Published:Updated:

1995ல் சபரிமலைக்குப் போன பெண் கலெக்டருக்கு நடந்ததென்ன..? - ஒரு ரீவைண்ட்!

கலெக்டர் வல்சலகுமாரி சபரிமலைப் பகுதியில் பிரவேசிக்கக்கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இவைதாம்.

1995ல் சபரிமலைக்குப் போன பெண் கலெக்டருக்கு நடந்ததென்ன..? - ஒரு ரீவைண்ட்!
1995ல் சபரிமலைக்குப் போன பெண் கலெக்டருக்கு நடந்ததென்ன..? - ஒரு ரீவைண்ட்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வழிபடுவதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, இன்னொரு புறம் பல்வேறு அரசியல்கட்சிகளும், ஐயப்ப பக்தர்களும் கேரளாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது இன்றைய நிகழ்வு. 

பெண்கள் சபரிமலைக்குப் போகலாமா, கூடாதா என்ற சர்ச்சை இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாக இருந்து வருவதுதான். 1995, டிசம்பர் மாதம் சபரிமலையை ஒரு சர்ச்சை சூழ்ந்தது. பக்தர்கள் புனிதமாகக் கருதி வழிபடும் பம்பா நதியிலும், குடிநீரிலும் மல அணுக்கள் கலந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மண்டலப் பூஜைக்காலத்தில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தக் கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்தது. அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு, அப்போது  பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக இருந்த கே.பி.வல்சலகுமாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது வல்சலகுமாரிக்கு வயது 40. 

பணிகளைக் கண்காணிக்க சபரிமலைக்குச் சென்றார் வல்சலகுமாரி. ஆனால் 50 வயதுக்குட்பட்ட பெண்ணை, கலெக்டராகவே இருந்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, ஐயப்ப சேவா சங்கம், சாஸ்தா கோயில் தலைமைக் குருக்கள் ஆகியோர் போராட்டத்தில் குதித்தனர். 

அந்தச் சூழலில், 10/12/1995 ஆனந்த விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியானது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எழுத்தாளர் கமலாதாஸ், நீதிபதி கிருஷ்ணய்யர் ஆகியோரின் கருத்துகளோடு வெளிவந்த அந்தக் கட்டுரை, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ள உதவும். 

கீழே அந்தக் கட்டுரை...  

இது ஐயப்பக் கடவுளைத் தரிசிக்கும் மண்டல பூஜைக் காலம்.

'நாடெங்கும், 'சாமியே சரணம்... 'சரணம் ஐயப்பா ...' என்று பக்தர்களின் பக்திப் பரவசக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதே சமயம், 'பத்து முதல் ஐம்பது வயது' வரையிலான பெண்களும் 'சபரிமலைக்கு ஸ்ரீ ஐயப்பனைத் தரிசிக்கப் போகலாமா...' என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. சென்ற ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து குவிந்ததால், பம்பா நதி நீரிலும், பக்தர்களுக்குக் குடிக்க வழங்கப்பட்ட நீரிலும், மல அணுக்கள் தாராளமாகக் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுக் கேரளமே களேபரப்பட்டது. ஒரு புனிதப் பயணத்தை மேற்கொண்டுவரும் பக்தர்களுக்கு அடிப்படை சௌகரியங்களைக்கூட ஒழுங்காகச் செய்துதர கேரள அரசினாலும் சபரிமலை தேவஸ்தானத்தாலும் முடியவில்லையே என்று மனம் கலங்கியது.

அந்த நிலைமை, இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் மற்றும் மகரவிளக்கு நாள்களில் மீண்டும் சம்பவிக்காமல் இருக்க, பொதுநலப் பணிகளை கேரள அரசு முடுக்கிவிட்டது. அதைச் செயல்படுத்தும் பொறுப்பை, சபரிமலை உள்ளிட்ட பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் கே.பி. வல்சலகுமாரியிடம் ஒப்படைத்தது. கலெக்டர் வல்சலகுமாரிக்கு நாற்பது வயதாகிறது. பக்தர்களின் வசதிகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒழுங்காக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்யும் பொறுப்பை கலெக்டர் வல்சலகுமாரி ஏற்றுச் செயல்பட ஆரம்பித்தபோதுதான் பிரச்னை பெரிதாக வெடித்தது.

"ஐம்பது வயதுக்குக் கீழே இருக்கும் கலெக்டர் வல்சலகுமாரி, சபரிமலையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிக்குள் வரக்கூடாது" என்று விஸ்வ இந்து பரிஷத்தும் ஐயப்ப சேவா சங்கமும் சாஸ்தா கோயில் தலைமைக் குருக்களும் அறிவிக்க, விஷயம் சிக்கலாகிப் போனது.கலெக்டர் வல்சலகுமாரி சபரிமலைப் பகுதியில் பிரவேசிக்கக்கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இவைதாம்.

"வல்சலகுமாரி கலெக்டராக இருக்கலாம், ஆனால், அவர் ஒரு பெண். அவர் வயதுப் பெண்களுக்குச் சபரிமலைக்கு வர அனுமதி கிடையாது. இன்று வல்சலகுமாரி வந்து போனால், நாளை இதையே உதாரணமாகச் சொல்லி, மற்ற பெண்களும் வந்து போகத் தொடங்குவார்கள். இப்படியே போனால் பெண்களின் 'மாத ஓய்வு' நாள்களிலும் சபரிமலை வந்து போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி வந்தால் சபரிமலைக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும். அது சம்பவிக்கக் கூடாது.." என்று சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி (குருக்கள்) மஹேஷ்வரரு கூறுகிறார். ஆனால், சென்ற ஆண்டு, பொதுநலப் பணி மேற்பார்வைக்காக வல்சலகுமாரி சபரிமலைக்குச் சென்று வந்திருக்கிறார். தவிர, சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம், நற்பணிகளை மேற்பார்வை செய்ய கலெக்டர் வல்சலகுமாரி சபரிமலைக்குப் போகலாம் என அனுமதியும் வழங்கி உள்ளது. இருப்பினும், வல்சலகுமாரிக்கு மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணமே!

வல்சலகுமாரி சபரிமலைப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பியதும், பெண்கள் நல அமைப்புகள் வல்சலகுமாரிக்காக ஆதரவுக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

''இப்போதுள்ள சூழ்நிலையில், வல்சலகுமாரிக்குப் பாதுகாப்பும் தரப்பட வேண்டும். தனது கடமைகளைச் செய்வதிலிருந்து அவரைத் தடுப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் மட்டுமல்ல... பெண்களின் உரிமைகளை மறுப்பதற்கும் சமமாகும்" என்று மகளிர் நல அமைப்புகள் உரிமைக் குரல் எழுப்பியுள்ளன. வல்சலகுமாரிக்கு ஆதரவாக நிற்கும் பெண்மணிகளில் முக்கியமானவர்கள் நாவலாசிரியர் கமலாதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சுசீலா கோபாலன், (கேரளம்) சட்டசபை உறுப்பினர் பேராசிரியர் மீனாட்சி தம்பான், கவிஞை சுகதகுமாரி ஆகியோர்.

கலெக்டர் வல்சல குமாரிக்கு ஆதரவாகக் கொடி பிடித்த ஆங்கில எழுத்தாளரும் நாவலாசிரியருமான கமலாதாஸை நாம் சந்தித்தபோது, அவர் சொன்னது:

"நான் கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடும் வழக்கத்தைக் கொண்டவள் அல்ல. என்றாலும், எனது கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். முன்பு சபரிமலைக்குப் போவது மிகக் கடினமான யாத்திரையாகக் கருதப்பட்டது. சபரிமலைக் காட்டுப்பகுதியில் கொடிய வனவிலங்குகளின் தாக்குதல் அபாயம் இருந்தது. அதனால், அப்போது பெண்கள் சபரிமலைக்குப் போகலாமா வேண்டாமா என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்பவும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பெண்கள் மலை ஏற வேண்டும். பம்பா நதியில் குளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்கள் குளிக்கும் போது, பெண்கள் திறந்த வெளியில் எப்படிக் குளிக்க முடியும். உடைமாற்றிக் கொள்வதற்காக 'மறைவுகள்' ஏதுமில்லை. பக்தர்கள் தங்களது இயற்கை அழைப்புகளை நிவர்த்தி செய்ய அக்கம் பக்கம் ஒதுங்குவார்கள். சபரிமலைக்கு வருபவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்பதால் அது ஒரு பிரச்னையாகப்படவில்லை . இதே இளம் வயதுப் பெண்கள் சபரிமலை போனால், அவர்கள் தர்மசங்கடத்தில் கூச்சத்தில் நெளிவார்கள். இதனாலெல்லாம்தான் சபரிமலை ஐயப்ப வழிபாடு என்பது ஆண்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது. சபரிமலைக்குச் சென்றால்தானா? ஐயப்பன் கோயில்கள் தான் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கிறதே. அங்கே பெண்கள் போகிறார்களே... அது போதாதா.... ஆனால், கலெக்டர் வல்சலகுமாரி சபரிமலைக்குப் போவதை அவர் ஒரு பெண் என்ற காரணத்துக்காகத் தடுக்கக்கூடாது. கலெக்டர் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கட்டும், ஏன், மூன்றாம்பாலாகக்கூட இருக்கட்டும். இங்கு 'பால்' (Gender) ஒரு பிரச்னையே அல்ல. வல்சலகுமாரி தனது கடமையைச் செய்வதில் பொதுமக்களும் சரி, ஐயப்ப பக்தர்களும் சரி உற்சாகம் தர வேண்டுமே தவிர, தடை போடக்கூடாது...'' என்றார் கமலாதாஸ்.

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர், சபரிமலைக்குப் பெண்கள் போகலாமா என்பது பற்றி கூறிய கருத்து: ''சட்டத்தின் முன்பு ஆணும் பெண்ணும் சமம். சபரிமலைக்கு எப்படி ஆண்கள் போக உரிமை தரப்பட்டுள்ளதோ அப்படிப் போக பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. எந்த நீதிமன்றமும், இந்தக் கோயிலுக்கு இவர்கள் மட்டும்தான் போகலாம் என்று சொல்ல முடியாது. பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்குக் குறைவான பெண்கள் சபரிமலைக்குப் போகக் கூடாது என்று கேரள நீதிமன்றம் சொல்லியிருப்பது துரதிர்ஷ்டமானது. 'இந்த சர்ச்சுக்கு நீங்கள் போகக் கூடாது' என்று கிறிஸ்தவ பெண்களிடமும், 'இன்ன தர்ஹாவுக்கு நீங்கள் போகக் கூடாது' என்று முஸ்லிம் பெண்களிடமும் நீதிமன்றம் சொல்ல முடியுமா?. ஆனால், இந்துப் பெண்களிடம் மட்டும் சபரிமலைக்குப் போகக்கூடாது என்று சொல்வது, நமது அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக்குப் புறம்பானதாகும். அதேபோல், கலெக்டர் ஆணோ பெண்ணோ, அவர் கடமையைச் செய்ய, நீதிமன்றத்தின் துணை வேண்டியதில்லை. கலெக்டர் இன்னின்ன கடமைகளைச் செய்யலாம் என்று நீதிமன்றமும் தீர்மானிக்க முடியாது. பிளேக், காலரா பாதிப்பு ஏற்பட்டால், கலெக்டர் அங்குப் போகலாமா கூடாதா என்று நீதிமன்றமா நிச்சயிக்கும்?! பாதிக்கப்பட்ட இடத்துக்கு கலெக்டர் போவது அவரது கடமைகளில் ஒன்று. சபரிமலைக்குத் தனது கடமையை நிறைவேற்ற எந்த கலெக்டரும் போகலாம்!''

ஒருபுறம் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினரின் எதிர்ப்பு... மறுபுறம், கேரள அரசு - உயர்நீதி மன்றம் ஒப்படைத்துள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டிய கடமை... இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி, தர்மசங்கடமான நிலைமையில் கலெக்டர் வல்சலகுமாரி! அவரை, பத்தனம் திட்டாவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

''முதலில் எனக்குத் தரப்பட்ட பொறுப்புகளை எதுவரைக்கும் செயல்படுத்தியிருக்கிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன்'' என்று ஆரம்பித்தார் கலெக்டர் வல்சலகுமாரி.

“பக்தர்களின் சிரமங்களைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கும் விதமாகவும், சுமார் இரண்டாயிரம் கழிப்பறைகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. சபரிமலை, பம்பா சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்த முந்நூற்று முப்பது சுகாதார ஊழியர்களை நியமித்திருக்கிறோம். அவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள். தினமும் அறுபது ரூபாய் சம்பளம். இவர்கள் சேலத்திலிருந்து வந்து போகும் செலவையும் நாங்கள் ஏற்கிறோம். இவர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எல்லா நற்பணிகளையும் உருப்படியாகச் செய்து முடிக்க, 'சபரிமலை சானிடேஷன் சொஸைட்டி' என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளோம். இது எனது அலுவலகத்திலேயே செயல்படுகிறது. பக்தர்களுக்கு ஏதாவது நல்ல  காரியம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த அமைப்புக்கு நன்கொடை வழங்கலாம்...'' என்றார்.

"நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், நீங்கள் சபரிமலைக்குப் போனால் தடுத்து நிறுத்தப் போவதாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறதே... இந்த மேற்பார்வை பொறுப்பை வேறு ஒரு ஆண் கலெக்டரிடம் ஒப்படைத்திருக்கலாமே என நினைக்கிறீர்களா?...'' என்று கேட்டபோது, "இன்றைய சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது தவறாகத் திரிக்கப்படலாம். மண்டல பூஜைக் காலத்தில் பக்தர்களுக்கு எல்லா சௌகரியங்களும் கிடைக்கிறதா என்று பார்ப்பதுதான் எனக்கு முக்கியம். இந்தச் சமயத்தில், பிரச்னைகள் எதுவும் பெரிதாகிவிடக்கூடாது. பக்தர்கள் அமைதியாக வந்து ஐயப்பனை வணங்கிச் செல்லவேண்டும்... அதனால் எனது கருத்துகளை உண்மையிலேயே நான் கூற விரும்பவில்லை. எனது சூழ்நிலையைக் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்...' என்றார் வல்சலகுமாரி.

- பிஸ்மி பரிணாமன்

கோயில் விதியும். கோர்ட் தீர்ப்பும்..

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அசைவ உணவு, இல்லற சுகம் விலக்கி நாற்பது நாள்கள் நோன்பு இருக்க வேண்டும். இது பிரதான விதி.

இன்னொரு விதியும் உண்டு. பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் யாரும் சபரிமலை சந்நிதானத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிக்குள் வரக் கூடாது , என்பதே அந்த 'விலக்கு' விதி.

இந்த விலக்கு நடைமுறையில் இருந்தாலும், 'வி.ஐ.பி' பெண்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு வந்து சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்து போகிறார்கள் என்பதும் உண்மை .

ஒவ்வொரு ஆண்டும், சபரிமலை தேவஸ்தான மேலாளர், "ஐயப்ப சந்நிதான மரபு, விதிகளின்படி விரதம் அனுஷ்டிக்காத பக்தர்கள், பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் சுவாமி ஐயப்பனைத் தரிசித்து வழிபட அனுமதிக்கப்படமாட்டார்கள்...' என்ற அறிவிப்பைப் பத்திரிகையில் வெளியிடுவார், 1993-ல் இப்படிப்பட்ட விளம்பரம் வந்திருந்தபோது, 'Woman's era' - - ஆங்கிலப் பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் சில கருத்துகள் சொல்லப்பட்டிருந்தன...

''மாத ஓய்வு' நாள்களைக் கொண்டிருக்கும் பெண்கள் சந்நிதானத்துக்கு வரக்கூடாது என்று சொல்வது பாரபட்சமான செயல். முன்பெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய, வழிபட அனுமதி தரப்படவில்லை, இப்போது அந்தக் கட்டுப்பாடுகள் மாறி அனைவரும் கோயிலுக்குள் போகலாம். சாமி கும்பிடலாம் என்றாகிவிட்டது. அதுமாதிரி எத்தனையோ மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மரபு என்ற பெயரில் பெண்களை மட்டும் ஏன் விலக்கி நிறுத்த வேண்டும்!

'மாத ஓய்வு' காரணமாகப் பெண்கள் சந்நிதானத்துக்குள் வரக் கூடாது, என்பது பெண்களுக்குத் தெரிந்த விஷயம்தான். 'அந்தக் காலத்தில்' சாதாரணமாக, பெண்களே 'தீட்டு' கருதி, கோயிலுக்கே போக மாட்டார்கள். புனிதமான கோயில் தங்களால் அசுத்தமாகிவிடக் கூடாது என்று அவர்களாகவே எச்சரிக்கையாக இருப்பார்கள்...

'மாத ஓய்வு' - தீட்டு என்றால், மாத ஓய்வு இல்லாத நாள்களில் பெண்களை ஏன் ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கக் கூடாது. விரதம் பூணாத பக்தர்கள், சபரிமலைக்கு வர அனுமதி இல்லை . ஸ்ரீ ஐயப்பனை வழிபட வரும் ஆண் பக்தர்கள் அனைவரும் முறைப்படி விரதம் காத்தார்களா இல்லையா என்பதை உறுதி செய்ய எந்த வழியும் இல்லை. விரதம் காப்பதும் பேணுவதும் ஆண் பக்தர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டிருக்கிறது. அதே மாதிரி, 'தூய்மை ' விஷயத்தையும் ஏன் பெண் பக்தர்களின் மனசாட்சிக்கு விடக் கூடாது'' என்று 'உமன்'ஸ் ஈரா கேட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தான உயர் அதிகாரியின் மனைவி (ஐம்பது வயதுக்குட்பட்டவர்) சந்நிதானத்துக்கு வந்து ஐயப்பனை வணங்கிச் சென்றது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இது தொடர்பாக சில பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில், "பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களைச் சந்நிதானத்துக்குள் அனுமதிக்கக் கூடாது" என்று 1991 மார்ச் 5-ல் தீர்ப்பானது.

அதற்குப் பின்னரும் கேரள மீன்துறை அமைச்சர் எம்.டி. பத்மா, அன்றைய ஆந்திர வருவாய்த்துறை அமைச்சர் பபிராஜுவின் மனைவியான அன்னபூர்ணாவுடன் சபரிமலை சென்று, ஐயப்பனை வணங்கித் திரும்பியிருக்கிறார். இந்தச் செய்தி வெளிவந்ததும், மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் போது, பத்மா, அன்னபூர்ணா ஆகியோர் ஸ்ரீ ஐயப்ப சந்நிதானத்துக்கு வந்தது உண்மை என்று நிரூபணம் ஆகியது. "தனது முந்தைய தீர்ப்பை முழுமையாகவும் கட்டாயமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று மீண்டும் கேரள உயர்நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்தது.

இப்போது, "வல்சலகுமாரி, கலெக்டர் என்ற நிலையில் பொது நலப்பணிகளை மேற்பார்வை செய்ய சபரிமலை செல்லலாம். ஆனால், பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் யாரையும் உடன் அழைத்துப் போகக் கூடாது'' என்று கேரள உயர்நீதிமன்றம் சமீபத்திய தனது தீர்ப்பில் சொல்லியுள்ளது.