மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்!

மண்... மக்கள்... தெய்வங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்!

வெ.நீலகண்டன்

‘கார்வண்ண மேனியும்
கருநீலப் பட்டுடையும்
காலுதிரத் தண்டையும்
கனகமணிச் சல்லடமும்
முப்புரி நூலும்
முத்தழகுப் பல்லும்
முறுக்கிய மீசையும்
உருக்கிய உதடும்
ஓங்கிய கொண்டையும்
ஓந்திபோல் புருவக்கட்டும்
கோழிமுட்டைக் கண்ணழகும்
குலுங்கும் மலைத்தோல்களுடன்
கருநாயின் சங்கிலியும்
கடிவாளக் குதிரையும்
பிடித்த கை அருவாளும்
பின்னல் சாட்டையும் கொண்டு
பெரிய கருப்பண்ண சாமியே
வா... வா... வா... வா... வா... வா...’  

மண்... மக்கள்... தெய்வங்கள்!

டையிடையே உடுக்கை ஒலி உலுக்க, ‘ம்ம்ஞா... ம்ம்ஞா...’ என்று மூச்சுக்கான இடைவெளி விட்டு, பெரிய கருப்ப சுவாமியை மீசைக்கார சாமியாடி, அழைக் கும்போது, நமக்குள்ளே உறைந்தி ருக்கும் கருப்பனும் துடித்தெழு வதை உணரமுடியும். 

அந்த உடுக்கை ஒலிக்கு மயங்கி, சாமியாடியின் உக்கிரக் குரலுக்குப் பணிந்து, அரூபமாக அங்கே உலவிக்கொண்டிருக்கும் கருப்பு, எவரின் உடல் ஏற்பாக இருக்கிறதோ அந்த உடலுக்குள் புகுந்துகொண்டு தன்னை வெளிக்காட்டுகிறார்.

கையில் அரிவாள் ஏந்தியபடி நின்றகோலத்தில் அருள்வதுதான் கருப்பரின் இயல்பு. சில பகுதிகளில்,  தங்கள் கற்பனைக்கேற்ப குதிரையில் அமர்ந்த நிலையிலும், ஒரு காலை மடக்கி அமர்ந்த கோலத்திலும், அரிவாளை ஓங்கிய கோலத்திலும் கருப்பரை உயிர்ப்பிக்கிறார்கள், மண் வார்ப்புக் கலைஞர்கள். 

கருப்பன், வீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்தவன் என்றொரு கதை இருக்கிறது. ராமாயணம் தொடர்பான தொன்மமும் உண்டு. ஐயப்பனோடு இணைந்த ஒரு கதையும் கருப்பனுக்கு இருக்கிறது. அதேநேரம், தங்கள் மண் காக்க உயிர் கொடுத்து, காலகாலத்துக்கும் தங்களின் காவலனாக விளங்கும் மூப்பர்கள் எல்லோரையுமே மக்கள் கருப்பனாகத்தான் கருதுகிறார்கள்.

உப்புத்துறை கருப்பு, உத்தன்ன கருப்பு, கருமாத்தூர் கருப்பு, கறிவேப்பிலைக் கருப்பு, கரையடிக் கருப்பு, முன்னோடிக் கருப்பு,  காங்கேயம் கருப்பு, சின்னக் கருப்பு, சிங்கக் கருப்பு, பூமாலைக் கருப்பு, வெள்ளைக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, சந்தனக் கருப்பு, மாயாண்டிக் கருப்பு, வட்டமலைக் கருப்பு, மனையடிக் கருப்பு, வில்லாளிக் கருப்பு, கோட்டைக் கருப்பு, நொண்டிக் கருப்பு, ஆங்காரக் கருப்பு, அலங்காரக் கருப்பு, வீரக்கருப்பு, வேட்டைக் கருப்பு, குடல்வெட்டிக் கருப்பு, தூண்டிக் கருப்பு, எல்லைக் கருப்பு, வாழையடிக் கருப்பு... இப்படி, 108 கருப்புகள் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இன்னும் பலநூறு கருப்புகள் கிராமங்களில் உலவக்கூடும். 

மண்... மக்கள்... தெய்வங்கள்!

சில கோயில்களில் மனைவி மக்களோடு அமர்ந்திருக்கிறார் கருப்பன். அவரின் மனைவி பெயர் கருப்பாயி. மகன் கண்டன். கருப்பனுக்கு ஒரு தங்கை உண்டு. அவள் பெயர் ராக்காச்சி. ‘ராக்காயி’ என்றும் சொல்வார்கள். ராக்காச்சி, அண்ணனைவிட பெரும் கோபக்காரி. தென்மாவட்டங்களில் சில கிராமங்களில் ராக்காச்சியே தனிக் காவல்தெய்வமாக வீற்றிருக்கிறாள்.

ராக்காச்சி வழிபாடு என்பது, அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்து, அந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்த பெண் தலைவிகளின் படிமமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆண் பால், பெண் பால் கடந்து, தங்கள் காவல்தெய்வங்களை ‘கிராம தேவதைகள்’ என்று பெருமிதமாக அழைக்கிறார்கள் மக்கள். சுதை, பீடம், நடுகல், செங்கல், மரம், புற்று, கம்பம், சூலம், வேல் என  எந்த வடிவத்துக்குள்ளும் தங்களை இருத்திக்கொண்டு ஊருக்குப் பெருஞ்சுவராய் நின்று காவல் காக்கிறார்கள் இந்தக் கிராம தெய்வங்கள்.

கருப்பனும், முனியும், ஐயனாரும், வீரபத்திரரும் கிராமத்தின் எல்லையில் மட்டுமில்லை... ஒவ்வொரு கிராமத்தானின் உயிரோடும், உணர்வோடும் கலந்தே இருக்கிறார்கள். அந்தத் தெய்வங்களின் மரபுத்தொடர்பு அந்த மண்ணில் பிறக்கிற எல்லோருக்குள்ளும் பொதிந்திருக்கிறது. இந்த அமானுஷ்ய பந்தம்தான் எல்லா மாற்றங் களையும் கடந்து, இன்றளவும் கிராம தெய்வ வழிபாட்டை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

கிராமங்களின் வரலாற்றைக் கிராம தேவதைகள்தான் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் அந்த ஊரின் அடையாளமாக, அந்தச் சமூகத்தின் முகவரியாக விளங்குகிறார் கள். அந்த மண்ணின் பண்பாட்டுக்கு வேராகத் திகழ்வதும் அவர்களே.

கிராம தேவதைகளின் ஆன்மா, ஒரு பெரும் குமிழ்போல அரூபமாக அந்தக் கிராமத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அந்த மக்களின் நன்மை தீமைகளில் கலந்துறவாடுகிறது. தன்னை மறந்து தனக்கான பங்கைத் தருவதற்கு தவறிவிட்ட கிராமத்தானின் கனவில் வந்து, ‘என்னை வந்து பாரடா’ என்று ஏதேனும் ஒரு குறியீட்டின் வழி உரிமையோடு உணர்த்துகிறது.  

மண்... மக்கள்... தெய்வங்கள்!

எங்கள் கிராமத்தில் நள்ளிரவில் திடீரென்று நாய்கள் உக்கிரமாகக் குறைக்கும். மல்லிகை வாசனை பரவும். சில நேரங்களில் மணிச்சத்தம் கூடக் கேட்கும். அப்போது விழிப்புத் தட்டிவிட் டால் ‘சில்’லென்று உச்சந்தலையில் தொடங்கி உடம்பெங்கும் அச்சம் பரவும். “கருப்பன் போறான் போலருக்கு” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, எங்கள் அத்தை திரும்பிப் படுத்துக்கொள்ளும். 

மக்களுக்குக்  காவல் தெய்வங்களின் தேவைகள் தெரியும். அவர்களின் பாதைகள் புரியும். அவர்களின் கோபம், சந்தோஷம் அனைத்தையும் மக்கள் உணர்வார்கள். வீடுகள் கட்ட மனை பார்க்கும்போதே, ‘இது கருப்பன் பாதை’, ‘இது முனியன் பாதை’, ‘இது மீனாட்சி பாதை’ என்று சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டுதான் சுவர் எழுப்புவார்கள்.
 
மிரண்டு அழும் குழந்தைகளையும், திடீரென கடுங்காய்ச்சல் அடித்து நொடித்தவனையும், ‘கருப்பனைப் பார்த்துப் பயந்துட்டான்’ என்று கூறி, அவர்கள் மீது ஆக்ரோஷமாக திருநீறு அடித்து, ‘விட்டு விலகுடா கருப்பா’ என்று ஆணையிடுவார் சாமியாடி.  எதிர்மறை சக்திகள் தாக்கி உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கும் போது, ‘பேயி புடிச்சுக்குச்சு போல சாமி’ என்று கிராமதேவதைகளின் காலடியைச் சரணடை வார்கள் கிராமத்து மக்கள். கருப்பனோ, முனியனோ, வீரபத்திரனோ வெகுண்டெழுந்து, உள்ளிருக்கும் ‘பேயை’ அடித்து விரட்டுவதெல்லாம் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நல்ல செயல்களைத் தொடங்கும்முன் பூக்கட் டிப் போட்டுப் பார்ப்பது தொடங்கி, திருமணத் துக்கு முதல் பத்திரிகை வைப்பது வரை, தங்கள் குடும்பத்துப் பெரியவருக்குத் தரும் மரியாதையைக் காவல் தெய்வங்களுக்குத் தருகிறார்கள் மக்கள்.  ‘ஊரில் மழையில்லை...’,  ‘விளைச்சல் சரியில்லை...’,  ‘நிறைய கெட்டச் செயல்கள் நடந்தேறுகின்றன...’  என எதுவாக இருந்தாலும் காவல் தெய்வத்தின் காலடியில் போய் விழுகிறார்கள்.  

நமது வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால், காவல் தெய்வங்கள் குறித்த நம்பிக்கைகள், பயம், மரியாதை, நேசம் எதுவுமே மாறவில்லை.  காரணம், அதுதான் நம் தொன்மம். அதுதான் நம் அடையாளம்.

கிராம தேவதைகள் ஊர்க்காவலர்கள் என்றால், குலதெய்வங்கள் உறவுக்காவலர்கள். வயதான ஓர் உறவுக்காரனைப் பார்க்கச் செல்வதுபோல், தங்கள் தெய்வங்களின் சந்நிதிக்கு உறவுகளோடு போய்த் தங்கி, கதைகள் பேசி, விளையாடி அந்த நிழலிலேயே சாவகாசமாக சமைத்துச் சாப்பிடுவார்கள்.

தங்கள் குலக்காவலனுக்கு அபிசேகம் செய்வித்து, புத்தாடை உடுத்தி, சைவமோ, அசைவமோ அவன் இயல்புக்கேற்ப அமுது படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி, புதிய வேண்டுதல்களை வைத்துத் திரும்புகிற அந்த அனுபவம் தித்திப்பானது.  அடுத்த ஆண்டு வரைக்கும் அது மனதில் ஒட்டி இனித்துக்கொண்டிருக்கும்.

குடும்பத்தில் யாரோ ஒருவரின் உடலில் இறங்கும் தெய்வம், அந்த நள்ளிரவில் பெருங் குரலெடுத்து சத்தமிட்டபடி, தலைமுடி பற்றி விபூதி அடித்து, ஒவ்வொருவருடனுமான நேசத்தையும் அன்பையும் காட்டி, நல் வார்த்தைகள் சொல்லும். அந்த வார்த்தைகளே  வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கான நம்பிக்கை. 

செட்டிநாட்டில், குலதெய்வக் கோயிலை விசாரித்த பிறகே திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். வாழ்விடம் பிடுங்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலும்கூட, பல பழங்குடிகள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை விட்டுக்கொடுக்காமல் காக்கிறார்கள். உதாரணத்துக்கு இருளர்களின் கன்னியம்மா வழிபாடு. 

இருளர்கள் இப்போது மலைப்பகுதி களிலும், சமவெளிகளிலும் வசிக்கிறார்கள். நீலகிரி மலையிலும், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங் களிலும் பெருமளவு இருளர்கள் வசிக்கிறார்கள். மலையில் வசிப்பவர்களுக்கும் சமவெளியில் வசிப்பவர்களும் பண்பாட்டு அளவில் பல வேறுபாடுகள் உண்டு. ஆனால், அவர்கள் இணையும் ஒற்றைப்புள்ளி, கன்னியம்மா வழிபாடு.

இருளர் மக்களின் குலதெய்வம் - ஏழு கன்னிகள்.   இந்தக் கன்னிமார்களை ‘ஆயா’ என்று அன்போடு அழைத்து வழிபடும் இருளர்கள், தாங்கள் குடியிருக்கும் எல்லா ஊர்களிலும் ஏழு கன்னிகளுக்குச் சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபடுகிறார்கள்.

நாகக்கன்னி, மாங்கன்னி, தேகக்கன்னி, இளைய கன்னி, எலுமிச்சங்கன்னி, நார்த்தங்கன்னி, கடல்கன்னி  ஆகியோரே ஏழு கன்னிகள். கடைசிக் கன்னியான இளைய கன்னியை மையமாக வைத்து எழுவரும் இருளர்களின் குடிலோரம் அமர்ந்து அவர்களுக்கு நல்வாக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழு கன்னிமார்களுக்கும் இருளர்களுக்குமான தொடர்பு குறித்து இரண்டு கதைகள் நிலவுகின்றன.

‘ஏழு கன்னியரும் தினந்தோறும் வனப்பகுதியில் ஓடும்  ஒரு சுனைக்கு வந்து நீராடி மகிழ்வது வழக்கம். ஒருநாள், அப்பகுதியில் வேட்டையாட வந்த இருளர் ஒருவர், ஏழு கன்னியரில் இளைய கன்னியின் அழகில் மயங்கினார். அவளை எப்படியேனும் மணம் செய்து கொள்ளத் துடித்தார்.

அவளது கவனத்தை ஈர்ப்பதற்காக, அவள் கரையில் சுருட்டி வைத்திருந்த ஆடையைக் கவர்ந்துகொண்டு ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். குளித்துக் கரையேறிய இளைய கன்னி, தன் ஆடைகளைக் காணாமல் தவித்தாள். பின்பு, மானுடன் ஒருவன் தனது ஆடைகளைக் கவர்ந்து சென்றதைப் புரிந்துகொண்டு, நீரில் இறங்கி நின்றுகொண்டு, “மானுடா, ஏன் என் உடையை எடுத்துச் சென்றாய்?” என்று கேட்டாள்.

“கன்னி... உன் அழகில் மயங்கினேன். உன்னை மணம் முடிக்க விரும்புகிறேன்” என்று இருளர் சொல்ல, “நீ மானுடன். நான் தேவலோகக் கன்னி. நமக்குள் அப்படியான உறவுகள் தகாது'' என்று இளைய கன்னி எடுத்துக் கூறினாள். ஆனால் இருளரோ “இல்லை தேவி! உன்னையே மணப்பேன்” என்று உறுதியாக நின்றார்.

“சரி... உனக்கு ஒரு நாள் அவகாசம். நாளை மண் சட்டியில்  இளம் ஆட்டுத்தோல் கட்டி, அந்த மேளத்தில் தாளம் எழுப்பியபடி, மண்பாண்ட சாம்பிராணித் தட்டில் மணக்க மணக்க குங்கிலியம் இட்டபடி என்னைக் கூப்பிடு. அப்போது வருகிறேன்” என்று இளைய கன்னி கூற,  இருளர் அவளின் ஆடையைக் கொடுத்தார்.

மறுநாள், அவன் சொன்ன படியே வனத்துக்குள் சென்று, “இளைய கன்னியே வா... இளைய கன்னியே வா..” என்றபடி தவமியற் றினார் இருளர். அப்போது ஏழு கன்னியரும் அவர் முன் தோன்றி, “உனக்குத் தாய் போன்றவர்கள் நாங்கள். நீ எங்கள் பிள்ளை. எப்போதும் உன் உடனிருப்போம். உன் தவறான எண்ணத்தை மாற் றிக் கொண்டு எங்களைத் தாயாகக் கருதுவாய்” என்று கூறி, அவரை தங்களோடு இணைத்துக் கொண் டார்கள்  என்று முடிகிறது ஒரு கதை. இன்னொரு  கதை,  இருளர் களின் தலைவன் கோவனோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது.

‘கோவன் தீரத்தோடு தன் பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு ஏழு பெண் மக்கள். தேவதைகளைப் போல உலவித் திரிந்த அவர்களுக்கு ஒரு சோதனைக்காலம் வந்தது. கோவ தேசத்தை அழித்து, அங்கிருந்த வளத்தைக் கவர எதிரிகள் நாள் குறித்தார்கள். பெரும்படை நாட்டுக்குள் புகுந்தது. வீரர் கள் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். கண்ணில்பட்ட பெண்களும் சீரழிக்கப்பட்டார்கள். எதிரிகளின் கரம் ஓங்கத் தொடங் கியது. கோவன் கொலை செய்யப்பட்டான்.

அச்சமுற்ற கோவனின் ஏழு மக்களும் மலையுச்சிக்குச் சென்றார்கள். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். கோவனின் வழி வந்தவர்கள் அந்த ஏழு கன்னியர்களையும் தங்கள் தெய்வங் களாக கருதி வழிபடத் தொடங் கினார்கள்.

இப்படி எல்லாக் கிராம தெய்வங் களுக்குமே ஒரு வரலாறு, தொன்மம் இருக்கின்றன. நம்பிமாரின் தோட்டத் தில் வாழைக்குழையை வெட்டிச் சாப்பிட்ட குற்றத்துக்காக, கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்யப் பட்டவள் தான் குலைவாழை இசக்கி.

தம் முரட்டுக்கணவனை குழந்தை யைப் போல பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருந்த பிச்சா யியை, அவளின் அன்பை அருமையை உணராமல் அவளைக் கொலை செய்தான் கணவன் வீரய்யா. பிச்சாயி தெய்வநிலை அடைந்தாள்.

பால்ய விவாகம் செய்விக்கப்பட்டு, ‘இதுதான் இல்லற வாழ்க்கை’ என்று உணருமுன்னே கணவன் இறந்துபோக, அவன்கூடவே சிதையேறி உயிர்விட்ட நல்லம்மாவை, ‘தீக்குளித்த அம்மன்’ என்று வணங்கத் தொடங்கினார்கள் மக்கள். 

பல ஆண் தெய்வங்களின் கதையும் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

உறவுப் பெண்ணைக் காதலித்த குற்றத்துக்காக கொலையுண்ட முண்டுசாமி, `வண்ணார மாடன்' எனும் திருப்பெயரோடு காவல் தெய்வமானார். தன்னையே கிராமத் துக்கு ஒப்புக்கொடுத்து, தீவட்டிக் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கசமாட சாமி, மக்கள் வணங்கும் தெய்வமானார்.

பெண் கொடுக்கல் வாங்கல் தகராறில் மரணித்த வெங்கலராசன், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காவல் தெய்வமாக, சில குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார்.

இந்தக் கதைகள் எல்லாம் ஓலைச் சுவடிகளாக, வாய்வழிக் கதைகளாக, வில்லுப்பாட்டுகளாக கிராமங்களில் மிச்சமிருக்கின்றன. அவற்றைத் தேடியெடுப்போம்!

- மண் மணக்கும்... 

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

மண்... மக்கள்... தெய்வங்கள்!

‘சங்கற்பங்கள்’

‘பொ
ழுது வீணே கழிய விடங் கொடேன். லௌகிகக் காரியங்களை ஊக்கத் துடனும் மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். மறைத்தும் தற்புகழ்ச்சிப் பாராட்டுதல் விரும்பேன். மூடரின் மனதில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன். சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயங்குமாறு சூழ்வேன். பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தால் நாய் பிழைப்பென்று கொள்வேன்.எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சிந்தனை இவற்றோடிருப்பேன்.’

- மகாகவி பாரதியின் சங்கற்பங்கள்.