தொடர்கள்
Published:Updated:

சுவாமிமலையில் படிபூஜை!

சுவாமிமலையில் படிபூஜை!
பிரீமியம் ஸ்டோரி
News
சுவாமிமலையில் படிபூஜை!

கே.குணசீலன்

‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்று சொல்வதற்கு ஏற்ப, அழகு முருகன்

சுவாமிமலையில் படிபூஜை!

குடிகொண்டிருக்கும் திருக்கோயில்களில் சுவாமிமலைக்கு தனிச் சிறப்பு உண்டு. தந்தைக்கு குருவாகி, தமிழுக்குப் பொருளாகி முருகன் குடிகொண்ட சுவாமிமலை கோயிலுக்கு, 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 60 படிகளுமே தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கடவுளை தரிசிக்க நாம் கடந்து செல்லும் படிகளுக்கு தமிழ் ஆண்டுகளின் பெயர்களை அமைந்திருப்பது சிறப்புதானே!

முருகப்பெருமானின் சந்நிதி நோக்கி நம்மை மேலே ஏற்றிவிடும் அந்தப் படிகள்  மிகவும் புனிதம் பெற்றவை. மகரிஷிகள், முனிவர்கள், மகான்கள் ஆகியோரின் திருவடிகள் பதிந்த மகிமை கொண்டவை. அதுமட்டுமல்ல, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், முருகனடியார்களின் பாதங்கள் பட்ட மகத்துவமும் அந்தப் படிகளுக்கு உண்டு. அதனால்தான் மலையின்மீது முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் முருகன் அடியவர்களால் ‘படி பூஜை’ வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி சுவாமிமலையில் படி பூஜை விமர்சையாக நடைபெற்றது. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா' காவிரியே பொய்த்துப் போய், விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், விவசாயி களின் நலனுக்காக, ‘சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ மற்றும் ‘சண்முகானந்த சபா’ ஆகிய அமைப்பினர் இணைந்து இந்த `படி பூஜை' வைபவத்தை நடத்தினர். சுவாமி மலையில் தொடர்ந்து 28 வருடங்களாக இவர்கள் படி பூஜை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

சுவாமிமலையில் படிபூஜை!

சண்முகானந்தா சபாவைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ‘`நாங்கள் 1990-ம் வருடம் பெரம்பூரி லிருந்து சுவாமிமலைக்குப் பாத யாத்திரையாக வந்தோம். சுவாமிநாத சுவாமியை தரிசிக்கச் சென்றபோது, திருவாவடுதுறை ஆதீனம் சுவாமி களின் முன்னிலையில், 11 சிவாசார்யர்கள் உலக நன்மைக்காக  ஸ்ரீருத்ர ஹோமத்தை நடத்திக் கொண்டிருந்தனர். எங்களுடன் வந்திருந்த பக்தர்களும் ருத்ர ஹோமத்தில் கலந்துகொண்டனர். பல்வேறு கோரிக்கைகளோடு எங்களுடன் வந்திருந்த பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார் முருகப்பெருமான். அப்போதே நாங்கள் ஒரு வழிபாட்டுக் குழுவை ஏற்படுத்தி, கடந்த 27 வருடங்களாக சுவாமிமலையில் படி பூஜை செய்து வருகிறோம். இது ஆண்டு நடப்பது 28-வது ஆண்டு படிபூஜை.

பதினைந்து நாள்கள் விரதமிருந்து, ஏப்ரல் மாதம் கடைசியில் இரண்டு வழிபாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களும் சுவாமி மலைக்குப் புறப்படுவோம். அதன்படி ஏப்ரல் 29-ம் தேதி சுவாமிமலைக்கு வந்து காவிரிக் கரையில் அமைந்திருக்கும் சத்திரத்தில் தங்கினோம். மறுநாள் காலை 8.30 மணிக்கு படி பூஜையைத் தொடங்கினோம்.

சுவாமிமலை முருகன் கோயிலில் தமிழ் வருடங்களைக் குறிக்கும் 60 படிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தமிழ் வருடத்தின் தேவதைகள் இருப்பதாக ஐதீகம். ஆகவே  ஒவ்வொரு படிக்கட்டிலும் பழங்கள், வெற்றிலைப் பாக்கு, ரவிக்கைத்துண்டு வைத்து விளக்கேற்றப்பட்டது. பிறகு தேங்காய் உடைத்து, தீபாராதனை நடந்ததும் திருப்புகழ் பாடல் பாடப்பட்டது. 60 படிகளுக்கும் பூஜை செய்து மலைக்குச் சென்றதும் நேத்ர விநாயகரை வழிபட்டோம். அன்று இரவு சுவாமிநாத சுவாமிக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது. சத்ரு பயம் நீக்கும் வழிபாடு இது’’ என்று சுவாமிமலை படி பூஜை வைபவத்தைப் பற்றி விளக்கமாகக் கூறினார்.

சுவாமிமலையில் படிபூஜை!

மறுநாள் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் செய்யப்பட்டன. உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி காவிரிக் கரையிலிருந்து பால்குடம், காவடி எடுத்து  வந்தார்கள் அடியார்கள். காலை 7 மணிக்கெல்லாம் சுவாமிமலை முருகப்பெருமானுக்கு தைலம், அரிசிமாவு, பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு தங்கக் கவசம், வைரவேல் என்று சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு, அர்ச்சனையும் ஆராதனையும் அற்புதமாக நடைபெற்றன.

சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவைச் சேர்ந்த வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் நம்மிடம், ``இயற்கை இடர்கள் ஏற்படாமல் இருக்கவும், விவசாயிகள் நலமுடன் வாழவும், விவசாய நிலங்களில் விளைச்சல் பெருகவும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் பிரார்த்தனை செய்துகொள்ளப்பட்டது. எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகக் கடந்த 28 வருடங்களாக சுவாமிமலையில் படிபூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனை களும் நடத்தி வருகிறோம்’’ என்று சிலிர்ப்புடன் கூறினார்.

அறம் சார்ந்து தொடரும் அடியார்களின் ஆன்மிகப்பணி தழைத்தோங்க வேண்டும் என்று நாமும் சுவாமிநாத சுவாமியை மனதால் பிரார்த்தித்து விடைபெற்றோம்.

படங்கள்: ம. அரவிந்த்