தொடர்கள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 3

திருவருள் செல்வர்கள்
News
திருவருள் செல்வர்கள் ( பி.என்.பரசுராமன் )

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

ந்தப் பெண்மணியின் கனவில், கந்தப் பெருமான் குழந்தை வடிவில் தோன்றி, ``அம்மா! நாளைக்கு நீ வில்வண்டியில் புளியறைக்குப் புறப்படு! அங்கு போனதும் வண்டியை நிறுத்தி, காளைகளை அவிழ்த்துவிடு. அவை கால்களால் மண்ணைக் கிளறும் இடத்தில் தோண்டிப் பார்! எனக்கு உரிமையான நிலங்களுக்கு உண்டான ஆதாரங்கள் இருக்கும்” என்று அறிவித்தார்.

மறுநாள் விடியற்காலையிலேயே வண்டியைக் கட்டிக்கொண்டு புளியறைக்குச் சென்றார் பெண்மணி. அங்கு போனதும் முருகனின்  உத்தரவுப்படியே செய்தார். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் சற்று தூரம் நடந்துசென்று, ஓரிடத்தில் கால்களால் மண்ணைக் கிளறின. அங்கே தோண் டிப் பார்த்தால், இரண்டடி அகலமும் பத்து அடி நீளமும் கொண்ட பெரும் கல் ஒன்று கிடைத்தது. வேலாயுதமும் மயிலும் பொறிக்கப் பட்டிருந்த அந்தக் கல்லில், நிறைய எழுத்துகளும் செதுக்கப்பட்டிருந்தன. அது ஒரு சாசனம் (நிலப் பத்திரம்) என்பதை அறிந்து, படித்துப் பார்த்த பெண்மணி வியந்தார். காரணம்?

திருமலை முருகப்பெருமானுக்கு உரிய 160 ஏக்கர் அளவிலான நன்செய் நிலங்களுக்கும் தோப்புத் துரவுகளுக்குமான விவரப் பட்டியல் அந்தக் கல் சாசனத்தில் இருந்தது. அந்தச் சொத்து கள், அவ்வூரில் இருந்த ராயர் ஒருவரின் வசம் இருப்பதாகத் தெரியவந்தது. “என் முருகனுக்கு உரிய சொத்தை எவரோ ஒருவர் கைப்பற்றி ஆளுவதா?” எனக் கொதித்துப்போன அந்தப் பெண்மணி, படாதபாடுபட்டு அந்தச் சொத்து களை மீட்டார் (அது தனிக்கதை).

திருவருள் செல்வர்கள்! - 3

யார் அந்தப் பெண்மணி?

நெல்லை மாவட்டம் தென்காசிப் பகுதியில், `நெடுவயல்' எனும் சிறிய ஊர் உண்டு. பெயருக்கு ஏற்றபடி, வயல்கள் நிறைந்த ஊர். அதன் அரு கிலேயே ‘பைம்பொழில்’ எனும் கிராமம். அந்தப் பகுதியை இப்போது பார்த்தாலும், புத்தம்புது பச்சைப் புடவையைப் பிரித்துப் பரத்திவைத்தது போன்றி பச்சைப்பசேலெனத் திகழும்!

நெடுவயல் எனும் அந்த ஊரில் வாழ்ந்த தம்பதியர் சிவகாமி அம்மையார் - கங்கமுத்து தேவர். தெய்வ பக்தி, அடியார்களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச்செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு செய்து வந்தார் சிவகாமி அம்மையார். மனம் கனிந்த அந்தத் தம்பதிக்கு மகப்பேறு இல்லை. அதற்காக தெய்வ கைங்கர்யங்கள் பலவும் செய்து வந்தார் அம்மையார். (இனி சிவகாமி அம்மை யாரை ‘அம்மையார்’ என்றே பார்க்கலாம்).

நெடுவயல் கிராமத்தில் அடியார்களும் அகதிகளும் தங்குவதற்காக, தானே முன்வந்து ஒரு கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார் அம்மையார். அந்த மண்டபம் இன்றும் நெடுவயல் கிராமத்தில் உள்ளது. அந்த மண்டபத் தில்தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் சித்துக் களிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து, அன்னமிட்டு உபசரித்து வந்தார் அம்மையார்.

யாராவது அமைதியாக ஆனந்தமாக  இருந்தால், பார்ப்பவர் மனம் அல்லாடும்; அதுவும் தர்ம கைங்கர்யங்கள் செய்து வருபவர்களைப் பார்த் தால், உறவுகள் கூடத் தூக்கமின்றித் தவிக்கும்.

“ச்சே! என்ன ஜன்மமோ இது? வர்றவன் போறவனுக்கெல்லாம் இப்படி வாரிவாரி கொடுத்துக்கிட்டே இருந்தா, பிச்சை எடுக்க வேண்டியதுதான். கொடுக்கறதை நமக்குக் கொடுத்தால், நாமாவது சந்தோசமா இருப்போம்! ஹூம்... நல்ல வழியில் வந்த காசா இருந்தாத்தான...” என்று இழிவாகப் பேசும்.

அதிலும், தர்ம கைங்கர்யம் செய்பவர் பெண் ணாக இருந்துவிட்டாலோ, கேட்கவே வேண்டாம். இழிவான பேச்சுக்களுடன் பழியும் சுமத்தப்படும்.அம்மையார் மட்டும் விதிவிலக்கானவரா என்ன?

மேலே கண்ட அனைத்தையும் சொல்லி பழித் துப் பேசிய உறவுகள்... ஒருநாள் வீதி வழியாக அம்மையார் வந்தபோது, கடும் பழிச்சொல்லை வீசிக் கடுமையாகத் தூற்றவும் செய்தார்கள். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத அம்மையார், “நான் கற்புநிலை தவறாமல் களங்கமற்ற மனதோடு, குலமகளுக்கு விதிக்கப்பட்ட முறைகளை மீறாமல், அறத்தொண்டு செய்திருப்பேன் என்றால், நான் இந்தத் தெருவின் மேலக்கோடியில் திரும்புமுன், இங்கு இடி விழட்டும்” என்று சபித்தார்.

அடுத்து அவர் ஒருசில அடிகள்கூட தாண்டி யிருக்க மாட்டார். பட்டப் பகலில், இடி மின்னலுக் கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அம்மையார் சபித்தபடியே வெள்ளிடி இடித்து விழுந்து ஒரு வீடு அழிந்தது.

அம்மையாரின் தெய்விகத்தன்மையை உணர்ந்த உறவினர் அடங்கினார்கள். ஊரே அந்த அற்புதத்தைப் பாராட்டினாலும், அம்மையார் மட்டும் வருந்தினார். வேதனையுடன் கணவரையும் அழைத்துக்கொண்டு வாலர் மஸ்தானிடம் சென்று, எதுவும் கூறாமல் வணங்கி நின்றார்.

திருவருள் செல்வர்கள்! - 3

அம்மையார் எதுவும் கூறவில்லையென்றாலும், அவரைப் பார்த்துமே, ``அம்மா, உன் மனக்குறை என்னவென்று தெரிகிறது. கருச் சுமந்து குழந்தை பெறும் பாக்கியம் உனக்கு இல்லை. அதோ! மேற்குப் பக்கத்தில் மலையின்மேல் இருக்கும் திருமலைக் குமரன்தான் உன் தவக்குழந்தை. அவனுக்குப் பணிவிடை செய்! அவனுடைய  உடைமைகளைப் பாதுகாக்க, உன் சேவை அங்கு தேவை” என்று சொல்லி, வாழ்த்தி வழி அனுப்பி னார்அந்தத் துறவி.

அதன்பின் அங்கிருந்து சென்றுவிட்டார் வாலர் மஸ்தான். உள்ளம் உருகியது அம்மையா ருக்கு. உடனடியாக பைம்பொழில் - திருமலைக்குப் போய்ச் சேர்ந்தார். முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது மலை. அது போதாதென்று கொடுமையான காட்டு விலங்குகள் வேறு. பகல் நேரத்தில்கூட அங்கே செல்ல அச்சமாக இருக்கும். ஆனால், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார் அம்மையார். மலைக்குமேல் அருள் பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்ததும்,  தன் வசம் இழந்தார்; கூடவே வருத்தமும் கவ்வியது.

கவனிக்கப்படாமல் தனியாக இருந்த சுவாமி யைக் கண்டு, அம்மையாரின் பக்தி உள்ளம் வருந்தியது. “மகனே!’’ எனக் கூவினார். அன்று முதல் திருமலைக்குமாரனைத் தன் குழந்தையாக  எண்ணி, அவரைப் பராமரிப்பதையும், அவரின் உடைமைகளைப் பாதுகாப்பதையுமே தனது கடமையாகக் கொண்டு செயல்படத் தொடங் கினார் அம்மையார்.

உள்ளம் மட்டுமல்ல, அம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தி, கழுத்தில் ருத்திராட்சம் தரித்து, கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து விளங்கினார் அம்மையார். விரைவில் திருப்பணிகள் தொடங்கின. மலையடிவாரத்துக்குக் கிழக்கே `வண்டாடும் பொட்டல்' எனும் இடத்தில், அன்னதானச் சத்திரம் ஒன்றைக் கட்டி, தானும் அங்கிருந்தபடி திருப்பணிகளை நடத்தினார்.

அகதிகளுக்குத் தினமும் உணவு, கோடை காலத்தில் நீர்மோர், பானகம் என வழங்கி, தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கிவைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் அம்மையாரின் திருப்பணியில் அமைக்கப்பட்டது தனிக்கதை.

ஆரம்பத்தில், புளியறையில் திருமலை முருகனுக்கு உரிமையான சொத்துக்கள் பற்றிய கல்வெட்டு சாசனம் கிடைத்ததையும், அதில் காணப்பட்ட சொத்துகளைப் புளியறையில் இருந்த ராயர் ஒருவர் அனுபவித்து வந்தார் என்பதையும் பார்த்தோம் அல்லவா?

இந்த விஷயத்தை அறிந்ததும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அம்மையார். திருவனந்த புரத்தில் நடந்த வழக்கில் படாதபாடுபட்டு வெற்றி பெற்றார் அம்மையார். ஆனால், பல ஆண்டுகளாக அந்த நிலங்களை அனுபவித்து வந்த ராயர்,  திருமலை முருகனுக்கு உரிமையான நிலங்களை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். அவருக்கு உள்ளூர் பெரும்புள்ளிகள் பலரும் மறைமுகமாக உதவி வந்தனர்.

செய்வதறியாது திகைத்தார் அம்மையார். முருகனின் சந்நிதிக்குச் சென்று மருகி மன்றாடிப் பிரார்த்தித்தார். ‘அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே’ என அருணகிரிநாதர் பாடியது பொய்யாகுமா? அதுவும் தன்னை அன்பு மகனாக உறவு கொண்டாடும் அம்மையாரின்  இச்சையை நிறைவேற்றாமல் இருப்பாரா திருமலை முருகன்?

திருவருள் செல்வர்கள்! - 3
திருவருள் செல்வர்கள்! - 3

அன்று இரவு அல்லல் தீர வழி அறியாது படுத் தார் அம்மையார். அதற்காகவே காத்திருந்ததைப் போல், அம்மையாரின் கனவில் ஆறுமுக வள்ளல், குழந்தை வடிவில் காட்சி தந்து  (முருகனைத் தன் குழந்தையாக நினைத்தார் அல்லவா, அதனால்தான் குழந்தை வடிவிலேயே காட்சி தந்தார் முருகன்), ``அம்மா! நாளை நூறு ஏர்களுடன் புளியறைக்குச் செல். நமது கழனிகளில் ஏர்களை நிறுத்து! முதல் ஏரை நீயே பிடி!  நானும் துணையாய் வருவேன்” என்று கூறினார்.

மால் மருகனே வழி காட்டியபின்,  மால் (மயக்கம்) கொள்வாரா அம்மையார்? நெடுவயல், அச்சன் புதூர் ஆகிய ஊர்களில் இருந்து, நூறு ஏர்களைத் திரட்டி வந்து, விடிவதற்குள்ளாகவே அவற்றைப் புளியறையில் திருமலை முருகனுக்கு உரிமையான கழனியில் நிறுத்தினார். முதல் ஏரை அம்மையாரே பிடித்து உழத் தொடங்கினார்.

அவ்வளவுதான்! தகவல் அறிந்த ராயர், தனது ஆள்களைக் கட்டாரி, கம்பு, அரிவாள் முதலான பயங்கர ஆயுதங்களுடன் நூற்றுக்கணக்காகத் திரட்டிக் கொண்டு வந்து விட்டார். வந்த கும்பல், அம்மையாரை வாய்க்கு வந்தபடி இழிவாகப் பேசி, மாடுகளின் கயிறுகளை அறுத்து எறிந்து, தாக்குதலிலும் இறங்கினார்கள். அவர்கள் செய்த மாபெரும் தவறே அதுதான்!

கயிறுகள் அறுக்கப்பட்டு விடுதலை பெற்ற காளைகள்,  ஆவேசம் கொண்ட பயங்கரக் காட்டு மிருகங்களைப் போல் பாய்ந்தன. கொம்புகளால் குத்தியும், கால்களால் மிதித்தும், வால்களைச் சுழற்றியடித்தும், ராயரின் ஆள்களை ஓட ஓட விரட்டின.

வயல்களம் எங்கும் வடிவேலன் வேல், சுற்றிச் சுழல்வது போல் இருந்தது. எதிர்க்கத் திராணியற்ற ஆள்கள்,  ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, உயிர் பிழைக்க ஓடினார்கள். அம்மையாரின் அருள் வலிமையையும், தன்னுடைய தவற்றையும் ஒருசேர உணர்ந்த ராயர், ஓடோடி வந்து  அம்மை யாரின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டி னார். தவற்றை உணர்ந்து திருந்திய அவருக்கு, திருநீறு அளித்தார் அம்மையார். எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல், திருமலை முருகனுக்கு உரிய உடைமைகளை ஒப்படைத்தார் ராயர்.

பன்னிருகை பரமன் அருளால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அம்மையார் நிகழ்த்திய அருளாடல்களில் ஒரு சிலவற்றையே பார்த்தோம்.

சிவகாமி அம்மையார் வைகாசி விசாகத்தன்று, தன் குழந்தையான திருமலை முருகனின் திருவடி களில் கலந்தார். திருமலைக்குக் கீழாக, முருகன் சந்நிதிக்கு நேராக, சிவகாமி அம்மையாரின் உயிர் நிலைக் கோயில் உள்ளது.

அவர் வைத்திருந்த பொருள்கள் சிலவும் அங்குள்ளன. வைகாசி விசாகத்தன்று குருபூஜை நடக்கிறது அங்கு. செல்வோம்! தரிசிப்போம்! வினைகளை வெல்வோம்!

- தொடரும்...

படங்கள்: எல்.ராஜேந்திரன்