திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

இந்திரா சௌந்தர்ராஜன்படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ராத வருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோ னயோத்தி மன்னற்களித்தகோயில்
தோலாத தனிவீரன் றொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனெல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழு மறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினையனைந்து தீர்க்குங்கோயில்
திருவரங்க மெனத்திகழுங் கோயில் தானே!
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம் -


வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!

ஆழ்வார்களை ஆராதிப்போம், சுந்தர காண்டம், கண்ணன் வருவான், எனும் வரிசையில் நான் எழுதப் போகும் ஒரு தொடரே ‘ரங்க ராஜ்ஜியம்’ என்னும் இத்தொடர்!    

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதலா வதும் பூலோக வைகுண்டம் எனப்படுவதுமான திருவரங்கம் இத்தொடரின் பிரதான களம்! காவிரி நதியையே தன் தோள்மாலை போல் நிலமிசை சூடிக்கொண்டு, தாமச நித்திரையில் துயில் கொண்டிருப்பது போல் தோற்றம் தரும் அரங்கநாதப் பெருமாளே இத்தொடரின் நாயகன்!

அரங்கன், தொடரின் நாயகன் மட்டுமல்ல, ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் அவனே நாயகன்! மண்மிசை குடிகொண்டிருக்கும் இவன் கோயிலின் பின்புலத்தில்தான் எத்தனை ரசமான சங்கதிகள்! `கோயில்’ என்றாலே பிரதான மிக்கதாயும், வரலாற்றுத் தொடர்புடையதாகும் அற்புதங்களின் நிலைக்கலனாகவும் இருப்பதை, நாம் நம் மண்மிசை உள்ள பல கோயில்களை வைத்து உணரலாம்.

ஆனால், இத்திருவரங்கன் கோயிலோ புராதன வரலாறு கடந்து புராணத் தொடர் போடும், அதனின் மேலான பல அரிய அமைப்புகளுடனும் உடைய கோயிலாகும். அதனாலேயே பதினோரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத் தலமாகவும், ஸ்ரீவேதாந்த தேசிகன் தொட்டு திருப்பாணாழ்வார், ஸ்ரீராமாநுஜர் ஆகியோர் பரமபதம் அடையக் காரணமாயும் திகழ்கிறது.

ஸ்ரீராமாநுஜரின் குருவான பெரிய நம்பி முதல், வைணவச் செல்வம் எனப்படும் பிள்ளை லோகாச்சார்யார் முதலானோர் அவதரித்ததும் இம்மண்ணில்தான். மிகமிக சூட்சமமான உட்பொருளோடு கூடிய ஏழு பிராகாரங்கள் இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

ஏழாம் எண்ணை எண்ணும்போதே ஏழு பிறப்பு முதல் ஏழு அதிசயங்கள் தொட்டு, சப்த ஸ்வரங்கள், வண்ணங்கள், ரிஷிகள் என்று நம் எண்ணம் விரியும்.

பஞ்சபூதங்களாலான மானிடன், விசேஷமாக ஆறாம் அறிவு பெற்று, அதன் காரணமாக ஏழாகிய சப்தம் எனும் மனம் வாய்க்கப் பெற்று, வாய்த்த அந்த மனதால் எட்டவேண்டியதே ஒன்ற வேண்டியதே ஒன்பதாகிய இறைவனின் திருவடி என்று ஒன்று முதல் ஒன்பது எண்களுக்கு ஒரு வியாக்கியானம் உண்டு. இதில் ஏழுதான் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்த ஏழு, திருவரங்கத்தில் ஏழு பிராகாரங்களாக உள்ளது. அந்தப் பிராகாரங்களை வலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு, ஏழு பிறப்பில் உருவான நன்மை தீமைகள் நேராகின்றன.  

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

கர்மம் நேர்ப்பட்டாலே அவன் திருவடியை யும் சரண் புக முடியும். இப்படி உட்பொதியோடு கூடிய விஷயங்களோடு, பிரபந்தத் தமிழை வளர்த்த பெரும் சிறப்போடு, நாம் நுட்பமாய் அறிய வேண்டிய ஏராளமான விஷயங்களோடும் உள்ள அரங்கப்பெருமானைப் பணிந்து வணங்கி தொடங்குகிறேன். இந்த அரங்கனைத் திருவரங்கனை நீங்களும் தொடருங்கள்.

பூலோகம்!

இப்பூலோகத்தில் சூர்யகுலத் தோன்றலான இக்ஷவாகுவின் காலம். இவன் காலத்தில்தான் இன்று நாம் பூஜித்து சென்னிமேல் வைத்துக் கொண்டாடும் இத்திருவரங்கப் பெருமான் பிரம்மாவின் சத்யலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்தார்!

பூலோகத்தில் எண்ணில்லாத ஆலயங்கள்! இவற்றில் சுயம்புவாய் தோன்றியவையும் உண்டு, ராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சை பிரகதீஸ்வரம் போல அரசர் பெருமக்களால் தோற்றுவிக்கப் பட்டவையும் உண்டு. ஆனால் விண்ணிலே இருந்து மண்ணுக்கு வந்த முதலும் கடைசியுமான ஒரே ஆலயம் திருவரங்கப் பெருமான் ஆலயம் மட்டும் தான்!

இப்படி மண்மிசை இது பூலோகவாசிகளுக்கு கிடைக்க ஒரே காரணமாக திகழ்ந்தவன் சூர்ய குலத்தோன்றலான இக்ஷவாகு என்பவன்தான்! அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இவனது காலத்தை துல்லியமாக அனுமானிக்க முடியவில்லை. ஆனால் ஒரு தோராயக் கணக்கு போட்டுப் பார்க்க முடிகிறது.

இந்த தோராயக் கணக்கை போடுவதற்கு முன் பிரம்ம சிருஷ்டி மற்றும் பிரம்மாவால் கால நிர்வாகம் செய்ய தோற்றுவிக்கப்பட்ட பதினான்கு மனுபுருஷர்கள் பற்றி நாம் அறிய வேண்டியது அவசியம். இவர்களை அறிந்தாலே அந்த தோராயக் கணக்கை நாம் போட முடியும். அப்படிப்போட்டாலே இன்று நாம் சென்னிமேல் வைத்து பூஜித்து வரும் திருவரங்கப் பெருமானின் அநாதிகாலப் பிரமாணம் தெரிய வந்து நாம் பிரமிக்கவும் முடியும்.

நாம் இப்போது நமது ஆட்சியாளர்களின் கணக்குப்படி கி.பி. 2018-ல் இருக்கிறோம். இந்த கி.பி.க்கு முன்பாக கி.மு. என்று ஒரு காலக்கணக்கு உள்ளது. அதையெல்லாம் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக் கிச் சென்றால்தான் அந்த தோராயக் கணக்கையே நம்மால் போட முடியும்! முன்னதாக நாம் எம்பெருமானிடமிருந்தே தொடங்குவோம். ஆழியில்லை, ஊழியில்லை, ஆல், அரசு என்றும் ஏதுமில்லை. ஈ எறும்பு முதல் புழு பூச்சி தொட்டு ஊர்பவை, பறப்பவை, நீந்துபவை, நடப்பவை என்று ஓர்உயிர்க்கூட்டம் ஒன்று உருவாகும் முன் அவன் மட்டும்தான் இருந்தான்!

தன்னில் இருந்து முதன் முதலாய் நான்முகனைப் படைத்த அவன், அவனைக் கொண்டே நால்வகை வேதம் எனும் சப்தப் பிரபஞ்சத்தை படைத்தான். பிறகே ஈரேழு பதினான்கு புவனங்களும் உருவாகி, உயிர்களும் தோற்றுவிக்கப்பட்டன! 

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

பூமிக்கு மேலே புவஹ, சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யம் என்று மொத்தம் ஏழு லோகங்கள்! பூமிக்குக் கீழே அதள, விதள, சுதள, ரசாதள, தளாதள, மகாதள, பாதாள என்று ஏழு லோகங்கள்! இதுபோக வாயு, அக்னி, வருணன், இந்திரன், சூர்ய, சந்திரர்கள் மற்றும் சப்தரிஷி மண்டலம் முதல் நட்சத்திர மண்டலங்கள் என்று தோன்றியதாக ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது.

ஆகக்கூடி ஒன்றுக்கு பதினான்கு லோகங் களும் வேதங்களும், உயர்வாழ்க்கைகளும் தோன்றிய நொடி காலம் என்கிற ஒன்றும் தோன்றிவிட்டது. இதன்படி கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று யுகங்களும் தோன்றின. இதில் கலியுகத்தின் நீளம் 4 லட்சத்து 32000 வருடங்கள்! ஏனைய யுகங்களில் துவாபரம் இதுபோல் இருமடங்கு கொண்டதாகும். திரேதா யுகம் மூன்று மடங்கும், கிருத யுகம் நான்கு மடங்கும் கொண்டதாம்!

இதனை நம் சிறு மூளை கொண்டு கற்பனை செய்து பார்க்க முனைந்தால் ஆயாசமே மிஞ்சும். இந்த யுகக் கணக்கை நிர்வகிக்க பிரம்மா பதினான்கு மனுக்களைப் படைத்தார். இந்தப் பதினான்கு பேரில் விவஸ்வான் எனும் ஏழாவது மனுவின் காலநிர்வாகத்தில் அவன் புத்ரனான இக்ஷவாகுவால்தான் அரங்க நாதப் பெருமானின் பிரணவாகார விமானமுடன் கூடிய அர்ச்சா ரூப திவ்ய திருமேனி பூ உலகம் வந்தது. அதாவது இப்போது நிகழ்ந்தபடி இருக்கும் கலியுகத்துக்கும்முன் துவாபரயுகம் அதற்கும் முன் திரேதாயுகம்... இந்த யுகமே சூர்ய வம்சத்தில் ஸ்ரீராமபிரானின் காலமாகும்! 

பிந்தைய துவாபரயுகம் மகாபாரத காலமாய் ஸ்ரீகிருஷ்ணனுக்கான காலமாய் இருந்தது... பிறகே கலியுகம் தொடங்கி அதில்தான் இன்று நாம் இருக்கிறோம். என்றால் பின்னோக்கிய இக்கால வெளியை நம்மால் கற்பனை செய்து பார்க்க மிகுந்த சக்தி வேண்டும் என்பதே யதார்த்தமாகும். துவாபார யுகத்து மகாபாரதச் சம்பவங்களை வைத்து சில காலக்கணக்குகளை சிலர் போட்டுள்ளனர். பாரத யுத்தம் தொடங்கிய காலம் இதனால் ஓரளவு தெரிய வந்திருக்கிறது.

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்அதற்கும் முந்தைய யுகத்திலேயே எம்பெருமானின் ஸ்வயம்வ்யக்த (தானாய் தோன்றுதல்) திருமேனி இக்ஷாவாகுவால் பூ உலகுக்கு வந்து விட்டது.

இது ஏன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வர வேண்டும்? எதனால் இக்ஷாவாகு இதனைக் கொணர்ந்தான் என்பதும் அறியப்பட வேண்டிய சங்கதிகளே! பார்ப்போமா?

பூ உலக உயிர்களின் வாழ்க்கை என்பது பொழுதுகளில் இரவு, பகல் போல உணர்வுகளில் இன்பம், துன்பம் எனும் இரண்டை உடைய தாக இருந்தது. இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும். அப்படி இருந்தாலே வாழ்வென்பதும் மாற்றங்கள் கொண்டதாய் சுவாரஸ்யமானதாய் விளங்க முடியும். எல்லாம் இரண்டிரண்டாய் இருப்பதே பூ உலக யதார்த்தம்!

இனிப்பென்றால் கசப்பு, இன்பமென்றால் துன்பம், இருள் என்றால் ஒளி, ஆண் என்றால் பெண்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்பட்டியலில் பாவம் என்றால் புண்ணியம் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சார்ந்தே மனித வாழ்வு நடை பெறுகிறது. 

இதனால் பாவபுண்ணியங்கள் கொண்ட ஒரு வாழ்வே மனித வாழ்வாக உள்ளது. இந்த இரட்டைக் கணக்கு மனிதனுக்கு மட்டும்தான். ஏனைய உயிர்களுக்கு இல்லை. மனிதன் மட்டுமே தன அறாம் அறிவு காரணமாக தன்னையறிந்தும், உலகையறிந்தும், தான் வாழும் உலகம் பற்றியும் அறிந்து முக்காலம் கொண்டு விளங்குகிறான். ஏனைய உயிர்களுக்கு வாழ்வு என்பது உணர்வுப் பூர்வமானது மட்டுமே! அதில் சொற்ப அறிவுபூர்வம் இருந்தாலும் அவற்றுக்கு தங்களை அறியும் ஆற்றலோ, பிரபஞ்சப் புரிதலோ கிடையாது. எனவே அவை பாவ புண்ணியங்களுக்கு ஆட்படுவதில்லை.

தன்னையும் தான் வாழும் உலகையும் அறிய முடிந்த மனிதனோ பாவ புண்ணியங்களுக்கு ஆட்பட்டே வாழ வேண்டியுள்ளது. பின் அவற்றுக்கேற்ப சொர்க்க, நரகங்கள் காண்பது, மறுஜன்மம் கண்டு வாழ்வது என்பவை எல்லாம் திகழ்கின்றன.

இந்த இரு நிலைகளில் இருந்தும் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளை அடைவது என்பதற்கே வாழ்க்கை அருளப்பட்டது. இது தெரிந்தபோதிலும் நம் வாழ்க்கைச் சாகரத்தில் புண்ணிய காரியங்கள் மட்டுமே செய்து வாழ்வதும் சரி, பாவங்களைச் செய்து மீள்வதும் சரி இயலாத ஒன்றாகவே உள்ளது. இந்த இயலாத ஒன்றை இயலுமாறு ஆக்கவே குருநாதர்களை இறைவனாய் எம் பெருமான் நம் பொருட்டு அனுப்பி வைக்கிறான். அது மட்டுமின்றி மன்மிசை கோயில் கொண்டு நம்மை பூஜிக்கச் செய்து மெல்ல ஞானத்தைத் தந்து பிறவி என்னும் தளையில் இருந்து விடுபட வைக்கிறான்.

அயோத்தியில் சூர்ய வம்சத்தில் அரசாட்சி புரிந்து வந்த வைவஸ்வத மனு புக்ரனான இக்ஷாவாகுவுக்கும் இப்படித்தான் அவன் வாழ்வில் ஞானம் குறித்த எண்ணம் ஏற்பட்டது. ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மாறிடும் தன் உடல் திசுக்கள், இளமை முதுமை எனும் அதன் அடையாளங்கள், சற்றும் எதிர்பாராமல் வரும் உடல் உபாதைகள், உடன் இருந்து அன்பு காட்டுபவரின் மரணங்கள்’ என்று அவன் வாழ்வின் சம்பவங்கள், `மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது’ என்பதை அவனுக்கு உணர்த்தியதோடு, இப்பூவுலகில் நிலைத்த இளமையோடு வற்றாத சக்தியோடு வாழ்ந்தவர் என்றோ, வாழப்போகிறவர் என்றோ ஒருவர் கூட இல்லை என்கிற உண்மையையும் அவனுக்கு உணர்த்திற்று.

தனக்கும் முதுமை வரும், தன் வாழ்வும் ஒரு நாள் முடிந்து போய்விடும் என்கிற எண்ணம் அவனை நெருடத் தொடங்கி விட்டது. இந்த நெருடல், `நிறைவான பூரணமான வாழ்வென்பது எது’ என்கிற கேள்வியையும் எழுப்பியபோது, அதற்கான விடை அவன் தந்தையான மனுவிடமிருந்தே அவனுக்குக் கிடைத்தது.

விண்ணில் இருந்து வந்த அவர் தன் மகனிடம் “நீ விசாரத்தில் இருப்பது போல் தெரிகிறதே?” என்று ஆரம்பித்தார். “ஆம் தந்தையே... ஒரு பொழுது போல் மறுபொழுது இல்லை. சில நேரங்களில் மாற்றங்கள் மகிழ் வைத் தருகின்றன. சில நேரங்களில் அதுவே துன்பமளிப்பதாக உள்ளன. வேட்டைக்குச் சென்ற சமயத்தில் தனித்து விடப்பட்ட நான் உண்ண உணவின்றி பசியால் துடித்தேன். அப்போது பசியாதிருக்க வழியில்லையா என்ற கேள்வி எழும்பியது.

அதேநேரம் பசித்தாலல்லவா ருசியால் உண்ணுதல் என்பதும் சாத்தியம் என்று தோன்றிற்று. வாழ்க்கை என்பது இப்படி இரு தன்மையாகவே உள்ளது. இந்த இரண்டு மற்ற ஒரு நிலை இருக்கிறதா?” என்று கேட்டான்.
   
“மகனே! உன் விசாரம் எனக்கு புரிகிறது. விசாரப்படுவதும் ஒரு வகையில் நல்லதே. இல்லாவிட்டால் என்னிடம் நீ இப்படி ஒரு கேள்வியை எழுப்புவாயா?”

“நான் கேட்ட கேள்விக்கு இதுவா பதில்?”

“உனக்கான பதிலை நான் இனி கூறுவேன். நான் கூறப்போகும் பதில் உனக்கு மட்டுமல்ல... இந்த மண்ணில் உன்னைப்போல் தோன்றியிருக்கும் சகல உயிர்களுக்கும் சேர்த்துத்தான்...” என்று பீடிகையோடு பேசிய மனு, தன்னைப்படைத்த பிரம்மனே தான் வாழ்ந்திடும் சத்யலோகத்தில் அன்றாடம் பக்தியோடு ஸ்ரீமன் நாராயணனின் சயன கோல ரூபத்தை வழிபட்டு வருவதைக் கூறியபோது, இக்ஷவாகுவிடம் வியப்பு.

“மகனே! பிரம்மன்தான் என் வரையில் தாயும் தந்தையுமானவர். அவரே அந்தச் சயனக் கோல ரூபத்தை எனக்கும் காட்டி, `நீயும் நானும் தோன்றிட இவரே காரணம். இவராலேயே எல்லாம் உருவாயிற்று. இவரிடமிருந்தே நாம் வந்தோம். இவரைத் துதித்தும் பிறரை துதிக்கச் செய்வதினாலுமே எனக்கு ஆனந்தம் உண்டாகிறது’ என்றார். நானும் அவரோடு சேர்ந்து பிரணவர்கார பொன் மயமான விமானத்தோடு கூடிய அந்த மேனியை மலர் கொண்டு அர்ச்சித்து பூஜித்தேன். அதனால் இனம்புரியாத இன்பத்துக்கும் அனுமதிக்கும் ஆளானேன்” என்ற மனுவை இக்ஷவாகு வியப்பு குறையாமல் பார்த்தான்.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்?”

“உங்களுக்குக் கிடைத்த அந்த இன்பமும் அமைதியும் எனக்கும் கிடைக்குமா?”

“எப்போது இப்படி ஒரு கேள்வி உனக்குள் தோன்றி விட்டதோ அப்போதே நீ முக்தனுக்குரிய இடத்துக்கு வந்துவிட்டாய். நமக்கெல்லாம் கடமை இருக்கிறது. எனக்கு யுக நிர்வாகம். உனக்கு இம் மண்ணில் அரசாட்சி. இந்தக் கடமையை செய்தபடியே நீ இதற்கான வழியைத் தேடு. உற்ற குருவாய் விளங்கிடும் வசிஷ்ட முனிவர் உனக்கு நல்வழியைக் காட்டுவார்’’ என்ற தந்தையிடம், “அவர் காட்டுவது இருக்கட்டும் அந்தப் பிரணவாகார விமான மூர்த்தியை தாங்கள் எனக்குக் காட்டியருளக் கூடாதா?’’ எனக் கேட்டான் இக்ஷவாகு.

அதற்கு வைவஸ்வத மனு, “அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமான அதனை நான் காண நேர்ந்ததே பிரம்மனின் கருணையாலும் எனது நேரியக் கடமை யாலும்தான்! அவருக்கே கூட அப்பெருமான் கடுந்தவத்தின் வரமாய் கிட்டியவரே. எனவே நான் இப்போது கூறப்போகும் விவரங்களைக் கொண்டு உன் மனதால் ஒரு கோயில் எழுப்பி மானசீகமாய் வழிபாடு செய். உன் விருப்பம் காலத்தால் ஈடேறும்” என்ற மனு, திருவரங்கனை அவர் பள்ளி கொண்டிருக்கும் பிரணவாகார விமானத்தை பக்திப் பரவசத்தோடு விவரிக்கத் தொடங்கினான்.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்

பரிணாமத்தை உணர்த்தும் பத்து அவதாரங்கள்

யிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்திருக்கிறார் என்பதையே பகவானின் தசாவதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மச்சாவதாரம்: நீரில் வசிக்கும் மீன்.

கூர்மம்: நீரிலும் நிலத்திலும் தென்படும் ஆமை.

வராகம்: நிலத்தில் வசிக்கும் பன்றி.

நரசிம்மம்: விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது.

வாமனர் :
குள்ள மனிதனாக இருந்து த்ரிவிக்ரமனாக விஸ்வரூபம் அடைந்தது உருவ வளர்ச்சியைக் குறிப்பது.

பரசுராமர் : கோபம் கொண்ட மனித நிலை.

பலராமர் : சாதாரண மனித நிலை.

கிருஷ்ணன்: விளையாட்டும் வினையும் கலந்த மனிதத் தன்மை.

ராமன் : பொறுமையுடன் விவேகம் நிறைந்த மனிதத் தன்மை.

கல்கி: மனித நிலையைக் கடந்தது

- சிலம்பொலி செல்லப்பன் ஒரு சொற்பொழிவில் பேசியது.