மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

வெ.நீலகண்டன் - படங்கள்: தி.விஜய்

ங்கள் ஊரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குலாளர்கள் வாழும் கொசக்காடு. அங்கிருந்துதான் தொடங்கும், கொண்டாட்டம். கட்டை மீசை, வண்ணத் தலைப் பாகை, கையில் அரிவாள் சகிதம் கம்பீரமாக அமர்ந்திருப்பார் ஐயனார்.  

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

அவரைச் சுற்றி அவருடைய பரிவாரங்களும், சிறுசிறு மதலை களும், நாய்க்குட்டிகளும், குதிரைகளும் நிற்கும். குலாளர் குடும்பத்தின் மூத்தவர், ஐயனாருக்கும் பரிவாரங்களுக்கும் பூசைகள் செய்து உயிர் கொடுப்பார். கொட்டு முழங்கும். சாம்பிராணி வாசனை அமானுஷ்யத்தை அதிகமாக்கும். அங்கேயே ஆரம்பித்துவிடுவார் சின்னத்தம்பி அண்ணன். கூட, காசி அண்ணனும் ஆடுவார். ஆளுயர அரிவாளைத் தோளில் வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்தியபடி அவர்கள் ஆடுகிற ஆக்ரோஷ ஆட்டத்தை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.

முன்பெல்லாம் ஊருக்கு ஊர் குலாளர் குடும்பங்கள் இருக்கும். அவர்கள் மண் பிசைந்தால்தான் மற்றவர்கள் வீட்டில் அடுப்பெரியும். சமைக்கிற பண்ட பாத்திரங்களில் இருந்து பானைகள் வரைக்கும் அவர்களிடம் இருந்துதான் வாங்க வேண்டியிருக்கும்.

நெல்லோ, உப்போ, புளியோ கொடுத்து பண்டமாற்று வார்கள். இன்று பலப்பல மாற்றுப்பொருள்கள் வந்துவிட்டன. மண்ணெடுத்துப் பிசைவதற்கே அவர்கள் ஆயிரம் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

மெள்ள, மெள்ள கிராமங்களை விட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு, வெவ்வேறு தொழில் களுக்கு நகர்ந்துவிட்டனர். ஆயினும் சில குடும்பங்கள் மட்டும் விடாப்பிடியாக மண்பாண்டத் தொழிலை செய்து வருகின்றன.

எல்லா குலாளர் குடும்பங்களும் சாமி சிலை செய்துவிட முடியாது. அதற்கென்றே பாரம்பர்யமான குடும்பங்கள் உண்டு. பயம், பத்திரமாக, குறிப்பிட்ட விரத முறைகளைக் கடைப் பிடித்தே உருவம் வார்ப்பார்கள். ‘இந்த மூலவருக்கு இன்னென்ன சிலைகள் இருக்க வேண்டும்’ என்று இலக்கணமெல்லாம் இருக்கிறது. அவை போக, மக்கள் வேண்டுதலுக் காக சிலைகள் செய்து வைப்பதும் உண்டு.

‘குழந்தை பிறந்தால் மதலை செய்து வைப்பதாக’ வேண்டுவார்கள். ‘கால் நடைகளை நோய் நொடியில்லாமல் காத்தால் மாடு செய்து வைப்பதாக’ வேண்டுவார்கள். நாய், யானைகூட செய்து வைப்பதுண்டு. ஐயனாரின் வாகனம் குதிரை என்பதால், பலரின் வேண்டுதல் குதிரையாகவே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி சிலைகள் சேர்வதால் ஊர்க் கோயில்கள் எல்லாம் கண்காட்சிக் கூடமாகவே இருக்கும்.   

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

குதிரையெடுப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஊர்கூடித் தேதி குறித்துவிடுவார்கள். அடுத்து, வேண்டுதல் பட்டியல். ஊரில், யார் யாருக்கு வேண்டுதல் உண்டோ அதையெல்லாம் பட்டியல் போட்டு, குலாளர் வீட்டுக்குச் செல்வார்கள். தாம்பூலம் வைத்து உரிய மரியாதை செய்து முன்பணம் கொடுத்து, பிடிமண் எடுத்துத் தருவார்கள். அந்தப் பிடிமண்ணை முதலாகக் கொண்டு அவர் உருக்கொடுக்கத் தொடங்குவார்.  குறிப்பிட்ட நாளில் குதிரையெடுப்பு தொடங்கும்.

ஐயனாரை நான்கு இளைஞர்கள் தோளில் சுமந்துவர, அவருக்குப் பின்னால் ஆளுயரத்துக்கு ஐயனாரின் குதிரை வரும். தொடர்ந்து, கருப்பர், வீரபத்திரர், சந்நியாசி, நொண்டி முனி, சாம்பன், மதுரை வீரன், கன்னிமா பெண்கள் என பரிவாரங்கள் வருவார்கள். எல்லோருக்கும் முன்னால், மிகப் பெரிய அரிவாளை முன்னும் பின்னுமாக அசைத்தபடி பட்டவனாக மாறி ஆடிவருவார் சின்னத் தம்பி அண்ணன்.

கோயில் திடலில் சிலைகள் அனைத்தையும் இறக்கி வைக்க, அப்பகுதியே அனல்காடாகும். கொட்டு முழங்க, ஆண்களும் பெண்களும் அருள் வந்து ஆட, சின்னத்தம்பி அண்ணன் தடியைச் சுழற்றிச் சுழற்றி குதித்தாடி அச்சம் கூட்டுவார். வேடிக்கை பார்ப்பவர்களும் அருள் வந்து ஆடுவார்கள். இறுதியில் சாமிகளை சாந்தமாக்கி அவர வர் இடத்துக்கு நகர்த்து வார்கள்.

இப்போது 80 வயதுக்கு மேலாகிவிட்டது சின்னத்தம்பி அண்ணனுக்கு. இன்றளவும் அவரை பட்டவனாகத்தான் பார்க்கிறது எங்கள் ஊர். கொசக்காட்டிலிருந்து டிவிஎஸ் 50-யில் வைத்துத்தான் அவரை அழைத்து வருகிறார்கள்.

கோயில் வாசல் வந்ததும் தன் தள்ளாமையை மறந்து அவர் ஆடும்போது, உள்ளிருந்து அவரை இயக்குவது பட்டவன்தான் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

பொருளாதார ரீதியாக, வாழ்வியல் ரீதியாக, சமூக ரீதியாக செழிப்பிழந்து, பொலிவிழந்து போய்விட்ட கிராமங்களை இன்றளவும் கொஞ்சமேனும் உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் பட்டவ ஐயனாரும், முனியரும், காளியும், வீரபத்திரனும், சின்னத் தம்பி அண்ணனும்தான்.

கிராமங்களோடு வேர் அறுத்துக்கொண்டு, உறவுகள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுக்குக்கூட போகாமல் நகரத்துக்குள் முடங்கிக்கிடப்பவர்கள், பட்டவன் குதிரை எடுப்புக்கோ, முத்தாழம்மன் கொடைக்கோ, மாரியம்மன் பூச்சொரிதலுக்கோ விடுமுறை எடுத்துக்கொண்டு தங்கள் கிராமத்துக்குப் போகத்தான் செய்கிறார்கள். அது ரத்தத்துக்குள் பொதிந்திருக்கிற உறவு. அந்த உறவுக்கொடியை அறுக்கவோ, மறுக்கவோ முடியாது. 

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதிகிராமத்து வாழ்க்கையே எளிமையானது தான். தங்களுக்குத் தேவையான உணவை எப்படி தாங்களே உற்பத்தி செய்து கொள் கிறார்களோ, அதைப்போல தங்களுக்கான தெய்வத்தையும் தாங்களே வடிவமைத்துக்கொள் கிறார்கள். நன்றாகக் கவனித்தால் தெரியும்... அந்தக்கிராமத்தில் வாழ்ந்து மறைந்த, வீரம் பொதிந்த, சாகசங்கள் செய்த வீரன் எவனோ, அவனின் சாயலில்தான் அவ்வூர் காவல்தெய்வங்களின் சுதைச்சிற்பங்கள் இருக்கும்.

ஒரு ஊரின் தலைவன், தன் பரிவாரங்களோடு எல்லையில் அமர்ந்து ஆட்சி செய்கிறான். அவன் அனுமதியின்றி சிறு காற்றும் அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாது. மக்களின் நன்மை, தீமைகள் அனைத் துக்கும் அவனே பொறுப்பு. ஆண்டுக்கொரு முறை தங்கள் உற்பத்தியில் ஒரு பங்கை அந்த தலைவனுக்கு அளித்து தங்கள் நன்றிக்கடனை அடைக் கிறார்கள் மக்கள். இதுதான் காவல் தெய்வ தாத்பர்யம்.

எல்லாவற்றுக்கும் முதல் சாமி ஐயனார் தான். அவருக்குக் கட்டுப்பட்ட சாமிகள் அறுபத்து இரண்டு. சில பகுதிகளில் ஐயனாருக்கு மீசை இருக்கும். சில பகுதிகளில் இருக்காது. கையில் தடி வைத்திருப்பார். தலையில் கிரீடம் அணிந்திருப்பார். காலை மடித்து கம்பீரமாக அமர்ந்திருப்பார். ஐயனார்தான் ஊருக்கு ராஜா. கோயிலின் பிரதான இடம் அவருக் குத்தான்.

ஐயனாரின் மந்திரி, கருப்பர். ஐயனார் இருக்கும் கோயில்களில் அவருக்கு அடுத்த இடத்தில் கருப்பரே இருப்பார். ஐயனார் இல்லாத ஆலயங்களில் கருப்பரே பிரதானம். மாநிலங்களை முதல்வர்கள் ஆள்வது போல... சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், சங்கிலிக் கருப்பர், நொண்டிக் கருப்பர் என பல கருப்பர்கள்  உண்டு. காலில் சலங்கை இருக்கும். இடைவார் போட்டிருப்பார். கையில் சுக்கு முகத்தடி இருக்கும். கச்சை அணிந்து நிற்பார்.

ஐயனார் அரசவையில் ராஜகுரு, சந்நியாசி. இவரை சன்னாசி என்றும் சொல்வார்கள். கருப்பருக்கு அருகில் இவருக்கு இடம். ஐயனாருக்கு ஆலோசகர் இவர்தான்.

லாட சந்நியாசி, மாத்திரை சந்நியாசி என ஏழு வகை சந்நியாசிகள் உண்டு. சந்நியாசி முனிவரைப் போலிருப்பார். ருத்திராட்சம் அணிந்திருப்பார். கையில கமண்டலம் இருக்கும். கவைக்கம்பு வைத்திருப்பார். இவரது ஆடை கோவணம். கிட்டத்தட்ட அகத்தியரைப் போன்ற தோற்றம்.

ஐயனார் அரண்மனையில் சந்நியாசிக்கு அடுத்த இடத்தில் மதுரை வீரனைப் பார்க்க லாம். மதுரை வீரன் தான் தளபதி. கையில வாள் தரித்திருப்பார். அச்சமூட்டும் வகையில் மீசை வைத்துக்கொண்டு யுத்தத்துக்கு தயாராக நிற்பார்.

சில கோயில்களில் மதுரைவீரனுக்குப் பதிலாக, காத்தவராயன் தளபதியாக நிற்பார். இதுபோக கோயிலுக்கு முன்னால் சில காவல்சாமிகள் உண்டு.

முன்னோடியன், சாம்பன், கொம்புக்காரன், வீரபத்திரன், சப்பானி, தூண்டிக்காரன்,  அரசுமுகம், முனி.. இவர்களைத் தாண்டித்தான் கருப்பரைப் பார்க்கச் செல்ல வேண்டும். சில பெண் காவல்காரர்களும் இருக்கிறார்கள். காமாட்சியம்மன், முத்தாளு, ஆலாத்தியம்மன், ராக்காச்சி, காளி...

கருப்பருக்குக் கொடுப்பதற்கு முன்னால் காவல்காரர்களுக்குப் பூசை கொடுத்துவிட வேண்டும். காவல்காரர்களை அடுத்து கன்னிமா பெண்கள் இருப்பார்கள். பாவாடை கட்டி, ரோஸ் கலரில் தாவணி போட்டு கையில பூச்செண்டு வைத்திருப்பார்கள்.

இவர்கள் கருப்பருடைய சகோதரிகள்.  கணக்கு வழக்கு பார்க்க கணக்கர் ஒருவர் இருப்பார். ஐயனாரின் வெள்ளைக் குதிரையை பராமரிப்பவர் ராவத்தர். தலையில குல்லாவோடு நிற்பார்.

இவர்கள் அத்தனை பேரும் அடங்கியது தான் கிராமக்கோயில். கிராமக்கோயில் என்பது ஒரு அரண்மனை மாதிரி. ஊருக்குத் தகுந்தவாறு, வசதிக்குத் தகுந்தவாறு தங்கள் காவலர்களுக்கான அரண்மனையை அமைத்துக் கொடுக்கிறார்கள் மக்கள்.

அத்தனைக் காவலர்களும் ஆக்ரோஷ மானவர்கள். அன்பானவர்கள். கருணை மிக்கவர்கள். எல்லோருக்கும் தனித்தனிக் கதைகள் உண்டு. தனித்தனி உலகம் உண்டு. தனித்தனி வாழ்க்கை உண்டு.
 
அடுத்தடுத்து அனைத்தையும் தரிசிப்போம்!

- மண் மணக்கும்...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

மூவகை மனிதர்கள்!

லங்கைப் போரில் ராவணனை நேருக்கு நேர் சந்திக்கும்போது முக்கியமானதொரு கருத்தை வலியுறுத்தினார் ராமன்.

``மனிதர்களில் மூவகை உண்டு. பூக்களை மட்டுமே கொடுக்கும் ரோஜா போன்றோர் முதல் வகை. பூக்களோடு பழங்களையும் தரும் மா போன்றோர் இரண்டாவது வகையினர். பழங்களை மட்டுமே தரக்கூடிய பலா போன்றோர் மூன்றாவது வகை. முதல் வகையினர் நிறையப் பேசுவார்கள்; செயல்பட மாட்டார்கள். இரண்டாவது வகையினர் சொல்லிலும் செயலிலும் வல்லவர். மூன்றாவது வகையினர் செயலில் மூலமே வலிமையைக் காட்டக்கூடியவர்கள். அவர்கள் எதையும் சொல்லிக் கொண்டு திரிவதில்லை. எனவே ராவணா, நீ சொல்லில் வீரத்தைக் காட்டாமல் செயலில் காட்டு’’ என்றார் ராமன்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - புதிய பகுதி

‘சரிகமபதநிச’ இதற்கு என்ன பொருள்?

சரி: நீ இந்த உலகத்தில் பிறந்தது சரி; ஆகவே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை எடுத்த நீ...

கம: கமகம எனும் வாசனையோடு அதாவது புகழுடம்பு பெறும் வகையில் வாழ முயற்சி செய்யவேண்டும்.

அது எப்படி?

பத: பதமாக இரு. அதாவது கடுமையானச் சொற்களால் எவரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

நிசா: `நீ’ சாக வேண்டும். அதாவது எதற்கெடுத்தாலும் நான் நான் என்று சொல்லிக்கொள்ளாமல் உன்னிடத்தில் உள்ள அகந்தையை நீக்கி விடு.

- ஓர் உபன்யாசத்தில் கேட்டது.