Published:Updated:

பெரியோர் வாக்கு!

பெரியோர் வாக்கு!
பிரீமியம் ஸ்டோரி
பெரியோர் வாக்கு!

பெரியோர் வாக்கு!

பெரியோர் வாக்கு!

பெரியோர் வாக்கு!

Published:Updated:
பெரியோர் வாக்கு!
பிரீமியம் ஸ்டோரி
பெரியோர் வாக்கு!
பெரியோர் வாக்கு!

தாயுமானவர் இறைவன்!

- குன்றக்குடி அடிகளார் -

நா
ம் அன்றாடம் பூஜை செய்யும்போது கடவுளுக்கு நைவேத்தியமாக உணவுப்பொருள்களைப் படைக்கிறோம். பிறகு, அவற்றை எடுத்துப் பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கிறோம். கடவுள் உண்டதாகக் கருதி நாமும் பிரசாதங்களை பக்தியோடு ஏற்கிறோம். எனினும் `கடவுள் பிரசாதத்தை உண்பதில்லையே' என்று நமக்குள் கேள்வி எழலாம்.

தாயானவள் தன் பிள்ளைகளில் ஏதோ ஒன்று சரியாக உண்ணவில்லை என்றாலும் தானும் உண்ணாமல் பட்டினி கிடப்பாள். இதுவே தாய்மையின் சிறப்பு. கடவுளோ அண்டசராசரத்தையும் படைத்தவர். அவரே உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர். அவரின் படைப்பினால் வந்த உயிர்கள் பலவும் பல காரணங்களால் பசியால் வாடுகின்றன. அப்படியிருக்கும்போது, கடவுளால் எப்படி உணவினை ஏற்றுக்கொள்ள இயலும். எப்போது இந்த உலகில் பசி, பட்டினி நீங்குகிறதோ அப்போது கடவுளும் நமது நைவேத்தியத்தை உட்கொள்ளத் தொடங்குவார்.

ஒரே குரு... ஒன்றே வழி!

- ஞானானந்தகிரி சுவாமிகள் -

ருவன் திருக்கோவிலூர் எனும் ஊருக்குச் செல்வதற்காகக் கிளம்பினான். அப்போது வழியில் தென்பட்ட ஒருவரிடம் அந்த ஊருக்குச் செல்ல வழி கேட்டான். அவரும் அவனுக்கு ஒரு வழியைக் காட்டினார்.

சிறிது தூரம் சென்றதும் வேறொருவரிடம் வழி கேட்டான். அவர் வேறோர் வழியைச் சொன்னார். இன்னும் சிறிது தொலைவு கடந்ததும் வேறு ஒருவரைக் கண்டு, அவரிடமும் வழி கேட்டான். அவர் கூறிய வழியில் பயணிக்கத் தொடங்கினான். ஆனால், அவனால் திருக்கோவிலூரை அடைய இயலவில்லை. இது போன்றதுதான் ஞானத்தை அறிவதும். ஞானத்தினை அடைய விரும்புவோர், ஒரே குருவிடம் சரணடைந்து, அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர் சொல்லும் பாதையில் செல்ல வேண்டும். அப்படிச் செய்வதுதான் ஞானத்தை எளிதில் அடைய இயலும் வழியாகும்.

எண்ணம்போல் வாழ்க்கை!

- சுவாமி சின்மயானந்தா -

மு
னிவர் ஒருவர் மனித நடமாட்டமில்லாத காட்டில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு நாயைச் சிறுத்தை ஒன்று துரத்தி வந்தது. நாயின் மீது பரிதாபம் கொண்ட முனிவர், அதைச் சிறுத்தையாக மாற்றினார்.

அந்தச் சிறுத்தை முனிவருக்கு நன்றி கூறி அங்கேயே தங்கியது. பின்னர் ஒரு நாள், புலியால் துரத்தப்பட்டது. இப்போது முனிவர் சிறுத்தையைப் புலியாக்கினார். சில நாள்கள் சென்றன. வலிமை அதிகம் கொண்ட ஒரு சரபப் பறவை ஒன்று அந்தப் புலியைத் தாக்கியது. அதனால் அந்த முனிவர் புலியைச் சரபமாக மாற்றினார்.

இப்போது வலிமைமிக்க சரபமாக மாறியிருந்த நாய் நினைத்தது... ‘ஒரு வேளை இந்த முனிவர் என் மீது இரக்கம் காட்டியதுபோல், காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும், பறவைகளையும் சரபமாக மாற்றிவிட்டால் என்னாவது? ஆகவே, இந்த முனிவரை முதலில் விழுங்கிவிடுவோம்’ என்று!

அதன் எண்ணத்தை தவ வலிமையால் அறிந்துகொண்ட முனிவர், சரபத்தின் மீது தன் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து, ‘மீண்டும் நாயாகக் கடவது’ என்று சபித்தார். ஒரே நொடியில் அந்தச் சரபம் பழையபடி நாயாக மாறியது.

நம் எண்ணங்களைப்போலவே நம் வாழ்க்கையும் அமையும். நம் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

பிரம்மத்தை முழுமையாக அறியும் ஆசை

- சுவாமி ராமதீர்த்தர் -

ரசன் ஒருவனுக்குத் திடுமென ஓர் ஆசை தோன்றியது. பிரம்மத்தின் - இந்தப் பிரபஞ்ச பிரமாண்டம் குறித்த மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்பதே அவனது ஆசை. அதுகுறித்து திருப்தியான விளக்கம் தருபவர்களுக்கு நிறைய வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டான். சான்றோர்கள் பலரும் அவனது அரசவைக்கு வந்து விளக்கம் தந்தனர். ஆனால் அவற்றிலெல்லாம் மன்னனுக்குத் திருப்தி வாய்க்கவில்லை. எனினும் பிரம்மத்தை அறியும் ஆவலையும் அவனால் அடக்க இயலவில்லை. இந்த நிலையில், ஒருநாள் அவன் கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கே  சிறுவன் ஒருவன் தன் சிறு கரங்களில் கடல்நீரை மோந்துவந்து கரையில் இறைத்துக்கொண்டிருப்பதைக் கண்டான். சிறுவனின் இந்த விநோதச் செயலுக்கான காரணத்தை அறிய விரும்பிய அரசன், அவனை அழைத்து விசாரித்தான்.

`‘கடல் நீரையெல்லாம் காலியாக்கிவிட்டு, சமுத்திரத்தில் நீர் இல்லாமல் செய்யப்போகிறேன்'' என்று பதில் சொன்னான் சிறுவன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டான் மன்னன். ``கடல் நீரைக் காலியாக்குவது இயலாத காரியம்'' என்று சிறுவனுக்குப் புத்திமதியும் சொன்னான். அதற்குச் சிறுவன் பதில் சொன்னான்: ‘`அரசே! இந்தப் பிரபஞ்சம் மிகவும் பெரியது. அதில் நீங்கள் ஒரு சிறு பொறி. அப்படியிருக்க, நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி அறிந்துகொள்ள எண்ணுகிறீர்களோ அதேபோன்றதுதான் எனது செயலும்'' என்று கூறினான். அரசனுக்கு உண்மை புரிந்தது; தனது எண்ணத்தை அத்துடன் கைவிட்டான்.

தொகுப்பு: புவனா கண்ணன்