திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?

கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?

‘காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்படம்: மஹி தங்கம்

இஷ்டதெய்வம் என்பது அவசியம்தானா?  இஷ்டதெய்வத்தை வழிபடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலன் என்ன?

-சி.லட்சுமி, சென்னை - 24   

கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?

‘ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி’ என்பது வேத வாக்கு. பரம்பொருள் என்பது ஒன்றுதான். எனினும் ஞானியர் அதைப் பலவாறாகக் கூறுகிறார்கள். நாம் நமக்கு இஷ்டமான ஒரு செயலைச் செய்யும்போது, மிகவும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்வோம். அதனால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலனும் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதும்கூட.

நமக்குப் பிடித்த இறைவனின் வடிவத்தை வழிபடுவதுதான் இஷ்ட தெய்வ வழிபாடு. இஷ்டதெய்வத்தை வழிபடும்போது, நம்முடைய மனம் வழிபாட்டில் ஆத்மார்த்தமாக ஈடுபடுகிறது. அதனால் நமக்கு உடனடியான பலனும் கிடைக்கிறது. ஒருவருக்கு அம்பிகை இஷ்டதெய்வமாக இருக்கலாம்; முருகன் ஒருவருக்கு இஷ்டதெய்வமாக இருக்கலாம்; விநாயகரை ஒருவர் இஷ்டதெய்வமாக வழிபடலாம்; கிருஷ்ணர் ஒருவருக்கு இஷ்டதெய்வமாக இருக்கலாம்.

ஆனால், சாஸ்திரப்படி அமைந்த இறைவன் திருவடிவங்களைத்தான் நாம் இஷ்டதெய்வமாக வழிபடவேண்டுமே தவிர, கம்ப்யூட்டருடன் இருக்கும் விநாயகர், செல்போன் பேசும் கிருஷ்ணர் போன்ற சாஸ்திர சம்மதம் இல்லாத வடிவங்களை நாம் இஷ்டதெய்வமாக வழிபடக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.

குலதெய்வ வழிபாடு அவசியம்தானா? தங்களின் குலதெய்வம் எது என்பது தெரியாதவர்கள் என்ன செய்வது?

- எம்.சுப்பிரமணியன், திருச்செந்தூர்


குலதெய்வ வழிபாடு ஒவ்வொருவருக்கும் அவசியம்தான். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப டாக்டர் இருப்பதைப் போல், குலதெய்வமும் கண்டிப்பாக இருக்கும். குலதெய்வம் சத்திய சொரூபம். முக்காலமும் நம்மைக் காப்பாற்றும். இன்றைக்கு தனித்தனி குடும்பமாகப் பிரிந்து விட்டாலும், குலதெய்வத்துடனான தொடர்பு இருக்கவே செய்கிறது.

ஒருவருடைய குலதெய்வம் என்பது, அவருடைய சொந்த கிராமத்தில் இருக்கிற காவல்தெய்வம்தான். குலதெய்வக் கோயில் பெரும்பாலும் கிராமத்தின் எல்லையில் அல்லது காட்டுப்பகுதியில்தான் அமைந்திருக்கும். குலதெய்வம் பற்றித் தெரியாதவர்கள் சற்று முயற்சி செய்தால், சொந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர் களிடம் கேட்டால், கண்டிப்பாகத் தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?அப்படியும் குலதெய்வம் குறித்து அறியமுடியாத வர்கள், அதற்காகக் கவலைப்படவேண்டாம். அமாவாசை, ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் அல்லது அவரவர் உணவு முறைப்படி உணவு தயாரித்து, மொட்டை மாடியில் தூய்மை யான இடத்தில் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் குலதேவதாப்யோ நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி நைவேத்தியம் செய்யவேண்டும். பிறகு, கொஞ்சம் பிரசாதத்தை நீங்கள் உண்பதுடன், மற்றவர்களுக்கும் தானம் கொடுக்கவேண்டும்.

இப்படி, நம்மால் முடியும்போதெல்லாம் செய்து வந்தால், குலதெய்வத்தின் அருள் நமக்குக் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். நம்முடைய சந்ததியினருக்கும் குலதெய்வத்தின் அருள் தொடரும். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த எளிய  பரிகாரத்தைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

வீட்டுப் பூஜையறையிலும் சரி, பெண்ணின் திருமணத் தின்போது கொடுக்கப்படும் சீர்வரிசையிலும் சரி காமாட்சி அம்மன் விளக்குக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

- எஸ்.சகுந்தலா, சிவசைலம்

‘கா’ என்றால் சரஸ்வதி; ‘மா’ என்றால் லட்சுமி.  `அட்சி' என்றால் கண்கள். சரஸ்வதி, லட்சுமி ஆகியோரைக் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு, பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் வேண்டும். அவற்றை நமக்கு அருள்பவள்தான் காமாட்சி.

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை  - விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி. எனவே, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும்போது, நம்முடைய வீட்டில் சகல மங்கலங்களும் நிறைவதுடன், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவும் நமக்குக் கிடைக்கும்.

நான் தூங்கும்போது, ஏதேதோ கனவுகள் வந்து அச்சமூட்டுவதுடன் உறக்கமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா?

- ஆர்.ஜமுனா, பெங்களூர்


கவலை வேண்டாம். தினமும் படுக்கச் செல்வதற்கு முன்பு முகம், கை கால் அலம்பிக் கொண்டு, நெற்றியில் விபூதி தரித்துக்கொண்டு, இறைவனைத் தியானித்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். கனவுத் தொல்லைகள் இருக்காது. படுக்கையறையில் சுவாமி படம் வைத்துக் கொள்வதும் நல்லது. மேலும்,

‘யாதேவீ ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


என்ற ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வதும் கெட்ட கனவுகள் வராமல் தடுக்கும்.

ராகுகாலம் - எமகண்டம் பார்ப்பது, பூஜைக்குத் தேங்காய் உடைக்கும்போது கோணலாக உடைந் தால் அபசகுனமாக நினைப்பது போன்றவை மூட நம்பிக்கைகள்தானே?

- எஸ்.நமசிவாயம், செங்கல்பட்டு


நீங்கள் கேட்டதில் ராகுகாலம், எமகண்டம் பார்ப்பதெல்லாம் மூடநம்பிக்கையில் சேராது. ராகுகாலம், எமகண்டம் எல்லாம் ஜோதிட சாஸ்திரத்தின் அங்கங்கள். ஜோதிட சாஸ்திரம்,  ரிஷிகளால் கண்டறியப்பட்ட வேத சாஸ்திரத்தின் கண்களைப் போன்றது. ரிஷிகள் நம்முடைய நன்மைக்குத்தான் சில விஷயங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அவற்றைக் கடைப்பிடிப்பது  முக்கியம்.

ஒருநாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. இந்த மூன்று மணிநேரத்தைத் தவிர்த்துவிடுவதால், நமக்கு பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இங்கே முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றை முக்கியமான காரியங்களைத் தொடங்குவதற்குத் தான் பார்க்கவேண்டுமே தவிர, அன்றாடப் பணிகளுடன் தொடர்புப்படுத்தக் கூடாது.

சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ‘நான் ராகுகாலத்தில் செய்த காரியம் நன்றாகத்தான் முடிந்தது’ என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அந்தக் காரியத்தால் கிடைத்திருக்கக்கூடிய பலனில் சிறிதளவுதான் கிடைத்திருக்கும்.

பூஜை  செய்யும்போது, தேங்காய் கோணலாக உடைந்தாலோ அல்லது அழுகியிருந்தாலோ அதை அசுப சகுனமாகப் பார்க்கவேண்டாம். தேங்காய் கோணலாக உடைவதும் அழுகிப்போய் இருப்பதும் இயல்பான விஷயங்களே. தேங்காய் அழுகியிருந்தால், வேறு ஒரு தேங்காயை உடைத்து பூஜையை நிறைவுசெய்யலாம்.  

கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்?

ஏதேனும் ஒரு காரியத்தின் நிமித்தமாகச் சகுனம் பார்ப்பதற்குத் தேங்காய் உடைக்கும்போது, அது அழுகியிருந்தாலோ அல்லது கோணலாக உடைந்தாலோதான் அசுப சகுனமாகக் கருதவேண்டும். அப்போது, குறிப்பிட்ட காரியத் தைத் தவிர்த்துவிடலாம். அவசியமான காரியமாக இருந்தால், சிறிது காலம் தாழ்த்தி கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு செய்யலாம்.

பெண் சாபம் பொல்லாதது, பெண் பாவம் பொல்லாதது என்கிறார்கள். பெண் சாபமோ அல்லது பெண் பாவமோ எதனால் ஏற்படுகிறது? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன?

- எஸ்.தியாகராஜன், திருவாரூர்


பெண் எல்லாம்வல்ல பராசக்தியின் அம்சம். பெண்களின் உருவத்தில் இருப்பவள் அந்த ஆதிசக்தியேதான். ‘ஸ்த்ரீய: சமஸ்தா ஸகலா ஜகத்சு’ என்கிறது சாஸ்திரம்.

உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் பரா சக்தியின் அம்சம். எனவே, பெண்கள் பூஜிக்கப் படும் இடம்தான் வசிப்பதற்கு ஏற்ற இடம்.

பெண்களைத் துன்புறுத்தும் வீடுகளில் எல்லா ஐஸ்வர்யங்களும் நீங்கிவிடும். பெண்கள் சிந்தும் கண்ணீர் பூமியில் விழுந்தால், அந்த இடம் மயானமாகிவிடும். எனவே, பெண்களைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வோர் ஆணின் கடமையாகும். 

ஒரு குடும்பத்தில் பெண் சாபம் இருந்தால், அந்தக் குடும்பத்தில் அடுக்கடுக்கான துன்பங்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து விடுபட, பெண்களை முன்னிறுத்திச் செய்யப்படும் கன்யா பூஜை, சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை போன்றவற்றை முடிந்த அளவு அடிக்கடி செய்ய வேண்டும். அதற்காகக் கடன் வாங்கிச் செய்யக் கூடாது. அப்படித் தொடர்ந்து செய்தால், பெண் சாபம் காலப்போக்கில் நீங்கிவிடும்.

கடவுள் அன்பே வடிவானவர் என்று சொல்கிறோம். கடவுள் அன்பின் வடிவமாக இருப்பவர் என்றால், அவரு டைய கைகளில் ஆயுதங்கள் இருப்பது எதற்காக?

- ஆர்.வெங்கடாசலம், திருநெல்வேலி


கடவுள் அன்பே வடிவமானவர்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேநேரம், அமைதியை நிலைநாட்ட ஆயுதங்கள் தேவைதான். தேவி மகாத்மியத்தில், ‘தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாய ச’ என்று சொல்லப்பட்டிருக் கிறது. அசுரர்களை அழிக்கவும், நல்லவர்களைக் காப்பாற்றவும்தான் அனைத்து தெய்வங்களும் ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர்.

ராணுவம், காவல் போன்ற பாதுகாப்புத் துறை களில் இருப்பவர்களுக்கு ஆயுதங்கள் அவசியம் தானே? அப்படித்தான் உலகிலுள்ள நல்லவர்கள் அனைவரையும், அசுர குணம் கொண்டவர் களிடமிருந்து காப்பாற்றுவதற்காக தெய்வங்கள் ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002