
வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
சந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத ஸ்வாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் அடி, நடு, முடி என்று சிறப்பிக்கும்விதம், மூன்று திருத்தலங்களைப் போற்றி பாடியிருக்கிறார் அவர்.
கொந்து வார்குர வடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா...
இந்த வரிகள் குறிப்பிடும் மூன்று தலங்கள் எவை தெரியுமா?
கொந்துவார் குர(வு) அடி - திருவிடைக்கழி.
அடியவர் சிந்தை வாரிஜ நடு - சிறுவாபுரி.
நெறிபல கொண்ட வேதநன் முடி - திருப்போரூர்.
வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மூன்று தலங்களுக்கும் சென்று முருகப்பெருமானை வழிபட்டு

வருவதால், விசேஷ பலன்கள் கிடைக் கும்; வாழ்க்கை வளமாகும் என்பார்கள் பெரியோர்கள். நாமும் தரிசிப்போமா, முத்தான இந்த மூன்று திருத்தலங்களை! பிறவிப்பேறு பெற, வாழ்வில் உயர்நிலையை அடைய இறைவனின் பாதக் கமலங் களைச் சரணடையவேண்டும் என்கின்றன ஞான நூல்கள். நாமும் முருகனின் திருவடியைப் போற்றும் வகையில், திருவிடைக்கழியிலிருந்து தரிசனத்தைத் தொடங்குவோம்.
கொந்துவார் குரவடி - திருவிடைக்கழி
`குரவடி' என்பது `குரா மரத்தின் அடி' என்பதாகும். முருகனின் திருப்பாதங்கள் பதிந்த புண்ணிய பூமி குராவடி எனும் திருவிடைக்கழி.
திருக்கடவூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், தில்லையாடி வழியாகத் திருவிடைக்கழி முருகன் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. காரைக்கால், தரங்கம் பாடி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
சூரபத்மன் மகன் இரண்யாசுரனை சம்ஹரித்த தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு, முருகப்பெருமான் இந்தத் தலத்தில் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் சொல்கிறது. எனவே, சுப்ரமண்யருக்கு முன்புறம் சிறிய ஸ்படிக லிங்கமும், பின்புறம் கருவறையில் பாபநாச லிங் கமும் திகழ்கின்றன.
கருவறையில் சிவகுமாரன் காட்சியளிக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஒரு முகம், இரண்டு கரங் களுடன், சுமார் ஐந்தடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்கிறார் முருகன். பாதங்களில் வீரக் கழல், வலது காலில் பூண் (ஓர் ஆபரணம்), மார்பில் வாகுவலயம், முகமோ சந்திர பிம்பம் - சூரிய பிரகாசம். வலது கரம் அபய முத்திரை காட்ட, இடது கரத்தை இடுப்பில் வைத்த வாறு திகழும் முருகனின் இந்தத் திருக்கோலத்தை. ‘சுப்ரமண்யன்’ என்று ஆகமங்களும், சிற்ப நூல்களும் குறிப்பிடுகின்றன.

கருவறைக்குள் மற்றொரு கருவறையாக முருகனும் சிவனும் காட்சியளிக்கும் அற்புதமான அமைப்பை, இந்தத் திருவிடைக்கழி திருக்கோயிலில் மட்டுமே காண இயலும். இத்திருக்கோயிலில் பாப நாசப் பெருமானுக்கு உரிய அம்பிகை சந்நிதி இல்லை; ஆனால், மூலஸ்தானத்தில் போக சக்தி அம்மன் உண்டு.
முருகப்பெருமான் விரும்பி அணியும் மலர்களில் குரா மலர் குறிப்பிடத்தக்கது. திருவிடைக்கழியின் தலவிருட்சம் குரா மரம். ‘குரா’ என்ற வார்த்தையைத் திருப்பினால் ‘ராகு’ என்று வரும். நவகிரகங்களில் ராகு என்ற கிரகத்துக்கும் குரா மரத்துக்கும் ஓர் அதிசயமான தொடர்பு உண்டு.
திருவிடைக்கழியை `நாக தலம்' என்ற தல புராணம் கூறுகிறது. நாகமாகிய ராகு, இத்தலத்தில் குரா மரத்தடியில் குமரனை வழிபட்டதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து குமரனை வழிபாடு செய்து, ராகு தோஷம் நீங்கப்பெறுகிறார்கள். மேலும், ஜாதகத் தில் ஏழாவது வீடாகிய களத்திர ஸ்தானம் எனும் திருமண வீட்டில் ராகுவால் தோஷம் ஏற்பட்டிருந்தால், அது இந்தக் குராவடிக் குமரனை வழிபாடு செய்வதால் நீங்கும்.
நவ கோள்களின் நாயகனும் அவர்களை ஆட்டுவிப்பவனுமாகிய குமரப்பெருமானே இத்தலத்தில் பிரதானமாக இருப்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. ‘குராவடிக் குமரனைக் கும்பிடுவோர்க்கு அராவின் (ராகுவின்) தோஷம் நீங்கும்’ என்பது பலரும் உணர்ந்த அனுபவம்.
குரா மரத்தருகில் ‘பத்ர லிங்கம்’ எனும் பலிபீடம் உள்ளது. முருகப்பெருமான் குரா மரத்தின் கீழிருந்து தவம் புரிந்ததை உணர்த் தும் வகையில், அர்த்தஜாமத்தில் இந்தப் பலிபீடத்துக்கு முதலில் பூஜை செய்த பிறகே மூலவருக்கு பூஜை செய்வது வழக்கம்.
ஏழாவது எண்ணுக்கும் திருவிடைக்கழி தலத்துக்கும் ஓர் அபூர்வமான தொடர்பு உண்டு. இத்திருக்கோயிலில் இதுவரை நடைபெற்றுள்ள பல்வேறு விழாக்கள், இந்த ஏழாம் எண்ணின் தொடர்புடையதாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் உள்ள குறைபாடு காரணமாக திருமணத் தடை ஏற்பட்டு வருந்தும் அன்பர்கள், அவர்களது ஜன்ம நட்சத்திரம் உள்ள தினத்திலோ, வெள்ளிக் கிழமைகளிலோ அல்லது வாரத்தில் ஏதாவது ஒரு நாளிலோ, இங்கு வந்து ஆலயத்தை 25 முறை மெதுவாக வலம் வருதல் வேண்டும். வலம் வரும் போது சேந்தனார் திருவிசைப்பா மற்றும் திருவிடைக்கழி திருமணப் பிரார்த்தனை பதிகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது விசேஷம்.
வலம் முடித்து, திருவிடைக்கழி முருகனுக்கு அபிஷேக வழிபாடு செய்து முல்லை, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். உளுத்தம் பருப்பு கலந்த தேங்காய் அன்னத்தை நைவேத்தியம் செய்து, சேவார்த்தி களுக்கு வழங்கி பிரார்த்தனை செய்துகொள்ள, விரைவில் திருமணம் கைக்கூடும்.
அடியவர் சிந்தை வாரிஜ நடு சிறுவாபுரி
திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரிக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி. சென்னையிலிருந்து செங்குன்றம், காரணோடை, பஞ்செட்டி வழியாக கும்மிடிப் பூண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 35 கி.மீ. தொலைவில் உள்ளது.நெடுஞ் சாலையி லிருந்து இடதுபுறம் 2 கி.மீ. தூரம் உள்ளே சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
சிறுவாபுரிக்குப் பெயர் வந்த வரலாறு மிகவும் சுவையானது. ராமபிரானின் புதல்வர்களான குசன், லவன் ஆகிய இருவரும், நான்கு வகையான சேனைகளோடு வந்த (தமது தந்தை என்று அறியாமல்) கோதண்டராமனை எதிர்த்துக் களம் கண்ட ஊர் சிறுவாபுரி எனப்படும் சிறுவர் புரி.
சிறுவராகிய குசன், லவன் ஆகிய இருவரும் அம்பு எடுத்து போரிட்ட ஊர் திருக்கள்ளில் (திருக்கண்டலம்). இது, சிறுவாபுரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயிலில் திகழும் கல்வெட்டில் `சிறுவரம்பேடு’ என்ற பெயர் காணப்படுகிறது. ராமனின் புனிதமான திருப் பாதங்கள் பட்ட இடங்கள் இவை என புராணங்கள் சொல்கின்றன.
சிறுவாபுரியில் மிக அற்புதக் கோலத்தில் அருள் கிறார் முருகப்பெருமான். பின் இரு கரங்களில் ஜப மாலையும் கமண்டலமும் திகழ, முன் வலக் கரம் அபயம் காட்டுகிறது; இடக்கரம் இடுப்பில் திகழ்கிறது. இவ்வடிவை சிற்ப நூலார் ‘பிரம்ம சாஸ்தா கோலம்’ என்றழைப்பர். பிரணவப் பொருளை அறியாத பிரம்மனைத் தண்டித்து, சிருஷ்டித் தொழிலை தாமே மேற்கொண்ட திருக் கோலமே பிரம்ம சாஸ்தா (சாத்தன்) வடிவமாகும்.
`சாத்தன்’ என்பதற்கு `தண்டிப்பவன்’ என்றும் பொருள் உண்டு. தொண்டை மண்டலத்தில் அமைந்த பழைமையான முருகன் ஆலயங்கள் மற்றும் சிவாலயங்களில், பிரம்ம சாத்தன் கோலமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருக் கோலத்தை வழிபாடு செய்வதால் பிரம்ம வித்தை யும், ஞான அருளும் பெருகும் என்பது நம்பிக்கை. இதையே இத்தலத்துக்கான திருப்புகழில் ‘புந்தி நிறை அறிவாளன்’ (அண்டர்பதி) என்று அருணகிரியார் போற்றுகிறார்.
சொந்த வீடு பெறும் பிரார்த்தனை நிறைவேறும் அற்புதமான தலம் சிறுவாபுரி. ஆம்! இங்கு வந்து தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு, ‘சொந்த வீடு’ எனும் கனவு நனவாகவும், வீடு, நிலம் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் திருவருள் புரிகிறார் சிறுவாபுரி முருகன்.
வேத நன்முடி - திருப்போரூர்
முருகன் அசுரர்களை எதிர்த்து மூன்று இடங் களில் போர் புரிந்தார். கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். நிலத்தில் போர் புரிந்த இடம் திருப் பரங்குன்றம். விண்ணில் போர் புரிந்த தலம் திருப் போரூர். மாயை அடங்கிய இடம் திருச்செந்தூர். கன்மம் அடங்கிய இடம் திருப்பரங்குன்றம். ஆணவம் அடங்கிய இடம் திருப்போரூர். ஆம்! முருகப்பெருமான் அசுரர்களது ஆணவத்தை அழித்து, ஞானம் அளித்த தலம் திருப்போரூர்.
திருக்கோயிலின் வாயிலிலேயே, என்றும் நீர் வற்றாத திருக்குளம் நம்மை வரவேற்கிறது. `சரவணப் பொய்கை’ என்றும் ‘வள்ளையார் ஓடை’ என்றும் அழைக்கப்பெறும் இந்தத் திருக் குளம் மிகவும் பிரசித்திபெற்றது.
திருமாலுக்கும் லட்சுமிதேவிக்கும் கண்ணுவ முனிவரால் நேர்ந்த சாபத்தை நீக்கி, அவர்களுக்குச் சிவனார் சாபவிமோசனம் அருளிய தலம் இதுவாம். இங்கு முருகப்பெருமான் அகத்திய முனிவருக்கு உபதேசித்துள்ளார்.
பிரணவம் மலைவடிவில் முருகனைப் பூசித்த தலம் இது என்பர். இன்றைக்கும் அதே நிலையில் இக்கோயிலுக்கு எதிரில் உள்ளது. இந்த மலையின் மீது ஸ்ரீகயிலாசநாதர் ஸ்ரீபாலாம்பிகையுடன் எழுந்தருளியிருக்கிறார். இதன் சாரலில், வடக்குப் புறமாக ஸ்ரீவேம்படி விநாயகர் கோயில் அமைந் துள்ளது. இங்கு மகாலட்சுமி வேம்பாக வடிவம் எடுத்து வந்து, சாப விமோசனத்துக்காக தவம் இயற்றியதாக, புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய தலபுராணம் குறிப்பிடுகிறது.
இத்திருக்கோயிலின் தூண் ஒன்றில், இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்மனின் விருதுப் பெயர்களான அத்யந்த காமன், அதிகரண சண்டன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.
காலப்போக்கில் இக்கோயில் சிதிலமடைந்து போக, பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருப்போரூரை வந்தடைந்த ஸ்ரீசிதம்பர சுவாமிகள் இங்கே திருப்பணி செய்தார் என்பார்கள்.
இப்பகுதி முற்றிலும் பனங்காடாகத் திகழ, பெண் பனைமரத்தின் அடியில் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாகப் புற்றினால் மூடப் பட்டிருப் பதை அறிந்து, புற்றை நீக்கித் திருக்கோயில் கட்டினார் சுவாமிகள் என்று கூறுவார்கள்.
‘வெளியே ஒளியே வியனறிவே வேத நாலின் முடிமணியே அளியார் அமிர்தே போரூரா’ என்று சிதம்பர சுவாமிகள் போற்றும் திருப்போரூர் முருகனின் திருக்கோலத்தை, மூலஸ்தானத்தில் சிவாசார்யர் காட்டும் தீபமங்கள சோதியின் வெளிச்சத்தில் தரிசிக்கும்போது மெய்ம்மறந்து போகிறோம். சுயம்பு மூர்த்தியாக வள்ளி தேவசேனை சமேதராக அருள்கிறார் முருகன்.

மூலவர் அருகில் கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய-வரத திருக்கரங்களுடன் பிரம்மசாஸ்தா வடிவில் இருபுறமும் தேவியருடன் காட்சியளிக்கிறார். இந்தச் சிறிய மூர்த்தி, சிதம்பர சுவாமிகளால் அபிஷேக வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டவர் என்று அறிகிறோம். மூல மூர்த்திக்குப் புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும் பலி பீடமும் உள்ளன.
இங்குள்ள உபதேசமூர்த்தி திருவடிவமும் நம்மைப் பிரமிக்கவைக்கும். சிவபெருமானது மடியில் அவர் முகத்தை நோக்கி முருகன் அமர்ந் திருக்க, சிவனார் வாய் புதைத்துக் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அற்புதக் காட்சி, தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் காண இயலாத அற்புதச் செப்புத் திருமேனி.
‘மானசாரம்’ என்ற சிற்ப நூலில் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பு ‘தேசிகர்’ என்ற வடிவமைப்பாகும். ஆறுபடை வீடுகளில் ஒன்றானதும், பிரணவப் பொருளை முருகன் உபதேசித்ததுமான சுவாமி மலையில்கூட இச்செப்புத் திருமேனி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குள்ள மற்றொரு மூர்த்தி முத்துக்குமாரசுவாமி எனப்படும் சம்ஹார மூர்த்தியின் வடிவமாகும். வலது காலை மயில்மேல் ஊன்றி வில்லேந்திய கோலத்தில் வேலன் காட்சியளிக்கும் அரிய கலைப்படைப்பு. கோயிலின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள யந்திர ஸ்தாபனமும் மிகவும் பெருமை வாய்ந்தது.
இத்திருக்கோயிலில் காலை, உச்சி, மாலை, இரவு என்னும் நான்கு காலங்களிலும் அபிஷேக தீபாராதனைகள் நடைபெறுகின்றன. மாசியில் பெருவிழா. மேலும், வைகாசி மாதத்தில் சுவாமி களின் குருபூஜை நாளான விசாக நட்சத்திரத்தன்று பெரிய அபிஷேகமும், 300 படி திருப்பாவடை நிவேதனமும், சிதம்பர சுவாமிகளுக்குக் காட்சி உற்சவமும் நடந்து வருகின்றன.
பெரிய அன்னதானக் கூட்டத்தில் அன்ன தானமும் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று வேம்படி விநாயகருக்கு 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெறும். ஆவணியில் பவித்தோற்ஸவம் நிகழ்கிறது.