
வைகாசி வழிபாடுகள் தொகுப்பு: பி.சந்த்ரமெளலி

வைகாசி - நமது பாவங்களையெல்லாம் போக்கும் வல்லமை கொண்ட மாதம். செந்தமிழ் இலக்கியங்கள் யாவும் போற்றி வணங்கும் ஸ்ரீமுருகப்பெருமான் அவதரித்த மாதம் என்பதுடன், மகான்கள் பலரது அவதாரத் திருநாள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது வைகாசி.
திருக்குறுகூர் எனும் திருத்தலத்தில் ஸ்ரீநம்மாழ்வார் அவதரித்து அருளியதும் வைகாசியில்தான்.
வாழ்வுக்கு உகந்த நல்வழியைக் காட்டி, பல ஆபத்துகளிலிருந்து நம்மை ரட்சிக்கும் மகானான ஸ்ரீவியாசராஜர், தங்கத் தட்டில் அவதரித்த மாதம் இது.
உலகுக்கே அஹிம்சையைப் போதித்த அன்பின் வடிவமான புத்தபிரான் அவதரித் ததும் இந்த மாதத்தில்தான்.

நடமாடும் தெய்வமாய்த் திகழ்ந்து, இவ்வுலகுக்கு ஏற்றமளித்த காஞ்சி மாமுனிவர் -ஆசார்ய புருஷர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்ததும் புண்ணிய வைகாசியில்தான்.
இப்படியான அற்புதங்கள் நிறைந்த வைகாசியின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது, இந்த மாதத்தில் வரும் விசாக நட்சத்திர திருநாள்.
ஆக, இந்தப் புண்ணிய மாதத்தின் சிறப்பை யும் விசாக நட்சத்திரத்தின் விசேஷத்தையும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

விழாக்கோலம் காணும் வைகாசி!
கோடை காலமான வைகாசி மாதத்தில் ‘வேட்டுவர் விழா’ என்று கொண்டாடுவர். கிராமங்களில் ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீகங்கை போன்ற தெய்வங்களுக்கு விசேஷமான வழிபாடுகள் நடக்கும். கிராம தேவதைகளை வழிபடும் விதமாக பொங்கல் வைத்தும் கொண்டாடுவார்கள்.

வைகாசி மாதத்தில், கிராமப் புறக் கோயில்களில் கூழ் ஊற்றும் விழா, கஞ்சி ஊற்றும் விழா போன்றவையும் நடைபெறும். ‘கங்கையம்மன் கூத்து’ என்ற பெயரில் தெருக்கூத்தும் நடக்கும்.
தெருக்கூத்தில் ஆடுபவர்கள், பலவகையான வேடங்கள் புனைந்து தெருக்கள்தோறும் விளையாடும் காட்சி, உள்ளம் மகிழச் செய்யும். அவர்கள், வீடு வீடாகச் சென்று தானியங் களைச் சேகரித்து, அவற்றை மாவாக்கிக் கூழ் காய்ச்சி, விசாக நாளன்று பொதுமக்களுக்கு ஊற்றுவார்கள். ‘அடுத்தவர் வாழ்வதற்காகவே நமது வாழ்க்கை!’ என்ற குறிக்கோளை உணர்த்தும் விழா இது எனலாம்.
காளி, கங்கையம்மன், கன்னி, ஐயை (எல்லா ஜீவராசிகளுக்கும் தாயான கிராம தேவதை) என்று கிராமங்களில் கொண்டாடப் படும் எந்தத் தெய்வமாக இருந் தாலும், அவர்கள் மரங்களும் செடி, கொடிகளும் அடர்ந்த சோலையின் நடுவேதான் கோயில் கொண்டிருப்பார்கள்.

வெயில் உச்சத்தில் இருக்கும் வைகாசியில், ஊர் மக்கள் அனைவரும் கூடி, வேனலின் (வெயிலின்) கொடுமை தெரியாதவாறு, சோலை நடுவில் இருக்கும் தெய்வத்தை எண்ணி ஆடிப் பாடி, கூழ் காய்ச்சி அதை அடுத்தவர்க்கும் ஊற்றி மகிழ்வோடு இருப்பார்கள்.
இத்தகைய கொண்டாட் டங்கள், ‘வேனில் விழா’ என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப் படுகின்றன.
சிலம்பு போற்றும் வேனில் விழா!
கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியில், `ஐயை' கோட்டத்தில் தங்கினார்கள்.

அப்போது அங்கே வேடர்கள் வேனில் விழா கொண்டாடியதை, சிலப்பதிகாரத்தில் விவரிக்கிறார், இளங்கோவடிகள். அதில், வேடர்கள் பாடுவதாக உள்ள இரண்டு பாடல்கள், சிவபெருமானின் திருமேனியில் இடம் பெற்ற அம்பிகையை வேண்டுவதாக அமைந்துள்ளன.
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவமாய் மறையேத்தவே நிற்பாய்
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர் நின் அடிதொழு கடனிது
மிடனுகு குருதிகொள் விறல் தரு விலையே
அம்பிகையைப் பற்றி விவரிப்ப துடன், ‘இடர்களைக் கெடுத்து, அருள்புரியும் உன் திருவடிகளைத் தொழுகிறோம்’ எனச் சொல்லும் பாடல்களின் விளக்கம் மிக அழகு!
விழாக்கள் மட்டுமா? வைகாசியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விரத வைபவங்களும் உண்டு. வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் பெருகும். அதேபோல், இந்த மாதத்தின் இரண்டு ஏகாதசி நாள்கள், திருமாலின் திருவருளைப் பெற்றுத் தரும்.

சிவபெருமான் கடைப்பிடித்த ஏகாதசி விரதம்!
வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘வரூதினி ஏகாதசி’. நாம் செய்யும் பாவங்களைப் போக்கி, சகல செல்வங்களையும் அருளக் கூடியது இது. இந்த வரூதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மாந்தாதா, துந்துமாரன் ஆகிய அரசர்கள் மேன்மை அடைந்தார்கள்.
பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவம் நீங்க, சிவ பெருமான் இந்த ஏகாதசி நாளில் விரதமிருந்து பலன் பெற்றதாக ஏகாதசி மஹாத்மியம் கூறுகிறது.
தானங்களில் சிறந்தவை அன்னதானமும் கல்வி தான மும். இவற்றில் வித்யா (கல்வி) தான பலனை அளிக்கக் கூடி யது வரூதினி ஏகாதசி. இந்த நாளில் செய்யப்படும் எந்தவொரு தானமும் ஆயிரம் மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.
வரூதினி ஏகாதசி நியதிகளைக் குறித்து விரிவாகச் சொல்கிறது ஏகாதசி மஹாத்மியம். அவை: உண்பதும், தாம்பூலம் தரிப்ப தும், தூங்குவதும், எண்ணெய் தேய்ப்பதும், சந்தனம் பூசுவதும் பூக்களை அணிவதும் கூடாது.

வசிஷ்டர் போதித்த ஏகாதசி விரதம்!
வைகாசி மாதம் வளர்பிறை யில் வரும் மோகினி ஏகாதசியின் பெருமையை வசிஷ்ட முனிவர் கூறியிருக்கிறார்.
ஒரு நாள் வசிஷ்டரை வணங்கிய ஸ்ரீராமர், ‘‘சத்குருவே... அனைத்துப் பாவங்களையும் போக்கக் கூடிய ஒரு விரதத்தைச் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டார்.
அதற்கு வசிஷ்டர், ‘‘ஸ்ரீராமா... வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசி, அறியா மையையும் பாவத்தையும் அடியோடு போக்கும். அதன் மகிமையைக் கூறுகிறேன், கேள்!’’ என்று கூறி, அந்த விரதத்தின் மகிமையை விவரித்தார். அந்தக் கதை:

சரஸ்வதி நதிக்கரையில் இருந்த பத்ராவதி நகரத்தை, சந்திர வம்சத்தைச் சார்ந்த த்ருதிமான் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
அந்த நகரில் தனபாலன் என்றொரு வியாபாரி இருந்தான். அவன் ஈடு இணையற்ற விஷ்ணு பக்தன். மனதாலும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவன். அவனுக்கு சுமனஸ், த்யுதிமான், மேதாவி, சுக்ருதன், த்ருஷ்டபுத்தி என்று ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்.
இவர்களில் த்ருஷ்டபுத்தி என்பவன், துஷ்டபுத்தி கொண் டவன். எப்போதும் அநீதியின் வழியிலேயே செல்பவன்.அவனது இயல்புகளும், செயல் களும் தனபாலனை வாட்டி வதைத்தன. எனவே, அவனை வீட்டைவிட்டு விரட்டினார்.
‘அப்பாடா... இனிமேல் நம்மைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. இஷ்டம்போல இருக்க லாம்!’ என்று மனம் போனபடி வாழ ஆரம்பித்தான் த்ருஷ்டபுத்தி. ஆனால், செலவுக்குப் பணம் வேண்டுமே! ஆகவே, திருடத் தொடங்கினான். களவாடிய செல்வங்களைத் தவறான வழியிலேயே செலவழித்தான்.
அவ்வப்போது காவலர்களிடம் சிக்கிக் கடும் தண்டனையும் அனுபவித்தான். இருந்தாலும் திருந்துவதாக இல்லை. அதற்காகக் காலம் கவலைப்படவில்லை. அது, அவன் உடம்பில் பலவித நோய்களை உண்டாக்கித் தன் கைவரிசையைக் காட்டியது.
வியாதிகளால் துடித்த த்ருஷ்ட புத்தி, `தனது துன்பம் அகலாதா?’ என்று சுற்றித் திரிந்தான். முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமோ என்னவோ? கங்கைக் கரையில் இருந்த கௌண்டின்ய முனிவரது ஆசிரமத்தைக் கண்டான்.
கௌண்டின்ய முனிவர் கங்கையில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் இருந்து ஒரு துளி கங்கை நீர், த்ருஷ்ட புத்தியின் மேல் விழுந்தது. அதன் பலனாக அவன் குணம்பெற்றான்; மனம் திருந்தினான்.
முனிவரின் கால்களில் விழுந்து, ‘‘மாமுனியே... உங் களைத் தவிர வேறு கதி இல்லை. ஆகவே, எனக்கு நற்கதி கிடைக்க வழி சொல்லுங்கள்!’’ எனக் கண்ணீர் சிந்தினான்.
கௌண்டின்யர் அவனிடம், ‘‘த்ருஷ்டபுத்தி! பாவம் செய்ய பல வழிகள் இருப்பது போல், அதில் இருந்து விடுபட்டு நற்கதி அடையவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் தலை சிறந்தது, மோகினி ஏகாதசி விரதம். இந்த விரத நாளில் நீ விரதம் கடைப்பிடித்து, மனம், மொழி, உடம்பு- மூன்றாலும், மஹாவிஷ்ணுவை வழிபடு. உனது பாவங்கள் நீங்கும்; நற்கதி கிடைக்கும்!’’ என்று சொல்லி, அந்த விரதம் இருக்க வேண்டிய வழிமுறைகளையும் அவனுக்குக் கூறினார். அதன்படி செய்த த்ருஷ்டபுத்தி, பாவங்கள் நீங்கி வைகுண்டம் அடைந்தான்.
ஏகாதசி விரத மகிமையை விளக்குவதே இந்தக் கதை. ஆகவே, ‘என்ன வேண்டுமானா லும் செய்யலாம். மோகினி ஏகாதசி விரதம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்!’ என்ற கோணத்தில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இனி விசாக நட்சத்திரத்தின் சிறப்புகளை அறிவோமா?
வைகாசி விசாக நட்சத்திரத் திருநாளன்று, தாமிரபரணியில் நீராடி இறைவழிபாடு செய்தால் குபேர யோகம் கிடைக்கும்.
திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் தரும் அளவுக்கு, குபேரன் செல்வத்தின் அதிபதியாகக் காரணம், அவன், வைகாசி விசாகத்தன்று தாமிரபரணியில் நீராடி இறைவழிபாடு செய்ததே என்று ஞான நூல்கள் சிலாகிக் கின்றன!
வினைகள் தீர்க்கும் விசாகம்!
திருக்கோயில்களில் அர்ச்ச னையின்போது, நட்சத் திரத்தின் இணைப்பைச் சொல்லி வழிபடுவது உண்டு.
நட்சத்திரத்தை வைத்து நல்ல வேளையை வரையறுப்போம். திருமணப் பொறுத்தத்திலும் நட்சத்திர இணைப்பு முதலிடம் பெறும்.

கடவுள் அவதார வேளையை நட்சத்திரத்தை வைத்து நிர்ணயிக் கிறோம். முகூர்த்தங்களில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை உண்டு. நட்சத்திரத்தின் பெயரை உச்சரித்தால் பாவம் விலகும் என்கிறது பஞ்சாங்க விளக்கம். ஆக, நட்சத்திரங்களைக் குறித்த விளக்கங்களும் வழிபாடுகளும் நமது தரத்தை உயர்த்துவன என்பதை அறியலாம். நட்சத் திரங்களில் விசாகத்துக்குத் தனியிடம் உண்டு.
விசாகா நட்சத்திரத்தின் தேவதை இந்திராக்னீ. இந்திர னும் அக்னியும் இணைந்து செயல் படுபவர்கள். இந்திரன், உடல் வளத்தைப் பேணிக் காப்பவன். அக்னி, பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பவன். இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வை முழுமை பெறவைப்பார்கள்.
வைகாசி மாதத்தை உருவாக்கு வதில் விசாகத்துக்கு அதீத பங்கு உண்டு. பௌர்ணமியுடன் விசாகம் இணைந்து, அந்த மாதத்தைச் சிறப்பிக்கும். சகுந்தலையின் தோழிகளான அனசுயா, பிரயம்வதா ஆகியோரது செயல்பாட்டை, சந்திரனுடன் இணைந்த விசாகா நட்சத்திரத் துடன் ஒப்பிட்டு மகிழ்வார் காளிதாசன்.
துலாம் ராசியில் மூன்று பாதங்களும் விருச்சிக ராசியில் 4-வது பாதமுமாகப் பரவியிருக்கும் நட்சத்திரம் விசாகம். விகிதாசாரப்படி இரண்டு ராசிகளின் பலன்களும் அடங்கியிருக்கும்.
துலாத்துக்கு சுக்கிரன் அதிபதி. விருச்சிகத்துக் குச் செவ்வாய் அதிபதி. இரண்டு கிரகங்களின் இயல்புகளும் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும். ராசிக்கும், அம்சகத்தில் இரண்டு பாதங்களுக்கும் செவ்வாயும் சுக்கிரனும் அதிபதிகளாகத் திகழ்வதால், அவர்களது பலனளிக்கும் திறன் மேலோங்கியிருக்கும். அதனால், விசாக நட்சத் திரக்காரர்களுக்கு உற்சாகம், பொருளாதாரம், விவேகம், மனோ திடம் ஆகிய நான்கும் சிறப்பாக அமைய வாய்ப்பு உண்டு.
விசாக நட்சத்திரத்தில் பிறந்த வர், முதலில் குரு தசையைச் சந்திப்பார். 16 வருடங்கள் நீண்டு இருக்கும் தசை. புனர்பூசத்துக்கும், பூரட்டாதிக்கும் இந்தத் தசை பொருந்தும்.
இவற்றின் அடுத்தடுத்த நட்சத்திரத்தின் தசைகளான சனியும் புதனும் வருவது சிறப்பு. 19 வருடங்கள் சனியும், 17 வருடங்கள் புதனும் நீடித்திருப்பதால்; முதுமை வரையிலும் பரவியிருப்பதால், அவர்களது இளமை செழிப்பாக அமைய வாய்ப்பு உண்டு.
சனியின் உழைப்பும் புதனின் விவேகமும் இந்த நட்சத்திரக் காரர்களின் இளமையை வளமாக்கும். பலம் குன்றிய நிலையில் இந்த இரண்டு கிரகங்களும் மாறுபட்ட பலனை அளிப்பார்கள்.
நான்கு தாரைகளை உள்ளடக் கியது இந்த நட்சத்திரம். பிறரின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்பவர்கள், களையுடன் மிளிர்பவர்கள், பேச்சுத்திறன், சண்டை சச்சரவில் ஈடுபாடு ஆகியன விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் தென்படலாம்.
செல்வச் சீமான், வேள்வி யில் ஆர்வம், அறிஞன், சுய மரியாதையை விடாதவன், பெயரும் புகழும் பெற்றவர்... என இந்த நட்சத்திரக்காரர்கள் குறித்து விவரிக்கிறார், வராஹ மிஹிரர்.
மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்படுபவர், எதிரியை முறியடிப்பார், அளவு கடந்த கோபம் அவரை ஆட்கொண்டு அலைக்கழிக்கும்... இத்தனையும் அவரில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.
முதல் பாதத்தில் பிறந்த வருக்கு அறநெறிகளில் நாட்டம் இருக்கும். 2-வதில் சாஸ்திர-சம்பிரதாயங்களை மதிப்பார். 3-வதில் சொல்வளம் மிக்கவர். 4-வதில் நீண்ட ஆயுளைப் பெற்றவர் என்கிறது பிரஹத்ஸம்ஹிதை.
முதல் பாதத்தில் பிறந்தால் முக்காலத்தையும் அறியும் திறனும் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும் பெற்றிருப்பார், கோபத்தால் எதிரிகளைப் பெருக்கிக்கொள்வார், வாணிபத் தில் ஈடுபாடு உண்டு.
2-வதில் செல்வம், சிறப்பு, சொல்வளம் மற்றும் புகழ்தல்- இகழ்தல் இரண்டிலும் திறமை இருக்கும். 3-வதில் அமைச் சராகவும் தலைவராகவும் இருப்பார், நீதிநெறிகளில் வல்லவர்.
4-வதில் அறத்தைப் பின்பற்று பவர், அழகன், தெளிந்த மனம், இரக்கமுள்ளவர், மஹாத்மா, சிறந்த அறிவாளியாகத் திகழ்வார் என்று பலசாரசமுச்சயம் மாறு பட்ட பலனை விளக்குகிறது.
மென்மையும் கடினமும் கலந்த நட்சத்திரம் விசாகம். கடினமான வேலைகள், போர் தளவாடங்கள், துஷ்ட மிருகங்களை அடக்குதல். உயர்ந்த உலோகங்களைக் கையாளுதல் போன்றவற்றில் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பளிக்கும். மொத்தத்தில், இரு தேவதைகளின் இணைப்பானது மென்மை- கடினம் இரண்டிலும் பயன்படும் என்கிறது ஜோதிடம்.

விசாக நட்சத்திர வழிபாடு
எல்லா ராசிகளுடனும், நவகிரகங்களுடனும், எல்லாத் தசைகளுடனும் நட்சத்திரங் களுக்கான இணைப்பை வலியுறுத்துகிறது ஜோதிடம்.
கிரக மண்டலங்களுக்கு மேல் நட்சத்திர மண்டலம் தென்படுகிறது. அந்த நட்சத் திரங்களில் உறைந்திருக்கும் தேவதைகளை வழிபடுவது சிறப்பு. அந்தத் தேவதைகள் நட்சத்திரத்தின் உயர்வுக்குக் காரணமாகின்றனர்.
அந்த வகையில் இந்த விசாக நட்சத்திரக்காரர்கள், ‘இம் இந்திராக்னிப்யாம் நம:’ எனச் சொல்லி, 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தலாம்.இந்திராக்னியின் உருவத்தில் புஷ்பத்தைப் பொழிந்து வழிபடலாம்.
அதுவும் இயலாதவர்கள், நேரம் வாய்க்கும்போது ‘இந்திராக்னிப்யாம் நம:’ என்று பலதடவை மனதில் அசைபோட்டு வழிபடலாம்.
‘இந்திராக்னீ சர்ம யச்சதம்’ என்று சொல்லி 16 முறை இரண்டு கைகளிலும் புஷ்பங்களை அள்ளி அளித்து வணங்கலாம். பிறப்போடு இணைந்த இந்திராக்னீயை வணங்குவது வாழ்வை மலர வைக்கும்.
விசாக நாயகன்!
வைகாசி விசாகத்தில் அவதரித்த வள்ளிமணாளனின் பெருமையை வேதம், இதிகாசம், புராணங்கள் மட்டுமல்லாமல் பாம்பன் ஸ்வாமிகள், வள்ளி மலை ஸ்வாமிகள், வாரியார் ஸ்வாமிகள் எனப் பல மகான்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆம்! அளவிலா அற்புதங்கள் நிறைந்தது அழகன் முருகனின் அவதாரத் திருக்கதை.
வேதங்களில் கரை கண்டவன்; காசியப முனிவரின் மகன் எனும் பெருமை பெற்றவன்; கற்புக்கரசியான பதுமகோமளையின் கணவன்; சூரியனையே சிறையிட்ட வீரனான பானுகோபனின் தந்தை; தலைசிறந்த ஞானியான சிங்கமுகாசுரனின் சகோதரன்; ‘எம் சக்தியைத் தவிர மற்றெந்த சக்தியாலும் உனக்கு மரணம் கிடையாது!’ என்று கயிலாய நாதனிடம் வரம் பெற்றவன்... இவ்வளவு பெருமைகளும் ஒருங்கே கொண்டவன் சூரபத்மன்.
இப்படி சிவனிடமே வரம் வாங்கிய ஆணவத்தால், ‘வான் சுமந்த தேவர்களை மீன் சுமக்கவைத்தான்’ என்பார் வாரியார் ஸ்வாமிகள். தேவர் களை வென்று, அவர்களைத் தனக்கு அடிமையாக்கினான் சூரபத்மன். துயரம் தாங்காத தேவர்கள், சூரபத்மனுக்கு வரம் தந்த அரனிடமே போய் அழுதார்கள். தேவர்களைக் காப்பதற்காக ஐந்து முக சிவமான சிவபெருமான் அருளியதால் அவதரித்த மூர்த்தியே, ஆறுமுக சிவமான முருகப்பெருமான்.
மன்மதனே வெட்கப்படும் படியான அழகு கொண்ட குமரக் கடவுளின் திரு அவதாரம், வைகாசி விசாகத் தன்று நிகழ்ந்தது. விசாகன் என்றால், பறவையில் சஞ்சரிப் பவன் என்றும் ஒரு பொருள் உண்டு.
அதற்கேற்ப- சூரியன் தந்த மயில், வேத மயில், இந்திர மயில் என மூன்று மயில்களின் மீது ஏறி வலம் வந்து வாட்டம் போக்கிய முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்து அவனைத் தனக்கு (நான்காவது) மயில் வாகனமாகவும், கோழிக் கொடியாகவும் அமைத்துக் கொண்டார். அல்லல்பட்ட அமரர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்தார்கள்.
அமரர்களுக்கு மட்டுமல்ல, தன்னை வணங்கும் அடியார்கள் அனைவருக்கும் ஆனந்தம் தரவல்லவர் முருகப்பெருமான். அவரை, வைகாசி விசாகத்தில் தரிசித்து வழிபடுவது சிறப்பு.
திருச்செந்தூரில் வைகாசி விசாகம்
வைகாசி விசாகத்தில் முருகனின் திருத்தலங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டும். குறிப்பாகத் திருச் செந்தூரில் வைகாசி விசாகம் வெகுவிசேஷமாகக் கொண்டாடப்படும்.
திருச்செந்தூர்-தேவர்களா லும் மறக்க முடியாத திருத் தலம். கந்தக் கடவுளுக்கு உண்டான ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தனி இடத்தைப் பெற்றுள்ளது. திருச்செந்தூருக்கு அலைவாய், சீரலைவாய் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அலைகள் வீசும் கடற்கரை ஓரம் கோயில்கொண்டு அருள் புரியும் கந்தக்கடவுளை மிகப் பழைமையான தமிழ் நூல்கள் பலவாறு பாராட்டுகின்றன.

`முருகன் தீம்புனல் அலைவாய்’ என்கிறது தொல்காப்பியம். ‘வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலை இய காமர்வியன்துறை’ என்கிறது புறநானூறு. ‘உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அலைவாய்’ எனப் போற்றுகிறது திருமுருகாற்றுப்படை.
நோய்வாய்ப்பட்ட ஆதி சங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை தரிசித்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற துதிநூலைப் பாடி நோய் நீங்கப் பெற்றதாகப் பல நூல்கள் சொல்கின்றன.
வாட்டமுற்ற தேவர்களின் மனத் துயரத்தை ஆதியோடு அந்தம் (முழுவதும்) விண்ணப் பித்து, அவர்களின் துயர் நீக்கும் படி தேவகுருவான வியாழ பகவான் முருகப் பெருமானை பிரார்த்தித்த திருத்தலம் இது.
மிகுந்த பரிவோடு தேவர் களின் குறையைக் கேட்டு சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமான், தானே தன் திருக்கரங்களால் ஐந்து சிவ லிங்கங்களை வைத்துப் பூஜை செய்த திருத்தலம் இந்தத் திருச்செந்தூர்.
அந்தச் சிவலிங்கங்களை, இன்றும் நாம் திருச்செந்தூரில் தரிசிக்கலாம். (முருகன் சந்நிதிக்கு அருகில் ஒரு சிறிய குகை போன்ற வழியின் மூலம் போய் தரிசிக்க வேண்டும்).
திருச்செந்தூரில் முருகன் வெளிப் படுத்திய மகிமைகள் ஏராளம்! உதாரணத் துக்காக அவற்றில் ஒன்று.
1803-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவருக்கு ஆறுமுகப்பெருமான் அறிவூட்டிய சம்பவம் அது.
அப்போது திருநெல்வேலியில் கலெக்டராக இருந்தார் லூஷிங்டன் துரை. அவர் திருச்செந்தூரில் முகாமிட் டிருந்த நேரம். வசந்த மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளை எழுந்தருளச் செய்து, பக்தர்கள் விசிறிக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கண்டு லூஷிங்டன் துரைக்கு இகழ்ச்சி பிறந்தது.
‘‘என்ன? உங்கள் ஸ்வாமிக்கு வியர்க்கிறதோ?’’ என்று கிண்டலாகக் கேட்டார்.
‘‘ஆம்!’’ என பதில் வந்தது.
‘‘நிரூபித்துக் காட்டுங்கள்!’’ எனக் கர்ஜித்தார் லூஷிங்டன் துரை.
இறைவன் மேல் இருந்த மலர் மாலைகளையெல்லாம் எடுத்துவிட்டு, ஒரு துணியை ஸ்வாமி மீது போர்த்தினார்கள் அர்ச்சகர்கள்.
கொஞ்ச நேரத்தில் துணி முழுவதும் நனைந்தது. வியர்வை வழிந்தோட ஆரம்பித்தது.
திகைப்படைந்த லூஷிங்டன் துரை, திருச்செந்தூர் இறை வனுக்கு ஏராளமான வெள்ளிப் பாத்திரங் களைக் காணிக்கை யாகச் செலுத்தினார்.
இப்படிப்பட்ட திருச்செந்தூ ரில் ஆறுமுகனின் அவதார நாளான வைகாசி விசாகத்தன்று திருவிழாக் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடக்கும்.
கடற்கரையெங்கும் மணல் வெளியே தெரியாத படி, மக்கள் வெள்ளமாகக் குவிவார்கள்; எங்கும் பக்திமயம்தான்! நாமும் விசாகத்தன்று செந்தூர் முருகனைத் தரிசித்து, வினைகள் நீங்கப்பெறுவோம்.

விசாக’ விருட்சம்!
வெள்ளிக்கிழமைகளிலும், செப்டம்பர் 23 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான நாட்களிலும், விருச்சிகம் மற்றும் துலாம் ராசியிலும் பிறந்தவர்கள் விசாக நட்சத்திரத்தின் ஆதிக்கத் துக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தின் நண்ப னாகத் திகழ்கிறது, விளா மரம்!
குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப் பிறத்தல், வாயுத் தொல்லைகள், நோய்த் தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்க்கரை நோய், மனப் பதற்றம், ஈறு மற்றும் கர்ப்பப் பைக் கோளாறுகள் ஆகியவை விசாக நட்சத்திர தோஷத்தால் உண்டாகும் என்பார்கள்.
விசாகத்தின் விருப்பம் மிகுந்த விளா மரம், அதன் நல்ல கதிர்வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத்துக்கொள்கிறது. விளா மர நிழலில் இளைப் பாறினால், விசாக நட்சத்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம்!
‘பார்வையாத்த பறை தாள் விளவின் நீழல் முன்றில் நிலவுரல் பெய்து’ என பெரும் பாணாற்றுப்படையில் வரும் வரிகளுக்கு, நச்சினார்க்கினியர் ‘பார்வை மான் கட்டி நின்று தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத் திட்டத்துத் தோன்றிய நில உரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து’ என்று உரை எழுதியுள்ளார்.
மேலும் ‘விளாம்பழம் கமழும் கமஞ்சூழ குழீஇ’ என நற்றிணையில் கூறப்பட்டுள்ள வரிக்கு ‘தயிர்த் தொழிலில் நறுமணம் கமழ்வதற்கு, அதனுள் விளாம்பழத்தை வைத்து மணம் ஏற்றுவர்’ என்று பொருள் கூறப்படுகிறது.
‘செண்பகம் கருவிளம் செங்கூதாளம்’ என்று இளங் கோவடிகள் குறிப்பிடுகிறார்.
ஒவ்வாமை, ரத்தப் போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத் துவது, கல்லீரல், மண்ணீரல், நரம்பு, இதயம் மற்றும் எலும்பு களுக்குக் கூடுதல் பலம் தரவல்லது விளா மரம். மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் கேன்சர் வராமல் தடுக்கும் வல்லமையும் விளா மரத்துக்கு உண்டு.

இதன் பழம், வயிறு மற்றும் குடலுக்குத் தெம்பைத் தருகிறது; தாகம் தணிக்கிறது; வலி நிவாரணியாகத் திகழ்கிறது. பித்தத்தைப் போக்கி, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. தொண்டைப் புண் மற்றும் கொப்புளங்கள் இருந்தால், விளாம்பழக் கஷாயத்தால் வாய் கொப்பளிப்பது, மிகுந்த பயனைத் தரும்!
இதன் வேர்ப் பட்டையைச் சாறாக்கி, மிளகு, பசு நெய் கலந்து குடித்தால், பிரசவித்த பெண்களுக்கு பலம் அதிகரிக்கும். இதன் துளிர் இலைக் கொழுந்துகளை ரசமாக்கி, பால் அல்லது தயிர் மற்றும் கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டால், அழற்சி நோய் காணாமல் போகும் எனப் போன்ற மருத்துவக்குறிப்புகள் உண்டு. எனினும், இவற்றைத் தன்னிச்சையாகச் செயல்படுத் தாமல், உரிய மருத்துவர்களின் ஆலோசனையுடன் செயல் படுவது நன்று.
நாகை மாவட்டம், மயிலாடு துறையிலிருந்து சீர்காழி செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநின்றியூர்.
இங்குள்ள ஸ்ரீஉலகநாயகி சமேத ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் விளா மரம். திருமகள் வழிபட்டதால், இந்தத் தலம் திருநின்றியூர் எனப்படுகிறது தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் இது. (திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் என்ற தலம் உண்டு. அதுவேறு. பூசலார் நாயனார் மனக்கோயில் கட்டி வழிபட்ட தலம் அது).
திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப் பெற்ற தலம். இந்திரன், அகத்தியர் மற்றும் ஐராவதத்துக்கு சிவனார் பேரருள் புரிந்த தலம் எனப் புராணப் பெருமைகள் கொண்ட ஆலயம். இந்தத் தலத்தின் விருட்சமாக விளா மரம் திகழ்கிறது.
மேலும், கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலம், நெல்லை மாவட்டம் வீரவ நல்லூர் அருகே அத்தானநல்லூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகில் உள்ள தீயத்தூர் ஆகிய தலங் களிலும் விளா மரமே ஸ்தல விருட்சம்!