மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?

நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?

படம்: பா.காளிமுத்து

‘அக்னி நட்சத்திர வெயில் இப்படிச் சுட்டெரிக்கிறதே, நாரதர் வருவாரோ, மாட்டாரோ’ என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தபோதே, வாசலில் நிழலாடியது. நாரதர்தான் வந்துகொண்டிருந்தார். நாரதரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டிவிட்டு, வெயிலில் வந்த களைப்பு நீங்கக் குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்தோம்.

நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?

மோர் குடித்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாரதரிடம், ‘`என்ன நாரதரே, சித்திரைத் திருவிழாவுக்குப் போயிருந்தீர்களா?’’ என்று கேட்டோம்.

‘`பிரசித்திப் பெற்ற விழாவாயிற்றே. போகாமல் இருப்பேனா?’’ என்று பதில் கேள்வி கேட்ட நாரதரிடம், ‘`விழா ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தனவா?'' என்று அடுத்த கேள்வியை நாம் முன்வைக்க, விழா குறித்து விரிவாகப் பேச ஆரம்பித்தார் நாரதர்.

‘`சித்திரைத் திருவிழாவில் தேதி மாற்றம், மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் அதிகரிப்பு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விழாவில் முன்னுரிமை... எனப்போன்ற சர்ச்சைகள் எழுந்தாலும், சித்திரைத் திருவிழா ஓரளவுக்கு சிறப்பாகவே நடைபெற்றது.

கோடையின் காரணமாக தண்ணீர் இல்லாத நிலையிலும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத் துக்காக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதில் பக்தர்களுக்கு மகிழ்ச்சியே.

குறிப்பாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்ட விஷயம், பலராலும் பாராட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கவனத்தில் கொண்டு, அதேபோ சித்திரைத் திருவிழாவின்போது எந்தவிதமான அசம்பா விதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, கோயில் நிர்வாகத்தினரும்  மாவட்ட நிர்வாகத் தினரும் மிகவும் கவனமாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்’’ என்று சிலாகித்துப் பேசினார்.

‘`அப்படியென்றால் பக்தர்களுக்குப் பூரண திருப்தி என்று சொல்லும்'' 

‘`அப்படிச் சொல்லிவிட முடியாது. சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன. திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆனால், போதுமான அளவுக்குப் போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆங்காங்கே சில திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. சமூக விரோதிகள் சிலர் பொதுச் சொத்துகளைச் சேதப் படுத்தியதாகவும் தகவல்கள் வந்தன.

நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா?

அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் நெரிசல் அதிகமாக இருந்ததால், அந்தப் பாதையில் ஆம்புலன்ஸ் பயணிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. மொத்தத்தில் பெரிய அளவில் சர்ச்சைகள் இல்லாமல் நடந்துமுடிந்தது சித்திரைத் திருவிழா’’ என்றார் நாரதர்.

‘`சென்ற முறை வந்திருந்தபோது, நெல்லை மாவட்டம்- பண்பொழில் திருமலைக் குமார சுவாமி கோயிலில், பணியாளர் பற்றாக் குறை இருப்பதாக தகவல் ஒன்றை காட்டினீரே... பண்பொழிலுக்குச் சென்றீர்களா, அந்தக் கோயில் குறித்து தகவல் ஏதேனும் உண்டா?''

‘`நீங்கள்தான் டிக்கெட் போட்டுக்கொடுத்தீர்கள். போகாமல் இருப்பேனா?’’ என்ற நாரதர், தொடர்ந்து பேசினார். ‘`பண்பொழில் திருமலைக்குமாரசுவாமி கோயில், அருணகிரி நாதரால் பாடப்பெற்றது.  தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால், போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் கோயிலுக்கு வரும்  பக்தர்கள் பல சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.

12 ஆண்டுகளுக்கு முன்பு பணிநிறைவு பெற்ற ஊழியர்களுக்குப் பதிலாக இதுவரை புதிய ஊழியர்களை நியமிக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி 25-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகச் சொல்கிறார்கள்’’ என்றவர்,  கோயிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறை இருப்பதா கவும் தெரிவித்தார்.

‘`நான்கு அர்ச்சகர்களில் மூன்று அர்ச்சகர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். இருக்கும் அர்ச்சகர் ஒருவர்தான். எனவே, சுவாமிக்கு அர்ச்சனை செய்வதில்கூட தங்களுக்குச் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்தார்கள்’’ என்ற நாரதரிடம், ‘`எனில், மற்ற பணிகள் எல்லாம் எப்படி நடக்கின்றன?'' எனக் கேட்டோம்.

‘`கோயிலுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தை வசூல் செய்யக் கூட அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை என்கிறார்கள். இதுதான் இப்படியென்றால், ஆலயத்தில் சிறப்பு தரிசனக் கட்டணம், கடை வாடகை, மலைக்கோயில் பாதைக் கட்டணம் என்று வருவாய் வரும் வழிகள் பல இருந்தும், மலைக்கோயிலை மட்டுமின்றி, கீழக்கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட சுற்றுக் கோயில் களையும் மோசமான நிலையில் வைத்திருப்பதாக பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்’’

‘‘கோயில் நிர்வாகத்திடம் இதுபற்றி விசாரித் தீரா?’’ என்று நாம் கேட்டுக்கொண்டிருந்த போதே, நாரதரின் போன் ஒலித்தது.

எடுத்துப் பேசிவிட்டு வந்தவர், ‘`இன்னும் என்னால் பேச முடியவில்லை. இப்போது உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள கிளியூர் சிவன் கோயிலில் பிரச்னை என்று நண்பர் ஒருவர் அழைக்கிறார். போய் விசாரித்துவிட்டு வருகிறேன். அப்படியே, பண்பொழில் கோயில் நிர்வாகத் திடமும் பேசிவிட்டு வந்து விவரம் தெரிவிக்கிறேன்’’ என்று சொன்ன நாரதருக்கு, மறுபடியும் குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்து அனுப்பினோம்.