மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 3

ரங்க ராஜ்ஜியம்
News
ரங்க ராஜ்ஜியம் ( ரங்க ராஜ்ஜியம் )

இந்திரா சௌந்தர்ராஜன்

குல குரு வசிஷ்டர் சொன்னபடி, ஓர் உன்னத லட்சியத்துக்காக தவமியற்ற முடிவு செய்துவிட்ட அயோத்தி அரசன் இக்ஷ்வாகு, தன்னுடைய கிரீடம், அழகழகான ஆபரணங்கள், கவச குண்டலங்கள் ஆகிய அனைத்தையும் களைந்து, மரவுரி தரித்து, அயோத்தியையொட்டி ஓடும் சரயு நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தவத்தில் மூழ்கினான்.

மன்னனின் தவத்துக்கான காரணம் புரியவில்லையென்றாலும், அரசபோகங் களை விடுத்து, தங்கள் மன்னன் தவ வாழ்க்கை மேற்கொண்டதைக் கண்டு நாடே ஆச்சர்யப்பட்டது. வசிஷ்டர் மூலம் மன்னனின் தவத்துக்கான காரணம் பற்றித் தெரிந்துகொண்ட பிறகோ, நாட்டு மக்களின் ஆச்சர்யம் பல மடங்கு அதிகரித்ததுடன், தங்கள் பொருட்டு மன்னன் தவமிருப்பது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தனர்.

வற்றாத நதிக்காக, குறைவில்லாத ஆயுளுக்காக, உலகத்தையே ஒரு குடையின்கீழ் ஆட்சிபுரியும் விருப்பத்துக்காக என்று சுயநலம் சார்ந்த இச்சைக்கு உரிய எந்த நோக்கமும் இல்லாமல், தன்னைப் போன்றே பூலோகவாசிகள் எல்லோரும் வணங்கி நற்கதி பெற ‘பிரணவாகார விமானமும் பள்ளிகொண்ட மூர்த்தியும் தன் நாட்டுக்கு வேண்டும்’ என்கிற இக்ஷ்வாகுவின் விருப்பம், அதுநாள்வரையில் பூ உலகம் கண்டிராத விருப்பம்!

விளைவு சத்யலோகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. நான்முகனாகிய பிரம்மாவுக்கே முதலில் வியப்புதான் ஏற்பட்டது. விவஸ்வானின் கால நிர்வாககதியில், பூ உலகில் அவன் பெற்ற பிள்ளை, தன் பூஜைக்கு உரிய பிரணாவாகார மூர்த்தத்தைப் பெற முயற்சிசெய்கிறான் என்பது, பிரம்மனுக்குச் சற்று கோபத்தையும் கூட அளித்தது. அதனால் அவர், விவஸ்வானையும் அவன் தந்தையான சூரியனையும் அழைத்து விசாரித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 3

“விவஸ்வான்! உன் பூலோக புத்திரனின் வேட்கை விநோதமாக உள்ளதே?” பிரம்மனின் கேள்விக்குமுன் விவஸ்வான் மௌனம் காத்தான்.

“பதில் சொல் விவஸ்வான்... உனது மௌனத்தை நான் எப்படிப் புரிந்து கொள்வது?”

“என் தலைவனே! இதற்கு நான் என்ன பதில் கூற முடியும்? சகலத்தையும் படைத்த தங்களுக்குத் தெரியாததும் உண்டா?”

“தெரிந்ததால்தான் கேட்கிறேன். இங்கு என் நித்திய வழிபாட்டிலிருக்கும் பெருமானை, தான் அடைய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சரி?  இப்படியோர் எண்ணம்  உன்னாலேயே தோன்றியிருக்க வேண்டும்.”

“ஆம்! எம்பெருமான் குறித்த எண்ணம், இக்ஷ்வாகுவுக்குள் ஒரு விதையாய் விழுந்தது என்னாலேயே. குழந்தைப் பிராயம்தொட்டே பக்தியில் ஈடுபாடுடைய என் பிள்ளையின் மனதில் நான் போட்ட ஒரு விதை, இப்படி ஒரு விருட்சமாகும் என்பது நானே அறியாத ஒன்று எம்பிரானே...”

“அப்படியானால் அந்த விருட்சத்தை நீயே வெட்டிவிடு. உன் பிள்ளை புரியும் தவத்தையும் கலைத்துவிடு.”

“ஐயனே! தாங்களா இப்படிச் சொல்வது?”

“விவஸ்வான்...  காரணமின்றிக்  காரியங்கள் இல்லை. அதைப் புரிந்துகொள். எது எங்கிருக்க வேண்டுமோ அங்குதான் இருக்கலாம். மூர்த்தியின் தரிசனம் வேண்டும் என்று தவமிருந்தால், அதை ஏற்கலாம். தரிசனத்துக்கு உரிய மூர்த்தத்துக்கே ஆசைப்படுவது என்பது மிக அதீதமானது.”

“புரிகிறது பிரபோ! தங்கள் சித்தப்படி நடக்க முயற்சி செய்கிறேன்'' என்ற விவஸ்வான், அடுத்து நேராக தவத்தில் ஆழ்ந்திருக்கும் இக்ஷ்வாகு முன்பாகத்தான் வந்து நின்றான்.

இக்ஷ்வாகுவின் மிக எளிமையான சந்நியாசிக் கோலம் ஆச்சர்யத்தை அளித்ததோடு பிரமிப்பை யும் அளித்தது, விவஸ்வானுக்கு.

பொதுவாக தவம் என்பது மானுடச் செயல்பாடு களிலேயே மகத்தானது. ஒரு பெண்ணானவள் தன் கருவில் ஒரு கருவைச் சுமப்பதைப் போன்றது, ஓர் ஆணானவன் தன் மனதால் தவத்தைச் சுமப்பது! எப்படிக் கருவைக் கலைப்பது பெரும் பாவமோ, அதுபோன்றதே ஒருவர் புரியும் தவத் தைக் கலைப்பதும்.

சாஸ்திர தர்மங்களை உலகுக்குப் போதிக்கும் ஆசான் பொறுப்பில் உள்ள மனுவான விவஸ்வான், அந்த சாஸ்திர நெறியை எண்ணி, தன் புத்திரனின் தவத்தைக் கலைக்கத் தயங்கி நின்றான். அதே நேரம் மனதுக்குள் `மகனே... ஒரு பூச்செடிக்கு ஆசைப்பட வேண்டியவன், பூந்தோட்டத்துக்கே ஆசைப்பட்டது போலாகிவிட்டதே உன் செயல். உனக்குள் இப்படி ஒரு வைராக்கியம் இருப்பதை நானே இப்போதுதான் உணர்கிறேன்' என்று மகனின் தவக்கோலத்தின் முன் நின்று  மறுகியவன் அடுத்து வசிஷ்டரை நாடிச் சென்றான்.

“மகரிஷியே! இக்ஷ்வாகு இப்படி ஒரு தபஸ்வியாக நீங்களே காரணம்” என்றான்.

“உண்மை மனு பிரபு. ஆனால், முதல் காரணம் அந்த மூர்த்தமே. இரண்டாவது காரணம், அதன் பிரதாபம் குறித்துப் பேசிய நீ. மூன்றாவது காரணமே நான்” என்றார் வசிஷ்டர்.

“இருக்கலாம். ஆனால் இந்தத் தவம் தொடர் வதை பிரம்மதேவரே விரும்பவில்லை. தடுத்து நிறுத்தத்தான் என்னை அனுப்பியுள்ளார்.”

“அப்படியா? பிரம்மதேவரே ஒருவனின் தவத் தைக் கலைக்கச் சொல்கிறார் எனில், அது ஆச்சர்யம்... பெரும் ஆச்சர்யம்!”

“ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ... அவர் என் எஜமானர். அவரது கட்டளையைச் செயல்படுத்த வேண்டியது எனது கடமை.”

``அதுவும் சரிதான். ஆனால், தர்மநெறிகளை வகுத்த உனக்குத் தெரியாததை நான் சொல்லப் போவதில்லை. உலகில் தவம் போல் ஒரு பெரும் செயல் கிடையாது. அசைவே வாழ்வு. அந்த அசைவையே துறந்து வாழாமல் வாழ்வதே தவம். அதைக் கலைப்பது பாவம் என்று நெறிகளை வகுத்தவனே அதை மீற முற்படுவது, தவறான முன் உதாரணமாகாதா?” - வசிஷ்டரின் கேள்வி விவஸ்வானை தடுத்துவிட்டது.

“உண்மை மகரிஷி! நீங்கள் சொல்வது பேருண்மை. வகுத்தவனே வகுத்ததை மீறுவது தர்மம் அல்ல.”

“அப்படியானால் என்ன செய்வதாய் உத்தேசம்?”

ரங்க ராஜ்ஜியம் - 3

“என் எஜமானரிடம் மன்னிப்புக் கோரி மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

“எதுவாயினும் இங்கே உனக்கு வேலையில்லை. புறப்படு!” வசிஷ்டர் வானத்தை நோக்கிக் கைகளைக் காட்டினார்.

அப்படியே இக்ஷ்வாகுவை மனதில் எண்ணி, ‘அப்பனே! உனக்கான சோதனை தொடங்கி விட்டது. பிரம்மா அடங்கிப் போகப் போகிறாரா, இல்லை உன்னைத் திரும்பவும் அடக்கப் போகி றாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கிறேன்...' என்று தனக்குள் கூறிக்கொண்டார்!

போன வேகத்தில் திரும்ப வந்து நின்ற விவஸ்வா னைக் கண்ட பிரம்மா, ‘`என்ன நடந்தது? இக்ஷ்வாகு வின் தவம் கலைந்ததா?” என்று எதுவுமே தெரியாதவர் போலக் கேட்டார்.

“ஐயனே! எல்லாம் அறிந்தவர் தாங்கள். தாங்கள் அறிந்திராத ஒன்றை என்னாலும் அறிய முடியாது. நான் அறிந்ததைத் தாங்கள் அறியாமலும் இருக்க முடியாது. அப்படியிருக்க, என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்?

எதன் பொருட்டு ஒருவர் தவம் புரிந்தாலும் அந்தத் தவத்தைக் கலைப்பது பாவமல்லவா? அதை உலகுக்குச் சொன்ன நானே அதைச் செய்ய லாமா?” என்று விவஸ்வான் கேட்டு நிற்க, “தேவலோக நியதிகள் பூலோகத்துக்குப் பொருந் துமா? அந்த நியதிக்கு எதிராகவே ஒருவன் தவம் புரிந்தால், அதை எப்படி அனுமதிக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார் பிரம்மன்.

“என்னை மன்னியுங்கள்! இது விசித்திரச் சிக்கல். இதில் நான் பலியாவது சரியல்ல என்பதை யும் தாங்கள் அறிவீர்கள். எனவே, என்னைக் காத்தருள வேண்டும். தாங்களே நேரில் சென்று தவப் பிரசன்னமாகி இக்ஷ்வாகுவுக்கு எடுத்துக் கூறுங்கள். எல்லாம் நேர்ப்பட்டுவிடும்!” - என்ற விவஸ்வானை சற்று கருணையோடு பார்த்தார் பிரம்மா.

‘`விவஸ்வான், நீ செம்மையாக நடந்து கொண் டாய். உன் மேல் எனக்குக் கோபமில்லை. நீ போக லாம்! எனது பிரசன்னம் என்பதும் எளிதானதல்ல! முற்றும் துறந்தவர்க்கே நான் முன்செல்பவன். ஒரு பற்றோடு தவம் புரிபவர், அதற்கு உரிய விலையைத் தரும்போதுதான் வரமானது ஸித்திக்கும்.” என்ற பிரம்மா அடுத்து சந்தித்தது இந்திரனை!

ஏகபோகங்களையும், அதன் நேர் எதிர்களையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு செயலாற்றி வருப வன், செயலாற்றவும் வேண்டியவன் இந்திரன். ஆனாலும், சில தருணங்களில் இவனது செயல்பாடு களாலேயே தேவருலகம் பல சிக்கல்களைச் சந்திக்கும். பின் அதிலிருந்து மீண்டும் வரும்.

அப்படிப்பட்ட இந்திரனை அழைத்த பிரம்மா ‘‘பூ உலகில் இக்ஷ்வாகு மேற்கொள்ளும் தவம் சத்யலோகத்தைச் சாதாரணமானதாக்கிப் பூ உலகை சத்யலோகமாக மாற்றிவிடும்’’ என்று கூறி, அதை தடுத்து நிறுத்தவேண்டியது இந்திரனின் பொறுப்பு என்றும் கூறினார்.

பிரம்மா அவ்வாறு கூறியது, ஆடத் தெரிந்தவன் காலில் சதங்கையையும் சேர்த்துக் கட்டியதுபோல் ஆக்கிவிட்டது! என்ன செய்தால் இந்த இக்ஷ்வாகு வின் தவம் கலையும் என்று இந்திரன் உடனே யோசிக்கத் தொடங்கிவிட்டான்!

வழக்கம் போல் கடுமையான மழை, புயல் என்றெல்லாம் முயற்சி செய்து பார்த்தான். இக்ஷ்வாகு அசரவில்லை!

அடுத்து `அரம்பையர்' கூட்டம். அவர்களும் ஆட்டம்பாட்டம் என்று இக்ஷ்வாகுவின் மன ஒருமையைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இந்திரனுக்கே சற்று வெட்கமாகவும் தோன்றியது.

இக்ஷ்வாகு ஏதோ மேலெழுந்தவாரியான ஒரு இச்சைக்காக தவமியற்றவில்லை. அவனது தவமானது, உன்னதமான நோக்கத்துக்கானது என்பது புரிந்தது. வாயுவைக்கூட ஸ்தம்பிக்க வைத்து மூச்சுத் திணறடிக்கப் பார்த்தான்.

ஆனால், ஒரு அளவுக்கு மேல் வாயுதேவனே, ‘`இத்தகைய தவசியைக் கொன்ற பாவத்துக்கு ஆளாகி நான் கறைபடத் தயாரில்லை’' என்று கூறிவிட்டதுடன், இக்ஷ்வாகுவைப் படுத்திய பாட்டுக்குப் பிராயச்சித்தமாக தென்றலாய் வீசித் தழுவத் தொடங்கிவிட்டான்.

இக்ஷ்வாகுவின் மனவுறுதி, போக நிஷ்டையில் இருந்த பிரம்மாவுக்கு மட்டுமல்ல, யோக நித்திரைக் காரனான சுந்தர பரந்தாமனுக்கும் தெரியவந்தது!

- தொடரும் ...

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்