Published:Updated:

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

Published:Updated:
தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்
தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்
தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீடு பூவணத்துக்கு அணித்தாக நேர்செல்ல
மாடுவரும் திருத்தொண்டர் மன்னிய அப்பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திரு உடையார் என்று எடுத்துப்
பாடு இசையின் பூவணம் ஈதோ என்று பணிந்து அணைவார்.

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

- மூவேந்தர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, திருப்பூவண நாயகரை வணங்கிப் பணிந்ததை, மேற்காணும் பாடலால் விவரிக்கிறார் சேக்கிழார் (பெரியபுராணம்).

'நகருக்குள் வரவில்லை; எதிர்க்கரையில்தான் நின்றனர்’ என்று சேக்கிழார் குறிப்பிடவில்லை. 'வலம் வந்தனர்; இறைவன் முன் பணிந்தனர்; அங்கேயே சில நாட்கள் தங்கினர்’ என்கிறார் அவர்.

ஆனால், தேவார மூவரும் நகருக்குள் வரவில்லை என்பதும், எதிர்க்கரையில் அவர்கள் தங்கிய இடமே 'மூவர் மண்டபம்’ என வழங்கப்படுகிறது என்பதும் செவி வழிச் செய்திகளாக அறியப்படுகின்றன.

திருப்பூவணத்தின் அசைகிற, அசையாப் பொருட்கள் அனைத்தும் சிவலிங்கம் என்பதால், வானத்தில் செல்லும் கோள்கள்கூட, சற்றே ஒதுங்கிச் செல்வதாக திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் தெளிவுபடுத்துகிறார்.

எண்ணில் அங்கு உறை சராசரம் இலிங்கமென்றெண்ணி
விண்ணினாள்களும் கோள்களும் விலங்குவ
 - என்கிறது அவரது பாடல்!

உள்ளே வரும்போது, நந்தி சற்றே சாய்ந்து நகர்ந்தாற்போல் இருப்பதைப் பார்த்தோம் இல்லையா?

எதிர்க்கரையில் தங்கிய நாயன்மார்கள், அங்கிருந்தே சிவனாரைத் தரிசிக்க முயன்றபோது, நந்தி மறைத்ததாம்; அதனால், நந்தியைச் சிவனாரே நகரச் சொன்னாராம்.

திருப்பூவணத்தாரை நெஞ்சாரத் தொழுகிறோம். அடடா! இவர்தாம் ரசவாதம் செய்தவரா?

பொன்னனையாள் தினமும் அதிகாலையில், பூவணத்தார் கோயிலுக்குச் சென்று, அவர் திருமுன் சுத்த நிருத்யம் ஆடிப் பணிந்து, பின்னர் இல்லம் வந்து, அடியார்களுக்கு அமுது செய்விப்பாள். இவ்வாறு செய்வ திலேயே அவளின் பொருளெல்லாம் கரைந்தது.

##~##
இதற்கிடையில், சிவனார் உருவத் தைச் செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஆசை. பொருள் இல்லா மல் தவிக்கையில்தான், அமுது செய்யும் கூட்டத்துடன் கூட்டமாக ஒருநாள் சித்தர் ஒருவரும் வந்தார். எல்லோருடனும் சேர்ந்து அமராமல், தனியாகக் காத்திருந்தார்.

பணிப்பெண்கள் வந்து கேட்டபோது, பொன்னனை யாளைக் காணவேண்டும் என்று தெரிவித்தார். அவளும் வந்தாள். 'ஏன் இவ்வாறு மெலிந்தாய்?’ என்று காரணம் கேட்டார். அமுது செய்விப்பதற்குப் பொருள் குறைந்ததையும், குறிப்பாகத் திருமேனி செய்விக்கப் பொருள் இல்லாமையையும் அவள் தெரிவித்தாள்; சிவபெருமான் திருமேனி செய்வதற்காக மெழுகில் கருக்கட்டி வைத்தி ருப்பதையும், வரும் பொருளெல் லாம் அடியார் பணியில் செலவாவதையும் விவரித்தாள்.

அடியார் பணியே மகேஸ்வர பூஜை என்பதை எடுத்துக் கூறிய அந்தச் சித்தர், ''வீட்டிலுள்ள பித்தளை, செம்பு, ஈயம், வெள்ளி என்று அத்தனை உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வா'' என்றார். கொண்டுவந்தாள்.

அனைத்தையும் திருக்கண் நோக்கினார் சித்தர். ''இரவு இவற்றையெல்லாம் நெருப்பிலிடு'' என்று கட்டளை இட்டார். 'மதுரையில் வசிக்கும் சித்தர் யாம்’ என்று கூறிக்கொண்டே நகர்ந்தார்.

இரவில், பொன்னனையாள் அவற்றையெல்லாம் எடுத்துத் தீயில் இட, அவ்வளவும் பொன்னாயின! அந்தப் பொன்னில், சிவன் திருமேனியைச் செய்த பொன்னனை யாள், திருமேனியின் அழகைக் கண்டு, 'அச்சோ, அழகிய பிரானோ!’ என்று அள்ளி முத்தமிட்டாள்!

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்
தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

திருப்பூவணநாதருக்கு இதன் காரணம் பற்றியே, ஹேம நாதர் (ஹேமம் - தங்கம்), அழகியபிரான் ஆகிய திருநாமங்களும் நிலவுகின்றன.

இந்தக் கதையை நினைத்தபடி, அழகியபிரானை தரிசித்துக் கொண்டே முன் மண்டபப் பகுதிக்கு வந்தால், நுழைவாயில் அருகில் நாம் பார்த்த சிற்பங்களில், பொன்னனையாள் சிற்பத்துக்கு அருகில், சித்தர் உருவமும் இருப்பதைக் காண முடிகிறது.

மூலவரை தரிசித்தபின்னர், மீண்டும் உள் பிராகாரத்தில் வலம் வருகிறோம். கோஷ்ட மாடங்களில், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை. தனியான மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் அருள்கிறார். திருப்பூவணநாதரை வணங்கிவிட்டு, அம்மன் சந்நிதி நோக்கிச் செல்கிறோம்.

ஸ்வாமி சந்நிதிக்கு இணையாக, ஸ்வாமிக்கு வலப்புறம் அமைந்தாற் போல் உள்ளது அம்பாள் சந்நிதி. கோயிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக அம்பாள் சந்நிதிக்கு வருவதற்கு வழியுண்டு. ஸ்வாமி சந்நிதியிலிருந்து பக்கவாட்டு வழியாகவும் வரலாம்.

அம்பாள் சந்நிதி முகமண்டபப் பகுதியில் வாகனங்கள் வைக்கப் பட்டுள்ளன. உள்ளே போனால், கொடிமரம், பலி பீடம், நந்தி. பெரியதாகத் திருவாசி. துவாரபாலகர்கள் இருக்கவேண்டிய இடத்தில், நந்திதேவரும் பிருங்கியும் காட்சி தருகின்றனர்.

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

இந்த வாயிலைக் கடந்து சென்றால், அம்பாள் சந்நிதி பிராகாரத்தை அடைகிறோம். அதன் தென்மேற்கு மூலையில், ஸ்ரீவிநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதி. வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில், ஸ்ரீசண்டிகேஸ்வரி. வடகிழக்குப் பகுதியில், பள்ளியறை. வலம் வந்து, அம்பாள் திருமுன்னர் நிற்கிறோம். கருவறை வாயிலில், ஒருபுறம் யோகினி; மறுபுறம் போகினி. எதிரில் நந்தி. உள்ளே அருள்காட்சி வழங்குகிறாள், ஸ்ரீமின்னனையாள் எனும் ஸ்ரீசௌந்தரநாயகி.

அம்பிகையை மின்னல் என்று வர்ணிப்பதும், உருவகப் படுத்துவதும், 'மின்னலாய் அருள் வழங்கு’ என்று வேண்டுவதும் வழக்கம். மின்னலானது, எவ்வாறு ஒரேயரு கணம் தோன்றி மறைந்தாலும், பேரொளிப் பிரகாசத்தைத் தந்துவிட்டு, அபரிமிதமான ஆற்றலையும் கொடுக்கிறதோ, அவ்வாறே அம்பாளும், ஒரு கணம் பிரத்யக்ஷமாகிப் பின்னர் அருள் கடாக்ஷிப்பாள்!

நின்ற கோல நாச்சியாராக அருள்பாலிக்கும் அம்பிகை, அபயமும் வரமும் காட்டுகிறாள்; பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள்.

இந்தத் தலத்தின் விருட்சம், பலா மரம். மணிகர்ணிகை ஆறும் (இந்தப் பகுதியின் சிறிய ஆறு) வைகை ஆறும் தீர்த்தங்கள். வைகை நதியாள், இங்கே உத்தரவாகினி; அதாவது, வடக்கு முகமாகப் பாய்கிறாள். எங்கெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள் வடக்கு முகமாகப் பாய்கின்றனவோ, அங்கெல்லாம், முன்னோருக்கான சடங்குகளைச் செய்வது நன்மை பயக்கும்.

ஆகவேதான், திருப்பூவணமும் பித்ரு கடன்களுக்கான தலமாக மதிக்கப்படுகிறது. தர்மக்ஞன் என்பவன் ஓர் அரசன். தந்தையின் அஸ்திச் சாம்பலை, சேதுக் கரையில் கரைப்பதற்காக, இந்த வழியாகப் போனான்.

அவன் இந்தத் தலத்தை அடைந்ததும், மலராக மாறியது அஸ்தி. பூவண்ணமாக இருப்பவர் உறையும் தலமல்லவா, யாவற்றையும் பூவாக மாற்றும் ஆற்றல் இந்தத் தலத்துக்கு உண்டு! திருமகள் இங்கு வழிபட்டாள்; நள மகாராஜா, தன்னுடைய கலிதோஷங்களைத் தொலைத்து, மனைவி- மக்களை மீண்டும் பெற்றார். மார்க்கண்டேயர் இங்கு பாலபிஷேகம் செய்தார். மாணிக்கவாசகரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடினார்.

தேவாரத் திருவுலா! - திருப்பூவணம்

பங்குனியில் பெருவிழா காணும் இந்தத் தலத்தின் புராணத்தைப் பாடிய கந்தசாமிப் புலவர், 'திருப்பூவண நாதர் உலா’ என்றும் ஒருநூல் இயற்றியுள்ளார். திருப்பூவணநாதர் உலா வர, அவரைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவத்துப் பெண்களும் அன்பும் காதலும் பக்தியும் கொள்வதை, இதில் காண்கிறோம். தமிழ்த் தாத்தா

உ.வே.சாமிநாத ஐயர், அரும்பாடு பட்டு, இந்த நூலுக்கு அரும்பதவுரை யும் ஆக்கிப் பதிப்பித்துள்ளார்.

கோயிலைவிட்டு வெளியில் வந்து வைகைக் கரையில் நிற்கிறோம். எதிர்க்கரை கண்களில் படுகிறது. அங்குதானே, தேவாரப் பெரியோர் நின்றிருப்பார்கள்! மானசீகமாக அவர்களையும் வணங்கிப் பணி கிறோம். மிகப் பிரபலமான மடப்புரம் காளியம்மன் ஆலயமும் எதிர்க்கரையில்தான் உள்ளது.

மின்னனையாளையும் பூவண நாதரையும் பணிந்து வணங்கிப் பொன்னனையாளை நினைத்த படியே திருப்பூவணத்தில் இருந்து விடைபெறுகிறோம்.

(இன்னும் வரும்)
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism