திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

மு.வ.ஹரி காமராஜ்

காபாரதப் போர் முடிந்து பாண்டவர்கள், 36 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் பூவுலகை விட்டு நீங்கி, தனது அவதாரத்தை முடித்துக்கொண்டார் என்று பாண்டவர்கள் கேள்விப்பட்டதும், எங்களுக்கும் இனி இங்கே வாழ விருப்பமில்லை என்று கூறி அர்ஜுனனின் பெயரரான பரீட்சித்துவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, இமயமலையை நோக்கிப் பயணித்தார்கள். 

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

சிவலோகப் பிராப்தியை அடைய பாண்டவர் களும், திரௌபதியும் மேற்கொண்ட பயணத்தில் பெரும் சோதனைகளுக்குப் பிறகு, ஓர் இடத்தில் சிவபெருமானின் திருக்காட்சியைத் தரிசித்தனர். பூர்வஜன்ம வினைப்பயனால் பூமியில் பிறந்த சக்தியின் அம்சமான திரௌபதி, சிவபெருமானைத் தரிசித்ததும் முக்தி பெற்று சிவனோடு கலந்தாள்.

அதைக்கண்டு கலங்கிய பாண்டவர்களிடம் ஈசன், `கலங்கவேண்டாம், சப்த கன்னியரில் ஒருத்தியான திரௌபதி என்னுள் கலந்து விட்டாள். அவளைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டால், இனி வரும் பாண்டவ வம்சம் சிறப்படையும்' என்று ஆசீர்வதித்தார்.

திரௌபதி சிவனோடு கலந்த இடம் கேதார்நாத். இன்றும் அங்கே பாண்டவர்களுக்கும் திரெளபதிக் கும் சிலைகள் உள்ளன. திரௌபதியம்மனின் வழிபாடு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாண்டவ வழித்தோன்றல்களால் உருவானது என்று ஆய்வுகளும், நாட்டார் கதைகளும் தெரிவிக்கின்றன. வடதமிழகத்தில் குறிப்பாக பாண்டிச்சேரி, விழுப்புரம், செஞ்சி ஆகிய பகுதிகளில் திரௌபதியம்மன் வழிபாடு அதிக அளவில் வழக்கத்தில் உள்ளது.

யாகத்தில் பிறந்ததால் யாகசேனா, கரிய நிறத்த வள் என்பதால் கிருஷ்ணை, பாஞ்சால தேசத்து இளவரசி என்பதால் பாஞ்சாலி, துருபதன் மகள் என்பதால் திரௌபதி என்று பல பெயர்கள் இந்த அம்மனுக்கு வழங்கப்படுகிறது. 

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

கிராமக் காவல் தெய்வமான திரௌபதியம்மன் ஆலயம் ஒன்று செஞ்சி வட்டம், தேவதானாம் பேட்டை கிராமத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. அமைதி துலங்கக் காட்சி தரும் இந்தத் திருக்கோயில், சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் யாதவ குல மன்னர்களால் கட்டப்பட்டது என்கிறார்கள்.

ஒரே சுற்று கொண்ட எளிமையான கோயில் என்றாலும், அந்த வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற கோயிலாகத் திகழ்கிறது. குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி, அம்மனுக்குத் தாலி சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்கிறார்கள்.

கருடாழ்வாரைத் தரிசித்து, கொடி மரம், பலிபீடம் தாண்டிச் சென்றால், அரிவாள் தாங்கிய போத்திராஜா நடுகல்லாகக் காட்சி தருகிறார்.

கருவறையில் திரௌபதியம்மன் சுபத்திரை யோடு காட்சியளிக்கிறாள். இப்படி இருவரும் ஒருங்கே காட்சியளிப்பது, வேறெங்கும் காண்பதற் கரிய தரிசனம் என்கிறார்கள். வெளியே திரௌபதியம்மன், வேணுகோபால ஸ்வாமி, அர்ஜுனர், சுபத்திரை, போத்திராஜா, விநாயகர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கலாம். 

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

இந்தக் கோயிலின் திருச்சுற்றில் பாசுபதாஸ்திரம் பெறும் அர்ஜுனர், கருடர், வியாசருக்கு எழுதும் கணபதி, பாமா- ருக்மிணி சமேதராக கிருஷ்ணர், அர்ஜுனருக்கு மாலையிடும் திரௌபதி, பள்ளி கொண்ட பெருமாள் ஆகிய தெய்வச் சிற்பங்கள் அழகுற திகழ்கின்றன. ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் நாகர் பீடம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

துடிப்பான தெய்வமாக வணங்கப்படும் இந்த திரௌபதியம்மனுக்கு, வைகாசி மாசம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் சித்ரா பௌர்ணமி அன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.

இவற்றையெல்லாம் விட, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதம் நடைபெறும் உற்சவ விழா, இந்த வட்டாரத்திலேயே பிரசித்திப்பெற்றது.  20 நாள்கள் நடைபெறுகிறது திருவிழா.

18 நாள் மகா பாரதப் போரைக் குறித்த உற்சவ விழா பூர்த்தியானதும், அடுத்த நாள்களில் பாண்ட வர்கள் பட்டாபிஷேக விழாவும், அர்ஜுனர் தபசு விழாவும் நடைபெறுகின்றன.  

நல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி!

அர்ஜுனர் தபசு விழாவில், உயர்ந்த பனை மரத்தின் மீது அர்ஜுனர் ஏறும்போது, பெண்கள் ஈர உடையோடு கீழே நின்று மடியை ஏந்துவார்கள். அர்ஜுனர் அங்கிருந்து பூ, பழங்களை வீசுவார்.  அவை யார் யாருக்கெல்லாம் கிடைக்கின்றனவோ, அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி, பௌர்ணமி நாள்களிலும் இந்தக் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

காடுகள் திருத்தப்பட்டபோது கண்டறியப்பட்ட பழைமையான இந்தக் கோயில், பல புராணக் கதைகளோடு தொடர்புடையது என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். மேலும், வேண்டிய வரங்களை அளிக்கும் திரௌபதியம்மன், இங்குள்ள மக்களின் வரப்பிரசாதியாகவே காட்சி அளிக்கிறாள். பெண்மையின் வீர வடிவமான இந்த அம்மனை வணங்கினால், எல்லா துயரத்திலிருந்தும் விடுபடலாம், வாழ்வில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் என்றும் நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள்.

நெருப்பின் வடிவாகப் பிறந்த துருபதனின் மகள் நெருப்பாகவே வாழ்ந்தாள். தீயவர்களை அழிக்க சபதமேற்று, அதை நிறைவேற்றி அறம் செழிப்புற வழிவகை செய்தவள் திரெளபதி. இன்னும்சில ஆன்மிகப் பெரியோர்கள், திரௌபதியை மகாலட்சுமியின் அம்சம் என்றே போற்றுவார்கள். காலங்களைக் கடந்து இன்றும் இந்தியப் பெண்களின் மனதில் வீரத் தெய்வமாக விளங்கும் திரௌபதியம்மனை நாமும் வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுவோம்.

எப்படிச் செல்வது?: செஞ்சி வட்டம், தேவதானாம்பேட்டை கிராமத்தில் அமைந்திருக் கிறது, அருள்மிகு திரெளபதியம்மன் ஆலயம்.

செஞ்சியிலிருந்து ஆலம்பூண்டி சென்று, அங்கிருந்து மழவந்தாங்கல் செல்லும் ரோட்டில் பயணித்தால், சுமார் 7 கி.மீ தொலைவில் இருக்கிறது தேவதானாம்பேட்டை. கிராமத்தின் முக்கிய சாலையிலேயே அமைந்திருக்கிறது, அம்மனின் ஆலயம்.

படங்கள்: கா.முரளி