தொடர்கள்
Published:Updated:

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

மு.ஹரி காமராஜ், படங்கள்: கா.முரளி

ட்டவீரட்ட தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங் கள், பஞ்சபூதத் தலங்கள் என்ற வரிசையில், நம் ஐயன் சிவபெருமான் அருள்புரியும் ஆறு திருத் தலங்கள், ‘ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

வேலூர் மாவட்டம்-ஆற்காடு அருகில், பாலாற்றங்கரையின் வடகரையில் மூன்றும் தென் கரையில் மூன்றுமாக இந்த ஆறு தலங்களும் அமைந்திருக்கின்றன. அவற்றில், காரைக்காடு, எட்டிக்காடு, வேப்பங்காடு ஆகியன ஒரு முக்கோணமாகவும், வன்னிக்காடு, மல்லிக்காடு, மாங்காடு ஆகியன ஒரு (தலைகீழ்) முக்கோண மாகவும் அமைந்துள்ளன.

இந்த இரண்டு முக்கோணங்களையும் இணைத் தால், முருகப்பெருமானின் ஷடாட்சரத்தை (ஆறெழுத்தை) உணர்த்தும் அறுகோணம் தோன் றும். அதன் காரணமாக இத்தலங்கள் ஷடாட்சர தலங்கள் என்றும் போற்றப்படுகின்றன.

இந்தத் தலங்களில் இறைவன் எழுந்தருளுவதற் கான அவசியம் ஏன் ஏற்பட்டது?

காஞ்சியில் தவமியற்றிய அம்பிகைக்கு தரிசனம் தந்த ஈஸ்வரன், அவளை மணந்துகொண்டார். அவர்களின் மணக்கோலத்தை தரிசித்து மகிழ்ந்த வசிஷ்டர், வால்மீகி, பரத்வாஜர், கௌதமர், அத்திரி, காஷ்யபர் ஆகிய ஆறு ரிஷிகளும் உலக மக்களின் பலதரப்பட்ட பிணிகளைத் தீர்க்கும் மூலிகைகளைப் பற்றி அறிய விரும்பினர். அதுபற்றி அகத்திய முனிவரிடம் தெரிவித்தனர். அதற்கான வழியை சிவபெருமானே அறிவார் என்று வழிகாட்டிய அகத்தியர், தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

ஆக, ஏழுபேரும் சேர்ந்து சிவனாரைப் பிரார்த்தித்தனர். அவர்களது பிரார்த்தனைக்கு இரங்கிய சிவபெருமான், பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் ஏழு வனங்களில் தன்னைப் பிரதிஷ்டை செய்து வழிபட் டால், கல்ப மூலிகைகள் பற்றி உபதேசிப் பதாக அருள்பாலித்தார்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

அதன்படியே ஏழு ரிஷிகளும், ஏழு வனங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து ஈஸ்வரனை வழிபட்டார்கள். அவற்றில் ஆறு தலங்கள் ஷடாரண்ய சேத்திரங்கள் எனப் போற்றப்படுகின்றன.

சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய விசேஷ தினங்களில் -  ஒரே நாளில் இந்த ஆறு திருத்தலங்களையும் தரிசித்து சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம்.

இனி, அந்தத் தலங்களின் மகிமையை அறிந்துகொள்வோமா?

காரைக்காடு

`ராகு தோஷம் நீங்கும்’


தற்போது `காரை' என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தில் கெளதமர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு தரிசனம் தந்ததுடன், மருத்துவ முறைகளையும், அபூர்வ மூலிகை களைப் பற்றியும் உபதேசித்தார். ஆகவே இங்குள்ள இறைவன் அருள்மிகு கௌதமேஸ்வரர் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு கிருபாம்பிகை. கலியுகத்துக்கு முன்பாகத் தோன்றிய தலம் இது என்கிறார்கள்.

பாலாற்றின் வடகரையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த ஆலயம் சிறியதுதான். கருவறையில் ஏகாந்தமாக தரிசனம் தருகிறார் கௌதமேஸ்வரர். ஐயனின் கருவறைக்கு வெளியில் இடப்புறத்தில் கிருபாம்பிகை நின்ற திருக் கோலத்தில் தரிசனம் தருகிறாள். அதேபோல், கருவறைக்கு முன்பாக கௌதம ரிஷி, கரம் கூப்பி இறைவனை வழிபடும் கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தல விருட்சம் வேப்ப மரம். ஊருக்குப் பெயர் தந்த காரை மரம் தற்போது கோயிலுக்குள்கூட இல்லை!

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

தற்போது, ராகு காலத்தில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

அகலிகை வழிபட்டு வரம்பெற்ற தலம் என்றும், மாயப் பசுவை வதம் செய்ததால் கௌதம ரிஷிக்கு ஏற்பட்ட கோஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற க்ஷேத்திரம் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள். ராகு கால வேளையில் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால், ராகு தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

வன்னிக்காடு

சனியின் அம்சமாக வன்னி மரம்!


பாலாற்றின் வடகரையில், காரைக்காட்டிலிருந்து சுமார் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வன்னிக்காடு; தற்போது `வன்னிவேடு' என்று அழைக்கப் படுகிறது. வன்னி வனமாக இருந்த இந்தத் தலத்தில் சிவனாரை வழிபட்ட அகத்தியருக்கு, சுயம்பு  மூர்த்தியாக தரிசனம் அருளினார் ஈசன். அத்துடன், அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரை ஏற்று அருள்மிகு புவனேஸ்வரி அம்பிகையுடன்  இங்கே கோயில்கொண்டார் என்கிறது தலபுராணம்.

முகப்புக் கோபுர வாயில், திருப்பணிகளின் காரணமாக மூடப்பட்டிருப்பதால், பின்புற வழியில் பக்தர்கள் செல்கிறார்கள். உள்ளே, துவார கணபதியை வழிபட்டு வலமாக முன் பக்கம் வந்து ஐயனின் சந்நிதிக்குள் செல்லவேண்டும். அம்பாள், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, ஐயன் அகத்தீஸ்வரரின்  கருவறையையொட்டி, இடப்புறம் பிரமாண்ட வடிவில் சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ஈசனுக்கு எதிரில் அகத்திய ரிஷி வணங்கிய கோலத்தில் அருள்கிறார். மேலும், 63 நாயன்மார்கள், சூரியன், சமயக் குரவர்கள், நவகிரக மூர்த்தியர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

‘`இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரம் சனீஸ்வர அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம். இந்த மரத்தை 21 முறை சுற்றி வந்து, தேங்காய் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சனிதோஷம் நீங்கும். மேலும், நரம்புத் தளர்ச்சி குணமாவதுடன், நாள்பட்ட காயங்களும் விரைவில் ஆறும்’’ என்று விவரிக்கிறார் ஆன்மிகச் சொற்பொழிவாளரான சரவணன்.

மல்லிகைக்காடு

பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர்!


வன்னிக் காட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மல்லிகைக்காடு; தற்போது இந்தத் தலம் குடிமல்லூர் என்று அழைக்கப்படுகிறது. அத்திரி மகரிஷி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. இங்கு அவர் சிவனாரிடமிருந்து மருத்துவ முறைகளைப் பற்றியும், மூலிகை களைப் பற்றியும் உபதேசம் பெற்றார். மிகவும் பழைமையான இந்த ஆலயம் தற்போது கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து வருவது, வருத்தத்துக்கு உரிய விஷயம். கோபுரம், மகா மண்டபம் கடந்து கருவறைக்குச் செல்கிறோம்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

கருவறையில் ஐயன் அத்திரியீஸ்வரர் எனும் திருவந்தீஸ்வர பெருமான் ஆனந்த தரிசனம் தருகிறார். அம்பிகையின் திருப்பெயர் அருள்மிகு திரிபுரசுந்தரி.  ஈசனுக்கு எதிரில், அத்திரி ரிஷி கரம் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். கருவறையின் வெளிச் சுவற்றில் மிகவும் அழகும் பழைமையும் வாய்ந்த ஓவியங் கள் வரையப்பட்டிருக்கின்றன. தலத்தின் பெயர் மல்லிக்காடு என்று இருந்தாலும், பெயருக்குக்கூட ஒரு மல்லிச்செடியை நம்மால் காண முடியவில்லை.

‘‘இங்குள்ள இறைவன் அத்திரி ரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர். அத்திரியின் தர்மபத்தினி அனசூயா தேவி. மும்மூர்த்தியரையும் குழந்தைகளாக்கி கொஞ்சி மகிழ்ந்த பெருமைக்குரிய அனசூயாதேவியின் அம்சமாகத் தோன்றியது தான் மல்லிச் செடி. இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை சிறக்கும்; கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் என்பது ஐதீகம்’’ என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார் ஆலய அர்ச்சகர்.

மாங்காடு

சுக்கிர யோகம் ஸித்திக்கும்!


புதுப்பாடி என்று தற்போது அழைக்கப்படும் இந்த இடம் முற்காலத்தில் மாமரக் காடாக இருந்தது. மல்லிகைக்காடு என்னும் குடிமல்லூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், ஆற்காடு - செய்யாறு சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

இங்கே, பரத்வாஜ ரிஷி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அபூர்வ மூலிகைகள் மற்றும் மருத்துவ முறைகள் பற்றி உபதேசம் பெற்றார். பரத்வாஜ ரிஷி வழிபட்டதால் ஈசன் பரத்வாஜீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேதராக அருள்புரிகிறார். ஈசனுக்கு எதிரில் பரத்வாஜ ரிஷி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

கோயிலின் சிறப்புகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஆலய அர்ச்சகர், ‘`பரத்வாஜ ரிஷி வழிபட்ட தலம் இது. ‘விமானிக சாஸ்திரம்’ எனும் நூலில் விமானம் பற்றிய பல விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியருளிய முனிவர் இவர். இந்தத் தலத்துக்கு வந்து ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால், மகிழ்ச்சியான வாழ்க்கை, சிறந்த வேலை, பதவி உயர்வு ஆகிய பலன்களைப் பெறலாம். பரத்வாஜர் சுக்கிர பகவானின் அருள் பெற்றவர் என்பதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சுக்கிர பகவான் சகல சுகபோகங்களையும் தந்தருள்வார்’’ என்றார்.  மேலும் நிலம் வாங்க, வீடு கட்ட விரும்புபவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களுடைய விருப்பங்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேப்பங்காடு

கல்யாண வரம் கிடைக்கும்


மாங்காடு எனும் புதுப்பாடியிலிருந்து சுமார் 5.2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வேப்பங்காடு. தற்போது `வேப்பூர்' என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்து வளர்ந்த வனமாக இருந்த இந்தப் பகுதியில், வசிஷ்ட ரிஷி சிவபெருமானை வழிபட்டு உபதேசம் பெற்றார். வசிஷ்டர் வழிபட்ட இறைவன், ‘வசிஷ்டேஸ்வரர்’ என்னும் திருப்பெயருடன் அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேதராகக் காட்சி தருகிறார்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

பிரமாண்டமாக அமைந்திருக்கும் ஆலயத்தில் கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே செல்கிறோம். நேரெதிரில் வசிஷ்டேஸ்வரரின் கருவறை அமைந்திருக்கிறது. ஐயனின் எதிரில் வசிஷ்ட ரிஷி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் சரபேஸ்வரர், பிரத்தியங்கிரா தேவி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. மேலும் முருகர், விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சி தருகின்றனர். தல விருட்சம் வேப்ப மரம்.

‘`வசிஷ்டர் தவமியற்றி கல்ப மூலிகைகளைப் பெற்ற தலம்தான் வேப்பங்காடு. இந்தக் கோயிலில் சரபேஸ்வரருக்கும் பிரத்தியங்கிராதேவிக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. திருமணப் பேறு அருளும் அற்புதத் தலம் இது. சுற்றுப்புற ஊர்களில் உள்ள பலரும் இந்தக் கோயிலில் திருமணம் செய்துகொள்வது வழக்கம். ஒரே நாளில் ஷடாரண்ய தலங்களை தரிசிப்பவர்கள், இந்தக் கோயிலில் திருமண  பாக்கியம் பெறுவதற்காக வேண்டிக்கொள்ளலாம்’’ என்கிறார் ஆலய அர்ச்சகர்.

எட்டிக்காடு

தீராத பிணிகளும் தீரும்


மேல்விஷாரம் என்று தற்போது அழைக்கப்படும் எட்டிக்காடு வேப்பூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. வால்மீகி ரிஷி இந்தத் தலத்துக்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்டார். ஈசனும் அவருக்கு தரிசனம் தந்து மூலிகைகள் மற்றும் மருத்துவ முறைகள் பற்றி உபதேசித்தார். எட்டி வனமே விருட்ச வனம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விஷாரம் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

கோயிலில் இறைவன் வால்மீகீஸ்வரர் அருள்மிகு வடிவுடையாம்பி கையுடன் திருக்காட்சி தருகிறார். ஈசனுக்கு எதிரில் வால்மீகி ரிஷி கரம் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். முருகர், கணபதி, நவகிரகங்கள் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

கோயிலின் சிறப்புகளைப் பற்றி  அர்ச்சகரிடம் கேட்டோம்.  ‘’கொடுமையான விஷம் என்று சொல்லப்படும் எட்டிக்காயை முறையாகப் பயன்படுத்தினால் அது பிணி தீர்க்கும் மருந்தாகும் என்று சொல்வார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து வால்மீகீஸ்வரரை வழிபட்டால், தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம். ஜீவ ஹிம்சை செய்துகொண்டிருந்த வால்மீகி, நாரதரால் ராம நாம மந்திரம் உபதேசிக்கப்பெற்று, அற்புதமான ராம  காவியத்தை இயற்றியவர். அவர் வழிபட்ட இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், செய்த தீவினைகள் அனைத்தும் நீங்கும். சகல தீமைகளும் விலகிவிடும்’’ என்றார்.

ஆவாரங்காடு

காஞ்சியிலிருந்து புறப்பட்ட ஏழு ரிஷிகளில் காஷ்யபரும் ஒருவர். அவர் வழிபட்ட சிவத்தலம்  இந்த ஷடாரண்ய க்ஷேத்திரங்களின் வரிசையில் இடம் பெறவில்லை. ஏன் தெரியுமா?

அதுபற்றிய சுவாரஸ்யங்களை வீடியோ வடிவில் காண இங்குள்ளQR code- ஐ பயன்படுத்துங்கள்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

உங்கள் கவனத்துக்கு!

ஷடாரண்ய க்ஷேத்திரங்களில் ஆறு முனிவர்களுக்கும் காட்சி தந்த இறைவன், ‘நீங்கள் வழிபட்ட ஆறு தலங்களில் காரை, எட்டி, வேம்பு ஆகியவை என் (சிவ) அம்சமாகவும், வன்னி, மல்லி, மாங்காடு ஆகியவை சக்தியின் அம்சமாகவும் திகழும். பூவுலகில் இரண்டு முக்கோணங்களாக அமைவிடங்களைக் கொண்டிருக்கும் இந்த ஆறு தலங்களையும் ஒருசேர தரிசிப்பவர்களுக்கு, எம்முடைய சோமாஸ்கந்த வடிவத்தை வழிபட்ட பலன்  கிடைக்கும்’’ என்று அருள்பாலித்தாராம்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகருக்குச் சென்று, அங்கிருந்து கார் அல்லது இருசக்கர வாகனம் மூலம் ஷடாரண்ய க்ஷேத்திரங்களை தரிசிக்கச் செல்லலாம். (அனைத்து கோயில்களுக்கும் செல்ல பேருந்து வசதி இல்லை). இந்தக் கோயில்களை எந்த வரிசைப்படியும் தரிசிக்கலாம். 

பூஜைப் பொருள்களை ஆற்காட்டிலிருந்தே வாங்கிச் செல்லவேண்டும். ஒருவேளை, கோயில்கள் திறக்கப்படவில்லையெனில், அருகிலுள்ளவர்களிடம் சொன்னால், அவர்கள் அர்ச்சகரை அழைத்து வந்துவிடுவார்கள்.

அறுகோண திருத்தலங்கள்! - சிவம்... சக்தி... சண்முகம்...

தொகுப்பு: மு.ஹரி காமராஜ்,
இன்ஃபோகிராபிக்ஸ்:
எஸ்.ஆரிப் முகம்மது