Published:Updated:

பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?
பிரீமியம் ஸ்டோரி
பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

எஸ்.கண்ணன் கோபாலன் - படம்: செ.ராபர்ட்

பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

எஸ்.கண்ணன் கோபாலன் - படம்: செ.ராபர்ட்

Published:Updated:
பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?
பிரீமியம் ஸ்டோரி
பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

‘தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்று நாம் போற்றிக் கொண்டாடுவதற்கு ஏற்ப, எண்ணற்ற பல திருத்தலங்களில் சிவபெருமான் கோயில்கொண்டு அருள்புரிகிறார். அவற்றுள்ளும் பல கோயில்களில் அருளும் இறைவனை, அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இறைவன், ‘அகத்தீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார்.   

பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

கயிலையில் சிவசக்தியர் திருமண வைபவம் நடைபெற்றபோது,  வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து பூமி சமநிலை தவறியது. பூமியை சமநிலைக்குக் கொண்டு வர, சிவனாரின் கட்டளை யின்படி தென்னகம் புறப்படுகிறார் அகத்தியர். அவருடைய நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். நினைத்த இடங்களிலெல்லாம் சிவசக்தியரின் திருமண வைபவத்தை தரிசிக்கவேண்டும் என்பதுதான் அது. சிவனாரும் சம்மதித்தார்.

தென்திசை புறப்பட்ட அகத்திய முனிவர், தாம் நினைத்த இடங்களிலெல்லாம் சிவசக்தியரின் திருமண வைபவத்தை தரிசிக்க விரும்பினார். அதன் பலனாக எண்ணற்ற திருத்தலங்கள் தோன்றின. அகத்தியர் இப்படி நிபந்தனை விதித்தார் என்றால், சிவபெருமானின் திருவுள்ளம் வேறாக இருந்தது. 

அகத்தியர் விரும்பிய இடங்களில் தம் திருமண வைபவத்தை தரிசிக்கும்படி செய்த இறைவன், நமக்கெல்லாம் அருள்புரிய வேண்டும் என்பதற்காக மேலும் பல திருத்தலங்களில் கோயில்கொள்ள விரும்பி, தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் வதற்காக, அகத்தியரையே மறைமுகமாகப் பயன் படுத்திக் கொள்ளவும் செய்தார்.

அப்படி அமைந்த பல திருத்தலங்களில் ஒன்றே நாகப்பட்டினம் மாவட்டம், பள்ளியமூலை என்ற தலத்தில் அமைந்திருக்கும் `அருள்மிகு வண்டார் குழலி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்.'

ஈசனின் திருவுள்ளத்தின்படி அமைந்த அந்த ஆலயம், காலப்போக்கில் சிதிலமடைந்து போக, தற்போது திருப்பணிக்குக் காத்திருப்பதாக ஓர் அன்பர் தெரிவித்தார். நாம் அந்தக் கோயிலை தரிசிக்கச் சென்றோம். கருவறையில் எழுந்தருளி நித்திய பூஜைகளும் விழாக்களும் காணவேண்டிய தெய்வ மூர்த்தங்கள், ஒரு கீற்றுக் கொட்டகையில் இருப்பதைக் கண்டு மனம் துடித்துப்போனோம்.  ஆனால்,  திருப்பணி கள் தொடங்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் நம் மனதுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.

சிவ.முத்துராமன் என்பவர் நம்மிடம் கோயிலின் தொன்மைச் சிறப்பு களைப் பகிர்ந்துகொண்டார். ‘`அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோயில் இது. சுவாமி அருள்மிகு அகத்தீஸ்வரர். அம்பாள் அருள்மிகு வண்டார்குழலி அம்மன். மேலும், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், சண்டிகேஸ்வரர், பெருமாள், கருடன் ஆகியோரும் உள்ளனர். அரிச்சந்திரா நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் தலம் இது.  

பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்?

மிகவும் பழைமையான பலவனாறு என்னும் ஆறு, ஊரையும் கோயிலையும் இடமாகச் சுற்றிக்கொண்டு செல்கிறது. கோயிலுக்குப் பின்புறத்திலேயே அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட அகத்திய தீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் மாவிலங்கை.

அகத்தியர் திருமறைக்காடு என்னும் ஊருக்குச் செல்ல இந்த ஊரின் வழியாக வந்துகொண்டிருந்தபோது, அரிச்சந்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேற்கொண்டு பயணம் தொடர முடியாத அகத்தியர், இங்கிருந்த மாவிலங்க வனத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். முனிவர் தங்கியிருந்த மாவிலங்க வனம் தற்போது பள்ளியமூலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளம் பெருக்கெடுத்ததால், நீர் தேங்கியிருந்த பகுதி நீர்முளை என்றும், வெள்ளநீர் வடிந்த பிறகு அகத்தியர் கடந்து சென்ற வழி திருவாசல் என்றும் இன்றைக்கும் அழைக்கப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில், கோயிலுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு, நித்திய பூஜைகள் செய்வதற்காக சிவாசார்யர்களை இந்த ஊரில் குடியமர்த்தி, அவர்களுக்கு நிலதானம் கொடுத் துள்ளார். நிலதானம் கொடுத்த பகுதி ‘மனுநீதி கண்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் திருவாய்மூர், திருவிடை மருதூர் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

மிகவும் புராதனச் சிறப்பு கொண்ட கோயில் சிதிலமடைந்து, பல வருடங்களாகவே பூஜைகளுக் கும் வழியில்லாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான், ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சிதிலம் அடைந்த கோயிலில் இருந்த தெய்வ மூர்த்தங் களை ஓர் ஓலைக் கொட்டகையில் பிரதிஷ்டை செய்து நித்திய பூஜைகளைத் தொடங்கினர். இப்போது திருப்பணிக் கமிட்டி அமைத்து, திருப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.

ஊர்மக்கள் மிகவும் ஆர்வத்துடன் திருப் பணிகளில் ஈடுப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று, கோயில் கும்பாபிஷேகம் செய்துவிடவேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் ஒரே லட்சியமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது’’ என்றார்.

நமக்கெல்லாம் அருள்புரியவேண்டும் என்பதற் காகவே, அகத்திய முனிவரின் மூலமாக எழுந் தருளிய பள்ளியமூலை அருள்மிகு அகத்தீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிக்கு, நம்மால் இயன்ற பொருளுதவி செய்தால்தானே, திருக்கோயில் விரைவில் புதுப் பொலிவு பெற்று, நாளும் பூஜை களும் விழாக்களும் சிறப்பாக நடைபெறும்?

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது போல், நாம் வழங்கும் சிறிய உதவியும் ஈசனின் அருளால் பல்கிப் பெருகி, திருப்பணிகள் விரைவில் நிறைவு பெறுவதுடன், ஈசனின் அளப்பரிய அருள் நம்மையும் நம் சந்ததியினரையும் வாழ்விக்கும் என்பது உறுதி.

எப்படிச் செல்வது?

நா
கப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருத்துறைப்பூண்டியி லிருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் உள்ள பகுதி நீர்முளை. இந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பள்ளியமூலை. நீர்முளையிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c. Name: R.Rajasekar - R.Ashok Kumar

A/c No: 1225115000000700

IFSC Code: KVBL 0001225

Bank Name: The Karur Vysya Bank, Neermulai Branch

தொடர்புக்கு: ராஜசேகர், பள்ளியமூலை. செல்: 98436 95967