Published:Updated:

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

முன்னூர் கோ.ரமேஷ்

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

முன்னூர் கோ.ரமேஷ்

Published:Updated:
கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

றைவன், தான் படைத்த ஜீவராசி களிடம் எந்த பேதமும் பார்ப்பதில்லை. ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு மட்டு மல்லாமல், தன்னை உள்ளன்போடு வழிபடும் அனைத்து ஜீவன்களுக்கும் அருள்புரிபவர்.

மனிதர்கள் மட்டுமின்றி ஜீவராசிகள்  பலவும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பூனை ஒன்று வழிபட்டு பேறு பெற்ற தலம்தான், ஸ்ரீமுத்தாம்பிகையுடன்  ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் கொண்டிருக் கும் வில்லியப்பாக்கம். 

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

இந்தத் தலத்தில் பூனை மட்டுமின்றி, வேடன் ஒருவனும் வழிபட்டு சிவனரு ளைப் பெற்று மகிழ்ந்திருக்கிறான்.

அந்தத் திருக்கதை...

சிவகணங்களில் முதன்மையானவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானே இவருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்து வைத்ததால், சைவ ஆசார்யர்களில் முதல் குரு என்ற பேறும் பெற்றவர்.

நந்தியெம்பெருமான் நாள்தோறும் செய்யும் சிவபூஜைக்கு அவரின் சீடர்களான காந்தனும் மகா காந்தனும் உதவி செய்வது வழக்கம்.

ஒருநாள், சீடர்கள் இருவரும் சிவ பூஜைக்கு மலர் பறிப்பதற்காகச் சென் றனர். நந்தவனத்தின் அருகிலிருந்த தாமரைக் குளத்தில் பூத்திருந்த வெண் தாமரை மலர்களைப் பறித்து, கூடையில் நிரப்பிக்கொண்டு திரும்பும்போது, ஒரு மலர் குளத்திலும் மற்றொரு மலர் தரையிலுமாக விழுந்தன. குளத்தில் விழுந்தது மீனாகவும், கரையில் விழுந்தது கிளியாகவும் மாறியது.

இந்த அதிசயத்தைக் கண்ட காந்தனும் மகாகாந்தனும், மீண்டும் மீண்டும் மலர் களைத் தவறவிட்டு, அவை மீனாகவும் கிளியாகவும் மாறுவதைக் கண்டு குதூகலித்தபடி விளையாடத் துவங்கினர்.

மலர் பறிக்கச் சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் திரும்பி வராததால், நந்திதேவர் அவர்களைத் தேடிக்கொண்டு  அங்கேயே வந்துவிட்டார். சீடர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருப்ப தைக் கண்டவர், கோபம் அவர்களைச் சபித்துவிட்டார். நந்திதேவரைக் கண்டதும் பூனை போல் விழித்துக்கொண்டிருந்த காந்தனைப் பூனையாக மாறும்படியும், கையில் கோலுடன் இருந்த மகா காந்தனை வேடனாக மாறும்படியும் சபித்தார்.

பின்னர், தங்களது தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட சீடர்களிடம் இரக்கம் கொண்டவர், சாப விமோசனத்துக்கான வழியையும் வழங்கினார். ``நீங்கள் இருவரும் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கு திசையில் உள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடி,  அதன் அருகில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்ற அகத்தீஸ்வரருக்கு பக்தியோடு பூஜை செய்யவேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாதபடி, தனித் தனியாக வழிபடவேண்டும். ஈசன் அருளால் இருவரும் நேருக்குநேர் சந்திக்கும்போது, உங்களின் சாபம் நீங்கி என்னை அடைவீர்கள்’’ என்று கூறினார்.

சாபத்தின்படி பூனையாக மாறிய காந்தனும், வேடனாக மாறிய மகாகாந்தனும் நந்திதேவர் குறிப்பிட்ட தலத்தை அடைந்தனர்.  ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பில்லாதபடி தனித்தனியே அங்கிருந்த சிவலிங்கத்தை அனுதினமும் பூஜித்து வந்தனர். சாப விமோசனத்துக்கான காலமும் கனிந்தது.

ஒருநாள் புண்டரீக புஷ்கரணியில் நீராடிவிட்டு, சிவனாரைப் பூஜிக்கச் சென்றான் வேடன் (மகாகாந்தன்). அப்போது, தனக்கு முன்பாக வேறு எவரோ சிவனாருக்குப் பலவித புஷ்பங்களைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.  ‘ஆளரவமற்ற இந்தக் காட்டுப் பகுதியில் தன்னை மீறி யார் பூஜை செய்திருக்க முடியும்?’ என்று யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை.

அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து பூஜை செய்ய வருவது யார் என்பதைக் கண்டறிய முடிவு செய்தான். அதன்படி இரவு துவங்கியதும் அங்கு வந்து, சிவலிங்கத்துக்கு அருகிலிருந்த சரக் கொன்றை மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்துகொண்டு கண்காணிக்க ஆரம்பித்தான். அதிகாலைப் பொழுதில் ஒரு பூனை ஈசனுக்கு மலர்களைத் தூவி பூஜை செய்தது. அதைக் கண்ட வேடன், அந்தப் பூனையைப் பிடிப்பதற்காக மரத்திலிருந்து வேகமாக கீழே குதித்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்புக்கு அஞ்சிய பூனை அங்கிருந்து வேகமாக ஓடத் தொடங்கியது.

வேடன், பூனையைக் குறிவைத்து அம்பை எய்தான். அந்தத் தருணத்தில் பூனை சற்றே விலகியதால், அம்பானது சிவலிங்கத்தின் மேல் பட்டு, லிங்க மூர்த்தத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. வேடன் பதற்றத்துடன் அலற, அந்தச் சத்தம் கேட்டு பூனை திரும்பிப் பார்த்தது. பூனையும் வேடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அக்கணமே அவர்களது சாபம் நீங்கியது. காந்தனும், மகாகாந்தனும் சுயரூபம் பெற்று கயிலையைச் சென்றடைந்தனர்.

அவர்களது சாபத்தைப் போக்கிய ஈசன், ‘கிராத மார்ஜாலீஸ்வரர்’ என்ற திருப்பெயரை ஏற்றார். ‘கிராதன்’ என்பது வேடனையும், ‘மார்ஜாலம்’ என்பது பூனையையும் குறிக்கும். இங்கு அருள்பாலிக்கும் அம்பாள், ‘முத்தாம்பிகை’, ‘மௌத்தி காம்பிகை’ ஆகிய திருப்பெயர்களுடன் திகழ்கிறாள். இந்தக் கோயிலின் கல்வெட்டுகளில் இறைவனின் திருநாமம், ‘திருஅகஸ்தீஸ்வரமுடைய நாய னார்’ என்றும்,  ஊர் ‘வில்லிவாக்கம் என்கிற கங்கைகொண்ட சோழ நல்லூர்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

கி.பி.1257-ல் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில், கோயிலில் விளக்கேற்றுவதற்கு அளிக்கப்பட்ட தானம் குறித்து ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர் கம்பணன் காலத்தில் `கங்கைகொண்ட சோழ நல்லூர்' என்று வழங்கப்பட்ட இந்தத் தலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றி ஒரு  கல்வெட்டும் காணப்படுகின்றன.

திருமால்,  பிரம்மா, கங்கை வழிபட்ட தலம்!


‘தங்களில் பெரியவர் யார்?' என்பது குறித்த சர்ச்சையில், `தானே பெரியவர்' என்று பிரம்மன் திருமால் ஆகிய இருவருக்குள்ளும் எழுந்த கர்வத்தால் ஏற்பட்ட தொஷம் நீங்கிட, அவர்கள் இருவரும் வந்து வழிபட்டு அருள்பெற்ற தலம் இது.

அவர்கள் மட்டுமா? தன்னிடம் சேரும் பாவங்க ளைப் போக்கிக் கொள்வதற்காக, ஈசனின் ஆணையின் படி கங்காதேவியும் இந்தத் தலத்துக்கு வந்தாள். இங்குள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடிப் புனிதம் பெற்றாள் என்கிறது தலபுராணம். கோயிலின் ஸ்தல விருட்சமான சரக்கொன்றை கோயிலுக்குள் உள்ளது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் காட்சி தருகிறது.

மிகவும் புராதனமான இந்தத் திருக்கோயில், இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஜமீன்தாரராக இருந்த சூணாம்பேடு திவான்பகதூர் அருணாசல முதலியாரின் பரம்பரையில் வந்தவர்களால் மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற் றும் சி.இராமகிருஷ்ணா, கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

‘`தேவர்களும், மகரிஷிகளும், மன்னர்களும்பணிந்து வழிபட்ட இறைவன் இவர். இன்றும் தம்மை உள்ளன்போடு வழிபடும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார். குறிப்பாக திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் பக்தர்கள் பலர் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்’’ என்றார், கோயிலின் அர்ச்சகர் சங்கர குருக்கள். நீங்களும் ஒரு முறை இத்தலத்துக்குச் சென்று அகத்தீஸ்வரரைத் தரிசித்து, வாழ்வில் அல்லல்கள் நீங்கிட அருள்பெற்று வாருங்கள்.

படங்கள்: தே.சிலம்பரசன்

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

துர்கையின் எழில் கோலம்!

ந்தக் கோயிலின் வடக்குக் கோஷ்டத்தில் அழகுக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதுர்கை.

வெண்கொற்றக் குடைக்குக் கீழே தோரண அலங்காரம் திகழ, சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி ஆறு திருக்கரங் களுடன், கரண்ட மகுடம் தரித்து, மகிஷனின் சிரத்தின் மீது நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறாள் இந்த அம்பிகை. திருவடிகளுக்கு அருகில் சேடியர் இருவர் சாமரம் வீசுகிறார்கள். வேறெங்கும் காண்பதற்கரிய திருவடிவம் இது என்கிறார்கள்.

இந்தத் துர்கையின் திருவடிவம் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள். தேவியின் சிற்பம் மட்டுமின்றி, சோழர் கட்டடக் கலைக்குச் சான்றாக மேலும்பல சிற்பங்கள் கோயிலில் நேர்த்தியான முறையில் அமைந்துள்ளன.

முன் மண்டபத் தூண் ஒன்றில் திகழும் சரப மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி, கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் உள்ள ஏகபாத மூர்த்தியின் சிற்பம் ஆகியன மிகுந்த கலைநயத்துடன் காட்சி தருகின்றன.

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்!

எங்கிருக்கிறது..?

கா
ஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், சூணாம்பேடு எனும் ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வில்லிப்பாக்கம்.சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் 83-ஏ அரசுப் பேருந்தும், சில தனியார் பேருந்துகளும் சூணாம்பேடு வழியாகச் செல்கின்றன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை. கோயிலின் அருகிலேயே அர்ச்சகரின் வீடும் உள்ளது.