திருவாதிரை தரிசனம்!

ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு திருப்பாதத்தை தோள் பகுதி வரைக்கும் தூக்கியபடி திருநடனம் புரியும் திருக்கோலத்தில் நடராஜரைத் தரிசித்திருக்கிறீர் களா? திருவாலங்காட்டுக்கு வாருங்கள்; திவ்வியமாகத் தரிசிக்கலாம்!
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் பயணித்தால், திருவாலங்காடு ரயில் நிலையத்தை அடையலாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது வடாரண்யேஸ்வரர் திருக்கோயில். ஆலமரங்கள் கொண்ட வனப்பகுதியில், இறைவன் திருநடனம் புரிந்ததால் இந்தத் தலம் ஆலங்காடு எனப்பெயர் பெற்றது. இந்தத் தலத்தில் லிங்கத் திருமேனியாக மூலவர் அருள்புரிந்தாலும், ஊர்த்துவ தாண்டவமாடும் ஸ்ரீநடராஜ பெருமானே முதன்மையானவர்.
##~## |
இங்கு, மார்கழித் திருவாதிரை நாளில், ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதியுலா வருவார். அதனைக் காண, பக்தர்கள் திரள்வர்.
இந்த நாளில் சிவ- பார்வதியை வணங்கி, ஆடல்வல்லானின் அற்புதக் கோலத்தையும் தரிசித்தால், அனைத்து யோகங்களும் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!
திருவாதிரைக்கு மிஞ்சிய விழாவும் இல்லை; திருவாதிரைக் களிக்கு இணையான நைவேத்தியமும் இல்லை என்பார்கள்!
இந்த திருவாதிரை நன்னாளில், திருவாலங்காட்டு நடராஜப் பெருமானை வணங்குங்கள்; வளம் பெறுங்கள்!
- பொ.ச.கீதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்