Published:Updated:

நடராஜர் சிலை 10 லட்சம் டாலர்... தமிழகப் பழங்காலச் சிலைகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள் அனைவருமே பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள்.

நடராஜர் சிலை 10 லட்சம் டாலர்... தமிழகப் பழங்காலச் சிலைகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?
நடராஜர் சிலை 10 லட்சம் டாலர்... தமிழகப் பழங்காலச் சிலைகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?

மீபத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனைகளில் ரன்வீர் ஷா, அவரது தோழி கிரண் ராவ் ஆகியோரின் வீட்டில் ஏராளமான பழங்காலச் சிலைகள் மீட்கப்பட்டன. ரன்வீர் ஷா, கிரண் ராவ் இருவருமே பிரபலமான தொழிலதிபர்கள். இருவரும் ஆந்திராவிலிருக்கும் சர்க்கரை ஆலை ஒன்றில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ரன்வீர் ஷா ஆடை மற்றும் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறார். கிரண் ராவ் ஜெர்மனி குடியுரிமையையும் பெற்றிருக்கிறார். அண்ணா சாலையில் இவருக்குச் சொந்தமாக ஹோட்டல் ஒன்று இயங்குகிறது. 

சிலைக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீனதயாளன் அளித்த தகவலின் அடிப்படையில்தான் இருவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இருவரும் ``தீனதயாளனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரம்பர்யச் சின்னங்கள் மீதான ஆர்வத்தில்தான் சிலைகளை வாங்கிச் சேகரித்தோம்” என்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள் அனைவருமே பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். வருமானத்துக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் மிகப்பெரிய அளவில் வேறு தொழில்கள் இருந்தாலும் இவர்கள் எதற்காக சிலைக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். உலக அளவில் தமிழகம் மற்றும் இந்தியப் பாரம்பர்யச் சின்னங்களுக்கு இருக்கும் சர்வதேச சந்தை மதிப்பு மற்றும் முக்கியத்துவமே அதற்குக் காரணம். 

``மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சிலைகள் மற்றும் கோயில்களின் எண்ணிக்கை மிகஅதிகம். அதேபோல், தமிழகத்தில் கைவிடப்பட்ட கோயில்களின் எண்ணிக்கையும் அதிகம். குறிப்பாக, கிராமப்புறக் கோயில்கள். இவை சிலைத் திருடர்களுக்கு எளிதான இலக்காகிவிடுகின்றன. இங்குச் சிலைகளைத் திருடினாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஸ்ரீபுரந்தான் கோயில் சிலைகளைத் திருடியவர்கள், அந்தச் சிலைகளை டிராக்டரில் கட்டி இழுத்துக்கொண்டு சென்ற கதையெல்லாம் உண்டு. இங்கிருக்கும் சூழல் அவர்களின் செயல்களை எளிதாக்குகிறது. எங்கெல்லாம் ஒரு விஷயம் அதிகம் இருக்கிறதோ அவை அந்தப் பகுதியில் குறைவாகவே மதிப்பிடப்படும். அதைப்போலவே நம் ஊரில் இருக்கும் அதிகப்படியான சிலைகளால் அவற்றின் மதிப்பை நாம் அறியாமல் இருக்கிறோம். திருப்பணி எனும் பெயரில் நாம் தூக்கி வீசும் சிலைகள் சிலைக் கடத்தல்காரர்களுக்கு எளிதான இலக்காக இருக்கின்றன. இந்தச் சிலைகளின் சர்வதேச மதிப்பு பெரிய மனிதர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிடுகிறது. இந்தச் சிலைகளைக் கடத்தி விற்பதன் மூலம் அவர்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பணம் ( Quick Money ) சம்பாதித்துவிட முடியும். நம் ஊரில் சிலைக் கடத்தலுக்குக் கடுமையான சட்டம் எதுவும் இல்லை. இங்கிருக்கும் சூழல், நம் சிலைகளின் புராதன மதிப்பு, சர்வதேச சந்தை, குறுகிய காலத்தில் லாபம் ஆகியவைதாம் மிகப்பெரிய தொழில் அதிபர்களையும் இந்தச் செயலில் ஈடுபட வைக்கிறது...

தென் இந்தியக் கலைப்படைப்புகளான கல் சிலைகள் மற்றும் பஞ்சலோகச் சிலைகளில் இருக்கும் உயிரோட்டத்தை வேறு படைப்புகளில் காண்பது அரிது. நம் ஊர் சிலைகளில் இருக்கும் உயிரோட்டமும், அதன் நுணுக்கங்களும்தாம் உலக மக்களை நம் ஊர் கோயில்கள் நோக்கி இழுக்கவைக்கிறது. நமது தமிழகச் சிற்பங்கள், குறிப்பாக சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலச் சிற்பங்களில் காணப்படும் உயிரோட்டத்தை வேறு எங்கும் காண முடியாது. நம் சிலைகளின் எழிலும், உயிரோட்டமும்தான் சர்வதேச சந்தையில் அவற்றுக்கு அதிக மதிப்பைக் கொடுக்கிறது. இந்தியா முழுவதும் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தமிழகக் கோயில்கள் மற்றும் சிலைகளைப் பார்க்கும்போது வியந்து போகிறார்கள். அந்த வியப்புதான் நம் சிலைகளுக்கு அதிக மதிப்பைக் கொடுக்கிறது...” என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவனருமான கோமகன். 

தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் பேராசிரியர் ராஜவேல் நம் பாரம்பர்யச் சின்னங்களுக்கான சர்வதேச மதிப்பு பற்றிக் கூடுதல் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

``நமது பண்பாடு தொன்மையானது. சிந்து சமவெளி நாகரிகத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டால் கூட ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தைக் கொண்டிருக்கிறோம் நாம். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தின் கூறுகள் உலக அளவில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட செப்புத் திருமேனிகள் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியினால்தான் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உலக அளவில் பிரபலமாகத் தொடங்கின. ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவும் சரி, தமிழகமும் சரி ஓவியம், சிற்பம், நுண்கலைகள் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றன. அந்நியர்கள் படையெடுப்பு நிகழ்ந்த காலத்திலேயே நமது கலைச் சின்னங்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அதன் நீட்சி இப்பொழுது சிலைக் கடத்தலாகத் தொடர்கிறது. நமது நாட்டுச் சிற்பங்கள்தாம் அழகுணர்ச்சிடன் ஆன்மிக உணர்ச்சியையும் ஒருங்கே கொண்டிருக்கும். குறிப்பாக நமது ஊர் ஆடல்வல்லான், சோமாஸ் கந்தர், உமையொருபாகன் ஆகிய சிலைகளை உதாரணமாகக் கொள்ளலாம். மற்ற நாடுகளில் காணப்படும் நிர்வாணச் சிலைகள் காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், நம் ஊர் சிற்பங்கள் நிர்வாணமாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை வெளிப்படுத்தும். உதாரணமாக, ஆடல் வல்லான் சிலை பஞ்ச பூத தத்துவத்தையும், உமையொருபாகன் சிலை `ஆணும் பெண்ணும் சரிசமம்' எனும் தத்துவத்தையும்  உணர்த்துகின்றன. அழிக்கும் கடவுளான அகோரமூர்த்தியின் சிலையைக்கூட அழகுணர்ச்சியுடன் தான் நமது முன்னோர்கள் வடித்திருப்பார்கள். சில கல் சிற்பங்களைப் பார்க்கையில் அதை எப்படிச் செதுக்கியிருப்பார்கள் என்ற வியப்பு அனைவருக்கும் ஏற்படும். அந்த மதிப்பும், வியப்பும்தான் சிலைகளை அதிக விலைக்கு வாங்க வைக்கின்றன. அதனால்தான் நமது ஊரில் பின்னமாகிவிட்டது என்று வீசப்படும் சிலைகள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விலை போகின்றன” என்கிறார் அவர்.  

சர்வதேச சந்தையில் தமிழக மற்றும் இந்தியச் சிலைகளின் மதிப்பு பற்றி, சிங்கப்பூரில் வசிக்கும் `இந்தியா பிரைட் புராஜெக்ட்'டின் துணை  நிறுவனர் விஜயகுமார் சொல்லும் தகவல்கள் திகைக்க வைக்கின்றன. 

``சர்வதேச அளவில் புராதனக் கலைச் சின்னங்களுக்கு எப்போதுமே அதிக மதிப்பு உண்டு. அதிலும் நமது ஊர் நடராஜர் சிலையை

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். 1970 -ல் நார்டன் சைமன் என்பவர் சிவபுரம் நடராஜர் சிலையை மட்டும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கி தனது அருங்காட்சியகத்தில் வைத்தார். 2006 - 2007ல் கபூரின் கப்பல் ஷிப்மென்ட் ஒன்று அமெரிக்காவில் பிடிபட்டது. அதில் இருந்த இந்திய புராதனச் சின்னங்களின் அப்போதைய மதிப்பு, சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் என்று அமெரிக்கச் சுங்கத் துறையினர் மதிப்பிட்டார்கள். சுபாஷ் கபூரின் 12 கிடங்குகளில் 2012 - ல் நடந்த சோதனையின் போது  2622 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு, சுமார் 108 மில்லியன் அமெரிக்க டாலர் என்று  மதிப்பிடப்பட்டது. எப்போதுமே கள்ளச் சந்தையில் புராதன சிலைகளின் மதிப்பு அதிகமாகத்தான் இருக்கும்” என்கிறார் அவர்.

கடுமையான சட்டங்கள், தண்டனைகள் இல்லாமல் சிலைக் கடத்தலைத் தடுத்து நிறுத்துவது கடினமே. நம் ஊர் புராதனச் சின்னங்களை நாம் இப்போது பாதுகாக்காவிட்டால் நாளை வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் மட்டும்தான் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.