Published:Updated:

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

வெ.நீலகண்டன் - படங்கள்: கே.குணசீலன்

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

வெ.நீலகண்டன் - படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, நிர்வாக சபைகளாக வடிவமைத்தார்கள் சோழவேந்தர்கள். கருவூலம், கல்விச்சாலை, கலைக்கூடம், வங்கி, மருத்துவமனை என அரசாங்கத்தின் பல்வேறு பணிகள் கோயில்களிலேயே நடந்தன. 

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

அதனால்தான் தங்கள் அரண்மனைக்குத் தராத முக்கியத்துவத்தைக் கோயில்களுக்குத் தந்தார்கள். நாட்டின் மொத்த ஜீவனும் கோயில்களுக்குள் இருப்பதை அறிந்தே அந்நிய மன்னர்கள் கோயில்களைக் குறிவைத்து போரிட்டு சிதைக்க முனைந்தார்கள். தமிழகத்தை ஆண்ட  மூவேந்தர்களில் எவரின் அரண்மனையும் காணக்கிடைக்கவில்லை.

காலம் அவற்றைச் சிதைத்து விட்டது. ஆனால், அவர்கள் கட்டியெழுப்பிய கோயில்கள், காலத்தை வென்று இன்றும் அவர்களின் அடையாளத்தைச் சுமந்து கொண்டு நிற்கின்றன. தட்பவெப்பம் அறிந்து, நிலவியல், வானியல் தன்மைகளை புரிந்துகொண்டு, வெகுநுட்பமானக் கட்டுமானத் திறனோடு எழுப்பப்பட்ட கோயில்கள் 1000 ஆண்டுகளைக் கடந்தும் வரலாற்றுக்குச் சான்றாக நின்று கொண்டிருக்கின்றன.

ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோயிலும், அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சுவரமும் அவற்றுக்குச் சான்று. சோழர்களின் தாய்வழி மரபில் வந்தவனும், சாளுக்கியச் சோழனுமான இரண்டாம் ராஜராஜன், தம் முப்பாட்டன்களைப் போலவே இந்த உலகில் அழியாது நின்று பெயர் சொல்லும் ஒரு கற்றளியை எழுப்ப விரும்பினான். அதன் விளைவே, தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில். உலகின் அதிநுட்பமான சிற்பக்கலைக்கூடமாக விளங்கும் இந்தக் கோயிலை, ‘யுனெஸ்கோ’ அமைப்பு, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துக் காத்துவருகிறது.

 வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் இந்தக் கோயிலின் சிற்ப மகிமைகள் குறித்து,  ‘தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)’  என்ற பெயரில் ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். அவரே, இக்கோயிலின் சிறப்புகளை நம்மோடும் பகிர்ந்து கொண்டார் “ராஜராஜன் என்ற பெயரால் மட்டுல்ல, நிர்வாகம், கலாரசனை, சைவப்பற்று எனப் பல விஷயங்களில் முதலாம் ராஜராஜனோடு பொருந்திப்போகிறான் இரண்டாம் ராஜராஜன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

ராஜராஜ சோழனுக்குப் பிறகு, ஒன்பதாவது அரசனாகச் சோழ நாட்டுக்குப் பொறுப்பேற்றவன் இரண்டாம் ராஜராஜன். இரண்டாம் ராஜராஜனின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன். இவனது அமைச்சரவையில் தலைமை அமைச்சராக இருந்தார் சேக்கிழார். அவைக்களப் புலவராக இருந்தார் ஒட்டக்கூத்தர். இவர்களது தமிழ் பருகித்தான், இளவரசனான இரண்டாம் ராஜராஜன் வளர்ந்தான். சுந்தரமூர்த்தியார் இயற்றிய ‘திருத் தொண்டர் தொகை’யை விரித்து, 63 சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் சிவத்தொண்டையும் உள்ளடக்கி ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் மிகப்பெரும் விரிநூலாக இயற்றினார் சேக்கிழார்.  ‘திருத்தொண்டர் மாக்கதை’ என்று போற்றப்படும் அந்தநூல் அரங்கேற்றப்பட்டது குலோத்துங்கனின் அரசவையில்தான். 

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்! அதையெல்லாம் பார்த்தும் கேட்டும் வளர்ந்த இரண்டாம் ராஜராஜன், தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான். தந்தையைக் காட்டிலும் தெய்வபக்தி மிக்கவனாக இருந்தான். கற்றளி எழுப்பும் அவனது கனவுக்கு உற்ற துணையாக நின்றார்கள் சேக்கிழார் பெருமானும், ஒட்டக்கூத்தரும்.
இப்போது, ‘தாராசுரம்’ என்று அழைக்கப்படுகிற நகரத்தின் பெயர், அக்காலத்தில் ராஜராஜபுரம். ‘ராராபுரம்’ என்று சுருக்கமாக குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது. ராராபுரமே காலப்போக்கில் தாராசுரமாக மாறிவிட்டது.
தஞ்சைப் பெரியகோயில் எப்படி ராஜராஜன் பெயரில், ‘ராஜராஜேச்சுவரம்’ என்று அழைக்கப்படுகிறதோ அப்படித்தான் இந்தக் கோயிலும் அழைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஈசனுக்கு அக்காலத்தில் ‘ராஜராஜ ஈஸ்வரமுடையார்’ என்றுதான் பெயர். 15ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், ‘ஐராவதேஸ்வரர்’ என்று பெயர்வந்தது. இந்தக் கோயிலின் ஈசனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டுதான், ஒட்டக்கூத்தர் ‘தக்கயாகப்பரணி’ நூலை இயற்றினார்.  

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

இங்குதான் அந்த நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பத் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. எல்லா வற்றுக்கும் முத்தாய்ப்பாக, ராஜராஜபுரீஸ்வரர் மகாமண்டபத்தின் அதிஷ்டானமும் சுவரும் இணையுமிடத்தில் பெரியபுராணத்தின் கதை முழுவதையும் சிற்பத்தொகுப்புகளாக உருவாக்கி வைத்திருக்கிறான் இரண்டாம் ராஜராஜன். தஞ்சைப் பெரியகோயிலிலும், கங்கை கொண்ட சோழீச்சுவரத்திலும் இடம்பெற்றுள்ள சிற்பங்களில் பிரமாண்டம் இருக்கும். ஆனால் இங்கு எல்லாச் சிற்பங்களிலும், விதவிதமான நுட்பங்கள் பொதிந்து கிடக்கின்றன.

தூண்களில் ஒரு அங்குலம் உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள நர்த்தன கணபதி சிற்பம் வியப்பின் உச்சம். உலோகத்தாலும் மரத்தாலும் மட்டுமே செய்ய வாய்ப்புள்ள சிற்பம் அது. அவ்வளவு நுணுக்கமாகக் கருங்கல்லில் செதுக்கியிருக்கிறார்கள் சோழச்சிற்பிகள். சூரியனை, ‘சிவசூரியன்’ என்று அழைக்கும் மரபு சைவத்தில் உண்டு. கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஷ்டமாடத்தில், 8 கைகள், 4 தலைகளோடு அர்த்தநாரி வடிவத்தில் சூரியனுடைய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதை, ‘அர்த்தனாரி சூரியன்’ என்று கல்வெட்டுகளில் பொதிந்து வைத்திருக்கிறான்.  

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

முன்மண்டபமான ராஜகம்பீரன் மண்டபத்தில் உள்ள மாடங் களின் உள்பகுதியில் அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. அந்த மண்டபமே தேர்வடிவில் இருக்கும். ஒரு பக்கம் யானையும் மறுபக்கம் குதிரையும் அத்தேரை இழுத்துக்கொண்டு ஓடும். 

மாடங்களில், ஒரு கையில் நீர் பாத்திரத்தையும் மறுகையில் தாமரை மலரையும் ஏந்தியபடி செதுக்கப்பட்டுள்ள கங்காதேவி சிற்பம் பேரழகு.  பிராகாரத்தைச் சுற்றியுள்ள திருச்சுற்று மாளிகையில் ஓர் அடி உயரத்தில் 108 பேருடைய சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் அவர்களுடைய ஊர், பெயர், தீட்சை பெற்றபிறகு சூட்டப்பட்டப் பெயர்கள் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, அதில் இடம்பெற்றுள்ள ஒரு பெயர், ‘குடவாயில் கிழார் உமாபதி ஆழ்வாரான சிகாசிவர்’. இந்த 108 பேரும் தாராசுரம் கோயிலில் தேவாரம் பாட நியமிக்கப்பட்ட ஓதுவார்கள். தஞ்சைப் பெரியகோயிலில் கூட ராஜராஜன் 50 ஓதுவார்களைத்தான் நியமித்தான்.  

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

இரண்டாம் ராஜராஜன் இந்தப்பணிக்கு 108 ஓதுவார்களை நியமித்து, அவர்களுக்குச் சிலையெடுத்தும் சிறப்பித்திருக்கிறான். இந்தக் கோயிலின் கருவறை விமானம் 2 தள அமைப்புகளைக் கொண்டது. முதல் தளத்தில் 8 நதிப்பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட அந்த நதிப்பெண்களின் சிற்பங்கள் அற்புதமானவை. இடுப்புக்கு மேல் பெண் வடிவாகவும், இடுப்புக் கீழ் நீர்ச்சுழலாகவும் அந்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சாளுக்கியச் சோழர்களின் ஆட்சி நிறைவு பெற்ற பிறகு இக்கோயில் சிதைவடையத் தொடங்கியது.

அந்தக் காலகட்டங்களில் இங்கிருந்த அரியச் சிற்பங்களை எடுத்துச்சென்று தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைத்தார்கள். முன்மண்டப வடக்குபுறத்தில் ‘ஆனை உரிச்ச தேவர்’ என்ற பெயர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்த, ‘கஜசம்ஹார மூர்த்தி’ சிற்பம் பேரழகு வாய்ந்தது. அந்தச் சிற்பம் இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருக்கிறது. ராஜேந்திரச்சோழனின் மகன் ராஜாதிராஜன் சாளுக்கிய நாட்டை வென்றபோது வெற்றிச்சின்னமாக அங்கிருந்த ஒரு துவாரபாலகர் சிலையைக் கொண்டு வந்தான். 

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

தன் முப்பாட்டன் கொண்டுவந்த அந்தச் சிற்பத்தை இரண்டாம் ராஜராஜன் தாராசுரம் கோயிலின் வாயிலில் பொருத்தி வைத்தான். ‘உடையார் விஜய ராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எரிந்து கொடுவந்த துவார பாலகர்’  என்று அந்த சிற்பத்தைப் பொருத்திய இடத்தில் கல்வெட்டுப் பதிவையும் செய்து வைத்தான். அந்தச் சிற்பத்தையும் இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்துக்குக் கொண்டுசென்று விட்டார்கள். கோயில் விமானத்தைக் கயிலாய மலையைப் போல உருவகப்படுத்தி, சிவபெருமானையும் உமையவளையும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.  

பூதகணங்கள், தெய்வங்கள், அடியார்கள் எனக் கைலாயத்தில் வாழும் அனைவரின் சிற்பங்களும் அங்கே அற்புதமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஒரு கல்வெட்டில் இந்தக் கோயிலின் கருவறை விமானம் பொன் தகடுகளால் வேயப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன...” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். தமிழர் கட்டடக் கலை, சிற்பக்கலை, வானியல், புவியியல், அறிவியல், தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாக,  950 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சரித்திரத்தைச் சுமந்துகொண்டு அழகோவியமாக நிற்கிறது ராஜராஜபுரம் ராஜராஜ ஈஸ்வரமுடையார் கோயில்!

பெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்!

அழகும் அற்புதமும் நிறைந்த தாராசுரம் பெரிய புராண சிற்பத் தொகுப்பு குறித்த வீடியோ பதிவைக்காண அருகிலுள்ள QR code - பயன்படுத்தவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism