவிட இன்னொருவரைத் தாழ்மையாக நினைக்கிற மனம்தான் `நானும், நீயும் ஒன்று' என்று பேசும்.

ஆத்மாவில் பெண் ஆத்மா, ஆண் ஆத்மா என்று எப்படி இருக்க முடியும். ஆத்மா, அது தாங்கிய உடலுக்கு ஏற்ப ஆண் என்றும், பெண் என்றும் வடிவை அடைகிறது. அது பெண் உடலில் தங்கி இருக்கிறது என்பதாலேயே ஒரு படி கீழிறங்கியிருப்பதாய் எண்ணுவது எவ்வகை நியாயம்? 
 
இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களை மட்டம் தட்டினால் அந்த சக்தியின் மூலம் அடையக்கூடிய அன்பையும், ஆற்றலையும் எப்படி அடைய முடியும்.

இரு விதமான சக்திகள் இருப்பது, ஒன்றுக்கொன்று உதவவும், ஒன்றையொன்று முன்னேற்றவும், பொது நலன்களைப் பெறவுமே அன்றி, ஒன்றையொன்று  அவமானப்படுத்த அல்ல.

பெண்களை இழிவு செய்வது, பேராற்றலையே அவமானப்படுத்துவதாகும். தன்னில் பாதியான பெண்ணை அவமானம் செய்யும் மனிதன் வாழ்வில் முழுமை அடையமாட்டான். பெண்களை மட்டம் தட்டும் சமூகம் முழுமையான சமூகம் ஆகாது.அருகில் இருக்கும் பெண்ணை மதிக்காதவருக்கு, ஆண்டவனின் அன்பு எங்கிருந்து கிடைக்கும்?

இதை உணர்த்துவதே அர்த்தநாரீஸ்வர தத்துவம் எனலாம்.

இந்த உலகுக்குப் பெண்ணின் கர்ப்ப வாசம் மூலம் வருகிறோம். ஆலயங் களில் மூலவர் உறையும் இடத்தையும் கர்ப்பக்கிரஹம் என்றே அழைக்கிறோம். இரண்டுக்கும் ஒரே பெயர் திகழ்வது தற்செயலானது அல்ல. பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தெய்வம் வாழ்கிறது!

(நிறைவுற்றது)  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism