புதுமணக் கோலத்தில்...
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், நெல்லை வருத்தக் கோவை, நெல்லை மணிக்கோவை, நெல்லை அந்தாதி, நெல்லைச் சிந்து என்று பற்பல நூல்கள் சிறப்பிக்கும் நெல்லைச் சீமையில், அருள்மிகு நெல்லையப்பருடன் கோயில் கொண்டிருக்கிறாள் காந்திமதியம்மை.

அகத்தியருக்கு அம்மையப்பனின் திருமணக்கோலம் பரிபூரணமாகக் கிடைத்த தலம் திருநெல்வேலி என்கின்றன ஞான நூல்கள். திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாராம் காந்திமதி அம்மை, இங்கு புதுமணக் கோலத்தில் காட்சி தருவதாக ஐதீகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தரிசித்தாலே போதும்...
வைரக் கிரீடம், கேசத்தில் ராக்கொடி, மூக்குத்தி, மூக்குப்பொட்டு, புல்லாக்கு, கழுத்தில் நவரத்தின மாலை, கால்களில் சிலம்புகள், உயர்த்திப் பிடித்த வலக் கையில் ஒரு தாமரை மலர்; அதே கையில் கிள்ளை ஒன்று தொத்திக்கொண்டிருக்க, இடக் கையை குழைத்து தொங்கவிட்டபடி அருளும் அன்னையைத் தரிசித்தாலே போதும் நாம் கேட்டது கிடைக்கும் நினைத்தது பலிக்கும் என்பார்கள் பெரியோர்கள்.
தாயே வருக வருகவே!
அன்பும் கனிவுமாக, அருள் பொங்க நிற்கும் அம்மையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘காந்திமதியம்மை’ என்னும் அம்பாளின் பெயரை, அழகு தமிழில் ‘கதிர்நிலா அம்மை’ என்று அழைத்தார் திருஞானசம்பந்தர். அம்மன் மீது பிள்ளைத் தமிழ் பாடிய அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பவர்,
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதி வாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே - என்று குழையக் குழைய அம்மையைக் கூப்பிடுவார். `சுந்தர தாமிரவருணி தடஸ்திதாம் ஸ்ரீகாந்திமதீம்’ என்று நாதப் பெருக்கில் அழைப்பார் முத்துசுவாமி தீட்சிதர்.
அம்பிகையின் சமையல்
நெல்லையப்பர் கோயில் உச்சிகால பூஜை மிகச் சிறப்பானது. அப்போது அம்மனே நேரில் சுவாமி சந்நிதிக்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அம்பாள் சமைத்துக் கொண்டு வந்து சுவாமிக்குப் படைப்பதாகவும் நம்புகிறார்கள்.
ஆடிப்பூரத் திருவிழாவில் அம்மனுக்கு வளைகாப்பும் சீமந்தமும் நடைபெறும். இங்குள்ள ஜுவர தேவர் சந்நிதி சிறப்பு மிக்கது. நோயாளிகள் இவருக்கு மிளகு அரைத்துச் சாத்தி, வெந்நீர் அபிஷேகம் செய்துவழிபட்டால் நோய் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.