திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

பனையபுரம் அதியமான்

ராஜேந்திரசோழனின் மைந்தன் ராஜாதி ராஜன் (கி.பி. 1018-1054) எழுப்பிய  ஆலயம், விஜய நகர மன்னர்கள் காலத்தில் புனரமைப்பு செய்யப் பட்ட திருக்கோயில், காலங்களைக் கடந்தும் கம்பீரமாய் அருள் வழங்கும் ஸ்ரீபசுபதீஸ்வரர் வீற்றிருக்கும் திருக்கோயில், தன்னைத் தேடி வருவோரை வளமோடு வாழவைக்கும் இறைவனின் க்ஷேத்திரம்.  

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

இத்தனை சிறப்புகளோடு, கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில், வையங்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயம்தான், இன்று சிதிலமடைந்து புனரமைப்புக்காகக் காத்திருக்கிறது.

இந்த ஆலயத்தின் தொன்மைச் சிறப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமான ஒரு செய்தியைத் தெரிந்து கொள்வோம்.

‘சித்தமெல்லாம் சிவன் கோயில் திருப்பணியே...’

சித்தமெல்லாம் சிவமே தித்தித்திருக்க, சதா காலமும் சிவப்பணியிலும், சிவனடியார்களின் சேவையிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அடியவர்களை நாம், ‘திருத்தொண்டர்’களாகப் போற்றுகிறோம்; கொண்டாடுகிறோம்.  

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

அப்படி இந்தக் காலத்திலும் சித்தத்தில் சிவமே நிறைந்திருக்க, தான் மேற்கொண்ட சிவத் திருப் பணி முடியும்வரை திருமணமே செய்து கொள்வதில்லை என்ற உன்னத லட்சியத்துடன் வாழும் இளம்பெண் அவர். இன்றைய இளைஞர் களிடம் திருமணம் பற்றிக் கேட்டால், வேலை கிடைத்த பிறகு, அக்கா தங்கைக்குத் திருமணம் ஆன பிறகுதான் தங்களுக்குத் திருமணம் என்று கூறுவார்கள்.

ஆனால், தன் ஊரில் சிதிலமடைந்த சிவன் கோயிலைப் புனரமைப்பு செய்துமுடித்த பின்புதான் தனக்குத் திருமணம் என்று சொல்லும் இளம்பெண்ணைக் கேள்விப்பட்டதுண்டா? அவர்தான் வையங்குடி செல்வி. வண்டார்குழலி என்ற பெண் அடியார்.

வையங்குடி கோயிலை அடுத்துள்ள குடிசை வீடுதான் அவரின் பூர்வீகச் சொத்து. தந்தை விவசாயக் கூலி. தாய் இல்லத்தரசி. தம்பிக்கு  தனியார் கடையொன்றில் வேலை.  வண்டார் குழலியோ எப்போதும் சிவ சிந்தனையிலேயே திளைத்திருப்பவர். சிவத் திருப்பணிகளைச் செய்து முடிப்பதிலேயே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

‘காலா காலத்தில் கல்யாணம் செய்துகொண்டு போகாமல் திருப்பணியாம் திருப்பணி’ என்று பலரும் ஏளனமும் கிண்டலும் செய்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் அவருடைய பலம். மேலும் தாய், தந்தையின் ஆதரவும், ஊர்மக்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும் அவருக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் உள்ளன.

இவருக்கு ஆலயத் திருப்பணியில் அதீத நாட்டம் ஏற்பட்டது பற்றி அவரே சொல்கிறார்:

“சிறு வயதில் என் வீட்டுக்கு அருகிலுள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்துக்கு தினமும் சென்று வழிபடுவேன். பெரியவர்களோடு சேர்ந்து தேவார திருவாசகம் பாடல்களைப் பாடி வழிபடுவது உண்டு. அப்போது என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது.  

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஆலயங்கள், நம் மனதில் நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்து, நம்மை நலமோடும் வளமோடும் வாழவைக்கின்றன. நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த இந்தப் பொக் கிஷங்களை நாம் அழியவிடாமல் பாதுகாத்துப் போற்ற வேண்டும் என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது. 

இதற்காக எங்கள் ஊர் சிவாலயத்தைப் புனரமைப்பு செய்து, குடமுழுக்கு நடத்த விரும்பி னேன். அதற்குள் திருமணம் செய்துகொண்டால், இந்த எண்ணம் தடைப்பட்டுவிடுமே. எனவே,  குடமுழுக்கு முடிந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்தேன். இறைவன் திருவருளால், பெரியோர்கள் மற்றும் அடியார்களின் ஆசியும் ஆதரவும் இருப்பதால், புதிய உத்வேகம் பிறந்துள்ளது” என்றார்.

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’



பெற்றோர் மற்றும் ஊர்மக்களின் ஆதரவு பற்றியும் பெரிதும் சிலாகித்துப் பேசினார்.

‘`என் அம்மாவும் அப்பாவும் எனக்கு மிகுந்த ஊக்கம் தருகிறார்கள். வறுமையிலும் அவர்கள் காட்டும் ஆதரவு அளப்பரியது. மேலும்,  ஊர் மக்களும் என்னுடைய முயற்சிகளுக்குப் பெரிதும் பக்கபலமாக உள்ளனர். வெள்ளாற்றில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. ஊர்மக்களின் பொருளாதாரமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனாலும், அவர்கள் என் முயற்சிகளுக்குத் தரும் ஆதரவு எனக்கு மேலும் உற்சாகத்தைத் தருகிறது’’ என்றார்.

அம்மையும் அப்பனும்!

வையங்குடி கிராமத்தில் நுழையும்போதே நாம் கோயிலை தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய ஆலயம், பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் அமைந்துள்ளன. செங்காவிக் கற்களால் ஆன மண்டபத்தில் நந்தி தேவர் கம்பீரமாக சிவபெருமானை நோக்கியபடி காட்சி தருகிறார்.

நந்தி மண்டபத்தை அடுத்துள்ள இறைவனின் திருக்கோயிலும்கூட, செங்காவிக் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், சுவர்களின் மேல் தளங்களில் செடிகளும் மரங்களும் வேர்விட்டு வளர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக கோயிலின் பொலிவைச் சிதைத்து வருகின்றன. அதைக் காணும் போது, மனம் பதறித் துடித்ததை நம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை.

எனினும் நம் ஐயன் பசுபதீஸ்வரர் மிகச் சாந்நித்தி யத்துடன் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாருடன் காட்சி தரும் இறைவனின் திருவுருவம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. 

கருவறைக்கு முன்புறம் காட்சி தரும் விநாயகர், கருவறைச் சுவரில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேசுவரர் ஆகிய திருவுருவங்கள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரியவருகிறது. சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு முன்பு புற்று முளைத்து, உள்ளே செல்லமுடியாதபடி உள்ளது.

இறைவனின் சந்நிதிக்கு எதிரே தெற்கு நோக்கிய நிலையில், அம்பாள் லோகநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியின் மேல்தளத்திலும் சுவர்களிலும்கூட மரங்களும், செடிகளும் வேர்விட்டு வளர்ந்து மிரட்டுகின்றன. உள்ளே முன்மண்டபம் தாண்டி கருவறையில்,  அன்னை லோகநாயகி எளிய வடிவில் நின்ற நிலையில் அபய, வரத முத்திரை களோடு காட்சி அருள்கிறாள்.

திருப்பணிக்குத் தோள் கொடுப்போம்

சோழ மன்னர்களும், விஜயநகர மன்னர்களும்  திருப்பணி செய்து மகிழ்ந்த இந்த ஆலயம், தன் அடியார்களை வரிசையில் காக்க வைத்து, தரிசனம் தந்த காலம் மாறி,  தற்போது அடியார்கள் வருவார்களா எனக் காத்திருக்கும் நிலைமை, நம்மை வருத்தமுறச் செய்கிறது.

இறைவன், தன் கண்ணசைவில் எதையும் சாதித்துவிடமுடியும் என்றாலும், தனக்காகத் தன் அடியார்கள் எப்படிப் பணி செய்கிறார்கள் என்பதைச் சோதிக்கவே இறைவன் ஆசைப்படுகிறான் என்பது வரலாறும், புராணங்களும் கூறும் உண்மை.

பக்தியும், சமயமும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் இன்றைய காலகட்டத்தில், ஓர் இளம்பெண் சிவத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். ஐயனின் திருக்கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகே திருமணம் என்ற லட்சியத்துடன், தன்னை சிவத் திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் வண்டார்குழலியின் சிவபக்தி மிகவும் போற்றுதலுக்கு உரியது.

நாமும், வண்டார்குழலியின் திருப்பணிக்குப் பொருளுதவி செய்து, நேசக்கரம் நீட்டுவதே சிவபெருமானுக்கும்,  சிவனடியாருக்கும்  செய்யும் சீரிய தொண்டாகும். இந்தப் பணியில் ஈடுபட்டு உதவும்  ஒவ்வோர் அடியாரும், அவர்தம் சந்ததியினரும் இறைவனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம் என்பதில் ஐயமில்லை. திருப்பணிக்குத் தோள்கொடுப்போம்; சிவனருளைப் பெற்று மகிழ்வோம்.

‘திருப்பணி முடிந்தால்தான் திருமணம்!’

சோழர் கல்வெட்டு...

ந்த ஆலயம் ராஜேந்திரசோழனின் மைந்தனான ராஜாதிராஜனின் காலத்தில் (கி.பி. 1018-1054) கட்டப்பட்டுள்ளதை, ஆலயத்தில் உடைந்த நிலையில் கிடைத்த கல்வெட்டு கூறுகிறது.

விநாயகர், அம்மன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர், நந்தி மற்றும் பலிபீடங்கள் கி.பி. 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக விளங்குகின்றன. சிவபெருமானின் திருமேனி மட்டும்  சோழர் காலத்தைச் சேர்ந்தது.

சோழர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம், காலவெள்ளத்தால் சிதிலமடைந்துவிட்டது. பின்னர் கி.பி.15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. எனினும், ஆலய அமைப்பு சோழர் கால பாணியைத் தழுவியதாகவே விளங்குகிறது என தொல்லியல் அறிஞர் கே.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தற்போது காணப்படும் ஆலயம், செங்காவிக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  திட்டக்குடி, அரியலூர் பகுதிகளில் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்கள் பலவும் செங்காவிக் கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.  இதற்குச் சான்றாகத் திட்டக்குடி சிவாலயத்தின் வளாகத்தில் உள்ள தென்முக விநாயகர், செந்தில்நாதன் திருக்கோயில்கள் விளங்குகின்றன. செங்காவிக் கற்கள் கடினத்தன்மை அற்றவை.  இந்தக் கற்கள், மரத்தைச் செதுக்குவது போன்று எளிதில் செதுக்க ஏற்றவையாகும். 

எப்படிச் செல்வது?:

கடலூரிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் ஆவினன்குடி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது வையங்குடி. திட்டக்குடியிலிருந்து  சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. திட்டக்குடியிலிருந்து அனைத்து பேருந்துகளும் ஆவினன்குடி வழியாகச் செல்கின்றன. 

வங்கிக் கணக்கு விவரம்:

PASUBATHEESHWARAR NALA SANGAM

BANK : CANARA BANK

BRANCH : THITTAKUDI

IFSC  ; CNRB0005025

CURRENT A/C NO. 5025 2010 00098