விளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்
திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

குழந்தை வரம் அருள்வாள்!

குழந்தை வரம் அருள்வாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை வரம் அருள்வாள்!

வீ.கே.ரமேஷ் - படம்: விஜயகுமார்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இயற்கையெழில் சூழ்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கிறது எட்டுக் கை அம்மன் கோயில். தன்னைத் தேடிவந்து  வழிபடும் பக்தர்களின் பலதரப்பட்ட வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிவைக்கும் வரப்பிரசாதி இந்த அம்மன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்குவரும் பக்தர்கள் அதிகம்.  

குழந்தை வரம் அருள்வாள்!

கோயிலின் வரலாறு பற்றிக் கோயிலின் தலைமைப் பூசாரி அய்யாசாமி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘முற்காலத்தில் சதுரகிரி மலையில் வாழ்ந்த 18 சித்தர்கள், அங்கிருந்து புறப்பட்டுப் பெரியமலை, காஞ்சேரிமலை, பச்சமலை, கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, அருநூற்றுமலை எனப் பல  மலைகளைக் கடந்து கொல்லிமலைக்கு வந்தார்கள்.  ஆள் அரவமற்ற அடர்ந்த வனப் பகுதியாக இருந்த மேல்கலிங்கப்பட்டி என்ற இந்த இடத்தில் உள்ள பாறைமீது அமர்ந்து தவமியற்றத் தொடங்கினார்கள்.

தங்கள் தவத்துக்கு அசுரர்களாலோ வனவிலங்குகளாலோ ஆபத்து வரக் கூடாது என்பதற்காக,  குழந்தை வடிவத்தில் இந்த  அம்மனை உருவாக்கி வைத்தார்கள். சித்தர்களின் கண்களுக்கு மட்டுமே தென்படும் அம்மன், எத்தனை வல்லமை படைத்த அசுரர்களாக இருந்தாலும் அழிக்கும் ஆற்றல் கொண்டவள். அம்மனுக்கு எட்டுக் கைகள் இருந்ததால், ‘எட்டுக்கை அம்மன்’ என்றும், பொம்மையைப்  போன்று குழந்தை வடிவத்திலிருந்ததால், ‘கொல்லிப்பாவை’ என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.   

குழந்தை வரம் அருள்வாள்!

காலப்போக்கில் அம்மன் சிலை மண்ணில் மறைந்துவிட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகு எங்கள் முன்னோர்கள் இந்தப் பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிக்கொண்டு வந்தபோது, ஓரிடத்தில் மாடுகள் எதையோ கண்டு மிரண்டதுபோல் அலறியடித்துக் கொண்டு திரும்பிவிட்டன. அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அம்மன் சிலை மண் படிந்த நிலையில் காணப்பட்டது. தங்களுக்கு அருள்புரிவதற்காகவே அம்மன் மண்ணுக்குள்ளிருந்து சுயம்புவாக வெளிப்பட்டதாக எண்ணி, மர இலைகளைக் கொண்டு ஒரு குடிசைபோட்டு வழிபட்டு வந்தார்கள். தற்போது நாங்கள் சிறியதாக ஒரு கோயில்கட்டி வழிபடுகிறோம்’’ என்றார்.

குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள், செப்புத் தகட்டில் எழுதிக் கட்டிவிட்டுச் சென்றால், விரைவில் கருத்தரிப்பதாகச் சொல்கிறார்கள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றவர்களில் கணவரோ மனைவியோ மனஸ்தாபம் நீங்கி, மறுபடியும் ஒன்றுசேர விரும்பினால், தங்கள் இருவருடைய துணியைக் கொண்டுவந்து, கோயிலிலிருக்கும் சூலாயுதத்தில் கட்டிவிட்டுச் சென்றால், மறுபடியும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. சண்டைபோட்டுப் பிரிந்த உறவுகள், நட்புகள்கூட இப்படிச் செய்து வேண்டிக்கொண்டால், ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பதும் நம்பிக்கை.

கோயிலில் நாம் சந்தித்த சீனிவாசன் என்பவர், “நான் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள முன்னூறு மங்கலம் என்ற ஊரிலிருந்து வருகிறேன். குடும்பத்தில் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் சொன்னதால், ஒரு வருடத்துக்குமுன்பு இந்தக் கோயிலுக்கு வந்து என்னுடைய குறைகளை ஒரு செப்புத் தகட்டில்  எழுதிவைத்துவிட்டுச் சென்றேன். மூன்று மாதத்துக்குள் நிலைமை அடியோடு மாறி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி ஏற்பட்டது. இப்போது நான் மாதம்தோறும் அமாவாசைக்கு என் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.  

குழந்தை வரம் அருள்வாள்!

சேலத்தைச் சேர்ந்த முருகன்-சரண்யா தம்பதி, “திருமணமாகி 7 வருடமாகியும் எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றபிறகு மூன்றே மாதத்தில் கருத்தரித்து ஒரு மகன் பிறந்தான். பிறகு அம்மனிடம் ஒரு பெண்குழந்தை வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். அப்படியே எங்களுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது’’ என்று பரவசத்துடன் கூறினர்.

கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவதுடன், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரா பௌர்ணமியன்று திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவின்போது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

எப்படிச் செல்வது?

நா
மக்கல்லிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ள கொல்லி மலைக்கு, சேந்தமங்கலம், காரவல்லி வழியாகக் கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில், பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சுமார் 2 கி.மீ வனப் பகுதியில் நடந்துசென்றால், கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்: கோயில் ஒரு சிறு கொட்டகையில் அமைந்திருப்பதால் எப்போதும் திறந்துதான் இருக்கும். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால், காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் செல்வது நல்லது.