Published:Updated:

மகா பெரியவா!

மகா பெரியவா!
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா!

வீயெஸ்வி - ஓவியங்கள்: கேஷவ்

மகா பெரியவா!

வீயெஸ்வி - ஓவியங்கள்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா!
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா!

சுவாமிநாதனின் தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், பள்ளி மேற்பார்வையாளராகப் பணியில் இருந்தார். அடிக்கடி மாற்றலாகும் வேலை. குடும்பமும் அவர் கூடவே பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இளம் வயதிலேயே விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விக்கிரவாண்டி என்று பல ஊர்களைப் பார்த்து விட்டார் சுவாமிநாதன்.  

மகா பெரியவா!

பிற்காலத்தில் காமகோடி பீடாதிபதியாக நாட்டின் பல பாகங் களுக்கு யாத்திரை செல்வதற்கு, பால பருவத்தில் இந்த ஆரம்பகால பயணங்கள் ஒரு ‘டிரையல் ரன்’ மாதிரியாக இருந்திருக்குமோ!

சுவாமிநாதனுக்கு அப்போது மூன்று வயது. தோள்பட்டை யின் இரு பக்கமும் ஸ்ட்ராப் வைத்துத் தைக்கப்பட்ட அரை நிஜார் போட்டிருந்த பருவம். வீட்டுத் தாழ்வாரத்தில் எப்போதும் ஏதாவது பொம்மை வைத்து விளையாடும் சமர்த்துக் குழந்தை!

ஒரு நாள் ராத்திரி நேரம்...

ஊரே உறங்கிக்கொண்டிருந்த வேளை. சுப்பிரமணிய சாஸ்திரிகள் வீட்டில் குழந்தை சுவாமிநாதன், அம்மாவின் அரவணைப்பில் அசந்து தூங்கிக்கொண்டிருக்க... திடீரென்று ஏதோ சத்தம். பாத்திரங்கள் உருளும் ஒலி.

தூங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து விடுகிறார்கள். பக்கத்து வீட்டிலிருப்பவர் களும் கம்பு, கடப்பாரை என்று கையில் கிடைத்ததைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

விழித்துக்கொண்ட சுவாமி நாதனுக்கு பயம் பற்றிக்கொள்கிறது. கால்கள் நடுங்குகின்றன. அறையில் இருந்த ஸ்டூல் மேல் ஏறிக்கொண்டுவிட, தைரியசாலிகள் நான்கைந்து பேர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, கதவைத் திறந்து உள்ளே போகிறார்கள்.

அறைக்குள், ஒரு மரநாய் தன் தலையை ஒரு பாத்திரத்துக்குள் நுழைத்து சிக்கிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது.

அதைப் பிடித்துத் தூணில் கட்டு கிறார்கள். மரநாயை இருவர் பிடிக்க, பாத்திரத்தை இருவர் பற்றி இழுக்க மரநாய் விடுபடுகிறது. அதற்கு மூச்சுத் திணறுகிறது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மரநாயை இழுத் துப் போய் ஊருக்கு வெளியே விட்டு விடுகிறார்கள். சுவாமிநாதனுக்கு பயம் விலகியது. மகனுக்கு அம்மா தீர்த்தம் கொடுத்தாள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா!

பாத்திரத்தில் வெல்லம் வைக்கப் பட்டிருந்தது. பேராசைப்பட்டு அதை ருசி பார்க்க வந்த மரநாய், தலையைப் பாத்திரத்துக்குள் நுழைத்திருக்கிறது. பின்பு விடுவித்துக்கொள்ள இயலாமல் தவித்திருக்கிறது. பாவம், அந்த ஜீவன் ஆசைப்பட்டது வெல்லத்துக்காக. அது கிடைக்கவில்லை. துன்பம் மட்டுமே மிஞ்சியது. வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் இருந்தவர்களுக்குத் தூக்கம் தடைப்பட்டதுதான் மிச்சம்!

குழந்தையை மடியிலிட்டுக் கொண்ட தாய், ``சுவாமிநாதா... அழியக்கூடிய பொருள்கள் மீது நாம் ஆசைவைக்கவே கூடாது. பாவம், அந்த நாய்... வெல்லத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை கஷ்டம் அனுபவிச்சது பார்த்தியா?” என்று பெரிய தத்துவத்தைப் பிஞ்சு மனதில் புகட்டினாள். சுவாமிநாதனுக்குப் புரிந்தும் புரியாதது போல் இருந்தது. தூக்கம் கண்களைச் செருகியது.

விடியற்காலை மகாலட்சுமி எழுந்து கொண்டுவிட்டாள். வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்டாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்து, நெற்றியில் திலகமிட்டுக்கொண்டு, பூஜை அறையில் ஸ்லோகங்கள் முணுமுணுத்துக் கொண்டே சுவாமி படங்களை புஷ்பங்களால் அலங்கரித்தாள். ஊதுவத்தி ஏற்றினாள்.

கண்களைக் கசக்கிக்கொண்டே வந்த சுவாமிநாதனிடம் மணி எடுத்துக் கொடுத்தாள். கற்பூரத்தை ஏற்றி சுவாமி படங்களுக்குக் காட்டினாள். குளித்து முடித்துவிட்டு வந்த சுப்பிரமணிய சாஸ்திரிகள், தீபத்தை உள்ளங்கையால் தொட்டு, சுவாமிநாதனின் கண்களில் ஒற்றி எடுத்தார்.

காளஹஸ்தியில் நடந்த சதஸ் ஒன்றின்போது, மணி அடித்து தீபாராதனை செய்வதில் புதைந்துள்ள தத்துவத்தை விளக்கியிருக்கிறார் மகா பெரியவர்:

‘தீபாராதனைக்கு முன், திரை போடுவதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. நாம் ஏதேதோ நினைவுகளில் மனதை அலையவிட்டுக் கொண்டிருப்போம். அப்போது சட்டென்று மணியோசைக் கேட்டதும் நம் காதுகளைத் தீட்டிக்கொள்கிறோம். இதர அநாவசிய சத்தங்கள் நம் காதில் விழுவதில்லை. அடுத்த கணம் திரை விலகுகிறது. நம் கண்கள் தேவையற்ற வேறு காட்சிகளைக் காணாதபடி தீபாராதனையின் ஒளி நம் கவனத்தைக் கவருகிறது. 

மகா பெரியவா!

கண்ணும் காதும் ஒரே இடத்தில் லயிப்பதுடன், மனத்தை யும் அதே இடத்தில் நிலைபெறச் செய்வதுதான் (concentration) பூஜையின் பலன். அதனால்தான் கோயில் களிலும் இதர இடங்களிலும் பூஜையின்போது மணியடித்து, கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள்.’

காஞ்சி மகானின் வாழ்க்கையில், இளம் பிராயத்தில் நடந்த இன்னொரு சம்பவம்...

வீட்டினுள் பெண்மணிகள் வேலையில் ஈடுபட்டபடியே ஊர் விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். வாசல் திண்ணையில் கால்களை ஆட்டியபடியே உட்கார்ந்திருந்தான் சுவாமிநாதன். பிஞ்சுக் கால்களில் தங்கக் காப்புகள். தெருவோடு போகும் ஓர் ஆசாமியின் கண்களில் படுகின்றன இந்தக் காப்புகள். அருகில் நெருங்கி வருகிறான் அந்த ஆசாமி.

“என்ன பாப்பா... இங்க உட்கார்ந்துட்டு என்ன பண்றே...?” என்ற படியே காப்பு களைத் தொட்டுப்பார்க்கிறான்.

கொக்கிகள் தளர்ந்திருப்பது இளம் சுவாமிநாதனுக்குப் புரிகிறது.

“மாமா... இதை எடுத்துண்டு போய் சரி செய்துண்டு வாங்கோ... ரொம்ப தொளதொளன்னு இருக்கு...” என்று மழலையில் சொல்லி காப்புகளைக் கழற்றி அந்த ஆசாமியிடம் கொடுக்க, அவனும் அதைப் பெற்றுக்கொண்டு, ‘கவலை விட்டதடா சாமி’ என்று வேகமாக நடந்தான்!

சுவாமிநாதனுக்கு குஷி தாங்கவில்லை. ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் சென்று, ‘‘அம்மா... வாசல்லே ஒரு மாமா வந்தா. காப்புகளைக் கழற்றி அந்த மாமாகிட்டே தந்துட்டேன். நாளைக்குச் சரிபண்ணி எடுத்துண்டு வரதா சொல்லிட்டுப் போனா. பாவம், அந்த மாமா ரொம்ப நல்லவா” என்று சொல்ல, ‘‘அடக் கடவுளே! யாரோ பாதகன் இப்படிக் குழந்தையை ஏமாத்திட்டானே...” என்று பெற்றவர்கள் பதறினார்கள். தெருத் தெருவாக ஓடித் தேடினார்கள். பொன்னுடன் மறைந்துவிட்டான் அந்த ஆசாமி!

“யாரோ ஒருவன் தெய்வக் குழந்தையிடமிருந்து தங்கக் காப்புகளைப் பறித்துச் சென்றான்... அந்த அபசாரத்துக்குப் பிராயச்சித்தமாகவோ என்னவோ, இன்று பாரெங்கும் உள்ள பக்தர்கள் ஸ்ரீஆசார்ய சுவாமிகளின் திருப்பாதங்களில் பொன்னாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், சிரசில் கனகாபிஷேகம் செய்து மகிழ்கிறார்கள்...” என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பரணீதரன். 

மகா பெரியவா!

மகா பெரியவர் தஞ்சை மாவட்டத்தில் முகாமிட் டிருந்த தருணம் ஒரு பெண்மணியிடம், ‘‘எனக்கு நூறு பவுன் வேண்டும்... சேர்த்துத் தருகிறாயா?” என்று கேட்க, மறுகணமே கழுத்திலிருந்த சங்கிலியை கழற்றிக் கொடுத்ததுடன், ஒரே வாரத்தில் அந்தப் பெண்மணி நூறு பவுன் வசூலித்துத் தந்ததும், சில நாள்களில் அத்தனையும் வேதபண்டிதர்களின் கைகளை அலங்கரிக் கும் தோடாக்களாக மாறியதும் நிஜ வரலாறு.

அது மட்டுமா?

காளஹஸ்தி முகாமுக்கு வந்திருந்த பக்தர்களிடம் ஆளுக்கொரு பவுன் தருமாறு மகா பெரியவா கேட்டிருக் கிறார். நான்கு மாதங்களில் ஆயிரம் பவுன்கள் வந்து குவிந்தன. அவை அத்தனையும் சகஸ்ரநாம மாலையாகக் காஞ்சி காமாட்சி அம்மனை அலங்கரித்தன!

சுவாமிநாதனுக்குப் பிறகு சுப்பிரமணிய ஐயர்-மகாலட்சுமி தம்பதிக்கு அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தன. சுவாமிநாதனை அடுத்து ஒரு பெண் குழந்தை லலிதாம்பா. பின்னர் சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ண மூர்த்தி என்று மூன்று தம்பிகள்.

தவமிருந்து பெற்ற பிள்ளை சுவாமிநாதன், ஊரில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக, சீருடனும் சிறப்புடனும் வளர்ந்தார். நம் கண்ணிலிருந்து மறையும் வரை செல்லத் தாத்தாவாக எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தார் பெரியவா!

(வளரும்) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism