மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

வெ.நீலகண்டன்

மாடன் வழிபாடு

ம் ஆதி மூதாதையர் காலத்திலிருந்து நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது மாடன் வழிபாடு. தங்கள் இன்னுயிரை ஈந்து, மக்களின் மானம் காத்த வீரர்களே `மாடன்' எனும் தெய்வமாகத் திகழ்கிறார்கள். பல ஆயிரம் மாடன்கள் நம் வரலாற்றில் உண்டு.

நம்மை ஆண்ட மன்னர்கள், வானுயர கோயில்களைக் கட்டிவைத்தார்கள். அவற்றை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, கல்விக்கூடமாகவும், கலைக்கூடமாகவும், வங்கியா கவும், சமுதாயக்கூடமாகவும் பயனுறச் செய்தார்கள்.

நாடு பிடிக்க வந்த அந்நிய மன்னர்கள், நேரடியாக அந்தக் கோயில்களையே குறிவைத்துத் தாக்கினார்கள். காரணம், எதிரியை நேரடியாகக் கொன்றொழிப்பதைவிடவும், அவன் கௌரவமென எதைக் கருதுகிறானோ அதை அழித்து அவமானப்படுத்துவது... இது ஒரு போர் யுத்தி.

நாட்டைப் பிடித்தவர்கள், அங்குள்ள கோயிலிலிருந்து ஒரு சிற்பத்தைப் பெயர்த்து வெற்றிச் சின்னமாக எடுத்துச் செல்லும் மரபும் இருந்திருக்கிறது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

அரசர் காலத்துக்கு முன்னர், இனக்குழு வாழ்க்கையில் மேய்ச்சல் நில மனிதர்களுக்குக் கால்நடைகள்தான் சொத்து, கௌரவம் எல்லாம். குறிப்பாக, ஆநிரைகள். அவற்றைக் கவர்ந்துசெல்வதே எதிரியைப் பழிவாங்கும் செயலாக இருந்தது. இனக்குழுத் தலைவர்கள் தங்கள் ஆநிரைகளைக் காப்பாற்றவும், எதிரிகளின் நாடுகளில் ஊடுறுவி, அங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரவும் திடமான தோள் வலிமையுடைய மாவீரர்களை நியமித்திருந்தார்கள். அப்படி ஆநிரைகளைக் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள், வெட்சிப்பூவையும், ஆநிரைகளைக் காக்கும் வீரர்கள், கரந்தை மலர்களையும் சூடியிருப்பார்கள்.

எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவரும் போதும் ஆநிரைகளைக் கவர தங்கள் நாட்டுக்குள் வரும் எதிரிகளைத் தாக்கி விரட்டும்போதும் நிகழும் கடும் யுத்தத்தில் பல வீரர்கள் மாண்டுபோவார்கள். தங்கள் மானம் காக்க உயிர் நீத்த அந்த வீரர்களுக்கு நடுகல் ஊன்றி, அவர்களைத் தங்களின் இனக் காவலர்களாகக் கருதி வழிபடுவார்கள் மக்கள். இதுதான் மாடன் வழிபாட்டின் தொடக்கம். மாடுகளைக் காக்க நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த வீரனே, மாடன்.

நாடோடி வாழ்க்கை நிறைவுற்று, வேளாண் வாழ்க்கை தொடங்கி நில உடைமைச் சமூகம் உயிர் பெற்ற பிறகு, தங்களைக் காக்க உயிர் நீத்த எல்லோரையும் மாடன் வடிவமாகப் பார்த்தார் கள் மக்கள். சுடலை மாடன் தொடங்கி வண்ணார மாடன் வரைக்கும், அப்படி வாழ்ந்து மறைந்து மண்ணின் சாமியாகிப் போனவர்கள்தான் எல்லோரும்.

பன்றிமாடன்,  குழிதோண்டி மாடன், கல்லடி மாடன், கௌதல மாடன், காட்டு மாடன், சீவலப்பேரி மாடன், ஊசிக்காட்டு மாடன், தளவாய் மாடன், வண்ணார மாடன், புலமாடன், கசமாடன், கரையடி மாடன், வெள்ளாவி மாடன் என நூற்றுக்கும் மேற்பட்ட மாடன்கள் தமிழகத்தில் வழிபடப்படு கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுத்தன்மை, இவர்கள் பிறருக்காக வாழ்ந்தவர்கள். இந்தச் சமூகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். நீதி காக்க உயிர் நீத்தவர் கள் அல்லது அநீதியாகக் கொல்லப்பட்டவர்கள்.

வண்ணார மாடன் தென் மாவட்டங்களில் பலநூறு குடும்பங் களின் காவல் தெய்வமாக இருக்கிறார். அவர் குறித்துப் பல கதைகள் உலவுகின்றன. ‘அரசர் குலத்தைச் சேர்ந்தவர் முண்டு சாமி. பெற்றோர் இறந்துவிட, ஆட்சிப் பொறுப்பேற்கத் தயாரானார் முண்டுசாமி. ஆனால், ஆட்சியைக் கவர நினைத்த பங்காளி உறவுக்காரர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அதையறிந்த முண்டுசாமியின் சகோதரி, தன் தம்பியை அழைத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினாள். நெடுந்தூரம் நடந்த களைப்பில் ஒரு நதிக் கரையோரத்தில் இருவரும் மயங்கி விழுந்துவிட்டனர். 

அவர்களைக் குயிலான் என்ற சலவைத் தொழிலாளி காப்பாற்றி,  தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தங்களது பூர்வீகத்தை மறைத்து, குயிலானிடமே தொழி லாளிகளாக வேலை செய்தார்கள் முண்டுசாமியும், அவரின்  சகோதரியும்.

இந்த நிலையில், குயிலானின் மகள்  சிவப்பொழிவு மீது காதல் வயப்பட்டார் முண்டுசாமி.  இதையறிந்த குயிலான், முண்டு சாமியையும், அவரின் சகோதரி யையும் கொலை செய்கிறார். காதலுக்காக உயிர்விட்ட முண்டு சாமியை, மக்கள் வண்ணார மாடனாக வழிபடத் தொடங்கினார்கள்.  நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல ஊர்களில் வண்ணார மாடனுக்கு சிறுகோயில்கள் இருக்கின் றன. அந்தக் கோயில்களில் உக்கிரமான கொடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

வண்ணார மாடன் கதை, பலவேசக்காரன் கதை, சங்கிலி பூதத்தான் கதை, கசமாடசாமி கதை, கபாலக்காரன் கதை, வெங்கலராசன் கதை,  அந்தர முடையான் கதை, கருங்காளி கதை, வண்ண முத்துசாமி கதை, நளாயினி கதை, கஞ்சன் கதை, காலசாமி கதை, முத்துப்பட்டன் கதை, ஆரவல்லி சூரவல்லி கதை, முத்தாரம்மன் கதை என காவல் தெய்வங்கள் குறித்த தொன்மங்கள், செவிவழிக் கதைகளாக உலவிக்கொண்டிருக்கின்றன.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

புலவர் சுடலைமுத்து, புலவர் ஆறுமுகப் பெருமாள், புலவர் அருதக்குட்டி,  புலவர் சொக்கலிங்கம் பிள்ளை, புலவர் நாராயணன், புலவர் சின்னத்தம்பி, புலவர் நல்லக்கூத்தன்  உள்ளிட்ட பல புலவர்கள் அம்மானை, நாட்டுப் புறப் பாடல் மற்றும் வில்லுப்பாட்டு என தங்க ளுக்கு வாய்த்த வடிவங்களில் இந்தக் கதைக ளை ஒலைச்சுவடிகளில் எழுதிவைத்திருக்கிறார்கள்.  அவை மட்டுமின்றி, இன்னும் பல்லாயிரம்  ஓலைச் சுவடிகள், நம் காவல் தெய்வங்களின் வரலாற்றைச் சுமந்தபடி, எவர் வீட்டின் பரணிலோ உறங்கிக் கிடக்கலாம்!

நம் காவல் தெய்வங்களின் கதைகளைப் பாடி,  அவற்றுக்கு மேலும் மேலும் உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன சில பழங்குடிச் சமூகங்கள். ஆதியன் சமூகம் அப்படியானதுதான்.

`பூம்பூம் மாட்டுக்காரர்கள்' என்றால் கண்முன் வண்ணங்கள் விரியும். புதுக்கோட்டை வட்டாரத் தில் ‘தாதர் மாட்டுக்காரர்’ என்றும், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘அழகர் மாட்டுக் காரர்’ என்றும், சென்னை, விழுப்புரம் பகுதிகளில் ‘பூம்பூம் மாட்டுக்காரர்’ என்றும், திருச்சி, தஞ்சைப் பகுதியில், ‘பெருமாள் மாட்டுக்காரர்’ என்றும் அழைக்கப்படும் இம்மக்கள், அலைகுடிகளின் மிச்சங்களாக வாழ்கிறார்கள். ஸ்ரீராமனுடனான தொன்மம் ஒன்று இம்மக்களைப் பின்னிப் பிணைந்திருக்கிறது.

“ஒரு காலத்துல எங்க பாட்டன்மார், ராமருக்கு உதவியா இருந்து சேவகம் செஞ்சு வந்தாங்க. தோட்டத்துல பூக்களைப் பறிச்சு, ராமருக்கு மாலை தொடுத்து கொடுப்பதுதான் அவங்க தொழில். அவங்களுக்கு நிறைய நிலபுலன்கள் இருந்துச்சு. விவசாயம், விளைச்சல்னு ஏகபோகமாத்தான் வாழ்ந்தாங்க.

ஒருநாள் ராமர், எங்க மக்களோட பக்தியைச் சோதிக்கிறதுக்காக நாங்க வாழ்ந்த பகுதிக்கு வந்திருக்காரு. அப்போ வயல்ல அறுவடை நடந்துக்கிட்டு இருந்துச்சாம். ஒரு யாசகர் மாதிரி வேஷம் கட்டி வந்த ராமர், `எனக்கு ரொம்பப் பசியா இருக்குதுங்க.. ஏதாவது தர்மம் செய் யுங்க'ன்னு கேட்டிருக்காரு. ஆனா, வந்துருக்கிறது ராமருன்னு தெரியாம, எங்க ஆளுங்க எதையும் கொடுக்காம வெரட்டியிருக்காங்க. ஆனா, ராமர் நின்ன இடத்தைவிட்டு அசையலை. ‘நிலத்துல விளையுற தானியத்துல எனக்கு ஒரு பங்கு குடுங்க’ன்னு கேட்டு ரொம்பக் கெஞ்சியிருக்காரு.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

அவர்கிட்ட இருந்து விடுபடுறதுக்காக, ‘இந்த வருஷம் செய்யப்போற வெள்ளாமையில கீழ் மகசூல் வேணுமா, மேல் மகசூல் வேணுமா’ன்னு கேட்டிருக்காங்க. ராமரும், ‘மேல்மகசூல்தான் வேணும்’னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

உடனே எங்க ஆளுங்க நிலக்கடலையை சாகுபடி பண்ணிட்டாங்க. சரியா அறுவடை நேரத்துல வந்து நின்னாரு ராமர். எங்க ஆளுங்க கடலையை பறிச்சுக்கிட்டு வெறும் தழைய மட்டும் கொடுத்துருக்காங்க. ராமருக்குக் கோவம் வந்திருச்சு. உடனே எங்காளுங்க, ‘வரும் வருஷத்தில என்ன மகசூல் வேணும்’னு கேட்டிருக்காங்க. ராமர் இந்த முறை, ‘கீழ் மகசூலைக் குடுங்க’ன்னு கேட்டிருக்காரு. அந்த வருஷத்தில் நெல்லை சாகுபடி பண்ணிப்புட்டாங்க. அறுவடைக்கு வந்து நின்ன ராமர்க்கிட்ட வைக்கோல் கட்டைத் தூக்கிக் கொடுத்திருக்காங்க.

உடனே ராமர் தன்னோட முழு உருவத்தைக் காமிச்சுட்டாரு. ஒரு சுரைக்குடுவையைக் கையில கொடுத்து, ‘என்னை ஏமாத்துன நீங்க இனிமே எங்கே கால் வச்சாலும் பச்சைப் புல்லு பூண்டுகூட முளைக்காது. காடெல்லாம் கருகிப்போவும்’ன்னு சாபம் குடுத்திட்டாரு. ‘சாமி, இனிமே நாங்கல்லாம் எப்பிடி பொழைக்கிறது’ன்னு எங்காளுங்க அழுதுருக்காங்க. ‘இந்தச் சொரைக்குடுக்கையை வெச்சுக்கிட்டு ஊரு ஊராப் போயி ‘கோயிந்தா, ராமா’னு சொல்லி யாசகம் வாங்கிச் சாப்பிடுங்க’ ன்னு சொல்லி விரட்டிட்டாராம்.  அன்னையி லேர்ந்து இருந்த நிலமிழந்து, குடியிருந்த வீடிழந்து நாடோடியாத் திரியுறோம்...” என்கிறார் மூத்த ஆதியன் ஒருவர்.

1990-கள் வரையிலும் இம்மக்கள் யாசகம் கேட்க சுரைக் குடுக்கையைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்று பலர் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையிலும்கூட, இந்தப் பழங்கதையை வெகுவாக நம்புகிறார்கள். தாம் சாபத்துக்கு உட்பட்டவர்கள் என்ற எண்ணம் இம்மக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவைத்திருக்கிறது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

இயல்பு மாறி ஐந்து கால்கள்,  மூன்று கொம்புகள், இரண்டு வால்கள் என்று பிறழ்வாகப் பிறக்கும் மாடுகளை, ‘வீட்டில் வைத்திருந்தால் ஆகாது’ என்று பெருமாள் கோயில்களுக்கு நேர்ந்துவிட்டு விடுவார்கள். ஆதியன்கள் திருப்பதி மலையில் சுற்றித்திரிந்த காலக் கட்டத்தில், அவ்விதம் நேர்ந்துவிடப்பட்ட மாடுகளை இவர்கள் வசம் கொடுத்து மேய்க்கப் பணித்தார்கள். ஆயினும், ‘யாசகம் பெறுவதே ராமர் தங்களுக்கு இட்ட கட்டளை’ என்று கருதிய ஆதியன்கள், அம்மாடு களையும் யாசகம் பெறும் வகையில் வளர்க்க லாயினர். அப்படித்தான் பூம்பூம் மாட்டுக் காரர்களானார்கள் இம்மக்கள்.

ஆண்கள், மாடுகளை வைத்து வேடிக்கை காட்டி யாசகம் பெற, பெண்கள், ‘நல்லதங்காள் கதை’, ‘மாடன் கதை’, ‘நளாயினி கதை’களை வீட்டுக்கு வீடு நின்று பாடி யாசகம் வாங்குகிறார்கள்.

`வாராளே நல்லதங்கா பொல்லாத வேளையிலே
மூளி அலங்காரி மூத்தண்ணன் தேவியவள்...’


எனத் தொடங்கி, ஒப்பாரி வடிவில் பெண்கள் பாடலைப் பாட,  கலங்கிய கண்களோடு தங்களால் இயன்ற தானியத்தையோ, சில்லறைகளையோ தருவார்கள் மக்கள். வறுமை கவ்விய அந்தப் பெண்களின் குரலில் அரூபமாக உயிர்ப்பித்து எழுந்து வருவாள் நல்லதங்காள்! 

- மண் மணக்கும்...

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 3

‘அந்தப் பாடலைப் பாடமாட்டேன்!’

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, கே.பி.சுந்தராம்பாளின் கச்சேரி நடைபெற்றது. பார்வையாளர்கள் ‘பூம்புகார்’ படத்தில் அவர் பாடிய பாடலைப் பாடும்படி கூக்குரலிட்டவண்ணமும் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தவாறும் இருந்தனர்.

உடனே கே.பி.எஸ். ‘`நீங்கள் பூம்புகார் கதையை அறிந்திருப் பீர்கள். கோவலனின் முடிவும், உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே, இக்குழந்தைகளை (மணமக்களை) ஆசிர்வதிக் கின்ற இந்த நேரத்தில் அம்மாதிரியான பாட்டுகளைப் பாடக்கூடாது என்பது என் அவா. இவர்கள் நிறைய குழந்தை குட்டிகளைப் பெற்று, சுகமாக வாழவேண்டும் என்று முருகப்பெருமானை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, இன்று மட்டும் என்னை வற்புறுத் தாதீர்கள்'' என்று சொல்லி, ‘ஞானப் பழத்தைப் பிழந்து' என்று பாட ஆரம்பித்தார்... சபையில் கரவொலி ஆரவாரம்!