திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இந்திரா சௌந்தர்ராஜன்ஓவியம்: சில்பி

ங்கையிற் புனிதமாய
   காவிரி நடுவு பாட்டு
பொங்கு நீர் பரந்து பாயும்
   பூம்பொழில ரங்கந்தன்னுள்,
எங்கள்மா லிறைவனீசன்
   கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
   ஏழையே னேழையேனே!

-தொண்டரடிப்பொடியாழ்வார் 

ரங்க ராஜ்ஜியம்

‘தகதகவென மின்னும் பொன் விமானம், திருப் பாற்கடலின் நடுவிலிருந்து கோடானுகோடி கதிரொளியோடு தோன்றிய ஒன்று! அதை, கருட ராஜன் தன் தோளில் தாங்கிப் பிடித்திருக்கிறார். அதனுள் நாரதர், தும்புரு ஆகியோரின் வீணா கானங்கள் எப்போதும் ஒலித்தபடி இருக்கின்றன.

இந்திராதி தேவர்கள் முதல் சித்தசாத்ய கணங் களும் அதனுள் வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றனர். ஆதிசேஷன் படம் விரித்திருக்க, அதுவே குடைப்பந்தலாகத் திகழ, அதன் கீழ் சூரிய சந்திரர் சாமரம் வீசிட, சேனாதிபதியான விஷ்வக் சேனர் கையில் பிரம்போடு நிற்க, எம்பெருமான் அரங்கநாதனாக பள்ளிகொண்டிருக்கிறார். தமது தாமச நித்திரைக்கு நடுவில் ஈரேழு பதினான்கு புவனங்களையும் தன் மானசத்தாலேயே இயக்குபவ ராக இருக்கிறார்’

- என்று விவஸ்வான் விவரிக்க, இக்ஷ்வாகுவின் மனதுக்குள் பொன்மயமான பிரணவாகாரப் பெருமாளின் திருக்கோலம் ஆழப்பதிந்துவிட்டது. அதே தருணம், ஞான பிதாவான விவஸ்வான் கரம் பற்றி அழைத்துச் சென்று தரிசனம் செய்விக்காமல், ‘உனது பக்திப் பிரயாசையால் அந்தத் தரிசனத்தை அடைய முயற்சி செய்’ என்று கூறியது உவப்பாகவும் இருந்தது, சற்று கசப்பாகவும் இருந்தது.

உவப்போ, கசப்போ மனதிலேயே வைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே? அதிலும் வசிஷ்டர் போன்ற ராஜரிஷிகளுக்குத் தெரியாமல் போகுமா? இஷ்வாகுவின் முகவாட்டத்தைக் கண்டுகொண்ட வர், அதுபற்றி அவனிடம் நேராகவே கேட்கவும் செய்தார்.

“மேன்மைகள் மிகுந்த அயோத்திக்கு அரசனே! ஆகாய ரவியின் பூலோகப் பிறவியே! உனக்குக் கூடவா மனச்சலனம்... எதனால் உன் வதனத்தில் வாட்டம்?” என்று கேட்டார். இக்ஷ்வாகுவும் தன் கண்ணிரண்டையும் விண்மேல் வைத்த வனாக, “மகா குருவே! நான், என் தந்தை என்னுள் மூட்டிய பக்தியின் பெருக்கால், அந்த பிரம்மதேவன் அனுதினமும் வைத்து வணங்கி வரும் பிரணவாகாரப் பெருமாளின் சயனக் கோலம் குறித்தே சதா சிந்தித்த வண்ணமிருக்கிறேன். திருப்பாற் கடலில் தோன்றிய அந்தத் திருவுருவத்தை ஒரு முறையாவது கண்ணாரக் காண வேண்டும் என்று மனது விம்முகிறது! 

ரங்க ராஜ்ஜியம்

என்னதான் நான் ரவிகுலத் தோன்றலாய், மனுப்புத்திரனாய், ஆள், அம்பு, சேனை என்று ராஜ்ஜியாதிபதியாக இருப்பினும், அந்தத் தரிசனம் என்பது எனக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. சுயமாய் பறந்து செல்ல நானோ தேவபுருஷன் இல்லை. செல்லும் வழியும் தெரியவில்லை” என்று இக்ஷ்வாகு சற்று விஸ்தாரமாகவே வருந்தினான். வசிஷ்டர் அதைக் கேட்டு பூரித்தார்.

‘`இக்ஷ்வாகு! நீ பற்றுவைக்க இந்த மண்மிசை எவ்வளவோ உள்ளன. காதுக்கினிய பாட்டு, கண்களுக்கினிய கணிகையர் ஆட்டம், நாவுக்கினிய அறுசுவை பதார்த்தங்கள், ஆவிக்குரிய தேகமானது அரிதுயில் கொள்ள பஞ்சணை என்று ராஜ சுகங்கள் அணிவகுத்து நிற்கின்ற நிலையிலும், நீ அவற்றை லட்சியம் செய்யாமல், பள்ளிகொண்ட பெருமாளை எண்ணி நெகிழ்வது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உன்னைப் போல் பக்தியில் நெகிழ்வோருக்கு வழிகாட்டுவதற்கே என் போன்ற ரிஷிகளை அவையில் ராஜகுருக்களாக வரித்துள்ளனர். கவலைப்படாதே! உன் விருப்பம் ஈடேற வழி உண்டு.” - என்றார் வசிஷ்டர்.

“குரு மகானே, தாங்கள்தான் அது என்ன வழி என்று காட்டி யருள வேண்டும்” என்று அவரின் கரங்களைப் பற்றினான் இக்ஷ்வாகு!

“ஒரு வார்த்தையில் அந்த வழியைக் காட்டிவிடுகிறேன். அந்த வழியின் பெயர் தவம்” என்றார் வசிஷ்டர்.

“தவமா?”

“ஆம், தவமேதான்!”

“அது, உம் போன்ற வேதியர்க்கும் ஞானியர்க்குமல்லவா விதிக்கப்பட்டது?”

“அப்படியல்ல... உயர்ந்த விருப்பங்களை ஈடேற்றிக்கொள்ள விழையும் எவர்க்கும் அதுவே உன்னதமான வழி.”

“எனில், இந்த ராஜ்ஜிய பாரத்தை யார் சுமப்பது?”

“இப்படி நீ அடுத்தடுத்து கேள்விகளாய்க் கேட்டுக்கொண்டிருந்தால், தவம் புரிய இயலாது. தவம் புரிய ஒன்றே ஒன்றுதான் தேவை”

“என்ன அது?”

“வைராக்கியம்.”

“அதில் நான் குறைந்தவனல்ல...”

“அதைத் தவத்தில் காட்டு. நாட்டைப் பற்றிய கவலையை விடு. உன் தவமே நாட்டையும் நலம் படப் பார்த்துக்கொள்ளும்.”

“என்றால் இது ஒன்றுதான் வழியா?”  

ரங்க ராஜ்ஜியம்

“சத்யலோகம் சார்ந்தவற்றைத் தவத்தாலேயே விரைந்து அடைய முடியும். பிரம்மன் தவசிகளுக்கு மிகவே இரங்குபவர். வரங்களை விரைந்து தருவ திலும் வள்ளல் அந்த மூர்த்தி”

“நல்லது... அவர் குறித்தே தவத்தைத் தொடங்கு கிறேன். எனது விருப்பத்தை அவர்தான் நிறைவேற் றவும் வேண்டும்.”

“அதற்கு முன் உனது இலக்கைத் தெளிவாய் வகுத்துக்கொள்.”

“என் இலக்கு அந்த பிரணவாகார விமானமும் எம்பெருமானுமே.”

“அப்பெருமாளை நீ மட்டும் தரிசித்தால் போதுமா?”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“உன் தவ முயற்சி எல்லோருக்குமானதாய் இருக்கட்டும்.”

“நல்ல கருத்து. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“அந்தப் பிரணவாகார விமானமும் எம்பெரு மானும் உனது இந்த அயோத்திக்கு வரவேண்டும். உன்னைச் சார்ந்த என் போன்றோரும் துதித்து மகிழ்வதோடு, பிறப்பெனும் பெருங்கடலை நீந்திக் கடந்து அவரோடு சேர்ந்திட, அது எங்களுக்குப் பெரிதும் உதவும்!”

“அற்புதமான கருத்து. இந்த நொடி முதல் என் இலக்கும் அதுவே.”

இக்ஷ்வாகு உணர்ச்சிப் பெருக்கோடு வசிஷ்ட ரின் வழிகாட்டலில் தவத்துக்குத் தயாரானான். வசிஷ்டரும் வழிமுறைகளைக் கூறலானார்.

“இக்ஷ்வாகு... என் இனிய சத்ரியனே! அரச வாழ்வென்பது புலன்களின் பெருக்கத்தில் உச்சம் காண்பது. தவமெனப்படுவதோ புலன்களின் சுருக்கத்தில் உச்சம் காண்பது.

இச்சைகளில் ஊறிய உன் உடல், நீ தவம்புரியத் தொடங்கும்போது அடங்க மறுக்கலாம்! குறிப்பாக மனதை அடக்க முனையும்போதுதான், அது புரவிபோல் முன்கால் இரண்டும் ஆர்த்தெழ கட்டவிழ்ந்து ஓட முனையும். அதனால் மருண்டு போய் தவத்தைக் கைவிட்டுவிடாதே. அந்த மனப் புரவியை வைராக்கியத்தோடு அடக்கி சூன்ய மெனும் லாயத்தில் கட்டு. ஒரே சிந்தையாய் பிரம்மனை எண்ணிடு. உன் வைராக்கிய தவம் சத்யலோகத்தையே நடுங்கவைக்க வேண்டும்.”

“மகா குருவே! கேட்கிறேன் என்று தவறாகக் கருதிவிடாதீர்கள். இந்தப் பூ உலகில் நான் எனக்குள் பிரம்மனை எண்ணுவது, விண்ணில் சத்யலோகத்தில் எப்படி எதிரொலிக்கும்? என் தந்தை போல் விண்ணுக்கும் மண்ணுக்கும் போய் வர முடிந்தவர்கள் சத்யலோகம் போய் சொல்வதன் மூலம்தான் அந்த பிரம்மா அறிவாரா?”

இக்ஷ்வாகுவின் பாமரமான கேள்வியை எண்ணிச் சிரித்த வசிஷ்டர், ‘‘இக்ஷ்வாகு! நீ, நான், நாம் என்று எல்லோருமே பிரம்மனால் படைக்கப் பட்டவர்களே. ஆனால் நாமும், ஈரேழு பதினான்கு புவனங்கள் தொட்டு, புல் பூண்டு முதல் புழுப்பூச்சி வரை சகல உயிரினமும் உருவாக மூலக்காரணம், அந்த பிரம்மனையும் படைத்த பரந்தாமனே!

அவரே பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவர். அவரை அர்ச்சாரூபமாகத் தினமும் கண்டு வணங்கவே நீ இந்தத் தவத்தை மேற்கொள்கிறாய். இதை முதலில் புரிந்துகொள்.

இடம், காலம், நேரம் எனும் பிரமாணங்களால் நாம் தொலைவில் இருக்கின்றபோதிலும் அவரோடு எப்போதும் நாம் தொடர்பிலும் உள்ளோம். அதை உணராதபடி நம் வாழ்வும், தேகம் சார்ந்த பசி, தாகம் முதலானவையும் இருக்கின்றன. இதை அறிவால் உணர்ந்து அவற்றை வென்றிடும்போதுதான் ஞான ஸித்தி ஏற்படுகிறது. ஞான ஸித்தி ஏற்படும்போதே இடம், காலம் எனும் பிரமாணங்கள் சிறிதாகி, நமக்குள்ளேயே நாம் சகலத்தையும் காணலாம்.

இதற்கு மேல் நான் வார்த்தைகளில் கூறுவதை விட, நீயே உன் தவத்தால் உனது கேள்விகளுக்கு விடை காண்பதே சாலச் சிறந்தது. எனவே வைராக்கியமாய் தவத்தில் மூழ்கு!

எத்தனை நாட்கள், எவ்வளவு காலம் போன்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி, `தவமே இனி என் வாழ்வு' என்றாகுமளவு தவத்தில் மூழ்கு. அந்தத் தவம் உனக்கு எல்லாமும் தரும். ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. தவம் புரியத் தொடங்கு வோர்க்கு இடர்ப்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அவை உன் உறுதிக்கான சோதனைகள்! பரீட்சை கள்! அவற்றில் நீ தோற்றுவிடக் கூடாது.’’

வசிஷ்டர், சொல்ல வேண்டிய சகலத்தையும் சொல்லி, அந்த அரசனைத் தவசியாக்கினார்.

கிரீட, கவச-குண்டலங்களை எல்லாம் களைந்தவன், மரவுரி தரித்து, திறந்த மார்போடு, தண்ட கமண்டலங்களோடு, அயோத்தியை ஒட்டி ஓடும் சரயு நதிக்கரையில் ஆசிரமம் கண்டு தவத்தில் மூழ்கினான்.

நாடே ஆச்சர்யப்பட்டது? அவர்களுக்குத் தெரியாது. எதற்கு இந்தத் தவம் என்று?

- தொடரும்...

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

ரங்க ராஜ்ஜியம்

களிமண்ணே காப்பு!

ரும்புப் பெட்டி, பாதுகாப்பு அறைகள் ஆகியவற்றைப் பூட்டி, அரக்கு சீல் வைப்பதுதான் வழக்கம்.

ஆனால், மதுரை - அழகர் கோயிலில் கர்ப்பக்கிரகம், தானிய அறை, ஆபரண அறை, மற்ற விக்கிரகங்கள் உள்ள இடங்கள், ஆவண அறைகள் ஆகியவற்றைப் பூட்டி களி மண்ணால் சீல் வைக்கின்றனர்.

இத வழக்கம் எத்தனையோ தலைமுறைகளாகத் தொடர்கிறது.அழகர் கோயிலுக்கு அருகிலுள்ள வலையப்பட்டி எனும் கிராமத் திலிருந்து வெட்டி எடுத்து வரப்படும் இந்த மண்ணை வேறு எதற்கும் உபயோகப்படுத்தக் கூடாதாம். மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.