Published:Updated:

பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!
பிரீமியம் ஸ்டோரி
பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

பி.சந்த்ரமெளலி

பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

பி.சந்த்ரமெளலி

Published:Updated:
பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!
பிரீமியம் ஸ்டோரி
பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

ங்குனி உத்திரம் என்றால் காவடி நினைவுக்கு வரும். பால் காவடி, பழக் காவடி, பன்னீர்க் காவடி, மச்சக் காவடி எனப் பலவகையான காவடிகளுடன் பக்தர்கள் சென்று முருகனை தரிசித்து வழிபடும் பழநியம்பதியும் நினைவுக்கு வரும். காவடிக்கும் பழநிக்குமான தொடர்பைச் சொல்லும் காரணக் கதை மிகவும் சிலிர்ப்பானது.  

பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

சிவசக்தியோடு முருகனையும் தரிசித்து வழிபட்டு, அம்மையப்பனின் வடிவாகவே திகழும் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளை வேண்டிப் பெற்று, அவற்றைத் தென்னகமாம் தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்காகப் பயணப்பட்டார் அகத்தியர்.

ஆம்! சிவனருளால் அந்த மலைகள் இரண்டும் முருகப்பெருமான் விளையாடும்-மாணிக்கம் மற்றும் ரத்தினத்தாலான அம்மானைக் காய்கள் போன்று அகத்தியரின் கைகளில் இருந்தனவாம்.

கேதாரம் வழியாகப் பயணித்த அகத்திய முனிவர் பூர்ச்சவனம் எனும் காட்டை அடைந்தார். அங்கே வடகிழக்குத் திசையில் மலைகள் இரண்டையும் வைத்து மனமுருகி வழிபாடு செய்தார். அதன் பிறகு மலைகளை அங்கேயே விட்டுவிட்டுக் காசிக்குப் போன அகஸ்தியர், விஸ்வ நாதரை தரிசித்துவிட்டு, அங்கிருந்து பொதிகையை வந்தடைந்தார். மலைகள் இரண்டும் சிறிது காலம் பூர்ச்சவனத்தில் இருக்கவேண்டும் என்பது இறைசித்தம் போலும்.

காலம் உருண்டது. சூரபதுமனுக்குப் போர்க்கலைகளைச் சொல்லிக் கொடுத்தவன் இடும்பன். அவன் மனைவி இடும்பி. சூரனின் மறைவுக்குப் பிறகு இந்தத் தம்பதி தலயாத்திரை மேற் கொண்டனர். வழியில் குற்றாலம் தலத்தை அவர்கள் அடைந்தபோது அகத்திய மாமுனிவரை தரிசிக்க நேர்ந்தது. அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான் இடும்பன். தன்னை ஏவலனாய் ஏற்கும்படி வேண்டிக்கொண்டான். அகத்தியர் மனமிரங்கினார். பூர்ச்சவனத்தில் இருக்கும் சிவகிரி-சக்திகிரி மலைகளைப் பொதிகைக்குக் கொண்டு வரும்படி அவனைப் பணித்தார்.

இடும்பன் மனைவியோடு புறப்பட்டான்.  விரைவில் பூர்ச்சவனத்தை அடைந்து சிவ-சக்தி கிரிகளை தரிசித்து சிலிர்த்தான். ஓராண்டு அங்கேயே தங்கியிருந்து, ரிஷிகளோடும் முனிவர் களோடும் அந்த மலைகளை வழிபட்டு பூஜித்தான். பின்னர் கிரிகளைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

தோளில் வைத்துத் தூக்கும் தண்டுத் தடியாக `க்ஷீபன்’ எனும் பிரம்ம தண்டம் அங்கு வந்தது. வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடகன் என்னும் அஷ்ட (எட்டு) நாகங்களும் கயிறுகளாக வந்தன. ஆச்சர்யப்பட்ட இடும்பன் எழுந்தான். கைகளைக் குவித்து வணங்கினான். கயிறுகளாக வந்த நாகங்களைக் கொண்டு உறிபோலச் செய்து, சக்திகிரி - சிவகிரி மலைகளைப் பிணைத்தான். பிரம்மதண்டத்தை நடுவில் கொடுத்துத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

அப்படி அவன் சிவகிரி சக்திகிரிகளைக் காவடியாகத் தூக்கிக்கொண்டு பயணித்ததை, ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீமத் குமார சுவாமியம் மிக அற்புதமாக விவரிக்கிறது.

எதிர்முகங் கிடக்கக் கண்டே அதிசயித் தெடுத்துத் தாம்பைக்
கதழ்வுறு குவடி ரண்டும்  கரகம் போல் வதியுமாறு
முதிருறியாக்கித் தண்டின்  மொய்ம்புற மாட்டி நாப்பண்
வதியரு மடங்கன் மானக்  குந்தினான் வலி மிக்குள்ளான்
குந்திய இரண்டு தாளுள் இடமுழந்தாளைக் குன்றா
அந்திகழ் தரையிலூன்றி அமர்வுறு தண்டைத் தோள்மேல்
சுந்தரமாக வேய்த்துத் துணைக்கரம் தொடை மேலாக்கி
மந்திர நுவன்று கொண்டே  எழுந்தனன் முகத்தேர் மல்க


பழநி தலபுராணத்திலும் இதுபற்றிய வர்ணனைகள் உண்டு.

பூமியில் முழங்காலை ஊன்றி, அகஸ்திய முனிவர் உபதேசித்த மந்திரத்தையும் திருவடிவையும் மனதில் பதித்து, மலைகளைத் தூக்கினான் இடும்பன். வைர வியாபாரி ஒருவர், இந்திர நீல ரத்தினத்தை ஒரு தட்டிலும், மாணிக்க ரத்தினத்தை ஒரு தட்டிலுமாக வைத்து நிறுப்பதைப் போல் இருந்தது இடும்பனின் தோற்றம்.

பூர்ச்சவனத்திலிருந்து மலைகளுடன் கிளம்பிய இடும்பன். மல்லிகார்ஜுனம், சீகாளத்தி, திருவண்ணாமலை, விருத்தாசலம் முதலிய தலங்களின் வழியாக வந்து காவிரியைக் கடந்து புஷ்ப மலையின் அடிவாரத்தை அடைந்தான். அதன் பிறகு வழி தெரியவில்லை.

அங்கேயே தயங்கி நின்றவனுக்குச் சிறுவன் ஒருவன் வழிகாட்டினான்.  அதன்படி வராக மலையை அடுத்துள்ள ஆவினன்குடி எனும் இடத்தை அடைந்தவன் அங்கேயே மலைகளை இறக்கிவைத்துவிட்டு, மனைவியுடன் உண்டு களைப்பாறினான். அடுத்து நடந்தது குமரவேலின் அருளாடல். ஆம்! களைப்பு நீங்கி எழுந்த இடும்பன் மீண்டும் மலைகளைத் தூக்குவதற்கு முயற்சி செய்ய, அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை. இடும்பன் காரணத்தை ஆராய முற்பட்டபோது, சிவகிரியின் மீது குராமரத்தின் அடியில் பாலகன் ஒருவன் சிரிப்புடன் நிற்பதைக் கண்டான். மலைகள் நகராததற்கு அவனே காரணம் என்று நினைத்தவன், குன்றின் மீது ஏறி பாலகனைத் தாக்க முயன்றான். ஆனால் நடந்ததோ வேறு. பாலகனால் வீழ்த்தப்பட்டான் இடும்பன்.

அவன் மனைவி கலங்கினாள். துக்கம் தாளாது உயிரை விடத்  தீர்மானித்தாள். அதற்குமேலும் பொறுக்காத கந்தக் கடவுள் இடும்பியைத் தடுத்து உண்மையை உணர்த்தியது. அத்துடன் இடும்பனையும் உயிர்ப்பித்து அருள் செய்தது.

‘‘இடும்பா! இன்று முதல் நீ இங்கே என் காவல் தெய்வமாக விளங்குவாய். உன்னைப் போலவே பால், பழம், சந்தனம், பூ முதலான பொருள்களை எல்லாம் காவடி எடுத்து, என் சந்நிதிக்கு வருபவர்கள் எல்லோருக்கும் நான் அருள்பாலிப்பேன்!’’ என்று அருள்பாலித்தார் முருகக்கடவுள்.

அன்று முதல் முருகன் கோயில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. அகஸ்தியரின் உத்தரவுப்படி இடும்பன் தூக்கி வந்ததில் பழநி மலையே சிவகிரி. இதற்குச் சற்று தூரத்தில் நம்மால் இடும்பன் மலை என்று அழைக்கப்படுவது சக்திகிரி.

பழநி மலைமீது முருகப் பெருமானை தரிசிக்க வருபவர்கள் முதலில்,  மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இடும்பன் சந்நிதியில் வணங்கி அதன் பிறகே பழநி மலைப் பரமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கு இடும்பன் தலைசிறந்த வரப்பிரசாதியாக விளங்கி அருள்புரிகிறான். அந்த இடும்பனைப் போலவே ஆயிரக்கணக்கானோர், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ தினங்களையொட்டிக் காவடி சுமந்து காவடிச்சிந்து பாடியபடி பழநிக்கு வந்து பால தண்டாயுதபாணியை தரிசிப்பதை இன்றும் காணலாம். 

பங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி!

திருவரங்கத்தில்...

ங்குனி மாதம், வசந்த காலம், ரோகிணி நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சனிக்கிழமை அதிகாலை சுப முகூர்த்தத்தில் திருவரங்கரை விபீஷணருக்கு ராமர் கொடுத்தார்.

இவ்வாறு, தான் பெற்ற திருவரங்கரையும் அவரைத் தன்னுள் கொண்ட திருவரங்க விமானத்தையும் விபீஷணன் (இப்போது நாம் தரிசிக்கும் இடத்தில்) வைத்ததும் பங்குனி மாத சனிக்கிழமை அன்றுதான்.

‘பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதி, சனிக்கிழமை, சந்திரன் ரோகிணியிலும் குரு ரேவதியிலும் இருக்கும் மத்தியான நேரத்தில் திரு அரங்க விமானம் காவிரி தீரத்தில் விபீஷணரால் பிரதிஷ்டிக்கப்பட்டது’ என 1935-ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்க மஹாத்மியம் எனும் நூல் கூறுகிறது.

அதேபோல் இன்றும் சீரும் சிறப்புமாகத் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தை தர்மவர்மா எனும் மன்னரின் வேண்டுகோளின்படி விபீஷணர் தொடங்கிவைத்ததாகக் கூறுகின்றன ஞானநூல்கள்.