மனம் கல்வியை வேண்டுகிறது. பதவியைத் தேடுகிறது. பணத்தை நாடுகிறது. குடும்ப சுகத்துக்கு அலைகிறது. குழந்தைக்கு ஏங்குகிறது. இவற்றை அடைய எங்கெங்கோ ஓடுகிறது. அதுவே எது எதையோ கும்பிடுகிறது. எத்தனை ஆட்டம் போட்டும் அதனால் எதையும் ஜெயிக்க முடிவதில்லை. தான் தேடியது என்னவென்பதை உணராமலே ஓய்ந்துபோகிறது.

மனம் எதை நாடுகிறது? மகிழ்வை! மகிழ்வு தேடு வது மானுடத்தின் இயல்பு. ஆனால், எது மகிழ்ச்சி என்பதைத்தான் மனதால் உணர முடியவில்லை. மகிழ்ச்சிக்குப் பதிலாக அது அமைதியைத் தேடி இருந்தால், இந்த அல்லாட்டம் இருந்திருக்காது.
சரி! அமைதியை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது?
ரமணாசிரமத்துக்கு வருகை தாருங்கள். அங்கே அமைதியைச் சந்திக்கலாம். அந்த அமைதி, ஆனந்த தரிசனத்துக்கு வழிவகுக்கும்.குரங்காட்டம் போட்ட மனம் அடங்கி, ஆனந்த அமுதக் கடலில் ஒரு துளியை ருசித்துப் பார்க்கும். ஆனந்தம் இன்னதென உணரும்!
சென்னையிலிருந்து சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவண்ணாமலை. இங்கிருக்கும் குன்றின் பெயர் அருணாசலம். அதன் தென்புற அடிவாரத்தில் அமைந்திருக்கிறது ரமணாசிரமம். பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு ஒரு பொட்டல்வெளியாக இருந்த இடம், இன்றைக்கு அமைதி அலைகள் ஆக்கிரமித்திருக்கும் ஆலயமாக மாறி இருக்கிறது!
பொட்டல்வெளி ஆசிரமமானது எப்படி?
இதற்கு ஸ்ரீரமணரின் வரலாற்றுச் சுவடிகளைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
அது 1879-ம் ஆண்டு. டிசம்பர் 30-ம் தேதி. அன்றைக்கு ஆருத்ரா தரிசனம். அன்றிரவு மதுரை மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் சுந்தரம்-அழகம்மையார் தம்பதிக்கு இரண்டா வது ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைக்கு வேங்கடராமன் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். வக்கீல் தொழில் செய்து வந்தார் சுந்தரம். அவருக்கு மூன்று மகன்கள். கடைக்குட்டியாக ஒரு மகள்.
பள்ளியில் வேங்கடராமன் ஒரு சாதாரண மாணவன். சிறுவயதில் இருந்தே அவன் உள்ளத்தில் `அருணாசலம்’ எனும் வார்த்தை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அது ஏனென்று தெரியாது! அருணாசலம் எங்கே இருக்கிறது? தெரியாது!
1896-ம் ஆண்டு...
வேங்கடராமனுக்கு 17 வயது. 12-வது வயதி லேயே தந்தையைப் பறிகொடுத்துவிட்டதால், மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழல். சித்தப்பா வீட்டின் மாடியில், தனிமையில் வேங்கடராமன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் உள்ளத்தில் திடீரென்று ஒரு பயம் எழுந்தது. `ஐயோ! நான் இறந்துவிடப்போகிறேன்... இதோ இன்னும் சில நிமிடங்களில்..!’
இந்தப் பயம் தோன்றியதும் வேங்கடராமன், வீட்டுப் பெரியவர்கள் யாரிடமும் அதைப் பற்றிச் சொல்லவும் இல்லை. தனக்குள் எழுந்த சிக்கலைத் தானே தீர்த்துக்கொள்ள முடிவு செய்தார். பயந்த மனதைச் சமாதானப் படுத்தினார். மரணத்தை அனுபவித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தார். கை, கால் களை விறைத்து நீட்டி பிணம்போல் படுத்தார். `உடம்பு செத்துவிட்டது... அப்புறம் என்ன ஆகும்? இதை மயானத்துக்குக் கொண்டுபோய் எரித்துவிடுவார்கள்... இது சாம்பலாய்ப் போகும்.’ கற்பனையில் உடல் மயானத்துக்குச் சென்றது. அதற்கு எரியூட்டப்பட்டது. சாம்பல் மட்டுமே மிஞ்சியது. அதன் பின்னும் வேங்கட ராமன் உள்ளத்தில் கேள்வி எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``உடம்பின் முடிவுடன் `நானும்’ இறந்து விட்டேனா? இல்லையே! உடல் சத்தமற்று, சலனமற்றுக் கிடந்தபோதிலும் நான் மட்டும் எஞ்சி இருக்கிறதே... அதன் சக்தியை ஒளி வடிவாக உணர முடிகிறதே... `நானின்’ ஒலியும் ஒலிக்கிறதே?’’ வேங்கடராமனுக்கு உடலில் இருக்கும் `நான்’ சாகவில்லை என்பதை சக்தி சொரூபமாக உணர முடிந்தது. நாத வடிவமாகக் கேட்க முடிந்தது. அந்த `நான்’தான் ஆத்மா. அது உடலுக்குக் கட்டுப்படாத ஒன்று என்ற உண்மை அனுபவபூர்வமாக அவருக்குப் புரிந்தது. அந்த வயதிலேயே ஆத்ம தரிசனம் கண்டுவிட்ட வேங்கடராமனால் வீட்டில் இருக்க முடியவில்லை.
உள்ளத்தில் அவ்வப்போது ஒலித்த `அருணா சலம்’ திருவண்ணாமலையில்தான் இருக்கிறது என்பது உறவினர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. படிப்பில் கவனம் செல்லவில்லை. தனிமை கிடைத்தபோதெல்லாம் தவத்தில் மூழ்கினார். அது கண்டு அண்ணனுக்குப் பொறுக்கவில்லை. கோபத்தின் வசப்பட்டுத் தம்பியை ஏசினார். அண்ணனின் ஏச்சு வேங்கடராமனை வீட்டைவிட்டு வெளியேற வைத்தது. திருவண்ணாமலையைத் தேடி ஓடச் செய்தது. விழுப்புரம் வரை ரயில் பயணம். அப்புறம் நடை. பசி. தாகம். யாவற்றையும் அனுபவித்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தார் வேங்கடராமன்.
அண்ணாமலையில்...
ஐயன் குளக்கரையில் மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கிழித்துக் கோமண மாக்கித் தரித்துக் கொண்டார். திருவண்ணா மலை கோயிலுக்குள் நுழைந்து, தான் வந்து சேர்ந்துவிட்டதை ஆண்டவனிடம் அறிவித் தார். பின் யாரும் தொந்தரவு செய்யாத இடமாகத் தெரிந்த பாதாளலிங்கம் இருந்த இருட்டுக் குகைக்குள் சென்று, ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தார். எத்தனை நாள்கள் அவர் அங்கே அமர்ந்திருந்தார் என்ற கணக்கும் இல்லை. குகைக்குள் இருந்த ஈ, எறும்பு, பூச்சி, புழுக்களுக்கு யோகநிலையில் இருந்த வேங்கடராமனின் உடம்பு நல்ல இரையாக அமைந்தது. உடலின் கீழ்ப்பாகம் பூச்சிகளால் அரிக்கப்பட்டு, ரத்தமும் சீழும் சேர்ந்து கட்டிக் கிடந்தது.
பாதாளலிங்கக் குகையில் பால சந்நியாசி ஒருவர் இடையறா நிஷ்டையில் ஆழ்ந்திருப் பதை, அண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள் அறிந்தார். பால சந்நியாசியின் உடலைச் சில அன்பர்கள் உதவியுடன் மேலே தூக்கி வந்தார். அதன் பின்னரே பால சந்நியாசி யைப் பற்றிப் பலருக்கும் தெரியவந்தது.
தன் மகனின் சந்நியாசத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தாய் அழகம்மாள், தனது மூத்த மகனுடன் புறப்பட்டு வந்து மகனைப் பார்த்து அரற்றினார். வீடு திரும்பச் சொல்லி வேதனையுடன் கதறினார். அன்னைக்கு மறுமொழியாக பால சந்நியாசி ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதிக் காட்டினார்: ``அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது எத்தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலால் மௌனமாயிருக்கை நன்று.’’
மகன் இனி உலக வாழ்க்கைக்குத் திரும்ப மாட் டான் என்று புரிந்தது. மிகுந்த மன வருத்தத்துடன் அன்னை திரும்பிச் சென்றார்.
பின்னர், அண்ணாமலையார் ஆலய மண்டபம், பாதாளலிங்கக் குகை, தோப்புகள் இங்கெல்லாம் தங்கியிருந்த சுவாமி, கடைசியாக அருணாசலத்தின் மீதேறி விரூபாக்ஷி குகை என்னும் ஒரு குகையில் தங்கிக்கொண்டார்.
விரூபாக்ஷி குகை
திருவண்ணாமலை கோயிலை ஒட்டியிருக்கும் அடிவாரப் பகுதியில் இருந்து மலை மீது ஏறத் தொடங்கினால், சுமார் முந்நூறு படிகளைக் கடந்த உடனேயே விரூபாக்ஷி குகை கண்ணில் தென்படும். வாகனங்கள் செல்ல பாதை இல்லை. அடுக்கடுக்கான பாறைப் படிமங்களே இயற்கை யான படிகளாக மாறியுள்ளன. ஏறுவது மிக எளிது. விரூபாக்ஷி குகையிலிருந்தபடி ஆலயத்தைத் தரிசிக்கலாம். இக்குகைக்கு ஒரு வரலாறு இருக்கிறது.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்திலிருந்து அருணாசலத்தை வந்தடைந்த விரூபாக்ஷிதேவர் என்ற ஞானி, இக்குகையில் வசித்து வந்தார். (விரூப + அக்ஷி = மூன்றாவது கண். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று)
விரூபாக்ஷிதேவர் தமது உடலைவிட்டு நீங்கும் தருணம், தன்னைத் தனிமையில் இருக்கவிட்டு, அடுத்த நாள் வந்து பார்க்கும்படி தனது சீடர் களைப் பணித்தார். மறுநாள் சீடர்கள் குகைக்கு வந்து பார்த்தபோது, விரூபாக்ஷிதேவரின் தேகம் விபூதியாக மாறிவிட்டிருந்தது.
குகைக்குள் விரூபாக்ஷிதேவர் அடக்கமான இடத்தில் இன்றைக்கும் விபூதிலிங்கம் காணப் படுகிறது. பிரணவ வடிவில் அமைந்திருக்கும் இந்தக் குகையில், அமைதியாக அமர்ந்திருந்தால் ஓங்கார நாதம் ஒலிப்பதைக் கேட்கலாம்.
1899-ம் ஆண்டு இந்தக் குகையை வந்தடைந்த ரமணர், குகையில் தனக்கென ஒரு கல் படுக்கையைக் கட்டிக்கொண்டார். 1916-ம் ஆண்டுவரை இந்தக் குகையிலேயே ரமணர் வாசம் புரிந்தார்.
`நான்’ யார்?
விரூபாக்ஷி குகையில் சுவாமி தங்கியிருந்த காலத் தில், சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் ஒருவர் வந்து, ஞானத்தை அடையும் வழியை உபதேசிக்குமாறு சுவாமியிடம் வேண்டினார்.
``நான் யார் என்று உன்னையே நீ விசாரி. அதுவே ஆத்ம தரிசனம் எனும் ஞானத்தை எய்தும் நல்வழி’’ என்று சுவாமி முதன்முறையாக உபதேசம் செய்தார்.
``நான் யார்?’’ என்று விசாரித்து அறிவது எப்படி? சுவாமியே சொல்கிறார்..
``இந்த தேகம் நானன்று. ஒலி, தொடுகை, உருவம், ருசி, வாசனை ஆகிய ஐந்து விஷயங்களையும் தனித்தனியே அறிகிற ஞான இந்திரியங்களும் நானன்று. பேசுதல், நகர்தல், உணவுச் சத்தை கிரகித்தல், மலஜலம் கழித்தல், இன விருத்தி இன்பம் துய்த்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிற கர்ம இந்திரியங்களும் நானன்று. பிராண வாயு நானன்று. எண்ணங்கள் நிறைந்த மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களும் அற்று, சம்பவ நினைவுகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று.’’
``சரி... இவையெல்லாம் நான் அல்ல என்றால் `நான்’ யார்?’’
``மேற்கூறியனவற்றையெல்லாம் நானன்று, நானன்று என ஒதுக்கிய பின் எஞ்சி நிற்கும் `தான்’ எனும் விழிப்பு உணர்வே நான் ஆகும். இந்த விழிப்பு உணர்வின் இயல்பானது, இருக்கிறோம் என்பதை உணர்ந்து பேரானந்தத்துடன் துலங்குதல்! இந்த நிலையை எய்ய வேண்டு மெனில் `நான் யார்’ என்கிற கேள்வி நமக்குள்ளேயே கேட்கப்பட வேண்டும். நான் யார் என்னும் நினைவு, மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். அப்போது விழிப்பு உணர்வே திகழும். அதுவே ஆத்ம தரிசனம். அதுவே ஞானம். அதுவே முக்தி. அதுவே பேரானந்தம்.’’

அதன்பின் ஒரு நாள், வேலூரில் பள்ளி ஆசிரியராக இருந்த கணபதி முனிவர் என்பவர் ஞானம் பெற வேண்டி சுவாமியிடம் வந்து உபதேசம் பெற்றார். அவரே சுவாமியை `பகவான் ஸ்ரீரமண மகரிஷி’ என்று அழைத்தவர். அன்றிலிருந்து மற்றவர்களும் அவ்விதமே அழைக்கத் தொடங்கினர். இது நடந்தது 1907-ல். அன்று விரூபாக்ஷி குகையில் சிவப்பிரகாசம் பிள்ளைக்கும் கணபதி முனிவருக்கும் பகவான் நல்கிய ஞானோப தேசம், அகிலத்து மக்கள் அனைவருக்கும் அருளப்பெற்றது என்பதில் ஐயமில்லை.
அன்னை கண்ட அற்புதம்!
அன்னை அழகம்மாள் அந்த ஆசிரமத் தில் இருந்தபோது மகரிஷி, அன்னைக்கு அளித்த சோதனைகள் அநேகம். அன்னையின் கதை முடியும்போது, அவர் காட்டிய கருணையும் அபாரம்.
ஒருமுறை அழகம்மாள் அவர் முன் அமர்ந்திருந்தாள். திடீரென்று எதிரில் இருந்த மகனின் உருவம் மறைந்தது. தூய ஜோதி வடிவில் ஒரு லிங்கம் தோன்றியது. ``மகன் மனித உருவைத் துறந்து ஜோதியில் கலந்துவிட்டான்’’ என்று எண்ணிக் கலங்கிக் கண்ணீர்விட்டாள் அந்தத் தாய். ஆனால், ஐந்தாறு நிமிடங்களிலேயே ஜோதிலிங்கம் மறைந்து, மகனின் உருவம் மீண்டது. மற்றொரு தருணம், மகனின் கழுத்தைச் சுற்றிப் பாம்பு தவழ்ந்தது. பகவான் பரமசிவனாகத் தெரிந்தார். அதன் பின்பே அம்மாவுக்குத் தான் மகரிஷியின் தாயென்ற தற்பெருமை அகன்றது; பகவான் வேறு, பரம சிவன் வேறு அல்ல என்ற தெளிவு பிறந்தது.
கந்தாசிரமம்
பகவானைக் காண, பக்தர்கள் பலர் வர ஆரம்பித்த நேரம் அது... விரூபாக்ஷி குகை யில் இடம்போதாத சூழ்நிலை... மகரிஷி தனது இருப்பிடத்தை மாற்றத் தீர்மானம் செய்தார். விரூபாக்ஷி குகையிலிருந்து புறப்பட்டு மலைமேல் ஏறிச் சென்றார். அங்கே ஓரிடத்தில் பாறைகளின் இடுக்கில் நீர்க்கசிவு உண்டாவதைக் கண்ணுற்றார்.
அந்த இடத்திலிருந்த பாறையை நகர்த்த, சுனையொன்று இருப்பது தெரிந்தது. சுனையின் ஊற்றுக்கண்ணிலிருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டிருந்தது. அதுதான் சரியான இடம் என்று பகவான் தீர்மானித்தார்.

கந்தசாமி என்னும் பக்தர் ஒருவரின் உதவி யோடு முட்புதர்களை அகற்றி, பாறையை உடைத்துக் கற்களைப் பரப்பி, கல் வீடு ஒன்றை எழுப்பினார். அதனருகிலேயே நந்தவனம் ஒன்றையும் அமைத்தார். கந்தசாமியின் முயற்சி யால் எழுந்த ஆசிரமம் அது என்பதால், `கந்தாசிரமம்’ என்றே அது அழைக்கப்படலா யிற்று. ரமணர் ஆறாண்டு காலம் தங்கி இருந்து அருள்பாலித்த இடம் கந்தாசிரமம்.
அன்னையின் அருகில்...
அழகம்மாளின் உடல்நலம் 1920-ம் ஆண்டு குன்றியது. ரமண மகரிஷி எப்போதும் அன்னையின் கூடவே இருந்து கவனித்து வந்தார். 1922, மே மாதம், 19-ம் தேதி இரவு எட்டு மணிக்கு அன்னையின் உயிர் பிரிந்தது.
அன்னையின் உடல் மலையடிவாரத் தில் ஒரு குழியில் இடப்பட்டது. கற்பூரம், வாசனைத் திரவியங்கள் எல்லாம் குழியில் போடப்பட்டன. குழி மூடப்பட்டு, கற்களால் ஆன ஒரு சமாதி எழுப்பப்பட்டது. சமாதி மேடைமேல் காசியிலிருந்து வருவித்த ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1922-ம் ஆண்டு இறுதியில் ரமண மகரிஷி, கந்தாசிரமத்தை விட்டகன்று அன்னையின் சமாதிக்கருகில் ஒரு கீற்றுக் கொட்டகையில் வந்து தங்கினார். அதுவே பின்னாளில் ரமண மகரிஷியின் ஆசிரமமாக உருவானது.
விண்ணில் கலந்த ஜோதி
1949-ம் வருடம் அன்னை அழகம்மாளின் சமாதி மேடையில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த மாத்ரு பூதேஸ்வரரை மையமாக வைத்து ஒரு சிறு கோயில் எழுப்பப்பட்டது. ஆகம விதிகளின்படி அமைந்த அந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழாவில் மகரிஷி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது எழுபது.
அதன்பின் மகரிஷியின் இடது முழங்கை மூட்டுக்குக் கீழே சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப்பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்கவில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
1950, ஏப்ரல் மாதம், பதினான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி நாற்பத்தேழு நிமிடம்... பகவான் ரமணர் தம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். மிகச் சரியாக அந்த நேரத்தில் ஒரு பெரிய எரி நட்சத்திரம் தோன்றி, வான் வெளியின் குறுக்கே ஜோதியுடன் நகர்ந்து மறைந்தது. அன்னையின் ஆலயத்தை அடுத்து, பழைய கூடத்துக்கும் புதிய கூடத்துக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஒரு குழிவெட்டி, அதனுள் அவரது உடல் அடுத்த நாள் சமாதியாக வைக்கப்பட்டது.
ஆசை முகம் மறைந்துவிட்டது. அவரது குரல் இனி ஒலிக்காது. சமாதி மீது பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமே இனி பகவானின் வெளிமுக உருவம். அன்பர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட அவரது திருவடிச் சுவடுகளே உள்முகம்.
ஆம்! பகவான் ரமண மகரிஷி எங்கேயும் போய்விடவில்லை. ஆசிரமத் திலேயே அருவமாக எங்கும் நிறைந்திருக்கிறார்.
ஆசிரமத்தில் சில முக்கிய நிகழ்ச்சிகள்!
ரமண ஜயந்தி: டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வரும். பகவான் ரமணர் இப்பூவுலகில் அவதரித்த தினம்; ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் அமையும் தினம். பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடும் தினம்.

மகா சிவராத்திரி: பிப்ரவரி - மார்ச். மகா சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் மந்திரங்களை ஜபித்து, அண்ணாமலையை கிரிவலம் வந்து, இரவு உறங்காது விழித்திருந்து கொண்டாடும் தினம்.
பகவான் ஆராதனா: ஏப்ரல்- மே. பகவான் மகாநிர்வாணம் அடைந்த தினம். ஆசிரமத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் தினம். சிறப்பு அபிஷேகங் களும் பூஜைகளும் அவரது சமாதி அமைந்திருக்கும் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்கள் பரவசம் கொள்ளும் தினம்.
நவராத்திரி: செப்டம்பர் - அக்டோபர். பகவானின் தாயார் சமாதி அமைந்திருக்கும் ஆசிரம ஆலயத்தில் ஒன்பது நாள்களும் கொண்டாட்டம். அன்னை சக்தியின் வெவ்வேறு குணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு அலங் காரம். அறியாமை என்னும் இருளை, அன்னை விரட்டியடித்ததைக் குறிக்கும் விதமாக, விஜயதசமி தினத்தில் தீப்பந்தம் ஏற்றி, ஆசிரமத்தை அன்னை திருவலம் வரும் கோலாகலத்துடன் நிறைவு.
ரமண மகரிஷி எழுதிய நூல்கள்...
ரமண மகரிஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். தமிழில் நிறைய கவிதை நூல்கள் புனைந்தார். அநேகமாக எல்லாக் கவிதைகளும் அருணாசலேஸ்வரரைப்
பற்றியும் ஆத்மஞானம் அடைவதைப் பற்றியுமே புனையப்பட்டன.

``உள்ளது நாற்பது, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சரத்னம், அக்ஷரமணமாலை, உபதேச உந்தியார், ஏகான்ம பஞ்சகம்’’ ஆகியவை கவிதை நூல்கள்.
`விசார சங்கிரகம்’, `நான் யார்?’ ஆகியவை வசன நூல்கள். ஆதிசங்கரரின் `விவேக சிந்தாமணி’ என்னும் வடமொழி நூலையும், `ஆத்ம போதம்’ என்னும் வடமொழி நூலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பகவத் கீதையிலிருந்து நாற்பத்திரண்டு சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து `கீதாசாரம்’ என்ற தலைப்பில் சுருக்கமாய் விளக்கம் எழுதியிருக்கிறார். அப்பளம் இடுதலையும் ஆத்மஞானத்தையும் ஒப்பிட்டு மகரிஷி எழுதிய `அப்பளப்பாட்டு’ என்னும் பாடல், லேசான நகைச்சுவையுடன் வெகு நுணுக்கமாக எழுதப்பட்டது.