Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரந்து விரிந்த சோழ தேசத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களும்  அங்கே, ஆயிரக்கணக்கான ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயத்திலும் குடிகொண்டிருக்கிற இறைவனும் இறைவியும், பரிவாரத் தெய்வங்களும் தனித்தனிச் சாந்நித்தியத்துடன் திகழ்கிறார்கள். அவர்களின் மொத்த சக்தியும் குவிந்து, அந்த இடங்களில் மகோன்னதமான எண்ண அலைகளைத் தூண்டும் வகையில் சூழ்ந்திருக்கின்றன.

இதனால்தான், எந்தவொரு ஆலயத்துக்குச் சென்று திரும்பினாலும், ''அடேங்கப்பா... கோயிலுக்குப் போயிட்டு வந்ததும், மனசே லேசாயிருச்சுப்பா!'' எனப் பெருமிதம் கொள்கிறோம். ''மொத்த பாரமும் இறங்கிடுச்சுப்பா'' என்று பூரிக்கிறோம். ''இந்தக் கோயில்ல ஏதோவொரு சக்தி இருக்கு, என்ன சொல்றீங்க..?’ என்று அறிந்தது போலவும், அறியாதது போலவும் பிரமிக்கிறோம்!

ஒரு வீடு கட்டுவதற்கே, ஆயிரம் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு, நாள்- நட்சத்திரம் பார்த்து, வாஸ்து விஷயங்களைக் கேட்டறிந்து, நல்ல நாள் முக்கிய நாளைக் குறித்துக்கொண்டுதான், வீடு கட்டுகிற வேலையில் இறங்குகிறோம். அப்படியிருக்க, மாமன்னர்களும் சிற்றரசர்களும்... 'ஏதோ இடம் இருக்கிறது; நம்மிடம் பொன்னுக்கும் பொருளுக்கும் பஞ்சமில்லை; செய் என்றால் திபுதிபுவென வேலையில் இறங்கிச் செவ்வனே செய்துமுடிக்க, ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பதற்காகவெல்லாம் ஆலயம் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவிடுவார்களா, என்ன! ஓர் ஆலயத்தை எழுப்புவதற்கு முன் எத்தனை யோசித்திருப்பார்கள்; எதையெல்லாம் கவனத்தில் கொண்டிருப்பார்கள்; எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

தில்லையில் ஆடல்வல்லான்; தஞ்சையில் பெருவுடையாரே பேரழகு! மதுரையில் ஸ்ரீமீனாட்சி அம்மையின் அழகிலும் அன்பிலும் வியக்கிறோம்; நெல்லையில் காந்திமதியம்பாளின் கருணையில் சிலிர்க்கிறோம். இன்னொரு கோயிலில், சிவலிங்கம்தான் மூலவர்; ஆனாலும், ஸ்ரீவிநாயகருக்குத்தான் முக்கியத்துவம்; வேறொரு தலத்தில் முருகப்பெருமானே நாயகன்! இப்படியாக, எத்தனை ஆலயங்கள்; எவ்வளவு பிரமாண்டங்கள்; வித்தியாசங்கள்!

ஸ்ரீநடராஜபெருமானைத் தரிசிப்ப தற்காக, நாலாத் திசையிலிருந்தும் தில்லைக்குத் தினமும் வருகிற சிவபக்தர்களின் கூட்டத்தால், தில்லை நகரமே திக்குமுக்காடிப்போகும்! இதேபோல், தொண்டை நாட்டில் இருந்தும், நடுநாட்டில் இருந்தும் எண்ணற்ற சிவனடியார்கள் நடந்தே வருவார்கள்; சிலர் மாட்டுவண்டிகளைப் பூட்டிக் கொண்டு, நான்கைந்து பேராக வருவார்கள்; வழியில் தென்படும் கோயில்களுக்குச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்தபடியே தில்லையம்பதியை அடை வார்கள்; ஆடல்வல்லானைத் தரிசித்த நிறைவுடன், ஊர் திரும்புவார்கள்!  

தில்லையம்பதிக்கு அருகில் உள்ள அந்தத் தலம், ஒரு காலத்தில் அழகிய வனமாக இருந்தது. அங்கே, எந்தப் புண்ணியவானோ... திருக்குளமும், அருகிலேயே அழகிய கோயிலும் அமைத்திருந்தான். தொண்டை தேசம் மற்றும் நடுநாட்டு அன்பர்கள், இந்த வனத்தின் வழியேதான் வருவார்கள்; இந்தத் தலத்தையும் தரிசிப்பார்கள்; திருக்குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலையில் இங்கு ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்து, நடையை வேகமாக எட்டிப் போட்டால், உச்சிக்கால பூஜைக்குள் தில்லையம்பலத்தானை தரிசித்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு!

தில்லையில், பிரமாண்டமாகத் திகழும் ஆலயத்தின் அழகைக் கண்களுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் வரித்துக்கொள்கிற விதமாக, மாலை வரை அங்கேயே இருப்பார்கள்; மண்டபம் மண்டபமாக, தூண்கள் தூண்களாக, எல்லாச் சிற்பங்களையும் தொட்டுத் தடவி, பார்த்து வியந்து பரவசத்துடன் ஏதேனும் ஒருமண்டபத்தில் கால்நீட்டி அமர்ந்துகொள்வார்கள்.

அங்கே, சோழ தேசத்தின் ஏதோவொரு மூலையில் இருந்தும், பாண்டிய நாட்டில் இருந்தும் சிவனடியார்கள் குவிந்திருப்பார்கள்; ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்வார்கள்; வந்த வழி குறித்தும், வழியில் தரிசித்த ஆலயங்கள் குறித்தும் விலாவாரியாகச் சொல்வார்கள். அப்படிப் பேசும்போதுதான், அழகிய திருக்குளத்தையும், அங்கே அருள்பாலிக்கும் இறைவனைப் பற்றியும் அந்தப் பகுதி வழியே வந்தவர்கள் விவரித்துச் சொல்ல... 'அடடா... காசிவிஸ்வநாதரா! ஸ்ரீவிசாலாட்சியுமா?! ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருமேனி அத்தனை அழகா!’ எனக் கேட்டவர்கள் வியந்தனர்.

ஆலயம் தேடுவோம்!

'அடுத்த முறை, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விடுவோம்’ என்று முடிவு செய்தனர். பிறகு அவர்களே, 'அடுத்த வருடம் என்ன... இன்றே, இப்போதே அங்கு சென்று, தரிசிப்போம்’ எனச் சட்டென்று எழுந்து, விறுவிறுவென அந்த வனத்துக்குச் சென்றனர்; திருக்குளத்தில் நீராடினர்; ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் ஸ்ரீவிசாலாட்சியையும் தரிசித்தனர்.

அது முதல், காசியம்பதிக்கு நிகரான தலம் ஒன்று, தில்லையம்பதிக்கு அருகில் உள்ளதாக ஊரெங்கும் பேச்சு பரவியது; தில்லைக்கு வரும் அன்பர்கள் பலரும், ஸ்ரீகாசிவிஸ்வநாதரைத் தரிசித்து, 'பாவங்கள் தொலைந்தன; தரிசித்ததே மகா புண்ணியம்!’ எனப் பேருவகை கொண்டனர். அடுத்த முறை, தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டனர். 'இனிமே புள்ள படிப்புல தேறிடுவான்’ என, பிள்ளைகளின் தலை வருடி, குதூகலித்தனர்.

எத்தனையோ அன்பர்கள் வணங்கிப் போற்றிய, தரிசித்து நலன் பெற்ற, பாவங்களைத் தொலைத்துப் புண்ணியங் களைத் தேடிக்கொண்ட அந்த ஆலயம் இன்றைக்கும் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வசப்புத்தூரில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் குடிகொண்டிருக்கிறார். ஸ்ரீவிசாலாட்சி, கருணையே வடிவெனக் காட்சி தருகிறாள். என்ன... கோயில்தான் உருக்குலைந்து கிடக்கிறது!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது, வசப்புத்தூர். இங்கே, கோபுரத் தைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, மதிலையெல்லாம் காலம் விழுங்கி வைக்க, கவனிப்பாரின்றி, களையிழந்து கிடக்கும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் கோயிலைக் கண்டால், கண்ணில் நீர் என்ன... ரத்தமே வருகிறது.

கோபுரம், பலிபீடம், கொடிமரம், நந்தி என இருந்தது. இப்போது நந்தி மட்டுமே உள்ளது. அந்த நந்தியின் அழகை வியந்து, அருகில் நிற்கும்போது, 'எனக்குப் பிரதோஷ பூஜை எப்ப நடக்கும்?’ என்று அந்த நந்திபகவானே கேட்பதுபோல் ஒரு பிரமை!

கருங்கல் மற்றும் செங்கல் திருப்பணி எனக் கலந்து கட்டப்பட்ட ஆலயம் இது! இதற்குச் சாட்சியாக, பிராகாரத்தில் விழுந்து கிடக்கின்றன கற்கள்; சுவர்களில் பல்லிளித்துச் சரிந்து கிடக்கின்றன, செங்கற்கள்! ஸ்வாமி சந்நிதியின் விமானத்தில் கலசம் இல்லை; மாறாக... வளர்ந்தும் படர்ந்தும் காட்சி தருகின்றன செடி- கொடிகள்!

ஒரு புத்தகம் கிறுக்கப்பட்டாலோ, சுருட்டப் பட்டாலோ பொசுக்கென்று கோபம் வருமா உங்களுக்கு?! எனில், கல்வியையும் ஞானத்தையும் அருளுகிற ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பின்னம் அடைந்த நிலையிலான திருமேனியைக் கண்டால், என்ன செய்வீர்களோ?! தட்சிணாமூர்த்திக்கு உகந்தது வியாழக்கிழமை, கொண்டைக்கடலை மாலைகள், மஞ்சள் வஸ்திரங்கள், தீபாராதனைகள்! இவை எதுவுமின்றி, அதுவும் வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வெறிச்சென்று காட்சி தரலாமா? ஒரு வஸ்திரம், ஒரு மாலை, ஒரு அபிஷேகம்..? குளிர்ந்து குதூகலமாகி, உலகத்துக் குழந்தைகளுக்கு கல்வி கடாட்சத்தை அருள்வாரே, குரு மூர்த்தி?!

பாவ- புண்ணியப் பழங்கணக்குகளை விடுங்கள்; நமது பாவங்களைப் போக்கியருளும் ஸ்ரீகாசி விஸ்வநாதரும் அவர்தம் இல்லாள் ஸ்ரீவிசாலாட்சியும்,  அவலநிலையில் உள்ள ஆலயத்தில் குடியிருக்கலாமா? அதுவே நம் பாவ மூட்டையில் இன்னொரு சுமையை ஏற்றிவிடாதா? இந்தப் பாவத்தைத் தொலைக்க, எந்த காசிவிஸ்வநாதரை வழிபடுவது?!

வசப்புத்தூர் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் ஸ்ரீவிசாலாட்சியையும் ஒருமுறையேனும் தரிசியுங்கள்; ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அபிஷேகித்து, வஸ்திரம் சார்த்தி, வழிபடுங்கள். ரூபாய் நோட்டுக்களோ, சில்லறையோ... நம் மனசார எதை எடுத்துக் கொடுத் தாலும், அது நம் பாவங்களைத் தொலைக்கும்; புண்ணியங்களைச் சேர்க்கும்! உங்களின் மனதுள் ஏதேனும் ஒரு வழியில் புகுந்து, தனக்கு என்ன வேண்டும் என்பதை காசிவிஸ்வநாதரே சூட்சுமமாகச் சொல்லிவிடுவார், பாருங்கள்!

2011-ஆம் வருடத்தின் முதல் சக்தி விகடன் இதழ், இதோ... உங்கள் கரங்களில்! இந்த வருடத்தின் நிறைவில், வசப்புத்தூர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவின் பத்திரிகை நம் கைகளில் தவழவேண்டும் எனப் பிரார்த்தித்தபடியே ஆலயத்தை விட்டு வெளியே வந்தோம்; மனசு முழுக்க ஸ்ரீகாசி விஸ்வநாதர் நிறைந்திருந்தார்.

படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism