மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?

கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?

காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

‘நான் தினமும் வீட்டில் இறைவனை வழிபடுகிறேன். எனவே, நான் கோயிலுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை’ என்கிறார், என் நண்பர். அவர் சொல்வது சரிதானா?

- எஸ்.விவேகானந்தன், சென்னை - 116


‘உள்ளம் பெருங்கோயில்...’, ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்கவேண்டாம்...’ என்பன முன்னோர் வார்த்தைகள். முன்னோரின் வார்த்தைகளை நாம் மிகவும் கவனிப்பாக அணுகுதல் வேண்டும்.  உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மையை அடையவேண்டும் என்ற நோக் கத்தில், அனுதினமும் எந்தவிதத் தடையுமின்றி அர்ச்சகப் பெருமக்களால் சாஸ்திரங்களில் சொன்னபடி பூஜை நடை பெற்று வரும் தலம்தான் ஆலயம்.

‘பூர்யந்தே ஸர்வ கர்மாணி ஜாயதே ஞானம் ஆத்மனி’ என்றபடி `பூஜா' என்ற சொல்லுக்கு, நமது அனைத்து எண்ணங்களையும் நிறைவேற்றி அருள்வதுடன், நாம் யார், நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் உள்ள தொடர்பு யாது என்பவை குறித்த அறிவை அடையவைக்கும் கிரியை என்று பொருள். மக்கள் வருகிறார்களோ இல்லையோ, ஆலயங்களில் பூஜை தொடர்ந்து நடக்ககும். இந்த பூஜையை, ‘பரார்த்த பூஜை’ என ஆகமம் கூறுகிறது.

நாம் வீட்டில் தினமும் செய்யும் பூஜை, ‘ஆத்மார்த்த பூஜை’. இது பெரும்பாலும் நமக்காகவும், நம்முடைய குடும்பத்தின் நன்மைக்காகவும் நாம் செய்யும் பூஜை. சிலநேரங்களில் நாம் பொது நலனுக்காக பூஜை செய்திருக்கலாம். ஆனால், அவை ஆலயங்களில் செய்யும் பூஜைக்குச் சமமாகாது. எனவே, தாங்கள் வீட்டில் பூஜை செய்வதுடன், ஆலயங்களுக்கும் சென்று இறைவனை தரிசிப்பது, ஆன்மிக வாழ்க்கையில் தாங்கள் உயர்நிலையை அடைய வழிவகுக்கும்.

கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?

திருக்கோயிலில் உள்ள விக்கிரகங்களைத் தீண்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால், பிரதோஷ தினங்களில் நந்தியைத் தொட்டு வணங்குவதும், அவர் காதில் பிரார்த்தனையைச் சொல்வதும் சரியான அணுகுமுறையா?

- வி.நாகராஜன், நாகர்கோவில்


அந்தக் காலத்தில் பயபக்தி என்று கூறுவார்கள். சாஸ்திரங் களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முறையாகக் கடைப் பிடித்து புண்ணியம் சேர்த்துக்கொள்ளவேண்டும். செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்டவற்றைச் செய்து பாவத்தைத் தேடிக்கொள்ளக்கூடாது. அதுதான் உண்மையான பக்தி.

‘நான்’ என்ற எண்ணம் நீங்கி, ‘நாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் சிறப்பான முறையில் பூஜைகள் நடைபெறும் இடமே ஆலயம். நமது ஸனாதன தர்மப்படி, ஆலயத்தை வெறுமனே மக்கள் கூடும் இடமாகப் பார்ப்ப தில்லை; அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்கவேண்டும் என்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இடம் அது. அங்கே, நமது வழிபாடு களை முறையாகச் செய்து, இறைவனின் அருளைப் பெறுவதே சிறப்பானது.

நம்முடைய நம்பிக்கை தர்மத்துக்கு உட்பட்ட தாக இருக்கவேண்டும். அப்போதுதான் முழுமை யான பயனை அடையலாம். எந்த விக்கிரகத்தையும் தொடாமல் பக்தி செலுத்துவதே சிறந்தது. இன்று நாம் நம்முடைய அதிகார பலத்தினாலோ, பொருளாதார பலத்தினாலோ நமக்குத் தகுந்தபடி வழிபாட்டு முறைகளில் மாற்றம் செய்தால், அது நமக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே தீமை விளைவிக்கும். அந்தப் பாவமும் நம்மையே சாரும்.

எனவே, வழிபாட்டு முறைகளை சாஸ்திரங்கள் கூறியபடியே கடைப்பிடிக்க வேண்டும். இன்று நம்மைப் பலர் தவறான வழியில் நடத்துவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், சாஸ்திரங்கள் நம்மை எப்போதும் தவறான வழியில் நடத்துவதில்லை. இதை உணர்ந்து நாம் செயல்படவேண்டும்.

நெருங்கிய உறவினர்கள் இறந்துவிட்டால், குறிப்பிட்ட காலத்துக்குக் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்கிறார் களே... ஏன்?

- க.மணிவண்ணன், திருச்சி


எப்படி மின்சாரக் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டிருக்கின்றனவோ, நம்முடைய நரம்புகள் எப்படி ஒன்றுடன்ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றனவோ, அதேபோல் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிறந்தாலும், நம் முன்னோருடன் தொடர்புடையவர்களே.

இந்தக் காரணத்தால்தான், நம்முடைய உறவினர்களில் யாரேனும்  ஒருவர் இறந்துவிட்டால், குறிப்பிட்ட காலத்துக்கு கோயில்களுக்குச் செல்வதும், வீடுகளில் வழிபாடு செய்வதும் விலக்கப்பட்டுள்ளன.

உறவுகளின் தன்மையைப் பொறுத்து ஒருநாள், மூன்று நாள், பத்து நாள் என்று நாள்களின் எண்ணிக்கை மட்டும் மாறுபடும். இவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

ஆலயங்களில் ஒவ்வொரு தெய்வத்தையும் இத்தனை முறை வலம் வரவேண்டும் என்ற நியதி உள்ளதா?

நவகிரகங்களை வலம் வரும்போது, சிலர் இடமிருந்து வலமாக ஏழு முறையும், வலமிருந்து இடமாக இரண்டு முறையும் சுற்றி வந்து வணங்குகிறார்களே... அப்படிச் செய்யலாமா, அது சரியான அணுகுமுறையா?

- லட்சுமி கிருஷ்ணன், கும்பகோணம்


ஆம்! கோயில்களில் வலம் வரும் முறைகள் பற்றி சில நியதிகள் இருக்கவே செய்கின்றன. சிவபெருமானால் அருளப்பட்ட சிவாகமங்களில், ஆலய வழிபாட்டுமுறை மட்டுமல்லாமல், நகர அமைப்புகள், பிராயச்சித்தங்கள், சில்ப அமைப்பு முறைகள் என்று பல விஷயங்களைப் பற்றி மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரே பரம்பொருள் பல உருவங்கள் தாங்கி வந்து பக்தர்களைக் காப்பாற்றி வருகிறது என்பதைப் பற்றியும், அவற்றின் வகைகளையும், பூஜை முறை களையும் தனித்தனியே விளக்குகின்றன ஞானநூல்கள்.

ஆனால், அந்நியர் ஆதிக்கத்தின் காரணமாகவும்,     அவர்களுக்குப் பிறகும் நம் மதத்தைப் பற்றிய தெளிவை உண்டாக்கும் விதத்திலான ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படாத காரணத்தாலும், நாம் சிறிது காலத்துக்கு நம்முடைய வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது கால சக்கரம் சிறந்த முறையில் சுழல ஆரம்பித்துள்ளது. அனைவரும் ஆன்மிக வழியில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதால், இந்த மாற்றம் நாம் நல்ல நிலையை அடைவதற்கு உதவும்.

ஆலயங்களைப் பிரதட்சிணமாகத்தான் வலம் வரவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது.பிரதோஷ காலங்களில் மட்டும், ‘ஸோம சூத்திர பிரதட்சிணம்’ எனும் பிரதட்சிண முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவகிரகங்களில் ராகு, கேது என்ற சாயா கிரகங்கள் எதிர்மறையில் வலம் வருகின்றன என்பதற்காக, நாமும் அப்படிச் செய்யவேண்டும் என்பதில்லை.

நாம் வலம் வரும்போது, நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் `நம்முடைய பாவங்களை விலக்கிப் புண்ணியத்தைத் தரும்' என்ற முழுமை யான நம்பிக்கையுடன் நாம் கோயில்களில் பிரதட் சிணம் செய்யவேண்டும். பிரதட்சிண வேளையில் நம்முடைய மனதில் இறைச் சிந்தனையைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இருக்கக்கூடாது என்பது முக்கியம்.

‘மரணத்தின்போது நாம் எதை நினைக்கிறோமோ அதுவே மறுபிறவிக்குக் காரணமாகிறது’ என்கிறது கீதை. எனில், மரணத் தறுவாயில் மட்டும், ‘சங்கரா சங்கரா’ என்றால், மோட்சம் கிடைத்துவிடுமா?

- எஸ்.சிவகுமார், சிதம்பரம்


‘இல்லது வாராது, உள்ளது மறையாது’ என்பது சித்தாந்தம். ஒரு வங்கியில் சென்று காசோலை அளித்து பணம் கேட்டீர்களானால், நமது கணக்கில் பணம் இருந்தால்தான் அளிப்பார்கள்.

வாழ்க்கை, கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம். அதை வீணாகப் போக்குவதென்பது, நம்முடைய அடுத்த பிறவிக்கு உதவாது. மரணத் தறுவாயில் திடுமென ஒருவர் இறைச்சிந்தனையில் லயிக்கமுடியாது; இறை நினைப்பு திடீரென்று முளைத்துவிடாது. ‘அப்யாஸேன து கௌந்தேய’ என்றபடி, எதையும் பழக்கத்தினால்தான் அடைய முடியும். அந்தப் பழக்கமும்கூட வைராக்கியம் ஏற்பட்டால் தான் சாத்தியப்படும். வைராக்கியம் என்பது பற்றற்ற தன்மை. அவரவர் விதிப்பயனுக்கு ஏற்பவே கடவுளானவர் பலன்களை அளிப்பார்.

ஆக, ஒருவர் வாழும்போதே இறைச்சிந்தையுடன் வாழ்ந்து, அதனால் ஏற்படும் பழக்கத்தின் விளை வால், இறக்கும்போதும் முழு மனதுடன் ‘சங்கரா சங்கரா’ என்றோ, ‘கோவிந்தா கோவிந்தா’ என்றோ  நினைத்தார்களானால், அவருக்கு பகவான் கீதையில் வாக்கு அளித்தபடி கயிலாயமோ, வைகுண்டமோ கிடைக்கப்பெறுவார்கள்.

கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா?

கனவில் சாமி ஊர்வலத்தைக் கண்டால், கெட்ட சம்பவங்கள் நிகழும் என்கிறார்களே... அப்படியா?

- ஆர்.ஆர்.ராஜகோபால், சென்னை - 5


நம்முடைய ஆழ்மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களும், நம்மைச் சுற்றி நிகழக்கூடிய சம்பவங்களின் தாக்கங்களும் சில நேரம் கனவு களாக வரும்.

கனவில் சுவாமி ஊர்வலம் காண்பது, நல்ல பலனையே தரும். கனவுகளுக்கு `தீக்ஷா காலங்கள்' உண்டு. அதன்படியே நமக்கு வரும் கனவுகளுக்கு உரிய பலன்களைக் கூறவேண்டும். மற்ற காலங்களில் நமக்கு ஏற்படக்கூடிய கனவுகள் சிறப்பானதாக இருப்பின் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். அச்சம் தரக்கூடியதாக இருந்தால், கடவுளை வழிபட்டுவிட்டு, நம் காரியங்களைத் தொடங்கலாம். கடவுள் இருக்க அச்சம் ஏன்?

எங்கள் வீட்டில் சாந்தி ஹோமம் செய்தபோது, ஏற்றி வைத்திருந்த விளக்கு தவறுதலாகக் கீழே விழுந்து அணைந்துவிட்டது. இதனால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா?

- எம்.சிவகுமார், சென்னை - 50


சகுனங்கள் என்பவற்றை, எதேனும் ஒன்றை மனதில் எதிர்பாத்துக் காத்திருக்கும்போது நிகழும் போதுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். மற்ற காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளை வெறும் சம்பவங்களாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

விளக்கு தவறுதலாகக் கீழே விழுந்துவிட்டால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் மனதைத் தளரவிடக் கூடாது. ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று மகாகவி பாரதியார் கூறியபடி, நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை நம்முடைய வினைப்பயன்களின் பரிசே என்று ஏற்றுக்கொண்டு, பக்குவப்பட்ட மனதுடன் நம்முடைய காரியங்களைத் தொடரவேண்டும்.

தெய்வ சாந்நித்யம் வேண்டி தாங்கள் செய்த ஹோமம், அனைத்து மங்கலங்களையும் அளித்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற் றும். கவலையே வேண்டாம்.

கோயிலில் சில பக்தர்கள் அர்ச்சகர் கையால் விபூதி- குங்குமம் போன்றவற்றைத் தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்களே, இது சரிதானா?

- எம்.கருணாமூர்த்தி, சிவகங்கை


‘அர்ச்சகஸ்ய ஹர: ஸாக்ஷாத்’ என்று ஆலயங் களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகப் பெருமக்களை கடவுளின் வடிவமாகப் பார்ப்பதே ஆகமங்கள் கூறியுள்ள மரபு.

அனைத்து அர்ச்சகர்களுக்கும்... அவரவர் நியமப்படி பூஜைகள் செய்துவிட்டு, வரக்கூடிய பக்தர்களின் குறைகளைக் கேட்டு இறைவனிடம் முறையிட்டு, தக்க ஆலோசனைகளைப் பக்தர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தைரியம் அளிப்பது என்பதே கடமை. ஒரு தாயாருக்கு எப்படி அனைத்துக் குழந்தைகளும் ஒன்றோ, அதேபோன்று அர்ச்சகப் பெருமக்களுக்கு அனைத்து ஜீவராசிகளும் ஒன்றே. எனவே, அனைத்து ஜீவராசிகளும் நன்மையை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, பிறகு பக்தர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை நல் வழிப்படுத்துவது நம்முடைய சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியது.

அந்த உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள், பக்தர்களுக்கு தங்கள் அருட்கரங்களால் விபூதி, குங்குமம் இட்டு விடுவது, ‘ஸ்பர்ச தீக்ஷை’ என்று சைவ மரபில் போற்றப்படும் கிரியைக்குச் சமமானது. ஆனால், ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பூஜை நடைமுறைகளுக்கு முரண்படாமலும், நித்திய பூஜைகளுக்குப் பாதிப்பு வராமலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002